உன்னை நான் "நீ" என்றும்
என்னை நீ என்ன "டா" என்றும் சொன்னால் தான்
நாம் பேசிக்கொள்வது போல் இருக்கின்றது.
உன்னை நான் "நீங்கள்" என்றும்,
என்னை நீ "வாருங்கள்" , "உட்காருங்கள்"
என்றும் அழைத்துக் கொண்டால்
நமக்கு நாமே அந்நியப்பட்டுவிட்ட மாதிரி இருக்கின்றது.
ஆனால் நீ ஊருக்குப் பெரிய மனிதனாம். இரண்டு பிள்ளைகளுக்கு
தகப்பனாம். நான் உன்னை நீ என்று அழைத்தால்
அது தவறாம். மரியாதைக்குறைச்சலாம்
என்ன தான் நட்பு, இலக்கியம், சமத்துவம்னு பேசினாலும்
இது என்ன ஒரு பொம்பளை ஆண்மகனை கொஞ்சமும்
மரியாதை இல்லாமல் "வாடா .. போடா”ங்கிறா.
இது வெளிப்படையாக அவர்கள் பேசும் பேச்சுகள்.
அவர்கள் கேட்க விரும்பியது என்னவோ..
“அப்படி என்ன அவளுக்கு அவனிடம்
நெருக்கமாம்?” என்பது தான்!
உன் புதிய உறவுகள்
நீ என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்
நீ மாற வேண்டும்
நானும் மாறித்தானாக வேண்டும் என்று ஒரு கட்டத்தில்
வரம்புகள் மீறி நிர்பந்திக்க தொடங்கினார்கள்.
எல்லாவற்றையும் வெளிப்படையாக என்னிடம் பகிர்ந்து கொள்ளும்
நீ ..
என் பொருட்டு உனக்கு ஏற்பட்ட சில காயங்களை
மறைத்துவிட்டாய்.
என்னிடம் சொல்லி இருக்கலாம் சூர்யா..
கேட்டவுடன் .மனசுக்கு கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.
ஆனாலும் புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு.
நானும் உன்னோடு சேர்ந்து வளர்ந்து கொண்டிருந்தேன்.
வளைந்து கொடுக்கவும் தெரியும்.
வாழ்ந்துக் காட்டவும் தெரியும்.
அப்படித்தான் .. அன்று நண்பர்கள் தினம்.
நம்மைப் போன்ற நண்பர்களுக்கு நட்பு மட்டும்தான் தெரியும்.
இந்த நண்பர்கள் தின கலாச்சாரம் தெரியாதுதான்.
பல்கலைக் கழகத்தில் என் படிப்பு தொடர்ந்தபோது
தோழியர் தங்கள் நண்பர்களுக்கு நண்பர் தின
வாழ்த்து அட்டைகளை வாங்கினார்கள்.
உன் நினைவுகளின் ஆக்கிரமிப்பு..
அந்த வாழ்த்து அட்டையை எடுத்தேன்.
ஒரு வண்டிப்பாதையில் கருவேலம் மரங்கள் அடர்ந்த
அந்த புன்செய்க்காட்டில் ஒரு யுவனும் யுவதியும்..
நம்மைப் போலவே அவர்கள் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்..
முகம் தெரியாத அந்த ஓவியத்தில்
நீயும் நானும் பயணித்துக் கொண்டிருந்தோம்.
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது
அவர்களின் உடல் அசைவுகள்,
அந்த அசைவுகள் சொல்லும் அர்த்தங்கள்
அவர்களின் உறவைச் சொல்லும்.
ஓவியத்தில் நான் கண்டதை நீயும் காண வேண்டும்
என்று விரும்பினேன்.
அனுப்பும் முன்பு ஏதாவது எழுதவேண்டும் என்று தோன்றியது.
யோசித்து யோசித்து பார்த்ததில்
எனக்கு தெரிந்த எல்லா மொழிகளின் எல்லா சொற்களும்
நான் சொல்ல நினைப்பதை
சொல்ல முடியாது குறைப்பட்டு நின்றன.
நம் நட்பின் மொழியாக
-உன் "என்னடா" சொல் கேட்க வேண்டும்….-
என்று மட்டும் எழுதியிருந்தேன்.
வாழ்த்து அட்டை யார் கையில் முதலில் கிடைத்து என்று தெரியாது!
உன் வீட்டில் ஒரு பெரிய்ய்ய மகாபாரத யுத்தமே நடந்ததாக
பின்புதான் கேள்விப்பட்டேன்.
அப்படி என்ன அவளுக்கு உங்களிடம் நெருக்கம்?
என்னை விட அவள்தான் உங்களுக்கு பெரிசா போச்சா?
இப்படி எத்தனை எத்தனை கேள்விகளை நீ சந்தித்தாயோ?
ஆனால் நீ உன் கண்கள் சிவக்க உன் காதல் மனைவியிடம் சொன்ன வார்த்தைகள்
இன்றும் என் நட்பை தாலாட்டும் வசந்தங்கள்.
"ஆமாம் உன்னை விட எனக்கு அவள் முக்கியம்தான்..
அவளை நான் பெரிசா நினைக்கிறது உண்மைதான்.
உனக்குப் புரியறமாதிரி சொல்லனும்னா ..
உனக்கு -
உன் கோவில் முக்கியம் மாதிரி..
உன் சாமி முக்கியம் மாதிரி..
உன் வேதம் முக்கியம் மாதிரி..
எனக்கு அவள் முக்கியம்..
புரியுதா?
உன் சாமியை நீ கல்யாணம் பண்ணிக்கலை-
உன் வேதத்தை நீ கட்டி அணைச்சுக்கலை-
உன் கோவிலில் நீ வாழ்க்கை நடத்தலை-
அத மாதிரி அவளும் எனக்கு..
இந்த வாழ்த்து அட்டைக்குத் தானே இத்தனைக் கேள்விகள்?
கோபத்தில் என் "என்னடா" வாழ்த்துக்களை கிழித்து எறிந்தாயாம்.
நான் எழுதிய ஒரு "என்னடா"விலிருந்து பல நூறு
"என்னடா"க்கள் உன் வீட்டு முற்றத்தில் பறந்ததாம்.
"ஏய் இதெல்லாம் எப்படிடா தெரியும் என்று கேட்காதே.
சூர்யா.. நீ கிழித்துப் போட்டிவிட்டுப் போனதை உன் அவள்
எடுத்து ஒட்டி வைத்திருக்கின்றார்கள். அவர்களே பல வருடங்கள்
கழித்து அதை என்னிடம் காட்டினார்கள்.
அவர்களின் வாயாலேயே நீ சொன்னதைக் கேட்ட போது
அப்படியே வானத்தில் பறக்கின்ற மாதரி இருந்தது.
நாம் விதிவிலக்குகளா சூர்யா..!
அப்படித்தான் அவர்கள் நினைக்கிறார்கள்.
இருண்ட வானத்தில்
நம் நட்பே விடிவெள்ளியாய்.
இருளுக்கு தெரிகிறது நம் வெளிச்சத்தின் விடியல்.
பகலின் வேஷங்கள் தான்
நட்சத்திரங்களை இருட்டடிப்பு செய்கின்றன.
No comments:
Post a Comment