ஜானகிராமனின் “அம்மா வந்தாள் ‘ கதைகளில் நான்
மூழ்கிக்கிடந்தக் காலக்கட்டம்.
அன்பே ஆரமுதே என்று ஆரம்பித்து செம்பருத்தியாகி
மரப்பசுவை விரட்டி
மோகமுள் யமுனாவாகி நான் ஜானகிராமனை
பூஜை செய்து கும்பிடாதக் குறையாக
அலைந்துக் கொண்டிருந்தேன்.
அதுதான் உனக்குப் பிடிக்கவில்லை.
அந்தப் பைத்தியக்கார நாட்களில் ஒரு நாள்
நீ உன் கண்கள் சிவப்பேற என்னைக் கடித்துக் குதறினாய்.
-உன்னைப் போல இரண்டுபேர் கலை கலைக்காகவே என்ற
மயமானைத் தேடி ஓடுவதால்தான் இங்கே ஒழுக்கமும்
கலாச்சாரமும் சிறைவைக்கப் பட்டிருக்கின்றது.
இதைப் பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன கவலை?-என்றாய்
"ஆமாம் அப்படி என்னதான் என் ஜானகிராமன்
ஒழுக்க குறைவாக எழுதிவிட்டார்?” நானும் பதிலுக்கு உறுமினேன்.
"ஒகோ உன் ஜானகிராமனா...? உருப்பட்ட மாதிரிதான்.
உன் ஜானகிராமன் எழுதுவதில் எப்படிப்பட்ட ஆனந்தம் இருக்கின்றது
என்று சொல்லியிருக்கின்றார் தெரியுமா?
இந்தா இதைப்படித்துப் பார்" என்று அவரின் பேட்டி ஒன்றை
என்னிடம் நீட்டினாய். அதில் சிலவரிகள்..
"எனக்கே எனக்கு என்று சொல்லுகிற எழுத்தைப்பற்றித்தான்
இங்கு சொல்ல வேண்டும். அதுதான் மரியாதை.
அதுதான் உயர்வு. அதுதான் கௌரவம்.”
என்று ஆரம்பித்திருந்தார்.
எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்லமுடியும்.
விஸ்தாரமாகச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே
எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது. எழுதுகிறேன்.
அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல்
செய்கிற இன்பம் அதில் இருக்கிறது. காதல் செயகிற இன்பம்,
ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிபோதல், வேதனை -
எல்லாம் அதில் இருக்கின்றன.
இன்னும் உள்ளபடி சொல்லவேண்டும் என்றால்
பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு-
எல்லாம் அதில் இருக்கின்றன. கண்ய நஷ்டம், பாபம் பாபம் என்று
மூலையில் முடங்கியவாறே கையாலாகாமல்
முணுமுணுக்கிற மனசாட்சி, சந்தி சிரிப்பு, சந்தேகக்கண்கள் -
இத்தனையையும் பொருட்படுத்தாமல் முன்னேறுகிற
பிடிவாதம், வெறி அதாவது ஆனந்தம் - எல்லாம் அதில்
இருக்கின்றன..
உங்களுக்காக எழுதும் பொழுதோ,
உங்களுக்கும் எனக்கும் எழுதும்போதோ மனைவியைக்
காதலிக்கிற நல்லபிள்ளைத்தனமும் நிர்பந்தமும்தான்
கண்ணுக்குத் தெரிகின்றன. பல சமயங்களில்
நல்லபிள்ளையாகத்தான் காலம் தள்ளவேண்டியிருக்கிறது.
மனிதவாழ்க்கையின் நெருக்கடிகளும் பிடுங்கல்களும்
அப்படிச் செய்துவிடுகின்றன.
இந்த நிர்பந்தங்கள் இல்லாதவர்களைக் கண்டும்
பொறாமைப்படுகிறேன்......"
மெதுவாகப் படித்தேன். படித்து முடித்தவுடன் காச்மூச்சுனு
கத்துவேன் என்று நினைத்தாயா..? எனக்கு அதில் அப்படி
கோபப்பட எதுவுமே இருக்கின்ற மாதிரி தோணலை.
உனக்கு நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டதே எரிச்சல் தந்தது.
"அடுத்தவன் பொண்டாட்டியை காதலிக்கின்ற இன்பம்தான்
அவரின் எழுத்து என்றால் அப்படிப்பட்ட எழுத்து எனக்கு
வேண்டாம் " என்றாய்.
அப்படியானல் நீ யாருடைய எழுத்தையுமே படிக்க முடியாதுப்பா..
