Thursday, July 23, 2009

நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்



என் முதல் கவிதை நூல் - சூரியப்பயணம் கவிதைகளுக்கு ஓர் அணிந்துரைக்காக நாஞ்சில்நாடனின் முகவரித் தேடி
என் கவிதைகள் பயணித்தன. அப்போது என் வாசிப்பு நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு, தலைகீழ்விகிதங்கள், சதுரங்ககுதிரை
மட்டுமே. மும்பையில் என்னையும் நாஞ்சிலாரையும் அறிந்த நண்பர்கள் நாஞ்சிலாரின் அணிந்துரைக்காக
என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். அதன்பின் நானும் என் பணிகளுக்கு நடுவில் மறந்துப்போனேன்.
கவிதைகளையும் கவிதைகள் அனுப்பியதையும். சில மாதங்கள் கடந்து அவர் அணிந்துரையும் கடிதமும்
வந்தது. அணிந்துரை நாஞ்சிலாரின் 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
அவர் தந்த அணிந்துரையை விட மிகவும் முக்கியமானது அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம்.

கானமுயலெய்த அம்பினில் யானைப் பிழைத்த
வேல் ஏந்தல் இனிது

என்று முடியும். அக்கடிதம். இன்றும் ஒவ்வொரு நூலும் அச்சில் வெளிவரும் போது நான் எடுத்து மீண்டும் மீண்டும்
வாசித்துக் கொள்ளும் ஒரு கடிதம் நாஞ்சிலாரின் கடிதம் தான்.
எங்காவது என் சிறுகதைகள், கவிதைகள் வாசித்தால் அதைப் பற்றி தொலைபேசியில் பேசுவது மட்டுமல்ல
அதிலிருக்கும் குறைகளையும் தெளிவாக என்னிடம் சொல்லும் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ்ச்சிப்ப்படுத்தும்
தருணங்கள். மழையில் மிதந்த மும்பை, தீவிரவாதிகள் தாக்கிய மும்பை, குண்டுவெடிப்புகளில் காயப்பட்ட
மும்பை.. இப்படியாக மும்பையைப் பற்றிய செய்திகள் வாசிக்கப்படும் போதெல்லாம் அதைப் பற்றி
பேசியிருக்கிறார். பெரும்பாலும் கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது
சமூக அக்கறையுடன் மும்பை, மும்பை சார்ந்த செய்திகளைப் பேசியிருக்கிறார்.

அவர் குடும்பத்தில் அடுத்தடுத்து துயரச் செய்திகள் கேள்விப்பட்டு தொடர்பு கொண்டு பேசிய போது
'இனிமேல் குடிப்பதில்லை ' என்று முடிவு செய்திருப்பதாகவும் தனக்கென நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும்
சொன்ன குடும்பத்தலைவனைப் பார்த்தேன்.

ஓரளவு இன்று நாஞ்சில் நாடனின் படைப்புகளை முழுமையாக வாசித்திருக்கிறேன், அவரைப் பற்றியும்
அறிந்திருக்கிறேன் என்ற பின்புலத்தில் இன்று அவர் படைப்புகளை மீண்டும் வாசிக்கவும் யோசிக்கவும்
ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாஞ்சிலாரின் படைப்புகளில் பெண் காதாபாத்திரங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? என்று
நண்பர் கே.ஆர்.மணி என்னிடம் கேட்டார். அப்போது தான் நாஞ்சிலார் படைப்புகளில் உலாவும்
பெண்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நாஞ்சில் நாடனா.. அவர் கதைத்தளம் முழுக்கவும் ஆண்களின் ஆக்கிரமிப்பு..ஆண்பார்வையில்
நகரும் கதைகள் என்பது புறந்தள்ள முடியாத உண்மை. நாஞ்சில்நாடன் தன் கதைகளில் பெண்ணியம்
பேசுவதாகவோ அல்லது பெண்விடுதலைப் பேசி தன்னை பெண் விடுதலையின் நாஞ்சில் தலைவனாகவோ
அடையாளம் காட்டிக்கொள்ளும் பம்மாத்துகளைச் செய்வதில்லை. நாஞ்சிலாரின் கதைகளின் ஊடாக
பயணிக்கும் போது நாம் சந்திக்கும் பெண்கள் மிகவும் சர்வசாதாரணமாக பெண்ணியத்தையும் பெண்விடுதலையையும்
பாட்டிவைத்தியம் போல சொல்லிக்கொண்டிருப்பார்கள்! அவர்களுக்கே உரிய நாஞ்சில் மொழி நடையில்
கதைக்கு மிகவும் தேவையான அளவு மட்டுமே கருத்துகள் தெளிக்கப்பட்டிருக்கும்.
எந்தக் கதையிலும் கதையை விட்டு விலகியோ துருத்திக்கொண்டொ அவர் பேசும் பெண்ணியம்
தனித்து நிற்பதில்லை. பெண்ணியம் மட்டும் அல்ல.. நாஞ்சில் நாடன் அவர் படைப்புகளில் பேசும் சமூக அரசியலும்
அப்படித்தான். நாஞ்சிலார் கதைகளில் சமூக அரசியல் பேசுகிறாரா ? என்று பலர் வியப்படையலாம்.
அவர் படைப்புகளின் ஊடாக நடத்தும் சமூக அரசியல் குறித்து கோவை ஞானி அவர்களும் மிகவும்
வியப்புடன் என்னிடம் பேசியிருக்கிறார். தனிக்கட்டுரையாக இது குறித்தும் எழுத வேண்டும்.

நாஞ்சிலாரின் முதல் நாவல் தலைகீழ் விகிதங்கள் முழுக்கவும் ஆணின் பார்வையில் நகரும் கதைதான்.
அதுவும் ஒரு 25, 27 வயது இளைஞனின் பார்வையில் வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் முதலில் அறிந்த ஆண் அவள் தந்தை. அவளுக்குத் திருமணமாகி
இன்னொருவன் மனைவியானப் பின் அவள் தன் கணவனை தன் தந்தையுடன் அதிகமாக ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.
அதிலும் குறிப்பாக ஆளுமையும் அதிகாரமும் கொண்ட தந்தையாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
இந்த ஒப்புமையின் ஏற்ற இறக்கங்களின் பாதிப்புகள் ஓர் ஆணின் பார்வையில் தலைகீழ் விகிதத்தில்
பேசப்படுகிறது. ஒரு பெண்ணின் பார்வையில் எதுவும் பேசப்படவில்லை.
இந்திராகாந்தியின் வாழ்க்கையில் தந்தை-கணவர் என்ற இருவருக்கும் நடுவில் அவர்
இழந்துப் போன வாழ்க்கையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரே கூட
இல்லஸ்டேட் வீக்லி பத்திரிகையில் ஒரு நேர்காணலில் இதைக் குறிப்பிடத் தான் செய்திருக்கிறார்.


நாஞ்சிலாரின் பெண்கள் சிலரின் முகம் தெரிவதில்லை. பலருக்கு தனிப்பட்ட எந்த அடையாளமும்
கிடையாது. தனிப்பட்ட கருத்துகளோ விருப்பு வெறுப்போ கூட கிடையாது.
'எச்சம்' சிறுகதையில் எல்லோரும் போனபின் செத்துப்ப்போன பலவேசம் பிள்ளையின் சிதைக்குப்
பக்கத்தில் வந்து தன் இரு பெண்குழந்தைகளுடன் நின்று அழுதுவிட்டு வாய்க்குள்ளேயே புலம்பிக்கொண்டு
போகும் உருவங்கள். முகம் தெரிவதில்லை, வார்த்தைகள் குறைப்பிரசவமாகிப் போகும் இடத்தில்
நாம் பார்க்கும் பெண்களின் மவுனத்தில் தான் கதையின் அதுவரை எழுதப்பட்ட அனைத்து சொற்களும்
மறுவாசிப்புக்குள்ளாகி கதையைக் கனப்படுத்துகின்றன.
அப்படித்தான் நாஞ்சிலாரின் சில பெண் கதைப்பாத்திரங்களும்,

மாமிசப்படைப்பு நாவலில் (பக் 71)
"இவனுகெல்லாம் எட்டு ஏக்கரும் பத்து ஏக்கரும் அம்மைக்கு வயத்திலேருந்து வர்ச்சிலேயே கூட கொண்டு வந்தானுகோ?
எவனோ எழுதி வச்சான்.. பெண்டாட்டியோ மகளொ பாக்கதுக்கு செவப்பா லெச்சனமா முலையும் தலையுமா
இருக்காளா? இன்னா நாப்பது கோட்டை விதப்பாடு..." என்று சொல்லும் போது பெண் என்னவாக பயன்படுத்தப்பட்டாள்
என்பதைக் காட்டுகிறார்.
இவருடைய பெண்களுக்கு ஆண் சமுதாயம் பெண்ணியல்புகளாக செதுக்கி வைத்திருக்கும் கற்பியல் குறித்த
கோட்பாடுகள் இல்லை. பெரும்பாலான பெண் கதைப்பாத்திரங்கள் அக்கா என்றும் மதனி என்றும்
அழைக்கப்படுகிறார்கள். அக்காவுடனும் மதனியுடனும் சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாலியல் உறவுகளைத் தின்று
செரித்து நிற்கும் ஆண்களுடன் முரண்படாமல் இசைந்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்.
உபாதை சிறுகதையில் வரும் பூமணி, தவசி சிறுகதையில் வரும் விசாலம், தலைகீழ் விகிதங்கள்
க்தைநாயகி இவர்கள் தான் விதிவிலக்கானவர்கள். அதிலும் குறிப்பாக உபாதை கதையின் பூமணி.
கங்காதரன் பிள்ளையிடம் வசமாக மாட்டிக்கொண்ட போதும் தன் சாதுர்யத்தால் அவரைத் தள்ளிவிட்டு
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவள்.
தவசியில் வரும் விசாலம் கணவனால் கைவிடப்பட்டு குழந்தையுடன் ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
வயிற்றுப்பசி தீர்க்க காத்திருக்கும் தவசி. இக்கதையில் கூட தவசியைப் பற்றிய காட்சிப்படிமம் நம்மை
அதிகம் சிந்திக்க வைக்கிறது.
"சற்றும் கவர்ச்சியின் சாயை அடிக்காத உடலமைப்பு. மேல்வரிசைப் பற்கள் முரண்பாடான கோணத்தில் இருக்கும்.
என்ன முயற்சி செய்தாலும் வாயை மூடவே முடியாது. கதவோ, திரையோதான் போட வேண்டியதிருக்கும்...
விசாலத்திடம் யாருக்கும் விளையாடத் தோன்றாது. அந்த சோகம் தங்கிய முகத்தைப் பார்க்கவே ஆகாது ஆண்களுக்கு"
இப்படிப்பட்ட விசாலம் தவசியாகி - பிச்சை எடுப்பதற்கு - காரணம் அவள் ஆண்களை ஈர்க்கவில்லை என்பதும்தான்.
"அழகே இல்லாததால் அவள் எனக்குத் தங்கை ஆகிவிட்டாள்" என்று வாசித்த புதுக்கவிதை வரிகள்
நினவுக்கு வருகிறது.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனால் தாம்பத்ய சுகம் அனுபவிக்க முடியாத பெண்கள்,
கணவனால் தாய்மை அடைய வாய்ப்பில்லாத பெண்கள் இவர் கதைகளில் சமூகம் விதித்திருக்கும்
ஒழுக்க கோட்பாடுகளை மீறியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால்
பெண் தன் கணவன் தவிர்த்து பிறிதொரு ஆணை விரும்புவதற்கும் உடலுறவுக்கு இசைவதற்கும்
மேற்கூறிய காரணங்களையே நாஞ்சிலார் தன் கதைத்தளத்தில் கையாண்டிருக்கிறார்.
இந்தக் காரணங்களை முன்வைப்பதன் மூலம் அக்கதைப் பாத்திரங்களின் செய்யல்பாடுகளை நேரிடையாக
நியாயப்படுத்திடவில்லை எனினும் வாசகனுக்கு அக்கதாபாத்திரங்கள் மீது வெறுப்பு ஏற்படுவதில்லை.

"கொடுக்கல் வாங்கல்; சிறுகதையில் வரும் பொன்னம்மை தானியலின் உடற்பரப்பை மேய்ந்து கொண்டிருப்பவள்.
அதுவும் அவன் மரத்தில் ஏறி நிற்கும் போது கீழே விழுந்தக் காய்களைப் பொறுக்காமல் தலைதூக்கி அண்ணாந்து
அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள். தார் பாய்ச்சிக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தானியல் யோசிக்கும்
அளவுக்கு அவனையும் அவன் உடலையும் மேயக் காத்திருக்கும் பசு அவள்.

நாஞ்சிலார் அவர்கள் மங்கலம், குழூவுக்குறி, இடக்கரடக்கல் கட்டுரையில் பெண்
ஆண் உடல் மீது கொண்டிருக்கும் கவர்ச்சி குறித்தோ ஈர்ப்போ குறித்தோ ஏன் பதிவு செய்யவில்லை என்பதைப்
பற்றி சங்க இலக்கியம் தொட்டு கம்பன், கலம்பகம் வரை பேசியிருக்கிறார். நகக்குறி இடுதல் குறித்து எழுதும்போது
: பெண் எங்கு நகக்குறி இட்டாள்? யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. நகக்குறி போகட்டும். ஆண்குறி பற்றி
சங்கப் பரப்பில் குறிப்பேதும் உண்டா.." என்றெல்லாம் கேள்விகளை முன்வைக்கிறார். அவருடைய கதைமாந்தர்களில்
பொன்னம்மை தான் ஆண்குறியைப் பார்த்து ரசித்ததாக அல்லது ஏங்கியதாகக் காட்டப்படும் பெண். ஆனால்
பொன்னம்மை ஏன் இப்படி இருக்கிறாள் என்பதற்கு ஒரு காரணம் கதைப் போக்கில்சொல்லப்படுகிறது.
" முப்பது இருக்குமா? ஆனால் முப்பதுக்கு மதிக்க முடியாது. பிள்ளை குட்டி எதுவும் இல்லை என்பதாலோ
படை குதிரை போல்தான் இருக்கிறாள்!" (பக் 276)

பிள்ளை குட்டி இல்லாத பெண் என்ற ஓரு வரி நாஞ்சில் நாடன் அவள் செயல்களுக்கு சொல்லும் ஒரு காரணமாகவே
கருத வேண்டியுள்ளது.
அவளுக்கு குழந்தைகள் இருந்ததாக எழுதியிருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் அதைப் பற்றி எந்தக் குறிப்பும்
எழுதாமல் விட்டிருக்கலாம். ஆனால் பொன்னம்மை பிள்ளைக் குட்டி இல்லாதவள் என்று எழுதுவதன் மூலம்
அறிந்தோ அறியாமலோ இப்படிப்பட்ட காரணங்களை பெண் பிறிதொரு ஆணை
விரும்புவதற்கான காரணங்களாக காட்டுவது ஏன்? இம்மாதிரியான காரணங்களே சமூக விதிவிலக்குகளுக்கான
விதிகள் ஆக்கப்படுவதை நாஞ்சில் நாடன் அவர்களும் நன்கு அறிவார்.
இந்தப் பொன்னம்மை தான் எட்டுத் திக்கும் மதயானையில் வரும் சுசிலா.
சுசிலாவும் இப்படித்தான் பேசுகிறாள்..
"எனக்கு வெலக்கம் வர்ற நாளு தப்பி இருவது நாளாச்சு.. முப்பிடார் அம்மன் கண்ணைத் தொறந்து பாத்திருக்கா,
பந்திரெண்டு வருசத்துக்குப் பொறவு. ஆணாலும் பெண்ணாலும் இது ஒனக்க பிள்ளை. .ஓர்மையிலே வச்சுக்கோ.."
என்று பூலிங்கத்திடம் சொல்கிறாள்.
12 வருட தாம்பத்ய வாழ்க்கையில் அவளுக்கு கணவன் மூலமாக குழந்தை இல்லை. அவள் பூலிங்கத்துடன்
கொண்ட உறவுக்கு இது ஒரு காரணமா?
இதே நாவலில் வரும் கோமதியும் கணவனால் ஒரு குழந்தைக்குத் தாயானப் பின் கைவிடப்பட்டவள்.
அவளுக்கு பூலிங்கத்துடன் உடலுறவு உண்டு. ஆனால் அவனுக்கு மனைவியாக வாழ விரும்பவில்லை.
குழ்ந்தை நீனாவுடன் அவளை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இருந்தும் அவளால் அவனுடன் வாழ்க்கையை
தொடர முடிவதில்லை.
செம்பகத்தின் கணவனோ உடலுறவுக்கே தகுதியில்லாதவன். அதுவே பூலிங்கமும் செண்பகமும் இணைவதற்கான
வலுவான காரணமாக அமைந்துவிடுகிறது.
பெண்கள் அதிகமாக இடம் பெற்றுள்ள அவர் நாவலான எட்டுத்திக்கும் மதயானை நாஞ்சிலாரின் பெண் பாத்திரப்படைப்புகளின்
பல்வேறு முகங்களைக் காணும் தளமாக அமைந்திருப்பதுடன் பெண்ணியம் குறித்த பல்வேறு கருத்துகளைப்
போகிறப் போக்கில் சொல்வதற்கான தளமாகவும் அமைந்திருக்கிறது.

தாயின் நடத்தைச் சரியில்லை என்று தாயுடன் உறவு கொண்டவனைக் கொலை செய்த பரமுவிடம் பூலிங்கம்
கேட்கிறான்.. :" தப்பா ஒரு ஆள் ஒனக்க அம்மை மேலே கை போட்டிருந்தா கொடுக்கரிவாளை வச்சுக் கொத்திப்
போட்டிருக்க மாட்டாளா? ஆனா அவ அப்படிச் செய்யல்லே. அந்த ஆளு தப்பா நடக்கப் பாக்காண்ணு ஒங்க அப்பா
கிட்டே சொல்லல்லே.. இல்லியா? நீ எங்கிட்டே கோவப்படாம யோசிச்சுப்பாரு.. காசுக்காச்சுட்டி போகப்பட்ட பொம்பிளையா?
இல்லேல்லா? பின்னே எதுக்கு அவளும் உடை குடுத்தா?

............
இதெல்லாம் நம்ம கணக்கிலே ஆம்பிடாத விசயம்டே..

இங்கே பரமுவின் அம்மாவாக பெயரிலியாக காட்டப்படும் பெண்தான் எவ்வித காரணமும் சொல்லப்படாமல்
இன்னொரு ஆணிடம் உறவு கொண்டதாகக் காட்டப்படும் பெண் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்,

"காவல், கற்பு, குலம், பெருமை என்ற சொற்கள் எல்லாம் மனித அகராதியில் என்று வந்து சேர்ந்தவை என்று
தெரியவில்லை.
சொற்கள் மட்டுமே மேலும் மேலும் சேர்ந்திருக்க வேண்டும். கரையான் புற்று வளர்வதைப்போல.
சொற்களுக்கு அச்சப்பட்டுப் பதுங்கித் திரியும் மனிதன், சொற்களைத் தூக்கித் தூர எறிய முடியாமல்,
சொற்களைச் சுமந்து திரியும், முகமூடியாய் அணிந்து திரியும், வெறுமனே வாயிலிட்டு வெற்றிலைப் பாக்குப்
போலக் குதப்பித்திரியும் மனிதன்.."

பூலிங்கம் குரலில் ஒலிக்கும் நாஞ்சில்நாடனின் குரல் இது.

குடும்பச்சுமையில் தன்னைக் கவனிக்காது நாற்பது வயதிலேயே உருவமற்று கட்டொழுங்கு இல்லாமல்
போகும் பெண்களைப் பற்றியும் பாபி கதைப் பாத்திரத்தின் மூலம் உணர்த்துகிறார் நாஞ்சில்நாடன்.

"தன் உடலைச் சீராக வைத்துக் கொள்வதிலும் சேட்டைக் கட்டியிருந்த தாம்பத்யக் கயிறு தழையாமல்
பார்த்துக் கொள்வதிலும் சாமர்த்தியம் போதவில்லை போலும். இந்தியக் குடும்பப் பெண்களுக்கு நாற்பத்தைந்து
வயதுக்குள்ளேயே எல்லாம் ஆடி அடங்கிவிடும் போலிருக்கிறது. பிறகு பெசரெட் செய்வதும் பெண் பிள்ளைகளுக்குச்
சீர் விடுவதும் பேரன் பேத்திகளைக் கொஞ்சுவதும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கேற்றுவதும் சனீசுவரனைச்
சுற்றுவதும் தான் வாழ்க்கை என்று ஆகிவிடும் போலும்" (பக் 71) என்கிறார்.

நாஞ்சில் நாடனின் கதைக்களம் நகரமாக இருக்கலாம். ஆனால் கதை மாந்தர்கள் அதிலும் குறிப்பாக
பெண்கள் நாஞ்சில் நாட்டு பெண்கள். அவர்கள் தனக்கென தனி அடையாளம் இல்லாதவர்கள். ஆண்களால்
வஞ்சிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் தனித்து விடப்பட்டவர்கள். ஆண் துணைக் கிடைக்கும் போது
நெருப்பில் பற்றிக்கொள்ளும் பஞ்சு போல எரிந்து போகிறவர்கள். எனினும் கற்பு, திருமண உறவு
என்று கற்பிக்கப்பட்டிருக்கும் சமூக விதிகளை வார்த்தைகளால் அல்ல தங்கள் வாழ்க்கையால்
வளைத்து போட்டு வாழக்கற்றுக் கொண்டவர்கள். அவர்கள் அதிகமாக வாய்திறந்து பேசுவதில்லை.
அவர்களின் மவுனங்களும் செயல்களுமே கதைக்களத்தில் ஆண் கதை மாந்தர்களின் முகத்தைக்
காட்டும் கண்ணாடிகளாகவும் இருக்கின்றன.

நாஞ்சில் நாடனின் பெண் கதைப் பாத்திரங்கள் பெரும்பாலும் அவர் தலைமுறையை/அவர் அம்மாவின் தலைமுறையைச்
சார்ந்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.
கதைப் போக்கில் கதைக்கான பிரச்ச்னை முடிச்சு அந்த தலைமுறைக்கான எண்ண ஓட்டத்தில்
அவிழ்க்கப்படுகிறது. அதே முடிச்சு இன்றைய பெண்ணிடம் கிடைத்திருந்தால் அவள் என்ன் செய்திருப்பாள்
நாஞ்சிலார் அவள் என்ன செய்வதாக நினைப்பார் என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.

இன்றைய இளம் தலைமுறை பெண்களின் செயல்களும் பிரச்சனைகளுக்கு அவர்கள் எடுக்கும்
முடிவுகளும் நாஞ்சில் நாட்டிலும் மாறித்தானிருக்கும். அந்த மாற்றங்களை அவர் வருங்காலத்தில் பதிவு செய்ய
வேண்டும் என்பது என் போன்றவர்களின் எதிர்பார்ர்பும் விருப்பமும்.
"தாய் பயன்படுத்திய சொற்களை மனைவி பயன்படுத்தவில்லை, ஆனால் அறிந்திருந்தாள்,
மனைவி அறிந்த அச்சொற்களை மகள் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை" நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களுக்காக
வருத்தப்படும் நாஞ்சில்நாடன் இந்த மாற்றங்கள் வெறும் சொற்களில் மட்டும் நிகழவில்லை, வாழ்வியல்
வாழ்க்கை மதிப்பீடுகள் என்று பல்வேறு தளத்தில் நிகழ்ந்திருப்பதை பதிவு செய்ய வேண்டும்.

ஒரு மகனாக தந்தையாக, தனையனாக, நண்பனாக ஏன் தாத்தாவாகவும் அவரைச் சுற்றி இருக்கும்
பெண்களின் தலைமுறை சிந்தனை மாற்றங்களைப் பதிவு செய்வதன் மூலம் அவர் படைப்புகளின்
கதை மாந்தர்களின் தலைமுறை வட்டம் பூர்த்தி அடையும்.


