Saturday, November 7, 2020

கவிஞரின் மனைவியும் கவிஞரின் கணவரும்..

 கவிஞரின் மனைவி VS... கவிஞரின் கணவர்..

"கவிதை எழுதுகிற பொண்ணு
குடும்பத்திற்கு லாயக்கில்லை....."

ஒரு கவிஞரின் மனைவி .மனம் திறந்து பேசிவிட முடிகிறது.
உதிர்ந்த சொற்களுக்கு நடுவில் ஓராயிரம்
அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.
வாழ்க்கை, காதல், குடும்பம், எதிர்ப்பார்ப்பு
இத்தியாதியாக பலவற்றில் ஏமாற்றம் அடையும்
மனைவி..
ஆனாலும் கவிஞர் என்றால் அப்படித்தான்
இருப்பார்கள் என்று பொது ஜன உளவியல்
ஏற்றுக் கொள்கிறது..

ஆனால் கவிஞரின் கணவர்.. பேசட்டும்..
இதுவரை யாரும் பேசியதாகத் தெரியவில்லை.
பேசப்பட்டதெல்லாமே வெளியில் வரும்போது
செய்து கொள்ளும் அலங்காரத்தை ஒத்தவையாக
இருந்தன. இருக்கின்றன...
மற்றவர்களைப்பற்றி சொல்வது .. வம்பு. வழக்கு.
என்னைப் பற்றி..?!!!
நானும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்
என்ற வகையில் இதை எழுதியாக வேண்டும்.
"நான் எழுத்தாளர் என்பதில்
என் உறவுகள் யாரும்
பெருமை பட்டுக்கொண்டது இல்லை.
(ஒருவேளை பெருமைப்படும் இடத்தை அடையவில்லையோ என்னவோ !)

கணவர் பிள்ளைகள் உடன் பிறந்தவர்கள்
இப்படியாக எல்லோரும் இதில் அடக்கம்.
மேலும்...
"கவிதை எழுதுகிற பொண்ணு
குடும்பத்திற்கு லாயக்கில்லை ,,
கவிதை எழுதரதெல்லாம் உருப்படாது "
என் எழுத்துமுனையை முறித்த
முதல் எதிர்வினைகள்
வீட்டிலிருந்து தான் கிளம்பின.

புதியமாதவி என்ற பெயரில்
இயற்பெயரை மறைத்துக்கொண்டு
என் முகத்தை என் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ...
சில வருடங்கள் கடந்திருக்கின்றன...
தெரிந்தப் பிறகு....
.ஜனரஞ்சக இதழ்களில் எழுதி
பேரும் புகழும் கிடைத்திருக்கிறதா..
இதெல்லாம் என்ன எழுதிக்கொண்டிருக்கிறது என்ற
விமர்சனம் இப்போதும்.. என்னைச் சுற்றி...
குடும்பம் என்ற நிறுவனத்திற்குள் இருந்து கொண்டு
எழுதிய ஒரு பெண்ணின்
அரசியல் இலக்கியப் பயணமாக
நானும் என் எழுத்துகளும்...
சொல்லாமல் எழுத்துகளுக்கு இடைவெளியில்
உதிர்ந்திருக்கும் வாழ்க்கையின் பெருமூச்சுகள்
இயலாமை போராட்டங்கள் .. எதிர் நீச்சல் ,
சின்ன சின்ன நம்பிக்கைகள்... நண்பர்கள்...
அரசியல்.. முரண்பாடுகள்..
எல்லாமும் சேர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு பெண்ணின் எழுத்துலகம்.
ஆணுக்கு இதெல்லாம் இருப்பதில்லை.
ஆண்... அவன் கவிஞன் என்றால் விதிவிலக்கானவன்.
பெண் கவிஞர் என்றால் உருப்படாதவள்.
ஆண் எழுத்தாளன் என்றால் போற்றுதலுக்குரியவன்.
பெண் எழுத்தாளர் என்றால் உருப்படாதவள்.
ஆண் எழுத்துக்கு அவன் மனைவி குடும்பம்
அவன் உடன்பிறப்புகள், அவன் பெற்றோர் அவன் வீடு
அவன் நண்பர்கள் அவன் உலகம்.. எல்லாமும்
வெளிச்சம் தருகிறது.
பெண் எழுத்துக்கு... ..???
மங்கிய விளக்கொளியில் அவள் விரல்கள்
இப்போதெல்லாம் கணினியின் தட்டச்சு எழுத்துகளை
இருளிலும் அடையாளம் கண்டு கொள்கின்றன.
அவள்... யாருடையை நேரத்தையும் எடுத்துக்
கொள்வதில்லை. அவள் தனக்கான நேரத்தை...
இதோ..எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது
யாருக்கும் தொந்தரவு இல்லாமல் ... எழுதப் பழகிக்
கொள்கிறாள்...
அவளிடம் விளக்கம் எதுவும் கேட்டுவிடாதீர்கள்..
இந்த 25 வது மணி நேரத்தின் உயிர்ப்பில் தான் அவள்
ஒவ்வொரு நாளின் 24 மணி நேரத்தையும்
கடந்து வந்து கொண்டிருக்கிறாள்...
அவளுக்காக தயவு செய்து யாரும் பரிதாபப்படவோ
ஆறுதல் சொல்லவோ வேண்டாம்.
அவள் அதை விரும்புவதில்லை.
அவள் தன் சுயத்தை
தன் எழுத்தை
யுகங்களாக இப்படித்தான்
கடத்தி வந்துக் கொண்டிருக்கிறாள்...

#பெண்_எழுத்து

1 comment: