14 ஆண்டுகள் முடிந்துவிட்டன...
இப்போதும் அந்த சம்பவத்திலிருந்து மீள முடியவில்லை.
2006 ஜூலை 11
மாலை 6.24 முதல் 6.35க்குள் 11 நிமிடங்களில்
மாதுங்கா, மாகிம், பாந்திரா, க்கார், ஜோகேஸ்வரி, பயந்தர், போரிவிலி ..
7 இடங்களில்
ஓடிக்கொண்டிருந்த டிரெயினில் குண்டுகள் வெடித்தன.
209 பேர் உயிரிழந்தார்கள்..
714 பேர் படுகாயமடைந்தார்கள்.
அவர்களிலும் பலர் இன்று உயிருடன் இல்லை.
பயணித்தவர்களுக்கு இன்றும் அந்த நினைவுகள்
துரத்திக்கொண்டு இருக்கின்றன..
அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான்.
உயிரிழப்பு.... என் உறவினர் குடும்பத்திலும்.
கண்வர் சங்கரின் அண்ணன் மகள் சுசிலா-இராமச்சந்திரன்
இணையரின் ஒரே மகன் பிரபு (வயது 22) இழந்தோம்.
அன்று எனக்கு ஏற்பட்ட இன்னொரு அனுபவம்..
இரண்டும் என்னைத் துரத்திக்கொண்டே இருக்கின்றன.
அந்த விழிகள் துரத்திக்கொண்டிருப்பதை
என் சிறுகதையில் எழுதி இருந்தேன்.
எழுதியப்பின் கல்கியில் வெளியானது அச்சிறுகதை...
அக்கதையை அதே கதையின் நிஜக்கதாபாத்திரமான
பிரபுவின் அப்பா .. மருமகன் இராமசந்திரன் அவர்கள்
வாசித்துவிட்டார்..... அவர் தமிழ் இதழ்கள் வாங்கி
வாசிப்பவரல்லர். தொழிலதிபரான அவருக்கு அதற்க்கெல்லாம் நேரமிருப்பதில்லை. ஆனால்... தன் வேலை விசயமாக
மதுரை விமான நிலையத்தில் காத்திருக்கும் போது
கல்கியை வாங்கி இருக்கிறார்.
பக்கத்தைப் புரட்டும்போது என் படத்தைப் பார்த்துவிட்டு ...
வாசித்தும் இருக்கிறார்.
அவர் அன்று ஏன் கல்கியை வாங்க வேண்டும்?
அவர் வாங்கிய கல்கி இதழில் அந்தக் கதை ஏன்
இடம்பெற்றிருக்க வேண்டும்?
அதை அவர் ஏன் வாசிக்க வேண்டும்..?
வாழ்க்கையில் இம்மாதிரி சில நிகழ்வுகள்
ஏன் நடக்கின்றன..?
கதையும் கதைக்கான கருவும் பின்புலமும் அவர்
வாழ்க்கையின் நிஜங்கள்...
அதுவும் அவரைப் புரட்டிப்போட்டு சிதைத்த குண்டுவெடிப்பு.
வாசித்தவர் ஏர்போர்ர்டிலிருந்தே போன் செய்தார்..
அவர் பேசப் பேச எனக்குத்தான் அழுகை வந்தது.
கதையின் ஊடாக என்னைத் துரத்தி இருக்கும்
அந்த விழிகளையும் என் உணர்வுகளையும்
அவர் பாராட்டியபோது ....
நான் மவுனமானேன்......
No comments:
Post a Comment