Tuesday, November 10, 2020

ஆதவன் தீட்சண்யா VS ஜெயமோகன் VS முச்சந்தி

 



முச்சந்தி ரொம்ப முக்கியமானது.
முச்சந்தி ரொம்ப முக்கியமானது.


அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல..
இலக்கியவாதிகளுக்கும் தான்.
ஏஸி அரங்கிலோ மலையடிவாரத்திலோ
உட்கார்ந்து பேசி வளர்ப்பது மட்டுமல்ல
இலக்கியம்..
முச்சந்தியிலும் இலக்கியம் வளரும்.
வளர்ந்திருக்கிறது..
இலக்கியம் மனிதர்களுக்கானது என்றால்
முச்சந்தியில் இருப்பவர்களும் மனிதர்கள் தான்
என்பதை இலக்கியவாதிகள் மறந்துவிட்டார்கள்
என்றால்… இலக்கியம்… யாருக்காக?
முச்சந்தி…
இலக்கியத்தையும் இலக்கிய பிதாமகன் களையும் விட
பெரியது. முக்கியமானது. மறந்துவிடாதீர்கள்!

***
ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஜெயமோகனுக்கும்
உரையாடல்கள் விவாதங்கள் தொடர்கின்றன.
வக்கீல் கோர்ட் அபராதம் என்று
ஒரு திகில் படம் ரேஞ்ச்சுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.
இருக்கட்டும்..
இதில் முச்சந்தி பற்றி பேசியாக வேண்டும்..
ஆதவன் தீட்சண்யா என்ற எழுத்தாளர் மீது
போகிற போக்கில் தன் பதிவில் ஜெயமோகன்
அவர்கள் வைத்திருக்கும் குற்றச்சாட்டு
“ சொல்லும்படியான ஒரு கதை,
ஒரு வரி, எழுத ஆற்றலில்லாத
முச்சந்திப் பேச்சாளர்”
அது எப்படி ஜெ.மோ….
நீங்கள் பேசுவதும் உங்கள் மேடைகளும்
இலக்கிய பீடங்களாகவும்
ஆதவன் தீட்சண்யா பேசுவது மட்டும்
முச்சந்தி பேச்சாகவும்..மாறி விடுகிறது!
ஆமாம்.. முச்சந்தி என்றால் என்ன கேவலமா?
முச்சந்தியில் இலக்கியம் பாய்ந்து ஓடாதா என்ன?
ஆதவன் தீட்சண்யாவுடன் உங்களுக்கு கருத்து
முரண்பாடுகள் இருக்கட்டும். அவர் செயல்பாடுகளுடன்
உங்களுக்கு ஒவ்வாமை கூட இருந்துவிட்டுப்
போகட்டும். அதெல்லாம் உங்கள் தனிப்பட்ட
விருப்பு வெறுப்பு சார்ந்தது. அவரவர் அரசியல்…
ஆனால் ஜெ.மோ அதை நீங்கள் ஏன் ஒரு
இலக்கிய உலகத்தின் மதிப்பீடாக மாற்ற
முயற்சி செய்திருக்கின்றீர்கள் என்பது தான்
இலக்கிய சமூகத்தின் கருத்து சுதந்திரம்
உங்களிடம் வைக்கும் கேள்வி..
ஒருவர் எழுதுவதும் பேசுவதும்
இலக்கியமா இல்லையா
என்பதையும் அவர் எழுதிய வரிகளின் ஆற்றலையும்
தீர்மானிக்கும் அதிகாரம் இங்கே யாரிடமும் இல்லை
ஜெ.மோ…
..
உங்களின் எழாம் உலகம் முதல் காடு வரை
வாசித்திருக்கிறேன்
ஆதவன் தீட்சண்யாவையும் வாசித்திருக்கிறேன்.
ஒரு வாசகனாக எங்கள் உரிமையை
நீங்கள் எடுத்துக்கொண்டு பேச வேண்டாம்.
எது ஆற்றல் மிக்கது
எது நிற்கும் எது நிற்காது
இதெல்லாம்… காலம் தீர்மானிக்கும்.
முச்சந்திகளும் தீர்மானிக்கும்.

No comments:

Post a Comment