Wednesday, August 29, 2018

சூர்யா@நட்புமண்டலம்.8




பாரதியின் கவிதைகளை நீ பாடும் போது
உன் குரலும் பாரதியின் மொழியும்
மயக்கம் தரும். 
கேட்டுக்கொண்டே இருந்த நாட்கள் உண்டு.

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா 
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
 செல்வக் களஞ்சியமே

ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய்
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி 

உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
உச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி 

உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ?

இப்படி இதில் எதாவது சில வரிகளை 
நீ எனக்காகப் பாடுவாய்.
நான் எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவேன்.
நீ தான்அழுகை உன் பலகீனம்என்றாய்.
பெண்கள் அழக்கூடாது என்று சொல்லி சொல்லி
என் கண்ணீர்த்துளிகளை பொக்கிஷமாக்கினாய்.

அதே பாரதி பாடலின் இரண்டு வரியை 
உணர்ந்து அனுபவித்த அந்த இரவில்
மீண்டும் துளிர்த்தது
என் கண்ணீர்.

இந்த பிரபஞ்சத்தின் இன்னொரு பூமியாக
என் மகன்.. என்னைச் சுற்றி வந்த அந்த நாட்களில்
ஒரு நாள்..

அன்று அவனுக்கு 6 வயது கூட நிரம்பவில்லை.
இன்று போல் அன்றும் கார்காலம்.
பணிக்கு விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தேன்.
அவன் பள்ளி முடிந்து வருவான் என்று பால்கனியில் நின்றேன்.
என்னைப் பால்கனியில் பார்த்தவன் அப்படியே பேருந்திலிருந்து
-அருவியென குதித்தான்
-நெரிசலான அந்த சாலையை மின்னலென கடந்தான்
-காவலாளி கதவு திறக்க காத்திருக்காமல் அப்படியே 
அந்த ஆளுயர கதவுகளை ஆற்றின் வெள்ளமென கடந்தான்.
-மின் தூக்கிக்காக காத்திருக்காமல்
 படிக்கட்டுகளில் மலைமேகமென ஏறினான்.
நான் பால்கனியிலிருந்து வந்து கதவு திறக்கும் முன்பே
தட்ட த்டதடவென தட்டினான்.
கதவுகள் திறந்தவுடன் அந்த மழை என்னை 
முழுவதுமாக நனைத்துவிட்டது.
அன்று நனைந்தது இன்னும் காயவில்லை.
ஏன் இந்த உடல் எரியும் போது கூட 
அந்த ஈரம் மட்டும் காயாது.

அன்று முழுவதும்
"அள்ளி அணைத்திடவே என் கண்முன்னே
  ஆடிவரும் புயலே....
  ஆடிவரும் புயலே..என்
  ஆடிவரும் புயலே"
என்று என் மனசுகவிதை வரிகளைப் பாடிக் கொண்டிருந்தது.
நடுநிசி. சட்டென ஒரு மின்னல் ..
பாரதி சொன்னது "ஆடிவரும் தேனே" என்றல்லவா
இது என்ன "ஆடிவரும் புயல்"???

தேன் ஆடிவருமா?
தெரியாதுடா. மகாகவி பாரதிக்கு தேன் ஆடிவந்திருக்கலாம்.
உன் தோழிக்கு-
புயலே அல்லவா ஆடிவந்தது..!!!!

என் துணைவரை எழுப்பினேன்.
"புயல் ஆடிவருமா?" என்றேன்
"ஆமாம் ஆமாம் பூகம்பம் கூட உன்னிடம் பாடி வரும்..
படு.. நேரம் இப்போது இரவு 2 மணி..தூங்கு.".என்றார்.
அணைக்க வந்த கைகளை விலக்கி வைத்துவிட்டு
 அந்த அரவணைப்பிலிருந்து விலகி நான் தனியாளாக நின்று 
கொண்டிருந்த அந்த நடுநிசியில் உன்னை நினைத்தேன்.
என் ஆடிவரும் புயலை உன்னால் கண்டு கொள்ளமுடியும்.
உன்னால் உணரமுடியும்..
உன்னால் அனுபவிக்க முடியும்.
என் அனுபவத்தை உன் அனுபவமாக்க துடித்தேன்.
தொலைபேசியின் அருகில் சென்று ..
எண்களைத் தொட்ட விரல்கள்.. 
அனிச்சையாக பின் வாங்கிக்கொண்டன.
ம்கூம்..நடுநிசியில் உன்னுடன் பேசினால் தவறில்லை தான்.
ஆனால் பேசுவது சாத்தியமில்லையே.
ஆமாம் சாத்தியமில்லைதான்.
தவறில்லை என்று நாம் ஒத்துக்கொண்ட ஒன்றை
 எல்லா காலத்திலும், எல்லா இடத்திலும் செய்வது என்பதும் 
சாத்தியமில்லைதான். நடைமுறைக்கு ஒத்துவருவதில்லைதான்.
அப்படியானால்.. 
அதன் நியாய அநியாயங்களில் என்னை-
-என் சுயத்தை இழந்துவிட்ட ஒரு பிம்பம் தானா?

என் இயலாமையில் -
என் இரட்டை வேடத்தில்-
என்னையே நான் வெறுத்தேன்.

நான் அழுவதில்லை.
நான் கண்ணீர் சிந்துவதில்லை.
உனக்குத் தெரியும்.
அன்று என் கண்ணீரில்-
என் கண் இமைகளை உடைக்காத கண்ணீரில்
 நீ இருந்தாய்.
அந்த நடுநிசியில்
உன்னைத் தேடினேன்.. 
அதே வரிகளை..நீ இப்போது பாட வேண்டும்.

அள்ளி அணைத்திடவே என் கண்முன்னே
ஆடி வரும் புயலே .. என்று பாட வேண்டும்.
உன் தோள்களில் சாய்ந்து அந்தப் பாடலில்
நான் கரைந்துவிட வேண்டும்.

சூர்யா..

அண்டப்பெருவெளியில் இமைகளைப் பிடுங்கிய
கனத்த விழிகளோடு உன்னைத் தேடினேன்.
அக்னியாக அலைந்து திரிந்தேன்.
கடல் அலையாக ஓய்வின்றி தேடிக்கொண்டிருந்தேன்.
காற்று அடங்கிப்போனது.
ஒளிக்கதிர்கள் இருண்டுப் போனது.
உயிர்க்குருவி சிறகுகள் உதிர்த்து
துடிக்கும் தருணத்தில்
ஒரு துளி கண்ணீர்
உப்புக்கரித்தது. 
நட்சத்திரங்கள் கைகளை நீட்டி
என் கண்களைத் துடைத்தன.

நட்சத்திரங்கள் கூட சூரியன் தானாம்.
பூமி மண்டலம் பாடம் நடத்தியது.






No comments:

Post a Comment