அம்மா வந்தாள் நாவல் ‘அம்மா” என்ற புனிதத்தின்
கட்டுடைப்பாக மட்டுமே பொதுவாக பார்க்கப்படுகிறது.
‘அம்மா’ என்றால் அப்பாவின் நிழல்.
கணவனே கண்கண்ட தெய்வம் என்று நம்பும் பெண்.
குடும்பத்தின் ஆணிவேர். அவள் தன் பிள்ளைகளுக்கு
எப்போதும் புனிதங்களின் மொத்த உருவம்.
இதை எல்லாம் தாண்டி ‘அம்மா’ என்ற புனிதம்
எப்போதும் கற்பின் உன்னத வடிவம்.
இதெல்லாம் இல்லாத ‘அம்மா’ எப்படி
அம்மாவாக இருக்க முடியும்?
‘அம்மா வந்தாள்’ நாவலின் அம்மாவாக வரும்
அலங்காரத்தம்மாள் இதெல்லாம் இல்லாத
அம்மாவாக வருகிறாள்.
தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் இப்படித்தான்
வருவதாக அவள் வருகையை நாம் மீண்டும் மீண்டும்
குளோசப்பில் காட்டிக் கொண்டிருக்கிறோம்.
அதுவும் இந்தக் காட்சிகள் பெண்ணிய தளத்தில்
பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்பட்டு பற்பல
வண்ணங்கள் பூசப்பட்டு காட்சிப்படுத்தப்படுவதில்
பெண்களுக்கும் அலங்காரத்தம்மாள்
பெருந்தேவியாகிவிடுகிறாள்.
தாய்மையின் புனிதங்களை கட்டுடைத்திருப்பதாகவும்
தலையில் சுமந்திருக்கும் பிம்பங்களின் முள் கிரீடம்
சரிவதாகவும் பார்க்கும் பார்வை ‘அம்மா வந்தாளை”
கொண்டாடுவதற்குப் போதுமானதாக
இருக்கிறது. அவ்வளவுதான்.
ஆனால் அம்மாவந்தாள் அவ்வளவுதானா!!
ஆனால் அலங்காரத்தம்மாள் அம்மாவாக வந்து
இதை மட்டும் தான் பேசுகிறாளா?
அவள் ஏன் தண்டபாணியிடம் நிறைவடைய முடியவில்லை.
எதற்காக அவள் சிவசுவுடன் படுத்து 3 பிள்ளைகளைப்
பெற்றுக்கொண்டு அந்தப் பிள்ளைகளையும்
தண்டபாணியுடன் வாழ்ந்து கொண்டு அதே வீட்டில்
ஒன்றாக குடும்பம் நடத்துகிறாள்?
அவள் எதை எதிர்ப்பார்த்தாள்? எதை எதிர்ப்பார்த்து
அவள் அப்புவை வேதம் படிக்க அனுப்புகிறாள்?
அப்பு வேதம் படித்து வேத ரிஷியாக வந்து நிற்கும்போது
அவன் காலில் விழுந்து அவள் செய்த பாவத்தைக்
கழுவிக்கொள்வதற்காகவா?
அவள் சிவசுவுடன் கொண்ட உறவை
அவள் “பாவமாக” கருதுகிறாளா?
அவ்வளவுதானா!
சிவசு அவள் வீட்டுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்.
அது நின்றுவிடவில்லை. அதுவும் பகலிலும் சிவசு வருவதை
யாராலும் தடை செய்ய முடியவில்லை.
அவள் மூத்தமகள் காவேரி அதை அறிந்தவள்.
வீட்டுக்கு வந்திருக்கும் மருமகளுக்கும் தெரியும்.
அப்பவுக்கு மட்டும் தான் “அம்மா-சிவசு உறவு புதிய வெளிச்சம்.”
அப்புவை அவள் வேதப்பாடசாலைக்கு அனுப்புவது
அவள் பாவத்தைக் கழுவிக்கொள்ள மட்டும் தானா!
அவன் அவள் எதிர்ப்பார்த்தமாதிரியே
இருந்திருந்தால் மட்டும்
அவள் சிவசுவிடமிருந்து விலகி இருப்பாளா?
பாவத்திலிருந்து விடுபடுவது என்பது
மீண்டும் அப்பாவச்செயலைச் செய்யாமல் இருப்பது
மட்டும்தானே!
கதையில் அப்பு வேதம் படித்து வீட்டுக்கு வந்தப்பிறகும்
சிவசு வருவது நிற்கவில்லையே! தினம் தினம்
பாவம் செய்துவிட்டு திருப்பதி உண்டியலில் காணிக்கை
போட்டுவிட்டால் செய்த பாவத்திலிருந்து
பாவ மன்னிப்பு கிடைத்துவிடுமா என்ன?
அம்மா வந்தாள் இத்தனைக் கேள்விகளையும்
பொதிந்திருக்கிறது.
ஆண் பெண் உறவு,
கணவன் – மனைவி உறவு , இதில் நடக்கும் மீறல்கள்
இதை மட்டுமே அம்மாவந்தாள் முன்வைக்கவில்லை.