உன் கவிஞர்கள் எல்லோரும் இதைத்தானே
கவிதையின் மொழியில் எழுதறீங்க..
கவிதையின் இன்பம் , எது கவிதை, எது ரசனை இதற்கெல்லாம்
ஒரு பெண்ணை சம்மந்தப் படுத்தாமல் எழுதியது
யார்? ஒருவரைச் சொல்ல முடியுமா, சொல்.
நீ கொண்டாடுகிற கண்ணதாசனில் ஆரம்ம்பித்து
நேற்று தொலைக்காட்சியில் பேட்டிக் கொடுத்த கவிஞர் வரை
என்ன சொன்னார்கள் ?
ஒரே பெண்ணின் காதலில் மட்டும் இத்தனைக் காதல் கவிதைகளை
எழுத முடியாது என்று . மீசையை முறுக்கிக் கொண்டு சொன்ன போது
நீ ரசித்தாயே.… !என்னப்பா அர்த்தம்?..
உன் கவிஞர்களுக்கு ஒரு நியாயம்?
என் ஜானகிராமனுக்கு ஒரு நியாயமா? " என்றேன்.
நான் சொல்வது எதையுமே நீ கேட்கின்ற மனநிலைமையில் இல்லை.
வீண்வாதம், விதாண்டவாதம் செய்தாய்.
"பிறன் இல் விழையாமை" தான் ஆண்மை என்றாய்.
திருவள்ளுவர் வாழ்க!! என்றேன் நானும்.
ஒரு குற்றம், தவறு சமூகத்தில் இருந்தால் தானே
அது கூடாது என்று சொல்ல வேண்டியதே வருகின்றது..
திருவள்ளுவர் காலத்திலேயே எல்லாம் இருந்திருக்கிறது!”
என்றேன்
"ஆனால் நம் திருவள்ளுவர் அதை நியாயப்படுத்தவில்லை
உன் ஜானகிராமனைப் போல”
"போடா போ ஜானகிராமன் ஒன்னும் திருக்குறள் எழுதலை”
"உன்னை மாதிரி நாலுபேர் இருக்கின்ற வரை
இந்தச் சமுதாயம் உருப்படாது.. உருப்படவும் விடமாட்டீங்க”
"ஏய் .. சும்மா ஜம்பம் அடிக்காதேடா..
நீ உன் மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும்
காதலிக்கலை, ரசிக்கலை. ஆசைப்படலை.னு சொல்லு
பார்ப்போம்..”
சூர்யா, நீ அமைதியானாய்.
எனக்குத் தெரியும் என் சூர்யாவால்
என்னிடம் பொய் சொல்ல முடியாது என்று.
நட்பு பற்றி கிருத்திகாதேவி என்ற பள்ளி மாணவி
( நான் இக்கவிதையை வாசிக்கும் போது அவர் பள்ளி மாணவியாக
இருந்தார்!)எழுதிய கவிதைதான்
மெளனம் நம்மைக் கவிந்திருந்த
அக்கணத்தில் நம் மூச்சுக்காற்றில் சொற்களின்றி தன்னை
வாசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
"வேறிடத்தில்-
உண்மைபேச வேண்டியவர்களும்
ஊமைகளாயிருப்பார்கள்,
இங்குமட்டும்தான்-
ஊமைகளும்
உண்மை பேசுபவர்களாய்
இருப்பார்கள்"
நான் உன்னிடம் கேட்ட கேள்வியை நீ என்னிடம் கேட்டிருந்தால்
……………
என் பதிலும் கூட உன் பதிலாகத் தான் இருக்கும்.
சூர்யா..இந்தக் கேள்விக்கு மெளனம் மட்டும் தான் பதிலாக முடியும்.
எல்லோரிடமும் பொய்யாகப் பேசி, சிரித்து,
அழுது, ஆடிப் பாடி..சலித்துவிட்டது இந்த முகமூடிகள்.
. உன்னிடம் நானும் என்னிடம் நீயும் பொய்முகம் இல்லாமல்
நமக்கான சுயமுகத்துடன் சுவாசிப்பதால் தான்
நட்பு நம் காற்றை சுவாசித்து தன் இருத்தலை
நிச்சயப்படுத்திக் கொண்டே …
(நட்பு வளரும்)
அட...! வள்ளுவரும் வந்து விட்டார்...!
ReplyDeleteஎனக்கும் "என் ஜானகிராமன்" தான். அவரை தமிழகத்தின் தாமஸ் ஹார்டி என்று பாராட்டி அலைந்த காலம் உண்டு. உங்கள் பதிவு என் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டது.
ReplyDelete