Friday, November 27, 2020

அசல் மூக்குத்தி அம்மன்




அசல் மூக்குத்தியும்
சினிமா மூக்குத்தியும்
.......
மனிதர்களும் அவர்கள் வணங்கும் தெய்வங்களும்
அந்தந்த மண்ணின் இயற்கை சார்ந்தவர்கள்..
ஆனால் என்ன செய்வது..?
மூக்குத்தி அம்மன் கூட கறுப்பா இருக்க கூடாது.
குண்டா இருக்க கூடவே கூடாது.
ஏனேனில் இங்கே அழகு என்பதை
யார் யாரோ தீர்மானிக்கிறார்கள்.
அது அவர்களின் சந்தை சார்ந்தது.
இதைப் புரிந்து கொள்ளாமல் கலை இலக்கிய
உலக பிரம்மாக்கள் மயக்கத்தில் இருக்கிறார்கள்.

அவள் கரிய மேனியின் நாவற்பழ அழகில்
மயங்கினேன். அவள் தேகத்தின் வலிமை
அவள் என் மீது கொண்டிருக்கும் காதலைப் போல
இருக்கிறது. காற்றடித்தால் சாய்ந்துவிடும் கொடியல்ல
அவள். என் மண்ணில் வேர்விட்டு என் சந்ததியை
விளைவிக்கும் மண் போன்றவள் அவள்.
மாவிலையைப் பார்த்திருக்கின்றீர்களா...
என் காதல் மொழியில் அவள் வெட்கப்படும்போது
அவள் முகத்தில் மாவிலையின் நிறமும்
காலை சூரியனும் தெரியும்
கடற்கரையின் உப்புக்காற்று அவள் மேனியில்
பூசினாற்போல ஒரு வாசனையைத் தெளித்திருக்கும்.
அவளைத் தொடும் அந்த இரவில்
கடற்கரை அடியிலிருக்கும் சங்குகள் நெளியும்.
அவள் கூந்தலில் எப்போதும் கருக்கலில் மலரும் பிச்சிப்பூவின் வாசம்.
நான் தொடும்போது மட்டும் அந்தக் கறுப்பு வைரம்
எனக்குள் ஜொலிக்கும்...
அவள் அழகிடா...
ஏ.. மாங்கா மடையர்களா
இப்படி எல்லாம் உங்கள் மண்ணின் அழகை
எப்போது அடையாளம் கண்டு எழுதப்போகின்றீர்கள்.?
... இப்படிக்கு
அசல் மூக்குத்தி அம்மன்.

2 comments:

  1. மகாபாரதத்தில் திரௌபதிக்கு ஒரு பெயர்: கிருஷ்ணா. கருப்பழகி என்பது பொருள்.

    ReplyDelete