நாஞ்சில் நாடன் பெண்ணிய விடுதலைக்காக பெண்ணியக்குரல் எழுப்ப தன் பெண் கதைப்பாத்திரங்களைப்
படைக்கவில்லை. ஆனால் அவரின் பொன்னம்மை, சுசிலா, கோமதி, பானு, செம்பகம், பேய்க்கொட்டு மதனி,
விசாலம், பூமணி , பரமுவின் அம்மா என்று பல்வேறு பெண்முகங்களைக் காட்டி அவரவர் செயல்களின் மூலம்
கதையை நகர்த்திச் செல்கிறார். ஆனால் அதிகமாக அந்தந்த பெண் கதாபாத்திரங்கள் தங்கள் செயல்கள்,
உணர்வுகள் குறித்து பேசவில்லை, பெரும்பாலும் அவர்களுக்காகவும் அவர்கள் குறித்தும் பேசுவதும்
கதையின் ஆண் கதை மாந்தர்களாகவே இருப்பது ஆண் பார்வையில் சித்தரிக்கப்படும் பெண் கதை
மாந்தர்கள் என்று சொல்வதற்கே இடமளிக்கிறது.
நாஞ்சிலார் அவர்களே சொவ்லது போல எந்த ஒரு செயலுக்கும் இரண்டு பார்வைகள் உண்டு.
வண்டிக்காரனின் பார்வையில் பேசப்படுவது மட்டுமல்ல. வண்டியை இழுக்கும் மாடுகளின் பார்வையிலும்
பேசப்பட வேண்டும் என்பார்., அதையே தான் அவர் படைத்திருக்கும் பெண் கதைப் பாத்திரங்களுக்கும்
பொருத்திப் பார்க்கிறேன்.
விசாலம் கதையில் பேசவே இல்லை. பேசியிருந்தால் கைக்குழந்தைக்குப் பசி தீர்க்க பிச்சை எடுப்பதை
" தவசி" என்று சொல்லத் துணிவாளா? அல்லது தன்னை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை - இச்சமூகத்தை
அரக்கர்கள் என்று அடையாளம் காட்டுவாளா?
சுசிலாவுக்கு தனக்கு தாய் அந்தஸ்த்துக் கிடைக்கிறது.
ஆண் துணையின்றி வாழும் கோமதியின் வறண்ட நிலத்தில் அவன் மழையாகும் போது
அவளுக்கு அந்த ஈரம் தேவைப்படுகிறது.
செம்பகத்தின் கணவன் தாம்பத்ய உறவுக்கு லாயக்கில்லாத அவலம்தான் அவளை பூலிங்கத்தின்
தோள்களில் சரிந்து விடச் செய்கிறது.
அப்படியானால் ஆண்-பெண் ஈர்ப்பு, உடலுறவுகளுக்கு இவை மட்டுமே காரணமா என்றால் இல்லை.
இக்காரணங்களைத் தாண்டிய ஆண்-பெண் உறவுகளை நாஞ்சிலார் தன் கதைக்களத்தில் பயன்படுத்தவில்லை
என்பதை மட்டுமே இப்பொதைக்குச் சொல்லிக்கொள்ளலாம்.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஆண்-பெண் ஈர்ப்பு நிலைப் பற்றி சதுரங்க குதிரையில் ஒரு
சின்னக்கோடு வரையப்பட்டிருக்கும். அவர் படைப்புகளில் வாழும் மற்ற பெண்களுக்கு
அம்மாதிரியான மன உணர்வுகள் இருந்திருக்கும் என்பதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு ஆண் கதை
மாந்தரும் யோசிக்கவே இல்லை.
சுசிலா பூலிங்கத்தை மோகித்ததும் கோமதி பூலிங்கத்தை மோகித்ததும் வெறும் உடல் சார்ந்த தேவை
மட்டும்தானா? அவர்களின் பக்கம் இருந்த நியாயங்கள், உணர்வுகள் அனைத்துமே
ஆண் கதைமாந்தர்கள் மூலம் பேசப்படுவதால் வாசகன் அறிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லை.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட அகமனம் சார்ந்த ஆண்-பெண் ஈர்ப்புநிலை பேசப்படவே இல்லை.
பெண் ஆணை நாடுவதும் உடலுறவுக்கு இசைவதும் கதைகளில் சொல்லப்படும் காரணங்களாக
மட்டுமே இருக்குமானால் அது பெண்ணை எந்த வகையிலும் பெருமைப் படுத்தாது.
செம்பகம் பூலிங்கத்தை தவிர வேறு எந்த ஆணை அந்தச் சூழலில் சந்தித்திருந்தாலும் கூட
அவனுடன் ஓடிப்போயிருப்பாள் என்று கருத கதைக்களத்தில் நிறைய இடம் இருக்கிறது.
ஆண் உடலுறவுக்கான தேவை இருக்கும் போது பெண் அந்தச் சூழலில் சந்திக்கும்
எவனுடனும் உடலுறவுக்கொள்ள இசைவது போல காட்டுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதில்லை.
ஆண் மடியில் படுத்தவுடன் எந்தப் பெண்ணும் அடுத்தக்கட்டமாக உடலுறவுக்கு இடம் கொடுத்து
விடுவளா. ?
பல மாதங்கள் பட்டினிக்கிடந்தவன், தாகமாக இருந்தவன் பழைய கஞ்சியைக் கண்டதும்
எடுத்து குடித்து வாயைத் துடைத்துக்கொண்டு நிற்பது போல் பெண் உடலும் பெண் மனமும்
இருப்பதில்லை.
உடல் தேவைகளைத் தின்று செரித்து வாழ்ந்த ஆச்சிகளும் மதனிகளும் உண்டுதான்.

நாக்கில் எச்சில் ஊறும் நாஞ்சில் நாட்டு வகைவகையான சமையல்களைப் பற்றி புத்தகம் போடும் அளவுக்கு
எழுதக்கூடியவர் நாஞ்சில் நாடன். அப்போதெல்லாம் அந்த வகைவகையான சமையல்களைச் செயது பரிமாறும்
நாஞ்சில் நாட்டு வளைக்கரங்கள் இதைப்பற்றி எல்லாம் எழுதினால் என்ன எழுதி இருப்பார்கள் என்பதை
யோசித்துப் பார்க்கிறேன். வெறும் ருசி மட்டுமல்ல அந்த ருசிகளுக்குள் அவர்கள் இழந்துப் போன வாழ்க்கையின்
எத்தனையோ ருசிகரமான உணர்வுகள், ரகசியங்கள் வெளிவரலாம்.





மும்பையை மும்பை மக்களை தன்னுடம் தன் படைப்புகளுடனும் இணைத்து சீரஞ்சீவியாக
வாழ வைத்துக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும்.

Friday, June 19, 2009

காணாமல் போன கடலலை

ஏழு கடல் தாண்டி
ஏழு மலைத் தாண்டி
ஒரு குகை.
ஒற்றைக்கண் அரக்கனின்
இமைகளில்லாத இரவுகள்
சிறகொடிந்த மைனாவாய்
சிறை எடுக்கப்பட்ட
எங்கள் இளவரசி
கனவுகளுடன் காத்திருக்கிறாள்
எப்படியும் வந்துவிடுவான்
பறக்கும் கம்பளத்தில்
பட்டத்து ராஜா என்று.

கடலை நிரப்பிக்
கட்டிடம் கட்டியதும்
மலையைக் குடைந்து
மரங்கள் மறைந்ததும்
அவள் கனவுகளில் காட்டும்
கண்ணாடிகளைத் தேடுங்கள்
கனவுகளின் கருக்கலைப்பில்
மரணம் சம்பவிக்குமென
மருத்துவர்கள் சொன்னதை
மறந்து விடாதீர்கள்.

கனவுகள் கட்டிய
கல்லறைக்குள்
காலம் அவளைப் புதைப்பதற்குள்
தோண்டி எடுத்து
காப்பாற்றி விடுங்கள்
அவள்
கனவுகளாவது
உயிர்ப் பிழைக்கட்டும்.

Monday, June 8, 2009

இந்தியக் கருவாடும் வெள்ளைப்பன்னிகளும்

பிரபலங்கள் எழுதும் பத்திகளை விட உங்களையும் என்னையும் போல
சாதாரண பொதுசனம் எழுதும் எழுத்துகளில் இருக்கும் பாசாங்கில்லாத சத்தியத்தின்
குரல் இப்போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் பக்கங்கள்.
அப்படித்தான் 31மே2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பை பதிப்பில்
'சிக்கன் ஹலால்' என்ற தலைப்பில் வெளிவந்திருந்த பத்தி.
எழுதியவர் தன் பெயரைக்கூட "இந்தியக்குடிமகன்" - son of india
என்றுதான் அடையாளப்படுத்தி இருந்தார்.
http://epaper.timesofindia.com/Daily/skins/TOINEW/navigator.asp?Daily=TOIM&showST=true&login=default&AW=1244016793984



அவருக்கு ஏற்பட்ட அனுபவம் போல நம்மில் பலருக்கும் ஒவ்வொரு பயணத்திலும்
ஏற்பட்டிருக்கும். ஆனால் வழக்கம் போல கொதித்து அடங்கிவிடும்
பால் போல நாமும். அந்த நேரத்தில் ஆத்திரம் கொண்டு அதன் பின் அதை மறந்து
எப்போதும் போல இதெல்லாம் சகஜம்தான் என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குள்
அடங்கிப்போகிறோம். அதற்கான காரண காரியங்களை நம்மில் பலர் யோசிப்பதில்லை.
(அதற்கெல்லாம் நமக்கு எங்கே நேரமிருக்கிறது என்கிறீர்களா?)

எல்லோரும் ஒரே கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வானூர்தியில் வெள்ளைக்காரனுக்கு
மட்டும் தனிக்கவனமும் மரியாதையும் செலுத்தும் இயல்பு என்னவோ அந்த விமானப்பணிப்பெண்ணுக்கு
மட்டுமே இருப்பதாக நினைப்பது தவறு. நம் எல்லோரிடமும் எப்போதாவது அந்த உணர்வு, மனநிலை
இருக்கிறது. ரொம்பவும் இயல்பாகவே நம் எண்ணங்களில் கலந்திருக்கும் ஒரு மதிப்பீடு.
வெள்ளைக்காரன் உசத்தி.. கறுப்பன் தாழ்வு என்ற எண்ணம் தான்.
வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு சுற்றிப்பார்க்க வரும்போது அனுபவிக்கும் மேட்டுக்குடி
மரியாதையை எந்த ஓர் இந்தியனும் உலகில் வேறு எங்கும் அனுபவிக்கும் வாய்ப்பில்லை.
ஆஸ்திரேலியா, இலண்டன் என்று பல்வேறு நாடுகளில் இந்தியனுக்கு ஏற்படும் நிறவெறிக்
கொடுமைகளை அண்மையில் ஊடகங்கள் வழி அதிகம் தெரிந்து கொண்டிருப்பதும்
அன்றைய சூடான காலை காபி போல சூடானச் செய்தி.. அதற்குமேல் அதற்கான முக்கியத்துவம்
எதுவுமில்லை.

பாலின் வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம்.!
பால் போல ஒளீவீசும் நிலவின் அழகு.
என்பதை எல்லாம் உலக மொழிகள் அனைத்திலும் எழுதி வைத்து தலைமுறை தலைமுறையாய்
நம் எண்ணத்தில் விதைத்துவிட்டார்கள்.

இருளடர்ந்த கரிய மேகங்கள் அழகு
ஒளி நுழைய முடியாத அடர்ந்த வனம் அழகு
கரிய பாறையிலும் வளைந்து நிமிர்ந்து செங்குத்தாய் மண்ணின் மடிக்கிழித்து திமிறி நிற்கும்
மலைமுகடுகள் அழகு.. சுருள் கேசமும் தடித்த உதடுகளும் மின்னும் கண்களுமாய்ச் வெள்ளை நிறப் பல்
தெரிய பளிச்சென சிரிக்கும் ஆப்பிரிக்க குழந்தையும் அழகுதான்.

