Saturday, May 3, 2014

எல்லோரும் வணங்குவோம் அம்பானியை!
ரிலையன்ஸ் நமஹ!

இனி. எல்லோரும்
அம்பானியை வணங்குவோம்.
வாழ்க அம்பானி.


சர்வம் அம்பானி மயம்.
நீ சாப்பிடுகிற சாப்பாட்டிலிருந்து
உன் வீட்டில் எரிகிற லைட் வரை
அம்பானி,
உன் கைபேசி அம்பானி.
உன் திரைப்படம் அம்பானி
நீ பார்க்கும் தொலைக்காட்சி அம்பானி
நீ வாசிக்கும் நாளிதழ் அம்பானி
நீ நுழையும் தியேட்டர் அம்பானி
நீ போட்டிருக்கும் உடை அம்பானி

நாளை நீ சுவாசிக்கும் காற்றுக்கும் வேண்டும்
அம்பானியின் அனுமதி.

அம்பானி தான் இந்தியா.
இந்தியாவில் எத்தனைத் தேர்தல்கள் வந்தாலும்
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
உன்னையும் என்னையும் ஆண்டு கொண்டிருப்பது
அம்பானி.

செய்திகளின் ஊடாக சொல்ல வரும்
செய்திகள் சொல்லாத செய்தி சாராம்சம் இதுதான்:


தேர்தல் விறுவிறுபான செய்திகளைத் தின்று ஊடகங்கள்
கொழுத்துப் போயிருக்கின்றன.
ராகுல், பிரியங்கா, சோனியா , மோதி, மேடம் ஜெ, மயாவதி,
மம்தா திதீ, மோதி, லல்லு பிரசாத் , கெஜ்ரிவால் இதற்கிடையில்
திமுக குடும்பத்தின் கெட்டக்குமாரனாக சித்தரிக்கப்பட்டுவிட்ட
அழகிரி மனம் திறக்கிறார் என்ற இன்றைய தந்தி சேனல்
வரை... எங்குப் பார்த்தாலும் தேர்தல் மயம்.
இந்த நாடகத்தில் ஒரு துன்பியல் காட்சி போல நடந்து முடிந்துவிட்டது
சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு.
அப்பாவி மக்களின் உயிர் உடமைகள் இழப்புக்கு நடுவில்
குளிர்க்காயும் அரசியல் கட்சிகள்.
சங்கர்லால் துப்பறியும் கதை ரேஞ்சுக்கு இதில் எங்களிடம்
துப்புக் கிடைத்துவிட்டது என்று பரபரப்பான செய்திகளைத் தந்துக்
கொண்டிருக்கும் காவல்துறை..
இந்தக் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் உரிமை மாநில அரசுக்கா
மத்திய அரசுக்கா என்ற நேர்ப்படப்பேசு....

இத்தனைக்கும் நடுவில் ஒப்பந்தம் ஆகிவிட்டது பாரத ஸ்டேட் வங்கியுடன்
அனில் அம்பானிக்கான குத்தகை உரிமை. இதைக் கவனிக்க எவருக்கும்
நேரமில்லை. எனக்குப் பல நேரங்களில் தோன்றுகிறது... இம்மாதிரியான
பரபரப்பான காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும் போது அல்லது பரபரப்பான
காட்சிகளைத் திட்டமிட்டு ஓடவிட்டு அத்தருணத்தில் எல்லோரின் கவனமும்
அதில் இருக்க திரைமறைவில் இந்தியாவைக் குத்தகைக்கு விடும் ஏலவிற்பனை அரங்கேறிக் கொண்டிருக்கிறதோ என்று.
இந்த ஏலச்சந்தையில் எல்லா கட்சிகளும் கூட்டுக்கள்ளன்கள்!
ப்ரியங்காவை மகள் போல  என்று மோதி சொன்னதைக் கூட
பல்வேறு கோணங்களில் அனைத்துக் கட்சிகளும் ஆய்வு செய்துக் கொண்டிருக்கும் கூர்மையான தருணத்தில் இதைப் பற்றிய செய்தியை
எந்த ஒரு அரசியல் கட்சியோ கட்சியின் தலைவர்களோ
வலது இடது தோழர்களோ கண்டு கொள்ளாமல் இருப்பதை
என்னவென்று சொல்லட்டும்?

இந்திய வங்கிகளின் தலைமை வங்கியாக இருப்பது ரிசர்வ் பேங்க்.
ரிசர்வ் பேங்க் இல்லாத இடங்களில் அந்தப் பொறுப்பை ஏற்பது
பாரத ஸ்டேட் பேங்க். அரசு மயமான 26 வங்கிகளும் இந்தியாவின்
ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி கிளைகள் திறக்க அனுமதி இல்லை.
இந்திய ரூபாயின் மதிப்பைத் தீர்மானிப்பதும் ரிசர்வ் பேங்க்.

தங்கள் சேமிப்புகளுக்கு தனியார் வங்கிகளும் பன்னாட்டு வங்கிகளும்
அதிக வட்டி கொடுத்தாலும் எங்களைப் போன்ற பலர் பாரத ஸ்டேட் வங்கியில்
எங்கள் சேமிப்பை வைப்பதில் பெருமை அடைகின்றோம்.
எங்கள் கணக்கும் எங்கள் சேமிப்பும் பத்திரமாக இருக்கிறது என்பது
முதல் காரணம் என்றாலும் இதற்கெல்லாம் அப்பால் எங்கள் கடின
உழைப்பில் சேர்த்திருக்கும் சேமிப்பு பணம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு
ஏதோ ஒரு வகையில் அரசு வங்கிகளில் இருக்கும் போது பயன்படுகிறது
என்று நம்புகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை எல்லாம் வீணாகிவிட்டது.
நான் வங்கியில் வேலைப் பார்த்தவள். என்னால் இதை நம்ப முடியவில்லை,
இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி அனில் அம்பானியின் குழும நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் பணப்பரிவர்த்தனை நிறுவனத்துடன் செய்திருக்கும் ஒப்பந்தம்!


அந்த ஒப்பந்தத்தின்படி, 
கடன் விண்ணப்பங்களை அளிப்பது, இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், ஓய்வூதியப் பலன்கள், வீட்டுக் கடன்கள், சொத்துகள் மீதான கடன்கள், வாகனக் கடன்கள், தங்க கடன்கள், சிறு தொழில்களுக்கான கடன்கள், கடன் அட்டைகள், விவசாயக் கடன் அட்டைகள், நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் போன்ற பாரத ஸ்டேட் வங்கியின் சேவைகள் ரிலையன்ஸ் பணப் பரிவர்த்தனை மூலம் நடைபெறும். 
மேலும் , கடன் பத்திரங்களை வாங்குவது மட்டுமல்ல, யாருக்கு கடன் கொடுக்கலாம் என்பதையும் இனி ரிலையன்ஸ் தீர்மானிக்கும்.
கொடுத்தக் கடனை எப்படி வாங்குவது என்பதையும் ரிலையன்ஸே
முடிவெடுக்கும். இப்படி வங்கியின் சேவைப்பணிகளில் கைவைப்பது போல
வங்கியின் முடிவெடுக்கும் அதிகாரத்திலும் ரிலையன்ஸின் கை
மட்டுமே இருக்கும்.

எதை எல்லாம் இதற்கு முன் பாரத ஸ்டேட் வங்கி செய்துக்கொண்டிருந்ததோ
அதை எல்லாம் ரிலையன்சும் செய்துக் கொண்டுதான் இருந்தது. குறிப்பாக
MUTUAL FUND, LIFE INSURANCE, GENERAL INSURANCE, TREASURY INSURANCE, PROJECT FINANCE, RETAIL LOANS ஆகிய தளங்களில் பாரத ஸ்டேட் வங்கியின் போட்டியாளர் ரிலையன்ஸ். ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் அரசு வங்கி
தனியார் நிறுவனத்துடன் தரமான போட்டியில் களத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு...

அம்பானி நமஹ
ரிலையன்ஸ் நமஹ

என்று தானே போட்டியிலிருந்து விலகியதுடன் அப்படியே தங்கத்தட்டில் வைத்து அம்பானி கையில் கொடுத்து இனி இந்தியாவின் சர்வமும்
அம்பானி மயம் என்று சொல்லி இருக்கிறது. இது வெட்க கேடு!
கேட்டால் சொல்கிறார்கள்... இப்படி அவுட் சோர்சிங் செய்தால்
செலவு குறையுமாம், ... சேவையில் தனிக்கவனம் செலுத்தப்படுமாம்!
எப்படி இருக்கிறது பாருங்கள் இவர்கள் சொல்லும் காரணங்கள்..?

யாருக்குச் செலவு குறையும்?
யாருக்கு இதில் கொள்ளை லாபம்?
வங்கி கணக்குகள், கடன்களுக்கான சேவைக் கட்டணங்களை நீ அம்பானிக்கு
கொடுத்துவிட்டால், அதன் பின் NON FUND INCOME பூஜ்யமாகிவிடுமே வங்கிக்கு,
அத்தனையும் மொத்தமாகக் கொள்ளை அடிப்பதுடன், அதைத் தீர்மானிக்கும்
சக்தியாகவும் ரிலையன்ஸ் மாறுமே! அதனால் பாதிக்கப்படுவது யார்?


வங்கி கிளைகள் திறக்க ரிசர்வ் வங்கியின் அனுமதி வேண்டும் என்று
சொல்லிவிட்டு இப்படி அம்பானிக்கும் அவன் மச்சானுக்கும் அவுச் சோர்சிங் என்ற பெயரில் புறவாசல் வழியாக திறந்துவிட்டு கிளைகள் திறப்பதும்
பாரத ஸ்டேட் வங்கியைப் பின்பற்றி பிற அரசு வங்கிகளும் அவுட் சோர்சிங்
செய்ய வழிகாட்டுவதும் வங்கிகளை தனியார் மயமாக்குவதில் கொண்டு போய் முடியும். அதையும் விட ஆபத்தான தனிநபர் மயமாக்குவதில் கொண்டு
விடும்!


வங்கியில் வைக்கும் கணக்குகளும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் வங்கிக்கும் அந்த வாடிக்கையாளருக்கும் மட்டும் தெரிந்தவை. அதை இனி
ரிலையன்சும் தெரிந்து கொள்ளுமே! வங்கி வாடிக்கையாளரின் உரிமையை
விற்கும் அதிகாரத்தை வங்கிக்கு கொடுத்தது யார்?

வேலையில்லா திண்டாட்டம் பெருகி இருக்கும் இந்திய சூழலில் இந்தியாவின்
மிகப்பெரிய வங்கி எடுத்திருக்கும் இந்த முடிவு , இந்திய இளைஞர்களின்
எதிர்காலத்தைப் பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமல் தாந்தோன்றித்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து வங்கியில் பணி புரிபவர்களுக்கோ
வங்கி யூனியனுக்கோ எதுவும் தெரியவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.


பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிபவர்களை விட ரிலையன்ஸில் பணிபுரிபவர்கள் மிகச் சிறந்த மக்கள் சேவையைக் கொடுப்பார்கள்
என்று சொன்னால், இது அரசின் நிர்வாகத் திறமை இன்மையைக் காட்டுகிறதே தவிர இது ஒரு தீர்வல்ல.  ஆடத்தெரியாதவன் தெருக்கோணல் என்று சொன்னானாம்! இதே புத்தி நாளைக்கு வருமான வரித்துறை முதல்
காவல்துறை வரைக் கூட போகலாமே! இதே காரணத்தைச் சொல்லி
வருமான வரித்துறையை இன்னொரு அம்பானிக்கும் ரயில்வே பராமரிப்பு மற்றும் சேவையை அம்பானி மச்சான் மாப்பிள்ளைகளுக்கும்  ஒட்டு மொத்தமாக விற்று விடுங்களேன்!

வங்கியின் சேவைகள் விரிவடைந்திருந்தால் அதற்கான பணி இடங்களை நிரப்புவதும் படித்த நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதன் மூலம் பெருக்குவதும் ஒரு அரசின் அடிப்படை கொள்கையாக இருக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த அடிப்படைகள் சரிந்து நொறுங்குகிறது.

வங்கியின் கிளைகள் இல்லாத இடங்களில் வங்கி சேவைகளைச் செய்ய படித்த இளைஞர்களையும் வங்கிப்பணியில் அனுபவம் கொண்டவர்களையும்
பயன்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்திருந்தார்கள். அதைப் பற்றி அன்றைய  நிதித்துறை நடுவண அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி
(இன்றைய ஜனாதிபதி) 2011, பட்ஜெட் தொடரில் பேசினார்,
" TO REACH THE BENEFITS OF BANKING SERVICES TO THE 'AAM AADMI ' THE RBI HAD SET UP A HIGH LEVEL COMITTEE ON THE LEAD BANK SCHEME" என்று பெருமையாகப் பேசினாரே, அது என்ன ஆனது? ஆம் ஆத்மிக்கு வங்கிச் சேவை
வேண்டும் என்று எண்ணியவர்கள் அம்பானி வந்தால் வங்கிச் சேவை மேலும் சிறப்படையும் என்று சொல்கிறார்களே, என்ன துணிச்சல் இருக்கிறது இவர்களுக்கு? எல்லோரையும் கேணையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? 

பேசாமல் இந்த தேர்தல் பரபரப்புக்கு நடுவில் கமுக்கமாக இந்திய ரிசர்வ் வங்கியிலும் மொத்தமாக அவுட் சோர்சிங்கிற்கு விட்(ற்)டு விடுங்கள்,
அதோடு சேர்த்து,

இந்திய தபால் துறை,
உளவுத்துறை,
காவல் துறை
நீதித் துறை
வருமான வரித்துறை
இந்தியன் ரயில்வே
முடிந்தால் இந்திய நதிகளையும்.....
அம்பானி வகையாறாக்களுக்கு
 ஒவ்வொருவருக்கும் பட்டா போட்டு
அவுட் சோர்சிங் என்ற பெயரில் 999 வருடங்களுக்கு மொத்தமாகக்  குத்தகைக்கு விட்டு விடுங்கள். 

அரோகரா...

4 comments:

 1. அண்மையில்தான் ஐ.டி.எப்.சிக்கும் பந்தன் நிறுவனத்துக்கும் வங்கி திறக்கும் உரிமத்தை இரிசர்வ் வங்கி அளித்தது. பெரும் நிறுவனங்கள் எதற்கும் கொடுக்கவில்லை. இரிலையன்சு கேப்பிடலும் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதற்கும் உரிமம் வழங்கப்படவில்லை. அப்பொழுதே ஐயம் இருந்தது. இப்போது அதன் சூக்குமம் புரிகிறது. அப்படித் தராததை இப்படித் தருகிறது அரசு.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்

  ReplyDelete
 2. Left oriented trade unions of banks are fighting against ts policy

  ReplyDelete
 3. தோழர் மணிமுடி அவர்களுக்கு,
  வணக்கம். நலமா? தொடரும் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.


  இந்தப் பிரச்சனையை ஒட்டுமொத்த
  சமூகத்தின் பிரச்சனையாக அணுகாமல் இது என்னவோ பேங்க் யூனியனுக்கும் மேனேஜ்மெண்டுக்குமான ஒரு தனிப்பட்ட பிரச்சனையாக குறுக்கிவிட்டோம். பொதுஜன அபிப்பிராயமும் இந்தப் புள்ளியில் மட்டுமே இருப்பதால் அதைத்தாண்டி இம்மாதிரியான செயல்பாடுகளுக்கு சமூகம் கொடுக்க வேண்டிய விலை என்ன என்ற புரிதல் இல்லாமல் இருக்கிறோம்.

  அன்புடன்

  புதியமாதவி

  ReplyDelete
 4. பூமிக்கு அடியில் இருக்கும் நில வளங்கள் அனைத்தையும் தனியாருக்கு கொடுத்து விட்டது நமது சர்க்கார். மன் மோகன் சிங் வந்தவர்களுக்கெல்லாம் MINING லைசென்ஸ் கொடுத்தார். KG (கிருஷ்ணா கோதாவரி) எரிவாயு உரிமம் கொடுத்தார். சென்டார் ஹோட்டல், பால்கோ, மாடர்ன் பிரெட் என அனைத்தும் தனியார்வசம் சென்றன. எஞ்சியிருப்பது சேவைத்துறைதான். அதிலும் மிகப்பெரிய துறையான SBI மீதே கை வைத்து விட்டார்கள். பாக்கி என்ன இருக்கிறது இந்த தேசத்தில்... மக்களுடைய வாழ்க்கையை இப்படிக்கூட சூறையாட முடியுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி மக்கா...

  ReplyDelete