கதைப்போக்கில் வலுவான காரணிகளாக சமூகம் மீறல்கள் இடம் பெற்றிருப்பதைக் கொண்டு தி.ஜா வேறொரு கதையைப் பூடகமாக
எழுதி இருக்கிறார்.
இக்கதையின் அலங்காரத்தம்மாளை உருவாக்கியது
தி. ஜா அல்ல. தந்தை பெரியார் தான்.
இந்த நாவல் 1966 ல் வெளிவருகிறது.
நினைத்துப்பாருங்கள் .. 1967ல் அறிஞர் அண்ணாவின்
தலைமையின் திமுக வெற்றி பெற்று திராவிட அரசியல்
ஆட்சியில் அமர்ந்துவிட்ட வரலாற்று நிகழ்வின் காலம்.
தந்தை பெரியாரின் தீவிரமான வேத எதிர்ப்பு,
வைதீக எதிர்ப்பு, பார்ப்பனிய மேலாண்மையை
உடைத்த அவர் தீவிரமான களப்பணிகளின் காலம்.
தீவிரமாக பிரச்சாரம் செய்து சமூகத்தில்
அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார்.
அந்த அதிர்வுகளின் ஒட்டுமொத்த பிம்பம் தான்
அம்மாவந்தாளின் “அம்மா”.
சிவசு என்ற ஆணிடம் (சூத்திரனிடம்?) அவள் கொள்ளும் உறவு .
வேதம் என்பது என்ன?
பார்ப்பன சமூகம் எப்போதும் அசமூகமாக தன்னை
முன்னிறுத்திக்கொண்டு சமூகத்தின் படி நிலையில்
தன் உச்சத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது
என்ற நம்பிக்கையிலிருந்து வந்தவள் அலங்காரத்தம்மாள்.
லெளகீக ஆசைகளற்ற சமூகமாக தங்களைக் கட்டமைத்துக்
கொண்டவர்கள் வேதம் படித்தவர்கள், ரிஷிகள் அவர்கள்.
மாபெரும் சக்கரவர்த்திகள் ரிஷிகளின் பாதம் தொட்டு
வணங்கி நிற்கும் காட்சிகளின் கனவுலகம்
கொண்டவள் அலங்காரத்தம்மாள்.
வேதம் அறிந்தவன் வேதத்தை ஓதி பிச்சை எடுப்பதில்லை.
வேதம் அறிந்தவன் கருவறையில் ஆண்டவனுடன்
நேரடியாகப் பேசுபவன்.
கற்பூர ஆரத்தி தட்டில் மணி அடித்துக்கொண்டு
தட்சணை தட்டில் விழும் ரூபாய் நோட்டுகளுக்காக
அலைபவனில்லை. அவன் நெருப்பு.
வேதம் நெருப்பு. வேதம் படித்தவன் நெருப்பு.
அந்த நெருப்பு அணையாமலிருக்க வேண்டும் என்றால்
“அப்பு’ என்ற நெருப்பை ஏற்றியாக வேண்டும்.
தான் வாழும் காலத்தில் தனக்கு ஏற்பட்ட
அனைத்துவிதமான சரிவுகளையும்
அந்த நெருப்பு எரித்துவிடும்.
சரி செய்துவிடும் என்று அவள் நம்புகிறாள்.
அவளுக்கும் அவள் வாழும் காலத்தில் ஏற்படும்
அதிர்வலைகளுக்கும் நடுவில் ஏற்படும்
மாபெரும் போராட்டம் நடக்கிறது.
வேதம் அறிந்த அவள் கணவன் தண்டபாணிக்கு
அவள் வாழும் சமூகத்தில் மதிப்பில்லை.
அவள் விரும்பும் வேதமாக நம்பிய வேதமாக
அவரால் வாழ முடியவில்லை.
அவர் படித்த வேதம் மாலை நேரங்களில்
நீதிபதிகளுக்கு வேத வியாக்கியாணம் செய்வதற்கு
மட்டுமே பயனுள்ளதாகிறது.
அவரும் அவர் அறிந்த வேத ஞானமும்
அலங்காரத்தம்மாள் எதிர்ப்பார்க்கும்
வேதமாக இல்லை. தண்டபாணி என்ற ஆண் அ
லங்காரத்தம்மாளின் பார்வையில் சரியும் இடமிது.
ரிஷிபத்தினியாக வாழ நினைத்தவளை
சிவசுவிடம் படுக்க வைத்தது வெறும் உடல் சார்ந்த
காமம் மட்டுமல்ல. மாபெரும் எதிர்ப்பார்ப்பு கணவன்
என்ற வடிவில் நிற்கும் ஆண், சென்னை நகர வாழ்க்கை .
அன்றைய சமூக எதிரலைகளின் தாக்கம்
அவள் அளவில் இதை எல்லாம் எதிர்க்க முடியாத
இதிலிருந்தெல்லாம் காப்பாற்ற தகுதியற்ற ‘
கணவன்” என்ற பீடத்தை உடைப்பதில் ஆரம்பிக்கிறது.
தண்டபாணி வகையாறாக்கள் கீழ்மைப்படுத்தி
இருக்கும் சிவசுவுடன் உறவு கொண்டு ..
தண்டபாணி வகையறா வேதங்களுக்கு
தண்டனை கொடுக்கிறது.
அவள் மனம் இன்னும் தன் நம்பிக்கையிலிருந்து
விடுபடவில்லை. கணவன் மூலமாக நிறைவேறாதக்
கனவுகளைத் தன் மகன் மூலமாக நிறைவேற்றிக்கொள்ளும்
ஒவ்வொரு பெண்ணைப்போலவும் தான்
அலங்காரத்தம்மாளும் அப்புவை உருவாக்க நினைக்கிறாள்.
“அப்பு” அலங்காரத்தம்மாள் உருவாக்க நினைத்த ஆயுதம்.
தன்னோடும் தன் சமூகத்தோடும் அலங்காரத்தம்மாள்
நடத்துகின்ற யுத்தத்தில் அவள் நம்பும் கடைசி ஆயுதம் அப்பு.
பாவானியம்மாள் தன் வேதப்பாடசாலையில் அப்புவை
நெருப்பிலிட்ட ஆயுதமாய் கூர்தீட்டி அனுப்புவாள்
என்று நம்புகிறாள் அம்மா. அங்கே “இந்து” என்ற பெண்
அவள் அப்புவிடம் கொண்டிருக்கும் காதல்..
அதைப் புரியவைக்க வரும் வண்டிக்காரன் தாந்தோணி..
“நானா இருந்தேனுங்கனா சின்னமாவ சாருக்கு கல்யாணம்
பண்ணி இங்கயே இருக்க சொல்லிருப்பேன்"
என்று பேச்சோடு பேச்சாக சொல்கிறான்.
அத்தை பவானியம்மாளுக்கு முதல் விதை விழுகிறது.
இறுதிக் காட்சியில் அவள் எடுக்கும் முடிவுக்கு
இந்த உரையாடல் தான் அடித்தளம்.
தி ஜாவின் பெண்கள் எப்போது “மீறல்”
குணம் கொண்டவர்கள்.
அவர்கள் சமூகத்தில் தங்களை நசுக்கும்
அனைத்திலிருந்தும் மீற எத்தனிப்பவர்கள்.
அவர்கள் அதற்கு பயன்படுத்தும் முதல்
ஆயுதம் அவர்களின் உடல்.
சமூகத்தில் நடக்கும் மாற்றங்களை ஏற்பதும்
அதில் இதுவரை தாங்கள் கற்பித்திருக்கும்
“ஆண்மைய” லிங்கம் சிதைவதையும்
அவர்கள் தங்கள் மீறல்களின் வழியாக வெளிப்படுத்துகிறார்கள்.
அதில் ‘அம்மாவந்தாளின்’ அலங்காரத்தம்மாள்
பெரியார் காலத்தில் வாழ்ந்தப் பெண்.
பெரியாரின் வைதீக எதிர்ப்பும்
பார்ப்பனிய மேலாண்மையையும் எதிர்த்து
அவர் நடத்திய சமூக அதிர்வலைகளிருந்து உருவாகிய
பெண் அலங்காரத்தம்மாள். அவள் போராட நினைக்கிறாள். போராடிப்பார்க்கிறாள். தந்தை பெரியாரின் சமூக அதிர்வலைகளில்
சிக்குண்ட அலங்காரத்தம்மாளின்
அகப்போராட்டம் தான் “அம்மா வந்தாள்”
தி. ஜா இக்கதையை எழுதும்போது
எத்தனை இந்து கதைப்பாத்திரங்கள் இருந்திருப்பார்கள்?
எத்தனை பாவனியம்மாளின் வேதப்பாடசாலைகள் இருந்தன?
நகர வாழ்க்கையை நோக்கி நகர்ந்துவிட்ட
சமூகத்தில் அந்த வாழ்வின் பிரதிநிதியாக இருக்கும்
தண்டபாணிகளை ண்டனைக்குரியவர்களாக்குவதிலும்
அதில் கழிவிரக்கம் கொள்வதையும் தவிர
இனி வேறு எதுவும் சாத்தியமில்லை.
அலங்காரத்தாம்மாளின் கனவுகள்
அவள் சமூகம் வேதங்களைச் சொல்லிக் கற்பித்து
அவளிடம் உருவாக்கியவை.
அவை அர்த்தமற்று போகின்றன.
இப்படியாகத்தான்
“அம்மா வந்தாள்” வந்தாள்.
மற்ற கதைகளின் பெண்களின் கட்டுடைப்புகளுக்கும்
ஒழுக்க மீறல்களுக்கும் இல்லாத அடர்த்தி
‘அம்மா வந்தாள்”
அம்மாவின் மீறலுக்கு உண்டு.
***
------------
தி.ஜா தினமணி கதிரில் எழுதி இருக்கும்
"'உப்லியும் வேதாந்த சாயபும்' கட்டுரை அவரைப்
புரிந்து கொள்ள மேலும் உதவியாக இருக்கும். கட்டுரையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment