Wednesday, July 22, 2020

தமிழ் அறமும் மரபு செல்வங்களும்


 118 ஆண்டு பழமையான ஓலைச்சுவடி ...
தோழி..
என்னிடம் முக்கியமான சில 
ஓலைச் சுவடிகள் இருக்கின்றன. 
மருத்துவம், வானசாஸ்திரம்,மாந்தரீகம்,ஜோதிடம் , 
நெசவு,விவசாயம்., வர்மக்கலை...
இத்தியாதி..
வள்ளுவர் வம்சாவளி என்று தங்களைச் 
சொல்லிக் கொள்ளும் என் கணவர் 
அவர் குடும்பம் அவர் ஊர் மற்றும் 
அவர் சொந்தங்கள் வாழும் அந்த எட்டு கிராமங்கள்.. 
ஏற்கனவே நான் உன்னிடம் பேசி இருக்கிறேன். 
நினைவிருக்கிறதா தோழி..?
அழிந்தது போக எஞ்சியிருக்கும்
அந்த பொக்கிஷங்களை எல்லாம் 
பாதுகாத்து வைத்திருப்பது பற்றி
 கவலையுடன் யோசிக்கிறேன்....
நம் செல்வங்களையெல்லாம் 
கொள்ளையடித்துக் கொண்டு போய் 
வைத்திருக்கும் அதே இடத்தில்
லாக்கரில் வைக்கச் சொல்கிறாய்!
தஞ்சைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில்
 இருப்பதை நீயும் மறந்துவிட்டாய்... !
நெசவு சிறுதொழில் வளர்ச்சிக்கு 
தனி இலாகா வும் அமைச்சரும் 
நமக்கு உண்டு என்ற அரசியலையும்
பேச மறுக்கிறாய்!
மறந்து கொண்டே இருப்பது மனித இயல்பு..
 என்று சொல்லும் நீ 
அதனால் 
இழந்துக் கொண்டிருப்பதைப் பற்றி 
அறிந்தும் அறியாதது போல
 நடந்து கொள்கிறாய்!
இப்போதெல்லாம் 
என்னை மௌனிக்க வைப்பதில்
 நீ அதிக கவனம் செலுத்துகிறாய்... !
என் அறிவு பொக்கிஷங்களைப்
பாதுகாப்பது பற்றி 
 எனக்குப் பாடம் எடுக்காதே
தலைமுறை தலைமுறையாக 
படிஎடுத்து  ரகசியங்களை 
கடத்தி வந்திருக்கும் சூட்சமங்கள் 
உன் கணினி அறியாதவை.
எங்கள் ஊரில் 
மூன்று யுகம் கொண்டாள் சாட்சியாக
அவள் கருவறையில் 
ரகசியங்களைப் பாதுகாக்கப் போகிறேன். 
மனிதர்கள் மீது 
நம்பிக்கை இழக்கும் போது... 
தெய்வங்கள் சாட்சி சொல்ல வருகின்றன....
மூன்று யுகம் கொண்ட அவள்
நெற்றிக்கண் தூங்கவில்லை..
அறம் நின்று கொல்லும்.
தமிழ் அறம் என்றும் வெல்லும்.

1 comment:

  1. தமிழ் அறம் என்றும் என்றென்றும் வெல்லும்

    ReplyDelete