Tuesday, May 6, 2014

தமிழ்ச்...சா..தீ கால்டுவெல்லுக்கு செய்த துரோகம்நாளை - 07 மே - 2014 கால்டுவெல்லின் 200 வது ஆண்டுவிழா.
07-5-1814ல் அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல் சமயப்பணி ஆற்ற
தமிழகம் வந்தார். எங்கள் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில்
தங்கினார். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் இருந்த மொழியறிஞர்
திராவிட மொழிகளுடன் லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ, ஜெர்மன், பிரஞ்சு
மொழிகளிலும் புலமைப் பெற்றவர். 18 மொழிகள் அறிந்த மொழியறிஞர்.

இந்திய சமூகத்தின் தலைவிதியை மொழி தளத்திலும் இன அடிப்படையிலும்
மாற்றியவரும் மிக அதிகமான பாதிப்புகளைக் கொடுத்தவரும் இவர் தான்.


கால்டுவெல் 1856இல் "திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப
மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravadian or
South Indian family of Languages) என்னும் தலைப்பில் தன் நூலை
வெளியிடுகிறார். உள்ளடக்கமும் தலைப்பும் ஒன்றுக்கொன்று
இணக்கமாய்ப் பொருந்தியிருந்த முதல் பதிப்பு அது. தலைப்பில் உள்ள "திராவிடம்” என்னும் சொல்லும், "திராவிட மொழிகள்” என்னும் கருத்தாக்கமும் கால்டுவெல்லின் கண்டுபிடிப்புகளல்ல. ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட சொற்கள் அவை. 1801க்கு முன்பே "திராவிட மொழிகள்” சிலவும் அவற்றைக் குறிக்கும் அப்பெயரும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் எல்லா மொழிகளும் சமஸ்கிருதத்திலுருந்து வந்தவை தான் என்றே நம்பினார்கள்.
அந்த  நம்பிக்கையை கருத்துருவாக்கத்தைக் குழிதோண்டி புதைத்தவர் கால்டுவெல்.

1856 - முதல் பதிப்பு

1875 - இரண்டாம் பதிப்பு (19 ஆண்டுகளுக்குப் பின்)

இரண்டாம் பதிப்பில் 19 ஆண்டுகளில் அவர் கண்டறிந்த மேலும் சில உண்மைகளையும் சிலர் கேள்விகளுக்குப் பதிலையும் அடிக்குறிப்புகளையும் கொடுத்திருக்கிறார்.

1913 ல் மூன்றாம் பதிப்பு.

மூன்றாவது பதிப்பில் கால்டுவெல் புத்தகத்திலிருந்து தங்களுக்கு வேண்டாதவைகளை, நூலின் மையக்கருத்துக்குத் தேவையற்றவை என்று
சொல்லி சில பக்கங்களை நீக்குகிறார்கள். அதன் பின் நீக்கப்பட்ட அந்தப் பக்கங்கள் எவர் பார்வைக்கும் வந்து விடாமல் தமிழ்ச் சாதி சமூகம்
தன் ஆதிக்கச் சாதி முகத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறது..

அப்படி நீக்கப்பட்ட பக்கங்கள்:
நீக்கப்பட்ட பகுதிகள்:

1. The relative antiquity of Dravidan Literature என்னும் தலைப்பின் கீழ் வரும் 34 பக்கங்களுள்ள முழுப்பகுதியும்

2. பின்னிணைப்புகளில்,

II Remarks on the Philological portion of Mr,Gover’s “Folk songs of Southern India”
III, Sundara Pandya
IV, Are the Pariars (Pareiyas) of Sourthern India Dravidans?
V, Are the Neilghery (Nilagiri) Tudas Dravidans?
VI, Dravidian physical Type
VII. Ancient Religion of the Dravidians

இந்த 6 தலைப்புகளில் மொத்தம் 76 பக்கங்கள்.

3. அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்ட 507 வரிகள்.

4. நூலின் உட்பகுதிகளிலிருந்து அங்கங்கே பத்திகளாகவும் பக்கங்களாகவும் (குறிப்பாக Introduction பகுதியிலிருந்து).

மொத்தம் நீக்கப்பட்ட பகுதிகள் மூன்றாம் பதிப்பின் அச்சு வடிவத்தில் 160 பக்கங்கள் வரக்கூடியவை. இதில் வெறும் 48 பக்கங்கள் உள்ள இரண்டு பகுதிகளை நீக்கியதற்கான காரணங்களை மட்டும் தருகின்றனர். 1. "திராவிட இலக்கியங்களின் பழமை”ப் பகுதியை நீக்கக் காரணம்: "அது நூலின் மையக்கருத்துக்குத் தேவையில்லாதது. பழங்கால நூல்களுக்கு கால்டுவெல் கணித்த காலங்கள் பலவும் காலாவதியாகிவிட்டன (இது உண்மை).” 2. பின்னிணைப்பில் கோவருக்கு கால்டுவெல் தரும் பதிலை மட்டும் குறிப்பிட்டு அதை நீக்கியதற்கான காரணம்: "கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையற்ற அல்லது காணாமல் போய்விட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு கால்டுவெல் பெரும் சிரமம் எடுத்துக் கொண்டு பல பக்கங்களில் கூறும் அவை வீண் சர்ச்சைக்குரிய விஷயங்கள்.”மீதமுள்ள 70 சதவீதப் பக்கங்களை நீக்கியதற்கு அவர்கள் வெளிப்படையாக ஒரு காரணமும் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அப்பகுதிகளைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதைக் கூட வெகு சாமர்த்தியமாகத் தவிர்த்துவிடுகின்றனர்.

I have added an excurses on ‘Sundara Pandia’. and I have endeavoured to answer the question. “Are the Paraiyas and Tudas Dravidians?” and have adjoined some remarks “on the Dravidian Physical Type”. and “on the Religion of the ancient Dravidian Tribes,”

மூன்றாம் பதிப்புச் செய்தவர்களுக்கு இந்த வாக்கியம்தான் பிரச்சினையே. 
காரணம் பறையர் மற்றும் தோடா இன மக்களை கால்டுவெல் திராவிடர்கள்தான் என்றல்லவா சொல்லி இருக்கிறார்!
 தமிழ் ஆதிக்கச் சாதிக்கு இதுதான் ஒவ்வாமையை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிடர், திராவிடம் என்று தமிழ்நாட்டில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் சகல ஜாம்பவான்களும் இந்தக் கள்ளமவுனத்தின் காவலர்கள் தான்.


இதைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற அய்யா கவிதாசரண்
கால்டுவெல் பதிப்பித்த இரண்டாம் பதிப்பையும் பின்னர்
பதிப்பிக்கப்பட்ட மூன்றாம் பதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த
அதிர்ச்சி தரும் உண்மையை,  தமிழ்ச்சாதியின் சாதி அகம்பாவத்தை
வெளிக்கொணர்ந்தார். "அப்படியா?" என்று ரொம்பவும் அதிர்ச்சி அடைந்தது போல கேட்டுக்கொண்டார்களாம் பல்கலை கழக தமிழ்ப் பேராசிரியர்கள்

கவிதாசரண் அவர்கள் தான் குடியிருந்த வீட்டை அடமானம் வைத்து கால்டுவெல்லின் இரண்டாம் பதிப்பை முழுமையாக வெளியிட்டார்.
அந்தப் பதிப்பில் அவர் எழுதியிருக்கும் சில வரிகள்:

THESE EDITORS  HAD CARVED A TEXT BOOK OUT OF IT FOR THE CLASS ROOM
SCHOLARS, LOYAL TO THE SAGACITY OF THE INDIAN HYPOCRISY WITH CASTE BASED TRAITS. THE ELITE DRAVIDIANS HAVE ALL ALONG BEEN ACCEPTING IT AS THEIR BEST SUITED TREASURE, NOT KNOWING WHAT THEY ARE DOING OR STRIVING FOR.

OUR ENDEAVOUR OF BRINGING THIS EDITION TO ITS REVIVAL IS NOT ONLY TO ACCLAIM CALDWELL WTH NEW UNDERSTANDING FOR HE WAS MORE THAN HUNDRED YEARS AHEAD OF HIS TIME BY QUESTIONING THE INDIAN SOCIAL ORDER, BUT ALSO
TO RECLAIM THE FIRE TO GLOW FOR EVER IN THE AIR OF FREEDOM.

கால்டுவெல்,
எங்களை மன்னித்துவிடுங்கள்...
காந்திக்கு துப்பாக்கி குண்டுகளைப்
பரிசாகக் கொடுத்த
மதவாதிகளை விடக் கொடியவர்கள் நாங்கள்.
இன்றுவரை எல்லா மேடைகளிலும்
உங்கள் பக்கங்களை
வாசிக்கமாலேயே உரக்கப் பேசுவதற்காக
எங்களை மன்னித்த மாமனிதரே..
எங்கள் சாதித்தமிழன்
அறிந்தே செய்த இந்த தவறுகளுக்காகவும் சேர்த்தே
அவர்களை மன்னித்தருளும்.

ஆமென்.

5 comments:

 1. கால்டுவெல் மன்னித்துவிடுவார். விழித்துவரும் எதிர்காலத் தமிழ்ச்சமூகம் மன்னிக்காது. இதுஒருபக்கமிருக்க, கால்டுவெல், போப் போலும் வெளிநாட்டுத் தமிழறிஞர்களைச் சில நூல்களில் “கால்டுவெல் ஐயர், போப்பையர்“ என்று அறிமுகப்படுத்தியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? நாங்க எப்படி ஆளுங்க தெரியும்ல?

  ReplyDelete
 2. 1978ம் ஆண்டு வாக்கில் த.மு.ஏ.ச மதுரையில் தன் முதல் இலக்கிய பயிற்சிமுகாமை நடத்தியது ! சிவத்தம்பி,இளங்கோ, என்று தமிழின் மிகச்சிறந்த ஆளுமைகள் கலந்து கொண்டனர் ! "கிறித்துவமும் தமிழும் " என்ற தலைப்பில் "சாலமன் பாப்பையா " அவர்கள் இரண்டு மனி நேரம் அற்புதமான உரையை நிகழ்த்தினார் ! கால்டுவெல்,பிரிட்டோ மற்றுமுள்ளவர்கள் பற்றிய உரை அது ! அந்த உரையை புத்தகமாக போடுமப்டி அவரிடம் பலமுறை கேட்டுக்கொண்டேன் ! நடக்கவில்லை ! நமது சிகரம் செந்தில்னாதன் இது பற்றி நிறைய தகவல்கள் வைத்துள்ளார் ! கால்டுவல் பாதிரியார் பற்றி மதுரை செமினரியில் பேசினார் ! பிரித்தாளும்ம் சூழ்ச்சிக்காக ,திரவிடம்,தமிழ் என்று குறிப்பிட்டதின் நோக்கம்பற்றி அவர் பெசினார் ! அந்த நிகழ்ச்சியில் கிற்ஸ்துவ மாக்கள் அவரை எதிர்த்து கூச்சலிட்டனர் ! அவருக்கு துணையாக நான் சென்றிருந்தேன் ! இந்த விஷயம் இன்னும் கூர்மையாகவும் ஆழமாகவும் ஆராயப்படவேண்டும் ! திமு.க, அதிமுக லாவணிக்குள் சிக்கி நாம் உண்மையைக் கண்டறியும் முயற்சியை கைவிட்டு விடக்கூடாது ! இது பற்றி சிகாகோ பல்கலை நூலகத்தில் தரவுகள் இருப்பதாக அறிந்தேன் ! காலம் உதவும் ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

  ReplyDelete
 3. செயிண்ட் பிரிட்டோ ! பல்லக்கில் தான் வருவார்! காதில் குண்டலம்,காவி வேட்டி தலப்பாகாயமார்பில் பூணூல் பொட்டுக்கோண்டு தான் வருவார் ! பதிரியார்களை ஐயர் என்று அழைக்கவேண்டுமென்று உத்திரவு போட்டதுமவரே ! எணென்றால் எழை எளிய மக்கள் எதற்கெடுத்தலும் ஐயரை நாடியிருந்ததை மாற்ற இப்படி செய்தார் ! நெல்லை மாவட்ட கடற்கரை மக்களின்றும்பாதிரியாரை ஐயர் என்றே அழத்து வருகிறார்கள் ! கிறிஸ்துவத்தின் வருகையை அருமையாக Map மூலம் பாப்பையா விளக்கியது நினவில் எழுகிறது ! ஆவணப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் ! என்ன செய்ய ! ---காஸ்யபன்.

  ReplyDelete
 4. மிகவும் அரிதான தகவல்களைத் தந்திருக்கும் kashyapan அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 5. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete