Sunday, November 29, 2020

THE CROWN - is a FICTION

 

ஒரே ஒரு கிரீடம்.
அந்த கிரீடம் உலக நாடுகளை ஆட்சி செய்திருக்கிறது.
அதுவும் அந்த கிரீடம் ஒரு பெண்ணின் தலையை
அலங்கரிக்கிறது.
கிரீடம் அரசனின் தலையில் இருக்கும் வரை
ஏற்படாத புதிய புதிய பிரச்சனைகள்
அதே கிரீடம் அரசியின் தலையில் சூட்டப்படும் போது
முளைக்கின்றன.
உலகப்போரில் வெற்றி பெற்ற தளபதிகள்
அந்த கிரீட த்தின் முன்னால் தலைகுனிந்து
வணங்குகிறார்கள்.
பக்கிம்காம் அரண்மனை..
அரண்மனை.. அரண்மனை..
கிரீடத்தில் எதிரொலிக்கிறது..

“ நீ அரசியா … மனைவியா”
“நீ அரசியா அம்மாவா”
“நீ அரசியா அக்காவா”
கிரீடம் இந்த உணர்வுகளுக்குள் சிக்கித் தவிக்கிறது.
அரசியைச் சுற்றி இருக்கும் அதிகாரத்தின்
ஆண் முகங்கள் அவள் முன்னால் மரியாதை
நிமித்தம் வணங்கினாலும்
அவள் சில தருணங்களில் கேலிக்குரியவளாகிறாள்.
அரசன் பிரதமரிடம் பேசினால்
அது ஆலோசனை கேட்பதாகவும்
அரசி பிரதமரிடம் பேசினால்
அது ஆலோசனையாக இல்லாமல்
அவள் அறியாமையாகவும் … புரிந்து கொள்ளப்படுகிறது.
திருமணத்தில்
“கணவன் சொல்படி கேட்கும் மனைவியாக “ –( to obey )
என்று சர்ச்சில் பாதிரியார் சொல்ல சொல்ல
அதை இளவரசி சொல்லி உறுதிமொழி ஏற்கும் போது
விண்ஸ்டன் சர்ச்சிலுக்கு
அது நெருடலாகிறது…
TO OBEY… ???!!!
இங்கிலாந்தில் அரசி .. to obey …?
ஆனால் அரசிக்கு..
அந்த மணப்பெண்ணுக்கு அது நெருடலாக இல்லை!
அண்மைக்கால வரலாறு என்பதால் Netflix தொடரை
மிக அதிகமானவர்கள் பார்க்கிறார்கள்.
எனக்கும் அதனால் தான் ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் சீரியல் 1 & 2 வரை ஏற்படாத பிரச்சனை
4 ல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
அதாவது டயனா அரண்மனைக்குள் வரும்போது
இப்போது பல்வேறு விமர்சனங்கள் !
U.K. culture secretary says
"The Crown" should warn viewers the show is fictional”
….
காட்சி 2
தமிழக அரசியலில் மிக முக்கியமான
பெண்ணாக இருந்த ஜெயலலிதா அவர்கள்
குமுதம் வார இதழில் “சொல்லத்தான் நினைக்கிறேன்”
என்று தன் வாழ்க்கையை தொடராக எழுத ஆரம்பித்தார்.
அவர் எப்படி நடிக்க வந்தார் என்பதெல்லாம்
சொல்லிக்கொண்டே வந்த தொடர் அவருக்கும்
எம் ஜி ஆருக்குமான கதையை (கதை!) சொல்ல வரும்போது
நிறுத்தப்பட்டுவிட்டது.
ஆம் நிறுத்தப்பட்டு விட்ட து
-
காட்சி 3
“சிறந்த பேச்சு ஒரு நேர்மையான பொய்.
மோசமான மெளனம் ஒரு நிர்வாண உண்மை “ – மிகெய்ல் நைமி.

உனது நானும் எனது நானும் ஒன்றாகும் வரை -
ஒரே கோட்டில் பயணிக்கும் வரை -
சொற்களோடுதான் வாழ்ந்தாக வேண்டும்.
அதனால் தான் புனைவுகள் சுகமானவை.
நிஜங்களின் காயத்திற்கு புனைவுகளே மருந்து.

No comments:

Post a Comment