Wednesday, August 22, 2018

சூர்யா@நட்புமண்டலம்.2





காதல் வனவாசத்தில் வாடிப் போகலாம். ஆனால் நட்பு வனவாசத்தில் கூட மனவாசனையை இழப்பதில்லை. ராமனைக் காதலிக்க மட்டுமே அறிந்திருந்ததால் தான் சீதை அவன் வனவாசத்தில் கூட அவனைப் பிரியாமல் அவனுடன்" ராமனிருக்குமிடமே என் அயோத்தி" என்று மரவுரி தரித்தாள்.இலட்சுமணனின் துணைவியோ அவனுடன் வனவாசம் செல்லாமல் தன் கடமைகளை நாட்டிலிருந்தே செய்தாள். ஏனேன்றால் அவளுக்கு தன் துணைவன் மீதிருந்த காதலுடன் நட்பும் கலந்திருந்தது.நட்பு கலந்த அவர்கள் காதலில் நம்பிக்கை என்றும் இருந்தது. நட்பில்லாத காதல் கடைசிக் காலத்தில் கூட அக்னிப் பிரவேசம் செய்து தன் புனிதத்தை நிருபிக்க வேண்டிய நிலைக்கு வந்தது. காதல் இல்லாத நம் நட்பு காலமெல்லாம் வனவாசத்திலேயே வாழ்ந்தது. வனவாசத்திலேயே வளர்ந்தது.நாம் நட்பை மட்டுமே காதலித்தோம்.. நம் நட்பில் அழகின் சிரிப்பு அர்த்தம் இழந்தது. சூர்யா, ஒருநாள் நீ நெருடாவின் கவிதைகள் மொழிபெயர்ப்பைக் கொடுத்தாய். உனக்குப் பிடித்தக் கவிஞர் நெருடா என்பதுதான் எனக்கு தெரியுமே. புத்தகத்தில் கவிதை வரிகளில் நீ அடிக்கோடிட்ட வரிகள் பல இருந்தும் என் கண்கள் என்னவோ அந்த ஒரு கவிதையை விட்டு  நகல மறுத்தது.இன்றும் அந்தக் கவிதை பசுமையாக நினைவிலிருக்கின்றது.

இந்த இரவில் என்னால் எழுத இயலும்

-பாப்லொ நெருடா-

Womanதுயர்மிகு வரிகளை
இந்த இரவில்
என்னால் எழுதவியலும்
உடைத்துச் சிதறடிக்கப்பட்ட
இரவில்
நீல விண் மீன்கள்
தூரத்தே நடு நடுங்குகின்றன.
இரவுக்காற்று
வானில் சுழன்று
இசைக்கின்றன.
துயர்மிகு வரிகளை
இந்த இரவில்
என்னால் எழுதவியலும்
நான்
அவளைக் காதலித்தேன்
அவளும் என்னைக்
காதலித்திருக்கக் கூடும்

இதனைப் போலொரு
முழு இரவினில்
அவளென் தோள்களில் சாய்ந்திருந்தாள்
முடிவற்ற வானில் கீழ்
மீண்டும் மீண்டும்
அவளை நான் முத்தமிட்டேன்.

அவள் என்னைக் காதலித்தாள்
சிலவேளைகளில்
நானும் அவளைக்
காதலித்திருக்கக் கூடும்
இன்றும் மகோன்னதமான
அவள் விழிகளை
எவ்வாறு
காதலிக்காதிருக்கவியலும்

துயர்மிகு வரிகளை
இந்த இரவில்
என்னால் எழுதவியலும்
என்னிடம் அவள் ஈல்லை
நினைக்கிறேன் நான்
நான் அவளை
இழந்துவிட்டதை
உணர்கிறேன்.
அவளோடு இல்லாததால்
இந்த மிகப்பெரிய இரவு
மேலும் மிகப்பெரியதாகிறது.

என் காதல்
அவளிடம் இல்லாததால்
எதுவுமாகிவிடவில்லை
அவள்
என்னோடு இல்லாததால்
இரவுகள்
உடைக்கப்பட்டு
சிதறடிக்கப்பட்டவைகளாகின்றன
விளைச்சல் நிலத்தில்
வீழும் நீர்த்துளிகள் போல
வார்த்தைகள்
ஆத்மாவிற்குள்
வீழ்கின்றன.

தூரத்தின் உள்ளே
யாரோ பாடிக்கொண்டிருக்கிறார்கள்
தூரத்தின் உள்ளே
அவளை இழந்ததால்
என் ஆத்மா
திருப்திகரமானதாக இல்லை.

என்னுடைய பார்வைகள்
அவளுக்காகத் தேடிக்கொண்டே
அவளிடமே சென்றடைந்து விடுகின்றன.
என்னிதயம் பார்க்கிறது அவளுக்காக
அவள் என்னுடன் இல்லை.

அதே இரவில்
வெண்மையாக்கப்ட்ட
அதே மரங்கள்
அதே நேரத்தில்
நாங்கள்
அதே மாதிரியாக
நீடித்திருக்கவில்லை.

நீண்டகாலமாக
நான் அவளைக் காதலித்திருக்கவில்லை
ஆனால் எவ்வாறு
அவளைக் காதலித்தேன் நான்
என் குரல்
அவள் கேட்கும்
காற்றைத்
தொட்டறிய முயற்சித்தது.

அவளின் குரலின் முன்னே
அவளின் ஒளியுடலின் முன்னே
அவளின் எல்லையற்ற
விழிகளின் முன்னே
என் முத்தங்கள் போல
பிறிதொருவனுடைய
அவள்
பிறிதொருவனுடையவளாகலாம்.

நீண்டகாலமாக
நான் அவளைக் காதலித்திருக்காவிடினும்
நிச்சயமாக
நான் அவளைக் காதலித்திருக்கக் கூடும்
காதல் மிகச்சிறியது
மறதியோ மிகப் பெரியது.

ஏனெனில்
இதனைப் போலொரு
முழு இரவினில்
அவள் என்
தோள்களில் சாய்ந்திருந்தாள்
அவளை இழந்ததால்
என் ஆத்மா
திருப்திகரமானதாக இல்லை

என்னை
அவள் வருந்துகிறாள்
இதுவே
அவளுக்காக
நான் எழுதும்
இறுதி வார்த்தைகளாக இருக்கட்டும்
இறுதி வரிகளாகவும்
இருக்கட்டும்
(தமிழில் .முத்துகிருஷ்ணன்)

 மீண்டும் மீண்டும் அந்த வரிகள் உன் குரலில் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. நான் கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரி மாதிரி ஆகிப்போனேன்..நீ எந்த எந்த வரிகளை அடிக்கோடிட்டிருந்தாய் என்பது உனக்கு இன்று மறந்து போயிருக்கும்..அந்த வரிகளை இப்போது நினைவு படுத்திப் பார்..நான் எவ்வளவு குழம்ப்பி போயிருப்பேன் என்று
உனக்கு புரியும்.

உன் அடிக்கோடுகள்

நீ£ண்டகாலமாக
நான் அவளைக் காதலித்திருக்கவில்லை

பிறிதொருவனுடைய
அவள்
பிறிதொருவனுடையவளாகலாம்.

நீண்டகாலமாக
நான் அவளைக் காதலித்திருக்காவிடினும்
நிச்சயமாக
நான் அவளைக் காதலித்திருக்கக் கூடும்
காதல் மிகச்சிறியது
மறதியோ மிகப் பெரியது.

சூர்யா ..நீ என்னைக் காதலிக்கின்றாயா?
அன்று இந்தக் கேள்வி என்னை துளைத்து எடுத்தது.
அதுமட்டுமா.. அதைத்தொடர்ந்து ஆயிரமாயிரம் கேள்விகள்..

சூர்யா, கடைசியில் நீயும் மற்ற சாதாரண ஆண்களைப் போலத்தானா..?
ரத்த சம்பந்தம் இல்லாத, உடலுறவு இல்லாத ஆண்-பெண் உறவுகள் காதல் என்ற வைரஸின்
தாக்குதலிருந்து தப்பவே முடியாதா?

அப்படியானால் நீ என்னிடம் பேசியதெல்லாம் வெறும் அலங்கார வார்த்தைகள் தானா?

சூர்யா.., நட்பு பற்றி நீ என்னிடம் என்னவெல்லாம் சொன்னாயடா.-.?

-காதலிக்கலாம்
காதலித்தவளைக் கல்யாணம் செய்து கொண்டு மீண்டும் வேறு ஒருத்தியையும் காதலிக்கலாம்..
காதலித்து கைப்பிடித்தவள் இறந்த பின்னால் மீண்டும் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கலாம்..
கல்யாணம் செய்து கொள்ளலாம்.. அவளுடனும் பிள்ளைப் பெற்று கொள்ளலாம்..
இதற்கு பெயர்தான் காதல்-
ஆனால் நட்பு அப்படிப்பட்டதல்லவே.
பூமி உருண்டயில் பிராணவாயுவை மட்டுமே சுவாசிக்க முடியும். நட்பு நமக்கு பிராணவாயு மாதிரி.
சந்திர மண்டலத்தில் கால் பதிக்கும் அதிசயத்தை நடத்திக் காட்டும் போதும் நட்பு தான் நம் ஆக்ஸிஜன் 
சிலிண்டர்..-

... இப்படி நீ சொன்னதெல்லாம் இன்று எப்படியடா பொய்யானது?
காதல் கெட்ட வார்த்தை அல்ல. உண்மைதான்.
நண்பர்களாக இருந்து பின் காதலர்களாக மாறி அதன்பின் கணவன் -மனைவியாக வாழ்ந்தவர்கள் பலருண்டு.
ஆனால் கடைசிவரை காதலை விலக்கிய நட்பின் சாட்சியாக வாழ வேண்டும் என்பத்ற்காகவே நட்பை மட்டுமே 
காதலிக்கப் பிறந்தவர்கள் நாம்.

நம் நட்பு தூங்கிய நேரத்தில் பருவக் கோளாறில் உன் காதல் படுக்க வந்துவிட்டதா?

உன் நெருடாவின் கவிதைவரிகள் என் நெஞ்சில் நெருஞ்சி முட்களாக தைத்துக் கொண்டிருந்தன.

இரண்டு நாட்கள் இரண்டு வருடங்களானது.

புத்தகம் வாங்க வந்தாய்." நீ படித்தயா?" கேட்டாய்
உன் கண்களை நிமிர்ந்து பார்க்க எனக்கு துணிவு வரவில்லை.
சட்டென்று "இவன் என் சூரியா இல்லை" என்று மனசில் பட்டது.
உன் அருகாமையில் இதுவரை நான் உணராத ஆண்வாடை.
நட்பாக என்னை நனைத்த மழையின் சாரலில்லை நீ.
என் வேர்களைப் பிடுங்கி இந்த மண்ணிலிருந்து என்னை விரட்ட வந்த பேய்மழை. இந்த ஆண்மையின் பேயாட்டத்தில் நான் விழப் போவதில்லை.
என் நட்பையும் என் சூர்யாவையும் நான் இழக்கப் போவதில்லை.

எந்த கவிதையைச் சொல்கின்றாய்?- கேட்டேன்
என் குரலே எனக்கு அந்நியமாகப் பட்டது.
உன் கண்கள் ஆச்சரியத்தில் ..
"ஏன் எல்லா கவிதைதகளையும் தான் சொல்கின்றேன்.உனக்கு பிடிக்கலயா?"
எனக்கு கோபம் வந்தது.
சூர்யா செயவதையும்  செய்துவிட்டு எதுவும் செய்யாத மாதிரி ஏன் நாடகம் ஆடுகின்றாய்?
என் கோபத்தை உணர்ந்தவுடன் தான் நான் எதோ சீரியசாக பேசுகின்றேன் என்பதை நீ அறிந்தாய்.

உன் நெருடாவின் அடிக்கோடிட்ட -- என்ன்னைப் பைத்தியமாக்கிய அந்த வரிகளைக் காட்டினேன்.
உன் கண்களில் சூரிய அடுப்புகள் கொதித்தது.
புத்தகத்தை கோபத்துடன் என் கைகளிருந்து பிடுங்கி மூடினாய்.
"ச்ச்சி.." என்றாய். வேகமாக உன் சைக்கிளை மிதித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்திற்குள் என் 
பார்வையிலிருந்து மறைந்துவிட்டாய்.

சொற்களில்லாத வெறும் உன் ஒலிக்குறிப்பில்  நீ என்ன வெல்லாமோ சொற்களால் சொல்ல முடியாத 
ஆயிரம்மாயிரம் அர்த்தங்களைச் சொல்லிச் சென்றுவிட்டாய்.

- ச்ச்சி உன் பெண்புத்தி பின்புத்திதானா?
-ச்ச்சி நம் நட்பின் மீது நீ வைத்திருந்த நம்பிக்கை இவ்வளவுதானா?
-ச்ச்சி நீயும் ஒரு சாதரண பெண்தானா?
-ச்ச்சி உன்னையா இந்த சூரியனைச் சூடேற்றும் ஒளிக்கதிர்கள் என்று நினைத்தேன்?
-ச்ச்சி நீயும் கடைசியில் ஒரு மோகமுள் தானா?
ஆதிமனிதனின் ஒலிக்குறிப்பில் நீ உதிர்த்துச் சென்ற ச்ச்சிக்கு இன்னும் நான் சரியான அர்த்தங்களை
தேடிக்கொண்டு தானிருக்கின்றேன்.
மொழியும் சொற்களும் ஆதிமனிதன் படைத்த ஒலிக்குறிப்பின் உண்மையான அர்த்ததை உணர்த்த முடியாமல் இன்றும் 
திண்டாடிக் கொண்டிருப்பதை உணர்கின்ற போது அறிவுஜீவி¢த்தனம் கொஞ்சமாக
தலைகுனிந்துதான் போகின்றது.

சூர்யா.. எதிர்வாதம் செய்யாமல், விளக்கம் தராமல், பக்கம் பக்கமாக கடிதமோ, கதையோ நாவலோ 
எழுதாமல் ஏன் ஒரு இரண்டு வரி புதுக்கவிதை கூட எழுதாமல் உன் ஒற்றை ஒலிக்குறிப்பில் நம் நட்பு  மண்டலத்தை 
நிச்சயப்படுத்திவிட்டாய். அன்று உன் மீது கோபம் வந்தாலும் இன்று என் சூர்யாவை நினைக்க நினைக்க 
பெருமையாக இருக்கின்றது.


1 comment:

  1. // மறதியோ மிகப் பெரியது //

    மிகவும் நல்லது...

    ReplyDelete