Tuesday, August 21, 2018

சூர்யா@நட்பு மண்டலம் 1






உன்னைப் பற்றி ..இல்லை இல்லை நம்மைப் பற்றி எழுதப்போகிறேன்.
நம் நட்பை பற்றி-
நம் நட்பின் பயணங்கள் பற்றி-
நம் நட்பின் ஆழத்தைப் பற்றி-
அதன் அகலத்தைப் பற்றி-
ஆகாயத்து திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடித்த
ஆயிரமாயிரம் விடயங்களைப் பற்றி-
நம் சின்ன சின்ன சண்டைகளைப் பற்றி-
நம்மையும் நம் நட்பையும் பாதித்த உறவுகளைப் பற்றி-
எல்லாவற்றையும் பற்றி-
எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் எழுதப் போகிறேன்.


"வேண்டாம் உனக்கு இந்த அக்னிப்பரீட்சை" என்கிறாய் நீ.

அதென்னடா அக்னிப்பரிட்சை?
நம் சூரியமண்டலத்தில் அக்னிப்பரிட்சையா?
நம் நட்புக் கதிர்களின் முன்னால் நீ சொல்லும் அக்னிபரிட்சைக் கூட
காகிதத்தில் பற்றிய, காற்றில் அணைகின்ற சாதாரண நெருப்புதானே.!

கணவன் - மனைவி
காதலன் - காதலி
தாய் - மகன்
தந்தை - மகள்
இத்தியாதி உறவுகள்..
இந்த உறவுகளின் மண்ணில் வளரும் கவிதைகள், கதைகள்,
கனவுகள், கற்பனைகள்,
சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகிய சகலத்திலும் ஆண்-பெண் உறவுகளை
பாலியல் சட்டத்திற்குள் அடைத்துவைத்து சிறைக்கைதிகளாக்கும்
பூமி மண்டலத்தில் நாம் இருவரும் சேர்ந்து பாடிய விடுதலை
கீதம் உலக நாடுகளின் நட்பு மண்டலத்தின்
ஒரே தேசிய கீதமாக ஒலிக்கப் போகிறது.

நம் பாதை..
அவ்வையும்-அதியமானும் நடந்த பாதைதான்.
அறிவுமதி நட்புக்காலத்தில் காட்டிய பாதைதான்.
என்றாலும்,அவர்களின் பாதைகள் எல்லாம்
வேடந்தாங்கலுக்கு மட்டுமே அழைத்துச் சென்றன.
நம் வாழ்க்கை வேடந்தாங்கல் அல்லவே!
நம் நட்பு வெறும் இளைப்பாறும் மலைவாசத்தலமல்லவே!

மழையில் நனைந்து, வெயிலில் வியர்த்து,
மணலில் நடந்து நடந்து கடல் அலைகளில் கால்களை
நனைத்த அந்த அனுபவங்கள்..கொய்யாமரத்தில் அணில் கடித்து
 சுவைத்து விட்டுப்போன கனிகளுக்காக ஒருவர் பின்னால்
ஒருவர் சுற்றிய அந்த நாட்கள்...
இதை எல்லாம் இப்போது எழுதவில்லை என்றால்
இந்த அனுபவங்களை இனி எப்போது எழுத முடியும்?

இதை இந்த வயதில் கூட எழுத தயக்கம் ஏற்பட்டால்
நாம் காலம் காலமாய் பேசிக்கொண்டிருக்கும்
கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் எல்லாம் அர்த்தமிழந்ததாகிவிடும்.

நம் உறவுக்கு என்ன பெயர்?
நட்பு...
ம்கூம்.. நட்பு என்ற சொல் கூட நம் முன்னால் அயல்மொழி ஆகிவிடுகிறது.

நாம் உணர்ந்ததை, நாம் வாழ்ந்ததை, நாம் வளர்ந்ததை..
இந்தப் பிறவியின் நினைவுகள் மட்டுமல்ல
போன பிறவியின் நினைவுகளையும் சேர்த்து ஒரு மாலையாக
தொடுக்கும்போது..நட்பு என்ற வார்த்தை
போதவில்லை. அதைவிட வேறு வார்த்தை இல்லாததால்
நாம் அந்த வார்த்தையையே பயன் படுத்துவோம்.

கவிதையில், காதலில், தாய்மையில் கிடைக்காத சந்தோசத்தை
உன் ஒற்றை வார்த்தை
"என்னடா" என்ற உன் ஒற்றை வார்த்தை
வாரி வழங்கியது என்றால் இங்கே அதை யார்
நம்ப போகிறார்கள்  சொல்?

மற்றவர்களின் நம்பிக்கை அதன் விமர்சனப் பார்வைகளை
நாம் கடந்து வந்துவிட்டோம்.
உனக்கு என் மீதும், எனக்கு உன் மீதும், நம் இருவருக்கும்
நம் நட்பின் மீதும் இருக்கின்ற இந்த
நம்பிக்கை அழிவில்லாதது. இந்த பிரபஞ்சத்தைப் போல பிரமாண்டமானது.

இதைதான் நம் பாரதி "பாடிக் கலந்திடவே தவம் பண்ணியதில்லையடி" என்றானோ!

அவள் -
தவம் தொடர்கிறது..
களைக்க நினைத்தவர்கள் களைத்து போனார்கள்
கலைந்து போனார்கள்
இது மண் பிறக்கும் முன்பே மனசில் பிறந்த தவம்..!
நீரில், நெருப்பில், காற்றில், கடலில்,
மழையில் மலையில் செடியில் கொடியில்
உயிரில் தொடரும் மரபின் அணுவில்
தொடர்ந்த தவம்..!
யுகம் யுகமாய் வளர்ந்த தவம்!
சிருஷ்டி முகம் மாற்றி ஆடிய போதும்
ஆடாத தவம்..!
இதோ..
ஆட்டி வைப்பவன் ஆடும் சிலையாகிவிட்டான்.
வரம் கொடுக்க வந்தவன்
அவள் தவம் முடிய
காத்திருக்கின்றான்..!!

ஒருநாள் நீ பெருமையுடன் சொன்னாய்..
நம் நட்பும் நாமும் இந்த புதிய நூற்றாண்டின்
பண்பாட்டு மையங்கள் என்றாய்.

நான் அப்போது உன்னைத் திருத்தினேன்..
"இல்லடா..நம் நட்பை ஏற்றுக் கொண்ட உன் மனைவியும்
என் கணவரும் தான்
பண்பாட்டின் சிகரங்கள்" என்றேன்.

உன் கண்களில் பனித்துளிகள்..
நம் நெஞ்சங்கள் அதில் நனைந்தது.....
[ தொடரும் ]

மீள்பதிவு : நன்றி : பதிவுகள் இணைய இதழ் & வ ந கிரிதரன்.

1 comment:

  1. மேலும் ரசிக்க காத்திருக்கிறேன்...

    ReplyDelete