ஆனால் அழகு என்று சொன்னவுடன்
சிவந்த ரோஜாவும்
தூயமை என்றவுடன் வெள்ளை நிறமும் அடையாளமாய்
நம் எண்ணத்தில் கலந்திருப்பது எதனால்?
மாங்கொழுந்து நிறமுடைய கண்ணகியின் கொள்ளுப்பேரன்கள்
மணமகள் விளம்பரத்தில் எப்போதும் அழகானப் பெண் தேடும் வரிகளுக்குள்
ஒளிந்திருக்கிறது வெள்ளை நிறம் உசத்தி என்ற எண்ணத்தின் அடையாளம்.
அம்மாவும் அப்பாவும் அக்காவும் தங்கையும் கருப்பாக இருந்தாலும்
அதற்கான காரணங்கள் புரிந்தாலும்..
'fair good looking girl' தேடி அலைந்து கொண்டிருக்கும் திராவிட மண்ணின் மைந்தர்களை
நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?







கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு ..
என்ற பாடலைக்கூட ஓர் ஆண் பெண்ணைப் பார்த்து பாடுவதாகக் காட்டி இருந்தால்..!!??
ஹிட் ஆகியிருக்காது!!
அதையும் இந்தச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் சிவந்த பொன்னிற பெண் பாடியதால்தான்
பாடலும் ஹிட் ஆகியது. மக்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது.

இம்மாதிரி கருத்துகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்/விற்பனைப் பொருட்களை
ஒரு 10 வருடங்கள் ஊடகங்கள் விலக்கி வைத்தாலே போதும்.. இந்த மாயையிலிருந்து
ஓரளவு வளரும் தலைமுறையாவது விடுபடும்.

Tuesday, May 26, 2009

வாழ்ந்ததை உணர்த்திய மரணம்


(1)
வியட்நாமில், ஆப்கானிஸ்தானில்,
ருவண்டாவில், ருசியாவில்,
ஈரானில் ஈராக்கில்
இனப்படுகொலைகள் நடந்ததெல்லாம்..
நமக்கு வெறும் செய்தி.
சாப்பாடு மேசையில் புரட்டிப் பார்த்துவிட்டு
தூக்கி எறிந்துவிடும் செய்தி.
உலகச் செய்திகளில்
வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கப்பட்ட செய்தி.
அதுவே இலங்கையில் நடந்தப்போது....
செய்திகள் வாழ்க்கையானது.
அவர்களின் முகம் தெரியாதுதான்.
தொடர்புகள் இல்லைதான். ஆனாலும்
அவர்கள் வாழ்க்கையில்
அவர்கள் போராட்டத்தில்
அவர்கள் ரத்தத்தில்
அவர்கள் வெற்றியில் அவர்கள் தோல்வியில்
நாமும் இருந்தோம். இருக்கிறொம்.
அவர்கள் வாழ்க்கை நம்முடையதாக இல்லை எனினும்
அவர்கள் மரணம் நம்முடையதானது.
பிறப்பில் தான் உறவுகள் நிச்சயிக்கப்படுவதாகவும்
தொடர்வதாகவும் சொல்கிறார்கள்,.
ஆனால்
அவர்கள் இறப்பில் தான்
அவர்களுக்கும் நமக்குமான உறவு நிலம் விளைந்தது.
அவர்கள் மரணத்தில் தான்
நாம் நம்மை நம் வாழ்க்கையை கற்றுக்கொண்டோம்.
அவர்களின் ரத்தம் தோய்ந்த போராட்டத்தின் கதைகளின் ஊடாகவே
நாம் போராளிகளின் முகங்களை வரைந்தோம்.
மண்ணம்பேரியும் கோணேஸ்வரியும்
நம் ஆதித்தாயின் புதல்வியர் என்பதை
உணர்ந்த தருணங்களில் தான்
முலைப் பிடுங்கி எறிந்த கண்ணகியின் ஆவேசத்தைக்
கற்பனையில்லை என்றுணர்ந்தோம்.
சுயம்புவாக முளைத்த பெண்ணியத்தை கோணேஸ்வரியின்
யோனியில் வெடித்த கிரனைட் வெடிச்சிதறல்கள் தான் நம்மில் விதைத்தன.

--
(2)


சித்திரவதை முகாம்களில்
காணாமல் போனவர்கள் பட்டியலில்
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டைநாயின் இரத்த நெடி
ரத்தக் கறைப்படிந்த சுவர்களில்
மனித ஆன்மாவின் சித்திரங்கள்.

கனவில் கத்திகள் பாய்ந்தக் கவிதைகளை
ரசிக்கும் படி எழுதிக்குவித்த
எம் கவிஞர்கள்
எப்போதும் எழுதியதில்லை
காலம் காலமாய்
வரப்போகும் தலைமுறை தலைமுறையாய்
நம்மை நம் சந்ததிகளைத்
துரத்திக்கொண்டிருக்கும்
மரணத்தின் ஓசையை.


(3)
மரணம் மட்டுமே அறிந்த
எம் விளைநிலத்தில்
குருதியின் நிறத்தில்
பூக்கும் மலர்களில் கூட
வீச்சமடிக்கும்
இனவாத எலும்புத்துண்டுகளின் வாடை.

எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல
உங்கள் குழந்தைகளும்
குழந்தைகளாக வளரவில்லை.
வெடிகுண்டுகளும்
பீரங்கி ஓசைகளும்
பாலூட்டிய
பதுங்குகுழிகளின்
மழலை விரல்களில்
பிறக்கும் போது
பதிந்துவிட்டது
ரத்தம் தோய்ந்த
வன்மத்தின் வாடை.

யுத்த வெறியில்
உன்மத்தம் பிடித்த
நாய்களுக்குத் தெரிவதில்லை
நடுவீட்டிலும்
புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகளின் காட்சி.
சிங்களத்தாயின் அடிவயிற்றிலும்
ஜனிக்கக்கூடும்
கம்சன்களை வதைச் செய்யும்
கண்ணனின் அவதாரம்.

-
(4)

மக்களின் மரணத்தை
கைதட்டிக் கொண்டாடியது ஒரு கூட்டம்
மனிதம் மரணித்து போனதை
மவுனமாக பதிவு செய்தது
அந்த நீண்ட இரவு.

தப்பித்ததாக சொன்னார்கள்.
நலமாக இருப்பதாக
நம்பிக்கையுடன சொன்னார்கள்
இல்லை இல்லை
எல்லாம் முடிந்ததென்றும்
எரித்துவிட்டதாகவும்
சாம்பலைக் கூட
இந்தியக்கடலின் மடிநிறைக்க
கரைத்துவிட்டதாகவும்
காற்றில் கலந்துவிட்டதாகவும்
மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள்..

மரணத்தை மீறியும்
தனி மனிதர்களின் வளையத்தைத் தாண்டியும்
வாழ்க்கையும் உண்டு
போராட்டங்களும் உண்டு

தன் பெண்டு தன் பிள்ளை
தன் மனைவி தன்துணைவி
தன் பேரன் தன் சுற்றம்
இவர்களையே மந்திரிகளாக்கும்
வித்தைகள் அறிந்த
நம் தலைவர்கள்
அறிந்ததில்லை
நிலத்தடியில் உதிக்கும்
சூரியக்குஞ்சுகளை.

(கவிதை தலைப்பு - சங்கரியின் கவிதை "இருப்பும் இறப்பும்"
கவிதை வரிகள். தொகுப்பு : சொல்லாத சேதிகள்)

Tuesday, May 5, 2009

நகம்




விதம் விதமாக
வண்ணம் பூசி
அழகுப்பார்த்த காரணத்தாலேயே
வெட்டாமல் இருக்க வேண்டும்
என்பதல்ல.
கவனமாக வெட்ட வேண்டும்.
ஆழமாக வெட்டினால்
ரத்தக்கசிவு வரலாம்
கவனிக்காமல் விட்டுவிட்டால்
வீங்கி சீழ்ப்பிடித்து
விண் விண் என்று
வலி கொடுக்கும்
பிராண அவஸ்தையை
அனுபவிக்க வேண்டிவரும்.


வளர்ப்பது தற்காப்புக்கு
என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம்
வளர்ந்து வளைந்திருக்கும்
இடுக்குகளில்
தங்கிவிடுகிறது
தேடிவந்த அழுக்கும்
தேகத்தின் அழுக்கும்.
சமைப்பது சாப்பிடுவது
அழுக்குகள் சேர்த்துதான்
என்றாலும்
பழகிவிட்டது
இரப்பையும்
இறைப்பையும்.


இரவில் வெட்டினால்
தரித்திரம் என்று
பாட்டி சொன்னதையே
அம்மாவும் மறக்காமல்
சொல்கிறாள்.

வெட்ட வெட்ட வளருமாம்
உன் நினைவுகளைப் போலவே
நகமும் .
செத்த உடம்பிலும்
நகம் வளருமாமே
சொல்லுகிறார்கள்
உண்மையா?
அதனால்தான் உயில் எழுதுகிறேன்
விரல்களைப் புதைக்காதீர்கள்
எரித்துவிடுங்கள் என்று.

---------------

Wednesday, April 29, 2009

சென்னைத்தமிழ்




குப்பத்து மொழியும் சில குழப்பங்களும்






அன்பின் Pudiyamadavi





தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில் கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா நெடுநாளாக என்னுள் உள்ளது).





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை. இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை அல்லவா?)



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து பாஷையிலிருந்து மருவியதா?



4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின் இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .



5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?



பாண்டித்துரை

சிங்கப்பூர்


http://pandiidurai.wordpress.com

சிலர்தான் மாற விரும்புகிறார்கள்
மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்



அன்பினிய பாண்டித்துரை அவர்களுக்கு,
வணக்கம்.




தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும்

யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில்

கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு

சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா

நெடுநாளாக என்னுள் உள்ளது).

>> சிங்கப்பூர் வருகிற என்பதை மாற்றி மும்பை வருகிற என்றும்
சிங்கப்பூர் நூலக வாயிலில் என்பதை மும்பைத் தமிழ்ச்சங்க நூலக வாயிலில் என்றும் மாற்றிக்கொண்டால் ...
மும்பையிலும் இதே நிலைமைதான்!





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை.

இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக

இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது

சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை

அல்லவா?)

* குப்பத்து பாஷை என்ற உங்கள் சொல்வழக்கு புரிந்து கொள்ள எளிதாக இருந்தாலும் அது சரியல்ல என்பது என் கருத்து.
சென்னை வட்டார வழக்கு என்றோ சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சுமொழி என்றோ இருந்திருந்தால் சரியாக இருக்கும்.
முதலில் குப்பத்தில் வாழும் மக்கள் யார்?என்ற அறிந்து கொண்டால் சில முடிச்சுகள் அவிழும்.
அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர். உடல் உழைப்பு இழிவானதாக கருதப்படும் சமுதாயம் உழைப்பவர்களைத் ஊர்க்கோடியில்
ஒதுக்கி வைத்துள்ளது. தீண்டத்தாகதவர்கள் என்று ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சற்றொப்ப 2000 ஆண்டுகள் கல்வி இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களிடம்தான் தமிழ் தன் உயிர்ப்பை
இழந்துவிடாமல், புராண இதிகாச கற்பனைக்குக்குள் தன்னை இழந்துவிடாமல் தன் சுயமிழக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழை 2000- ஆண்டுகள் தொடர்ந்து வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த குப்பத்து வாழ் தமிழர்கள் தான்.

சென்னை குடிசை வாழ் மக்களின் வழக்குத்தமிழ் இன்றொ நேற்றோ உருவானதல்ல.
ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாநகரம் உருவான காலகட்டத்தில் உடல் உழைப்புக்கான தேவையும்
வாய்ப்பும் சென்னையிலும் சென்னையைச் சுற்றி இருந்த இடங்களிலும் உருவான காலக்கட்டத்தில்
நம் கிராமப்புறங்களிலிருந்து வயிற்றுப்பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வந்தவர்கள் தான் பெரும்பாலான
சென்னை குடிசை வாழ் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை - மெட்ராஸ் மாகாணமாக இருந்தப்போது
தெலுங்கர்களும் கன்னடர்களும் அதிகமாக சென்னையில் வசித்தார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால்
சென்னை தமிழ் உருவான வரலாறு ஒரளவு புரியவரும்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என்பதாலும் பல்வேறு மாவட்ட தமிழ் வழக்கு மொழிகளும்
கலந்து ஓர் அவியல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

சென்னை மொழி மற்ற வட்டார வழக்குகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமானதாகவும் எதற்குள்ளும் அடைக்கமுடியாமல்
திமிறி நிற்கும் மாநகரக்குரலாகவும் இருப்பது இதனால்தான்.



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?

* வட்டார வழக்கில்வரும்.



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து

பாஷையிலிருந்து மருவியதா?

வழக்கம்போல மொழியும் பேசப்படும் மனிதர்களின் வர்க்க சாதி இட வேற்பாடுகளைச் சுமந்து கொண்டுதான் வருகிறது.
சென்னையில் பொதுவாக மேல்தட்டு மக்கள் பேசும் மொழி சமஸ்கிருதம் கலந்த/ஆங்கிலம் கலந்த தமிழாக இருக்க
குடிசைவாழ் மக்களின் பேச்சுதமிழ் முன்னதிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. மாறுபட்டது என்பதாலேயே கலப்படமில்லாத
தூயதமிழ் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் குடிசை வாழ் மக்களின் மொழிக்கலப்பு இயல்பானதாக அமைந்துள்ளது.
அவர்களுக்கே பிறமொழிச் சொல் என்பதெல்லாம் தெரியாது.






4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின்

இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .

* சாதிப்படிநிலை சமூகத்தில் உடல் உழைப்பு > ஏழ்மை > தீண்டாமை எல்லாம் நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை உன்னிப்பாக கவனித்தால்
குடிசைவாழ் பேச்சுமொழியை யார் எதற்காக இழிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதைப் புர்நிதுகொள்ள முடியும்.
பஞ்சமர் நாவல் எழுதிய ஈழத்து தமிழ் எழுத்தாளர் கே.டானியல் அவர்கள்

" ஈழத்துத் தமிழறிஞர் சிலரால் நையாண்டி செய்யப்படும் 'இழிசனர் வழக்கு'
மொழியிலேயே இந்த நாவலைச் செய்திருக்கிறேன். தமிழ்ச் சான்றோர் அன்னிய நாகரிகத்தில் மோகம் கொண்டு தமிழைச் சீரழித்தபோதும்,
ஏகாதிபத்திய அடிவருடிகள் தமிழை மறந்து மறுத்து நையாண்டி செய்த போதும் பண்டித வித்துவ பரம்பரையினர் தமிழன்னையை மூடி முக்காடிட்டு
இருள் சிறைக்குள் வைத்த போதும் தமிழ் அன்னையை சிறைமீட்டு தேறுதல் கூறிப் பாதுகாத்தவர்கள் இந்த பஞ்சமர் கூட்ட மக்களேயாகும்.
இவர்களே தமிழுக்கு எஜமானர்களுமாவர்கள். அதனால் அந்த எஜமானர்கள் பேசிய வழக்கையே தமிழென ஏற்று இதன் பாத்திரங்களுக்கு
பூரண சுதந்திரம் கொடுத்து இவர்களைப் பேச வைத்திருக்கிறேன்" என்றும்
"மக்களின் எதிரிகள் எதைப் பிழை என்கிறார்களோ அந்த அதுவே மிகவும் சரியானதாகும்" என்றும் சொல்லியிருப்பதையும் நினைவு படுத்த
விரும்புகிறேன்.

மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து நெல்லை கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். தொலைக்காட்சிகளில்
பட்டிமன்றங்கள், கம்பர் விழாக்களில் அவருடைய பேச்சை சில நேரங்களில் ரசித்தது உண்டு! ஏனவே அவருடைய பேச்சைக் கேட்க
போயிருந்தேன். அப்போது இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இருவரின் இசையையும் அவர்கள் சார்ந்த சாதி, மதம் கலந்து
அவர் நகைச்சுவை என்று பேசிய அபத்தம் என போன்றவர்களுக்கு எரிச்சல் மூட்டியது. அதுவரை அவர் மீதிருந்த மரியாதை
மறைந்து சில பிம்பம் உடைந்து போனது.


5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?

எந்த வட்டார வழக்குகளாலும் தமிழ் சிதைவுறுவதில்லை!


சில குறிப்புகள் :

> என் வாழ்விடம் மும்பை, என் சொந்தவூர் தமிழ்நாட்டின் தாமிரபரணி என்பதால் எனக்கும் சென்னைக்குமான தொடர்பு
மும்பைக்கும் சிங்கைக்குமான தொடர்புளவுதான். எனவே சென்னை குடிசைவாழ் மக்களின் மொழியுடனோ வாழ்க்கையுடனோ
எனக்கு அதிகத் தொடர்பில்லை. தெரியாது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

> சென்னை வழக்கு மொழி குறித்த மேற்சொன்ன என் கருத்துகள் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவு மொழி சமூகம் சார்ந்த
பார்வையின் ஊடாக கண்ட ஒரு பருந்து பார்வை தான்.

> வட்டார வழக்கு மொழியின் தாக்கம் படிப்படியாக புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இல்லாமல் போய்விடுவதற்கான சாத்தியக்கூறுகள்
இருக்கின்றன. இன்றைய தொலைக்காட்சி ஊடகம் அறிந்தோ அறியாமலோ அதைத்தான் செய்கிறது .

> பேச்சுதமிழில் கதைகள் எழுதும்போது என் போன்றவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
எல்லோரும் வட்டார மொழி வழக்கில் எழுதுவது போல என்னால் எழுத முடியுமா?
எங்கள் மும்பை டமிளரின் (தமிழரின்) பேச்சு மொழியில் சரளமாகக் கலந்துவிட்ட இந்தி, மராத்தி.குஜராத்தி
மொழிச்சொற்களைக் கலக்காமல் எப்படி எழுதுவது?
அதனால் தான் குறைந்தப்பட்சம் "அச்சா, நஹி, சலோ, க்யா, பானி, இத்தியாதி மினிகலப்புகளுடன்
என் கதைமாந்தர்களின் பேச்சுதமிழை எடிட்டிங் செய்கிறேன்.!

சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சு தமிழ், வட்டார வழக்குகள் குறித்து கொஞ்சம் யோசிப்பதற்கான
வாய்ப்பை உங்கள் மடல் கொடுத்துள்ளது. மிக்க நன்றி.

வாழ்த்துகளுடன்,

புதியமாதவி,
மும்பை.

Tuesday, April 28, 2009

காமெடி டைம்

கலைஞர் டி.வி.யில் அதிரடி காமெடி டைம்
--------------------------------------------





ஜெயா டி.வி.யில் அடிவருடி கலக்கல் காமெடி
---------------------------------------------


Thursday, April 23, 2009

விற்பனைக்காக விந்துவும் கருமுட்டையும்

Life is beautiful.. pass it on என்ற வாசகத்துடன் வளவளப்பான காகித அட்டையில் அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையை வாசித்தவுடன் மற்ற துண்டறிக்கைகள் போல தூர வீச முடியவில்லை. க்ரையோஸ் இந்தியா - CRYOS -India வங்கியின் துண்டறிக்கை. இந்திய மண்ணில் உலகத்தரம் வாய்ந்த முதல் பன்னாட்டு விந்து - கருமுட்டை வங்கி. டென்மார்க் தலைநகராகக் கொண்ட உலகின் மிகப்பெரிய விந்துவங்கி. அமெரிக்க ஐரோப்பிய மருத்துவ சட்டத்திட்டங்கள், சுகாதார வழிமுறகளைப் பின்பற்றி இந்தியாவில் நுழைந்திருக்கும் வங்கி. குழந்தைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத தம்பதியர் வாழ்க்கையில் வசந்தத்தை வழங்கும் தேவதைகள் / தேவதூதர்கள் நீங்கள்! எங்கோ யாருக்கோ தேவைப்படலாம் உங்கள் விந்துவும் கருமுட்டையும். இம்மாதிரியான சமூக அக்கறை தொனிக்கும் வாசகங்கள்..நம்மை யோசிக்க வைக்கிறது. கவர்ச்சிகரமான வரிகளைத் தாண்டி யோசிக்கும் போது அமெரிக்க ஐரோப்பிய தாராளமயம் எதை எல்லாம் தாராளமயமாக்கி விற்பனைக்கான கடைச்சரக்காக நம் சந்தைக்குள் நுழைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. போர்க்களத்தில் பணிபுரியும் வீரர்கள், இராசயணம், பூச்சிக்கொல்லி, கதிர்வீச்சு ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதில் வேலைச் செய்பவர்களுக்கும் தங்கள் வாரிசுகளை எப்போது வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் உரிமையை இந்த வங்கிகளில் அவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் விந்துகளை சேமித்து வைப்பதன் மூலம் பெறமுடியும் என்பது மகிழ்ச்சிக்குரியதுதான். அறிவியல் உலகத்தின் மிகச்சிறந்த பயன்பாடு என்றும் கொண்டாடலாம்தான். ஆனால் நடைமுறையில் இந்த வங்கிகளில் என்ன நடக்கிறது? விந்து தானம் கொடுப்பவருக்கு 10 சாம்பிளுக்கு குறைந்தது ரூ.5000 முதல் 10,000 வரை! கருமுட்டைக்கு விலை அதிகம். குறைந்தது ரூ 40,000 முதல் ரூ 60,000 வரை. வாடகைத்தாய்க்கோ ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுக்க குறைந்தது 2 இலட்சத்திலிருந்து 3 இலட்சம் வரை . தகுதிகள்: *விந்து தானம் வழங்கும் ஆண் 18 வயதுக்கு மேல் 42 வயதுக்குட்பட்டவராய் இருக்க வேண்டும். * ஆரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் தேவை. * இரண்டு தலைமுறையின் மருத்துவக்குறிப்புகள் தேவை. *தொடர்ந்து 6 முதல் 9 மாதங்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது விந்து வங்கிக்கு வருகைத் தந்து விந்துதானம் செய்ய தயாராய் இருக்க வேண்டும். *விந்துதானம் செய்வதற்கு முன் பாலியல் நோய்கள் (HIV & Hepatitis) மற்றும் பிற தொற்றுநோய்கள் இருக்கிறதா என்றறியும் சோதனைக்கு உடன்பட வேண்டும். * விந்துதானம் செய்வதற்கான மேற்குரிய தகுதிகளுடன் இன்னும் சில விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். விந்துதானம் வழங்கும் ஆணைப்போலவே கருமுட்டை தானம் வழங்கும் பெண்ணுக்கும் *வயது 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும். *ஏற்கனவே தாய்மை அடைந்தப் பெண்ணாக இருப்பது சிறப்புத்தகுதி! *கருமுட்டை உற்பத்திக்கான ஹார்மோன் ஊசி மருந்துகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும். *தொடர்ந்து இரு முறையாவது கருமுட்டை தானத்திற்கு உடன்பட வேண்டும். *கருமுட்டை தானத்திற்கான மருத்துவ முறைக்கு- மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மயக்க மருந்து கொடுத்தல், கருமுட்டையை எடுக்கும் மருத்துவமுறை - உடன்பட வேண்டும். *பாலியல் நோய்கள்/தொற்றுநோய்கள் அறியும் மருத்துவ சோதனைக்கு உடன்பட வேண்டும். வாடகைத்தாய்க்கும் மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் அவசியம். வயது வரம்பு 21 முதல் 35க்குள். இவைதவிர சம்பந்தப்பட்ட ஆண்/பெண் வாழ்க்கைத்துணையின் ஒப்புதலும் தேவை. எது விற்பனைக்கு? --------------------- பாக்கெட் மணி, ஆடம்பர இரவு விடுதி கேளிக்கைகள் இத்தியாதிகளில் மயங்கித்திரியும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் இம்மாதிரியான வங்கிகள் மின்மினிப்பூச்சிகளை கவர்ந்திழுக்கும் விளக்குத்திரியாக இருக்கின்றன. பாக்கெட் மணிக்காக தன் நண்பன், பாட்டி தாத்தா தம்பி தங்கை உறவுகளின் உயிருடனும் விளையாட துணியும் இன்றைய இளசுகள் விந்துவங்கியில் கிடைக்கும் பணத்திற்காக அதிகமாக போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தவிசயத்திலும் ஆண்களைவிட அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். மாதம் ஒரு முறைதான் கருமுட்டைகள் உற்பத்தி என்ற இயற்கையின் விதி. எனவேதான் கருமுட்டைகளுக்கான விலையும் விந்துகளின் விலையை விட பன்மடங்கு அதிகம். ஒவ்வொரு முறையும் கருமுட்டை தானம் செய்யும் போது மருத்துவக்கண்காணிப்பு தேவைப்படுகிறது. அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ஓவேரியன் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்பிரியா. தீடிரென சரியத் தொடங்கியிருக்கும் பொருளாதரம், கணினி ப்பிபிஓ துறைகளின் ஆள்குறைப்பு வேலை இழப்பு ஆகிய சூழல்கல் நிறைய இளம் பெண்களை கருமுட்டை தானம் செய்யும் நிலைக்கு தள்ளி இருக்கிறது என்பதும் உண்மை. வாடகைத்தாயாக இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய தமிழ்ச்சினிமா காட்சிகளும் பெண்ணுக்கு ஏற்படும் குற்ற உணர்வும் இன்றைய எந்த வாடகைத்தாய்மார்களுக்கும் இல்லை. இதை மனநிலை மாற்றம் என்பதா? பொருளாதரம் தின்று செரித்துவிட்ட உணர்வுகள் என்பதா? இரத்ததானம் செய்வது போலவே விந்துதானமும் கருமுட்டைதானமும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அறிவியல் பூர்வமாக அவர்கள் வாதத்தை உடைப்பது எளிதல்ல எனினும் தன்னுடைய கண், தன்னுடைய உதடு தன்னுடைய புன்னகை தன்னுடைய நடை தன்னுடைய நிறம் தன்னைப் போலவே அச்சு அசலாக இன்னொரு உயிர்.. தன்னை தன் பரம்பரை விதையை தன்னுள் சுமந்து கொண்டு தன் பரம்பரை சங்கிலியாய் இந்தப் பிரபஞ்சத்தின் உயிரணுவில் கலந்து.. நிற்கும்போது அந்த உயிருக்கும் அந்த உயிரின் விதைக்கும் உள்ள தொடர்பு.. வெறும் இரத்ததானம் அல்ல. அதற்கும் மேலான ஒன்று. பலகோடிக் கணக்கில் செலவு செய்து மக்கள்தொகை அதிகமுள்ள இந்திய சந்தையில் திறக்கப்பட்டிருக்கும் இந்த விந்து வங்கிகள் விந்துதானம், கருமுட்டைதானம், வாடகைத்தாயின் தியாகம் என்ற அறச்சிந்தனைகளைப் புறந்தள்ளி எல்லாம் உலகச் சந்தையில் விற்பனைக்கே என்ற விற்பனைச் சந்தையைக் கடைவிரித்திருக்கின்றன. குழந்தை இல்லாத தம்பதிகள் அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற விழுமியங்கள் எல்லாம் கடந்த காலமாகிவிடும். இங்கே இனி எல்லாமே விற்பனைக்குத்தான்

 Cryos International - India Pvt. Ltd. Address : 209, Marathon Max, LBS-Link Road Junction, Mulund (West), Mumbai - 400080 INDIA Tel. : +91-22-25683998, +91-9322404849 +91-22- 2292 6264 Fax. : +91-22 2562 1308 E-mail : in@cryosinternational.com Website : www.cryosinternational.com

Monday, April 13, 2009

வலிநிவாரணி


அச்சமாக இருக்கிறது
மின்னஞ்சல்களை வாசிக்க.
அச்சமாக இருக்கிறது
பத்திரிகை பக்கங்களைப் புரட்ட.
அச்சமாக இருக்கிறது
பூக்கள் நடத்தும்
புறநானூறு பாட.
அச்சமாக இருக்கிறது
உண்மையின் கோரமுகம்.

சீழ்வடியும்
காயங்களின் வலியுடன்
காலம்தள்ளுவது
கஷ்டம்தான்.
எப்படியோ
24 மணிநேரமும்
திரைப்படங்களையே
காட்டிக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சிகளின்
அவசியத்தை
இப்போதாவது
நாங்கள் பாராட்டித்தான்
ஆகவேண்டும்.!!

Thursday, April 2, 2009

உண்மைக்கு நெருக்கமாய்






சீக்கியர்கள் VS தமிழர்கள்
--------------------------
"சீக்கியர்களால் செய்ய முடிந்ததை தமிழ்ச்சாதியால் ஏன் செய்ய முடியவில்லை?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். அந்தத் தேடலில் நாம் இதுவரைப் பார்க்காத
நம் இருண்ட பக்கங்கள் தெரியவரலாம். "

என்று வீரவணக்க வரலாறு குறித்த என் பதிவில் எழுதியிருந்தேன்.
கேள்வி உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்துதான்.
இக்கட்டுரையை பல்வேறு இணையதளங்களும் வலைப்பூக்களும் (Blog)
மறுவாசிப்புக்கு உட்படுத்தியிருந்ததை அண்மையில் கண்டேன்.

நண்பர்களுடன் இதுகுறித்து நிறைய பேசி இருக்கிறேன். கட்டுரைக்கான
பின்னூட்டங்கள் சில செய்திகளைத் தொடாமல் இருப்பதையும் அறிய முடிந்தது.
அதனால் என் பதிவுக்கு நானே பின்னூட்டம் எழுத வேண்டியதாகிவிட்டது!
அவற்றில் சில:


*என்னதான் மதம் குறித்த பார்வை என்போன்றவர்களுக்கு தந்தை பெரியார் சாயலில்
இருந்தாலும் மதம் என்ற ஒரு கட்டுமானம் சீக்கியர்களை இணைத்திருக்கிறது.
ஆனால் தமிழர்களின் மதம்?
இந்துமதம்! கேட்கவே வேண்டாம். தமிழ்ச்சாதியைப் பிரித்து வைத்திருப்பதில்
சூத்திரனாய் ஒதுக்கி வைத்திருப்பதில் மிகபெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது.
பல்நூறு ஆண்டுகள் தன் ஆளுமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
எத்தனை பெரியார்கள் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்கிற மாதிரி
மொட்டைப் போடுவதிலிருந்து பிச்சை எடுப்பது வரை சகலத்திலும் தன்னை
நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது.
தமிழ்ப்பேசும் இசுலாமியர்கள், கிறித்துவர்கள் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு,
உழவர் திருநாள் என்றெல்லாம் தமிழின அடையாளத்துடன் கொண்டாடப்படும்
-அல்லது கொண்டாட வேண்டும் என்ற தைத் திங்கள் முதல் நாளைக் கொண்டாடுவதில்லை!
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

* பஞ்சாபியர்களின் கடின உழைப்பும் ஒற்றுமையும். அவர்கள் புறநானூறு பாடல்கள் எல்லாம்
எழுதி அதைப் பற்றிப் பேசிப்பேசியே பொழுதுப் போக்குவதில்லை. அவர்கள் தான்
இன்றைய இந்திய மண்ணின் புறநானூறாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
ஆம், இந்திய இராணுவத்தில் பஞ்சாபியர்களின் பங்களிப்பு இன்றுவரை
அளப்பரியது. இந்திய அரசு அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான்
இருக்கிறது. வரலாற்றில் சில நிகழ்வுகள் ( எழுத்தில் பதிவு செய்வது இயலாது)
இந்திய அரசுக்கு இதை நினைவூட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

*இந்திராகாந்தி கொலையை அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் இந்திராகாந்தியைச்
சுட்டுக்கொன்ற பியாந்த்சிங் அவர்களின் விதவை மனைவி விமலா கவுர் வேட்பாளாராக
நிறுத்தப்பட்டார். இந்தியாவிலேயே மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில்
ஐந்து இலட்சத்திற்கும் கூடுதலான வாக்குவித்தியாசத்தில்.விமலாகவுர் வெற்றி பெற்றார்.

*பியாந்தசிங்கும் பிந்திரன் வாலேயும் இன்றும் சீக்கியர்களால் 'தியாகி' என்றே
போற்றப்படுகிறார்கள்.

*ப்ஞசாபிலும் காங்கிரசு கட்சி உண்டு, ஆனால் சீக்கியர்களுக்கு எதிராக இந்தியா இறையாண்மை,'அது இதுனு
உளறினால் பஞ்சாப் மண்ணில் காங்கிரசு கட்சி துடைத்து எறியப்படும்.

*விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒரு பக்கம் இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கத்தில் “அமைதிப்படை” தனது ஆதரவுக் குழுவான ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தைச் செய்தது. இந்த உண்மையை அம்பலப்படுத்தியது, ஏதோ சாதாரண மனிதர் அல்ல; இந்திய ‘அமைதிப் படை’க்கு தலைமை தாங்கிச் சென்றிருந்த தளபதி ஹர்சிரத்சிங்கே - இந்த உண்மைகளை அம்பலப் படுத்தியிருக்கிறார். அவர் எழுதுகிறார்:
1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intervention in Srilanka”(The IPKF Experience Retold) நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

“In September 1987, a political dialogue between the LTTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the IAC was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by .N. Dixit, the Indian High Commissioner, was 16-17 September 1987. On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabharan when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He (Rajiv Gandhi) has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’


*ஹர்சிரத்சிங் தனது “Intervention in Srilanka”(The IPKF Experience Retold) நூலில் குறிப்பிடும் மேற்கண்ட
செய்திகளை இன்று பேசும் தோழர்கள் அன்றே உரத்தக்குரலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஊடகங்களும் பிற மாநிலத்தவரும் அறியும் வகையில் அந்த உண்மைச் செய்திகளைக் கொண்டு செல்லத்தவறிவிட்டோம்.
அந்த உண்மைகள் சரியாக எடுத்துச் சொல்லப்பட்டிருந்தால் தமிழக காங்கிரசுக்காரர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.
இந்தியக் காங்கிரசும் தமிழினத்தின் மீது சுமத்தும் வீண்பழியை நிறுத்தியிருக்கும்.

* தமிழர்கள் என்றாலே இந்தி எதிர்ப்பாளர்கள் என்ற எண்ணம் மிகவும் வலுவாக நடுவண் அரசின் காங்கிரசு, பிஜேபி
இரண்டு பக்கமும் இருக்கிறது. இந்திப் பேசத் தெரியாத கல்லூரி இளம்தலைமுறை பஞ்சாபில் உண்டு. இன்றைக்கு
ஊடகங்கள் நடத்து மானாட மயிலாட - ஆடல் பாடல் போட்டிகளில் கலந்து கொள்ளும் பஞ்சாபி இளம்தலைமுறை
மற்ற மாநிலத்தவருக்கும் இந்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பஞ்சாபிக் காரர்களுக்கு
'இந்தி எதிர்ப்பாளர்' என்ற அடைமொழி கிடையாது.
தமிழ்நாட்டில் தான் தமிழ் எழுதவோ வாசிக்கவோ அறியாமலேயே பட்டப்படிப்பு படித்து வெளியில் வந்துவிட முடியும்
அவலம் அரங்கேறிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்,

* 1945, 1956களில் தந்தை பெரியார் முன்வைத்த தனிச் சுதந்திர தமிழ்நாடு கோரிக்கை,
1949 முதல் 1961 வரை திமுக தூக்கிப்பிடித்த பிரிவினைக் கோரிக்கை, மாநிலசுயாட்சி
இத்தியாதி சொற்கள் தமிழ் மண்ணின் தலைவர்களிடம் காணாமல் போய்விட்டது என்பது மட்டுமல்ல..
இதைப் பற்றிய எந்தச் செய்திகளும் இன்றைய இளம்தலைமுறைக்கு எள்ளளவும் தெரியாது.
அந்தளவுக்கு இந்திய இறையாண்மையைப் போற்றிப் புகழும் தமிழ் மண். ஆனால் என்ன கருமமோ
தெரியவில்லை... நடுவண் அரசுக்கு இன்னும் தமிழ் மண்ணில் ஒலித்த பிரிவினை வாதம்
அடிக்கடி கனவில் தோன்றி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

* ராஜிவ்காந்தி கொலை நிகழ்ச்சியைக் காரணம் காட்டியே இந்திய அரசு ஈழப்பிரச்சனையை
அணுகுவதாக நினைப்பது தவறு. அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்காவிட்டாலும்
இந்திய அரசு இப்படித்தான் நடந்து கொண்டிருக்கும் என்ற புரிதல் தமிழர்களுக்கு வேண்டும்.



மேலே குறிப்பிடும் செய்திகள் அண்மைய இந்திய வரலாற்றின் உண்மை நிகழ்வுகள்.
நடந்து முடிந்த சம்பவங்களை நான் எழுதியிருப்பதால் மட்டுமே
அதெல்லாம் சரி என்றோ நியாயம் என்றொ வாதிடுவது என் நோக்கமல்ல.

"வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் வரலாறு படைக்க முடியாது "

இந்தியனை நம்பாதே.. இந்திய தமிழனை.. நம்பவே நம்பாதே


1981. ஈழத்து இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்கவில்லை.. 1983 ஜூலையில் தான்
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பம். அய்யா அமிர்தலிங்கம் அவர்கள் இந்திய அரசின் உதவியை நாடி தமிழகத்தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.
சென்னையில் பெரியார் திடலில் அறிஞர் பெருஞ்சித்திரனார்
'உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்' துவக்க மாநாடு ஏற்பாடு செய்கிறார். அதில் கலந்து கொள்ள அ.அமிர்த்தலிங்கம், பேராசிரியர் க..பொ.இரத்தினம் இவர்களுடன் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை.
மாநாட்டைத் துவக்கி வைத்து பேசிய அறிஞர். ஆனைமுத்து அவர்கள்>

" அமிர்தலிங்கம் அவர்களே! இலங்கைத் தமிழர்களுக்கு உதவும்படிக் கோரி, தமிழகத் தலைவர்களிடம் கோரிக்கை வைப்பதற்காக ஏன் இங்கே வந்தீர்கள்? தமிழகத் தலைவர்களில் ஒருவர் காலையில் இந்திராகாந்தியின் காலடியில் விழுகிறார். அவர் எழுந்தவுடன் இன்னொரு தலைவர் அதே இந்திராகாந்தியின் காலடியில் மாலையில்
விழுகிறார். இப்படிப்பட்ட அடிமைத் தலைவர்களை நம்பி ஏன் இங்கு வந்தீர்கள்? இலங்கைக்குத் திருப்பிப் போங்கள்.
அங்கே உள்ள ஈழத் தமிழர்களை முதலில் ஒன்று சேருங்கள். இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் நாட்டுத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் அங்கு உள்ளனர். அவர்கள் பள்ளர், பறையர், தேவர், வன்னியர், நாடார், வண்ணார், மருத்துவர் எனப் பல உள்சாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பார்த்து நீங்களெல்லாம்
கள்ளத்தோணி, சின்னச்சாதி, பனங்கொட்டை என்றெல்லாம் இழிவாகப் பேசிக் கொடுமைப் படுத்தினீர்கள். இப்போது அவர்களையும் சேர்த்துக்கொண்டு இலங்கை அரசை எதிர்த்து அங்கே போய்ப் போராடுங்கள்"
(நன்றி: சிந்தனையாளன் மார்ச் 2009 பக் 2)


இங்கே ஆனைமுத்து அய்யா அவர்கள் இந்திராகாந்தி என்று சொல்லியிருப்பதை கொஞ்சம் மாற்றிக்கொண்டு சோனியாகாந்தி என்று வாசிக்கலாம்!
ஈழப்போராட்டத்தில் இந்திய அரசை ஓர் அண்டைநாடு என்ற அளவில் கூட அருகில் நிறுத்தியிருக்க கூடாது.
முழுவதுமாக விலக்கி வைத்திருக்க வேண்டும். அதிலும் நம் தமிழக தலைவர்களை முழுக்கவும் விலக்கி வைத்திருக்க வேண்டும்,. அப்படி நடந்திருந்தால் நிச்சயமாக "தமிழ் ஈழம் " எப்போதோ உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும்.

Thursday, March 26, 2009

என் முனியம்மா..


பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.

காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.

ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.

எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.


இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலிகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.

முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பாத்தா
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..

முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.

Friday, March 20, 2009

பூப்பு நீராட்டு





புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.

பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.

பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே
இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை.
பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி
அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது.
ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த
முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.

மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து
அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே
இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும்
ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண
முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் எற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது
பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது
மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.

ஆண் -பூப்படைதல் சடங்கு
--------------------------------

ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும்
பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி
சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன.
அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைத்தல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம்.
அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும்
அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.
தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை
தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான
அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.
ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie)என்றும்
பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின்
இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:
---------------------------------------
பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று
சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம்
உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ
அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள்
என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும்.
பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த
அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய
ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள்
என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும் . அந்தப் பெண் அவள் ஒத்தப்
பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள்.
பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே
பூப்படந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக்கொடுப்பார்கள்

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது
விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின்
முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்தித்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது.
"பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.
இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது.!
தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை
உண்மை, பொய் அனைத்தையும் "பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

சங்க இலக்கியத்தில் பூப்பு
----------------------------

பெண் பூப்படைதல் சடங்குகள் குறித்த தகவல்கள் சங்க இலக்கியத்தில் விரிவாக இல்லை.
தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியலில்
"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீததகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான" (நூற்பா 1133)

என்று மணமான பெண்ணோடு கணவன் புணரும் காலம் குறித்த தகவலைப் பதிவு செய்துள்ளது.
இவ்விடம் குறிக்கப்படும் பூப்பு குழந்தைப் பருவத்து பெண் கருத்தரிக்கும் பருவத்திற்கு மாறிவிட்டதைக் குறிக்கும்
பூப்பன்று.

பெண்ணின் முதல் பூப்பு, அதனை ஒட்டிய சடங்குகள் குறித்து ஒரேயொரு புறநானுறு பாடல், ம்கட்பாற் காஞ்சித்துறைப்
பாடல் (337:6:12) குறிப்பிட்டுள்ளது.

"பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்"

பெயர் குறிப்பிடப்படாத ஒரு மறக்குடிச் சிற்றரசனின் மகள் பூப்பு அடைந்ததால் பிறரால் காண்பதற்கு அரியவளாக,
பெண்மை நிரம்பிய பொலிவோடு நன்கு வெளுத்து மடித்த துகில் போல அகலின் நறும்புகை கமழும் கபிலநிற வீட்டிற்குள்
மனைச் செறிக்கப்பட்டாள் என்று இப்பாடல் பதிவு செய்துள்ளது.

காண்டற்கரிய பாலியல் பொலிவு, நுடக்கம், அகில் நறும்புகை, மனைச்செறிப்பு ஆகியவை சங்க காலத்தில் பூப்பு எய்தியதை
ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள் எனலாம். வேறு விளக்கமாக அறிந்திட சான்றுகள் இல்லை..

சடங்குகளூம் சமூக மாற்றங்களும்
--------------------------------------
"அறிவியலும் கலை இலக்கியமும் "உண்மைகளை" வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றன.
சடங்குகளும் அவ்வாறே பேசுகின்றன. மானிட வாழ்க்கையின் இருத்தலில் ஓர்மை மனதுக்கு (conscious mind) எந்த அளவுக்குப் பங்கு உண்டோ அந்த அளவிற்கும் குறையாமல் ஓர்மையற்ற மனதுக்கும் (unconsciousmind) பங்கு உண்டு. ஓர்மை மனதை அறிவு, பகுத்தறிவு
ஆகியவற்றொடு சம்பந்தப்படுத்துவதைப் போல ஓர்மையற்ற மனதை சடங்குகள், கலை இலக்கிய படிமம் ஆகியவற்றோடு
சம்பந்தப் படுத்த முடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இனக்குழு நாகரிக வாழ்க்கையிலிருந்த சடங்குகள் மாந்தரைச் சமூக
வயமாக்கும் கருத்தியல் செயல்பாடுகளைச் செய்து வந்துள்ளன.: என்பார் ராஜ்கவுதமன்.
இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளைப் பற்றி ஆராய்ந்த அர்னால்டு வான் கென்னப் (Arnold Van Gennep)
அவற்றை ஒரு குடும்ப/சமூக/பாத்திர நிலையிலிருந்து ஒருவர் அல்லது ஒரு குழு மற்றொரு குடும்ப/
சமூக/ பாத்திர நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் (Rites of passage) என்று குறிப்பிடுவார்.
"தமிழர் மானுடவியல் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள்
வழியாக பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன " என்பார் பக்தவச்சலபாரதி- (தமிழர் மானுடவியல்)
இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப/சமூக பாத்திரங்களை ஒரு பெண்
ஏற்கிறாள்.

பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு ஆண் பொறாமை அடைகிறான். அச்சம் கொள்கிறான்.
பெண்ணின் மறு உற்பத்தியை பெண் மூலமாக ஆண் அறிய வேண்டி இருப்பதால் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த தீவிரமாக
சிந்திக்கிறான். தாய்வழிச் சமூக அதிகாரம் தடை செய்யப்பட்டு தந்தை உரிமைச் சமூக மேலாதிக்கம் நிலைநிறுத்த
கொண்டாடப்பட்ட பெண்ணின் பூப்பு தீட்டாகி விலக்கி வைக்கப்படுகிறது. எதைக் கண்டு ஆண் அச்சப்பட்டானோ அதையே
காரணமாக்கி பூப்பு, பெண்ணின் மறு உற்பத்தி உறவு, மகப்பேறு அனைத்தும் அவள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட
சமூகக் காரணிகளாக மாறியது.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தில் பெண்ணைப் பற்றி பெண்ணின் சமூகத் தகுதி
நிலையைப் பற்றி விளக்கும் போது உயிர் உற்பத்தி செய்வதிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குவதிலும்
சுதந்திரமாகவும் சம உரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் முதலாளித்துவ போக்கினாலும் தனிச்சொத்துரிமையாலும்
துணைநிலையினரகவும் சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்றி நிகழ்ச்சியில்
தவிர்க்கவியலாத மாற்றமாகியது என்று விளக்குகின்றனர்.

தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும்.
இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "ப்ழையோள்" என்றும் மணிமேகலையில்
"முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம்.

தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில்
கடைப்பிடிக்கப்படுகிறது.

எனினும் இன்றைய மத நம்பிக்கைகள் , தந்தை வழி ஆணாதிக்க சமூகம், முதலாளித்துவம் அனைத்தும்
பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப்பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில்
ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்டங்களாக்கிவிட்டது தான் உண்மை.
சாதியக் கொடுமையை உணர்த்தும் தீண்டாமை, தீட்டு போன்ற சொற்கள் பெண்ணின் கொண்டாட்டத்திற்குரிய
பூப்படைதலுடன் தொடர்பு படுத்தி தீட்டாகிப் போனது. பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது.
பெண் தீட்டாகிப் போனாள்., தீண்டத்தகாதவளாகிப் போனாள்.
பெண் அடிமையாகிப்போனாள்.
எனவே தான் பெண் பூப்படைதலைக் கொண்டாடுவதும் விளம்பரப்படுத்துவதுமான சடங்குகள் அவளை
அடிமைப்படுத்தும் அடையாளங்கள் என்பதில் ஐயமின்றி ஒட்டுமொத்த பெண் விடுதலை விரும்பிகளும்
பூப்பு நீராட்டு சடங்குகளை எதிர்க்கிறோம்.
பழமை என்பதால் பாதுகாக்கலாம்
அருங்காட்சி அகத்தில்.
அதைப்போல தான் பழமையான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும்.
சடங்குகளின் வேர்களைத் தேடி மனித வரலாற்றை ஆய்வு செய்யலாம்.
தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும்,.


வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாக் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறிப் படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வ்ர
என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை.
- கவிஞர் கனிமொழி.


துணைநின்ற நூல்கள்:

> பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ்கவுதமன்.

> welcome to womenhood) – sharon supriya

Friday, March 13, 2009

வீரவணக்க வரலாறு





வீரவணக்கம் சொல்ல
அச்சமாக இருக்கிறது.
மன்னித்துவிடுங்கள்




என் தோழர்கள் பலருக்கு நான் இப்படி எழுதுவது வருத்தத்தைக் கொடுக்கும்.
அவர்கள் விரும்புவதை நானும் விரும்பி பதிவுகளாக்கும்போது தூக்கிப்பிடிக்கும்
அவர்கள் தோள்கள் ஒரு பெண்ணாகவும் ஒரு தாயாகவும் நான் உணர்ந்து சில
விசயங்களைப் பதிவு செய்யும்போது கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும்.

ஆரம்பகாலங்களில் இவை எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. ஆனால் இன்று நான்
ஓரளவுக்கு இந்தப் பாதிப்புகளிலிருந்து வெளியில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
அதுதான் வீரவணக்கங்கள் குறித்த ஒரு பார்வையை முன்வைக்கும் அவசியத்தை
வளர்த்திருக்கிறது.

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் 25/02/2009ல்
ஆதித்தமிழர் பேரவையும் அருந்ததியர் அமைப்பும் இணைந்து நடத்திய உண்ணாநிலை
போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தரும் நோக்கில் பிற்பகலில் கலந்து கொண்டேன்.
ஈழத்திலிருந்து வந்திருந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) எம்.கே.சிவாஜிலிங்கம்
ஈழத்தில் நடக்கும் செய்திகளைப் பேசினார்.. அப்போது கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன்
ஓவென அழுது அருகிலிருந்த நண்பனின் மடியில் படுத்துக் கொண்டான. அவன் கண்களிலிருந்து
கண்ணீர்த் தாரைத்தாரையாக வழிகிறது. அவன் கால்களும் கைகளும் நடுங்குகின்றன.
அவன் உடல்மொழி என்னை அச்சுறுத்தியது. இதே மனநிலையில் இந்த இளைஞன்
இருந்தால் அல்லது அவனுடைய இந்த மனநிலை வளர்க்கப்பட்டால் இவனும்
வீரவணக்கம் பட்டியலில் வந்துவிடுவானோ என்ற அச்சம் ஏற்பட்டது.
ஒரு தாயாக சகோதரியாக அவனைப் பார்த்த எனக்கு அவன் கண்களும் அந்தக் கண்களில்
கண்ட சோகமும் இயலாமையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவன்
உடல் நடுங்குவதையும் கண்டு அச்சம் ஏற்பட்டது. அப்படியே அவனை அழைத்துக்கொண்டு
மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுவதும் நன்றாக ஓய்வு கொடுப்பதும் தேவை என்று
என் உள்ளம் சொன்னது. அருகிலிருந்த நண்பரிடம் "அவனுக்கு குடிக்கத் தண்ணீர்க்கொடுங்கள்
டேக் கேர் ஆஃப் கிம்" என்று சொன்னேன். அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தப் பார்வை
அந்த இடத்திலிருந்து என்னை நகர்த்தியது.
அதன் பின் தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவந்த உயிர்த்தியாகங்கள் என்னை இதை
எழுத வேண்டியதன் அவசியத்தை உணர்த்தின. அதிலும் கட்சிவாரியாக தமிழ்நாட்டில்
தீக்குளிப்புகள் நடக்கிறதோ என்று ஐயப்படும் அளவுக்கும் பத்திரிகை செய்திகள்
பயமுறித்தின.

கொழுந்துவிட்டெரியும் ஈழத்துப் பிரச்சனைகளுக்கு நடுவில் அதற்காக தங்கள் உயிரைத் தியாகம்
செய்த எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. இன்னும் சொல்லப்போனால் அந்த ஒரு
கணத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட மன அழுத்தம். அதுவும் , தான், தன் மனைவி, மக்கள். சாதி,
சமயம், ஊர், உறவுகள் என்ற வட்டங்களை உடைத்துக்கொண்டு தன் சகமனிதனின் துன்பம் கண்டு
சகிக்கமால் தங்கள் இயலாமையின் காரணமாக சினம் கொண்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள்.
அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் தான்.
இன்னும் சொல்லப்போனால் அரசாங்கத்தை ஓட்டுப்போட்டு உருவாக்கிய நாமும்
அரசியல் தலைவர்களை ஏற்றுக்கொண்டிருக்கும் நம் சமூகமும் தான் குற்றவாளிகள்.
வீரவணக்க வசனங்களை, கவிதைகளை மறந்து அறிவுப்பூர்வமாக இதை அணுகும்போது
தமிழினத்தின் இயலாமையோ என்ற எண்ணம் வருகிறது!


வீரவணக்கம் என்ற வழிபாடு நம் இனக்குழு பண்பாட்டின் எச்சமாகவே நம்மிடம் தொடர்கிறது என்று
நினைக்கிறேன். சங்க இலக்கியத்தில் புறநானூறு 335ல்
"பகைவர் முன்நின்று தடுத்து யானையைக் கொன்று மரணம் அடைந்த வீரனுக்கு எடுத்த
நடுகல்லில் நெல்தூவி வழிபாடு செய்வது தவிர வேறு வழிபாடில்லை" என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டின் தாக்கத்தை அப்படியே இந்தி எதிர்ப்பின் போது உயிர் நீத்த தாளமுத்து, நடராசன்
விசயத்தில் திராவிட இயக்கங்கள் பயன்படுத்திக்கொண்டன.
போர்க்களத்தில் வீரமரணம் அடைவதும் தன் எதிர்ப்பைக் காட்டும் வகையில் தன்னுயிரை மாய்த்துக்
கொள்வதும் ஒன்றல்ல. இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதை நாம் அறிந்திருந்தாலும்
வெளிப்படையாக இதைப் பற்றிப் பேசவோ எழுதவோ அச்சப்படுகிறொம். அந்தளவுக்கு
நம்மை நம் தலைவர்களும் சமூகமும் கட்டுப்படுத்து வைத்திருப்பது உண்மை.
இன்னொரு செய்தியும் எனக்கு நினைவுக்கு வருகிறது .2008, 26/11
மும்பை மாநகர தாக்குதலின் போது எதிரியின் குண்டுக்குப் பலியான மூன்று உயர் போலீஸ் அதிகாரிகள்-
(Hemant Karkare, Ashok Kamte and Vijay Salaskar) ஹேமந் கர்க்கரே, அசோக் காம்டே, விஜய் சாலஸ்கர்
மூவருக்கு இந்திய அரசு அசோகச்சக்ர விருது வழங்கியது. ஆனால் இம்மாதிரி தாக்குதல்களில்
எதிரியின் குண்டுக்குப் பலியாவதும் போர்க்களத்தில் எதிரியை எதிர்க்கொண்டு போரிட்டு உயிரிழப்பதும்
ஒன்றல்ல. மும்பைத் தாக்குதலில் பலியான அவர்களை மதிக்கிறோம் எனினும் அவர்களுக்கு இவ்விருது
வழங்கப்பட்டது சரியல்ல என்று இந்திய இராணுவ படைத்தளபதிகள் தம் கருத்தை மிகவும் தெளிவாக
முன்வைத்தார்கள்.

நம்மில் பலர் நினைக்க கூடும். இம்மாதிரியான உயிர்த்தியாகங்கள் மக்களிடம் ஓர் எழுச்சியை ஏற்படுத்தவல்லன.
இந்திப் போராட்ட காலத்திலிருந்து இன்றுவரை நம் தமிழ்ச்சாதி கண்ட உயிர்த்தியாகங்களின் எழுச்சிகள் மூலம்
நாம் சாதித்துக் கிழித்தது என்ன? இன்றுவரை நடுவண் அரசின் இந்தி மொழிக்கொள்கை புறவாசல் வழியாக
ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறதே! செம்மொழி நாடகத்தில் தமிழன் இந்திய அரசால் எந்தளவுக்கு ஏமாற்றப்பட்டான்?
நாம் செய்தது என்ன? 1983லிருந்து ஈழத்து நம் உறவுகளுக்காக நாம் எழுதி எழுதிக் குவித்திருக்கும் கவிதைகளும்
கவியரங்கங்களும் இலட்சங்களைத் தாண்டும். ஒரு கவிதை ஒரு தமிழன் உயிரைக் காப்பாற்றி இருந்தால் கூட
இன்றைக்கு நம் ஈழத்தமிழ் மண் இடுகாடாகியிருக்காதே!

எதையும் உணர்வுப்பூர்வமாக பார்ப்பது தவறல்ல. ஆனால் அப்படி மட்டுமே பார்ப்பது மாபெரும் தவறு.
பிரச்சனைகளைத் தீர்க்க அறிவாயுதம் ஏந்த வேண்டும்.






ராஜீவ்காந்தி மரணத்தில் தமிழினம் எவ்வளவு பாதிக்கப்பட்டதோ அதைவிட அதிகமாக அவர் அன்னையார்
இந்திராகாந்தி அம்மையார் மரணத்தில் 1984ல் சீக்கியர்கள் பாதிக்கப்பட்டார்கள். தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள்
கண்டனக் கவியரங்கங்கள் நடத்தவில்லை. உயிர்த்தியாகங்கள் செய்யவில்லை. ஆனால் செயலில் காட்டினார்கள்.

"ஒரு பெரிய ஆலமரம் வேரோடு சாயும்போது அதில் தங்கியிருந்த பறவைகளும் முட்டைகளும் அழியத்தான் செய்யும்"
என்று 3000 சீக்கியர்களை டில்லியில் கொன்று குவித்ததை அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி நியாயப்படுத்தி பேசினார்.
கொதித்துப் போன சீக்கியர்கள் விடவில்லை. கொஞ்சநாள் கடந்து ராஜீவ்காந்தியை மன்னிப்பு கேட்ட வைத்தார்கள்.
(தெளிதமிழ் இதழ் 13/2/2009 பக் 17)

சீக்கியர்களால் செய்ய முடிந்ததை தமிழ்ச்சாதியால் ஏன் செய்ய முடியவில்லை?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். அந்தத் தேடலில் நாம் இதுவரைப் பார்க்காத
நம் இருண்ட பக்கங்கள் தெரியவரலாம்.


வீரவணக்கம் சொல்ல
அச்சமாக இருக்கிறது.
மன்னித்துவிடுங்கள்.

கட்சிவாரியாக தீக்குளிப்புகள்
வீரவணக்கங்கள்
கூட்டங்கள் தலைவர்கள்
வீரவசனங்கள்
அறிக்கைகள்
அறிக்கைகளுக்கு எதிர் அறிக்கைகள்
கதவடைப்புகள்
கண்டனக்கூட்டங்கள்
கவிதையின் இடிமின்னல்
போதும் போதும்..

முத்துக்குமரன்களை ஈன்ற
அன்னையின் கருவறை சத்தியமாய்
எமக்கு வேண்டும்
எம் மண்ணில்
ஒரே ஒரு மண்டேலோவின்
மனித சரித்திரம்..

-----------------

Wednesday, March 11, 2009

வீரகேசரி நாளிதழில்



முகமும் முகவரியும் அறியாத உங்களைப் போன்றவர்களின்
வாழ்த்துகளும் விமர்சனங்களும் தான் என் எழுத்துப்பயணத்தை
அர்த்தமுள்ளதாக்கும் சத்தியக்கடிதாசிகள். மிக்க நன்றி.

http://epaper.virakesari.lk/Default.aspx?selpg=866&selDt=03/09/2009&BMode=100#
Published on March 09 2009 ,Page 19

Monday, February 16, 2009

இது அரசியல் கோஷமல்ல




வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது..

இது-
அரசியல் கோஷமல்ல.

வடக்கில் வங்கத்துப் போர்முனையில்
வடக்கில் பஞ்சாபின் படுகொலையில்
பாய்ப்போட்டு
படுத்து உறங்கிய
இந்திய இறையாண்மை
தெற்கே
இந்துமாக்கடலில் மட்டும்
இரவெல்லாம் விழித்திருந்து
காத்திருந்து
காவல் காக்கிறதாம்!
யாருக்காக?
எதற்காக?
இப்போதும் வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத்தேய்கிறது

பக்கத்துவீட்டு பாகிஸ்தானின்
பங்காளிச்சண்டையில்
வங்கதேசம் வந்துதித்த வரலாற்றை
எழுதி எழுதி
பூரித்துப்போன பாரதமாதாவுக்கு
தெற்கே
இலங்கைத் தேசத்தில்
ஈழம் மட்டும்
கசக்கிறதா..?

வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது

இந்திய தேசத்தில்
இவர்தான் "தேசப்பிதா" என்று
பாடப்புத்தகத்தில்
எங்களைப் படிக்க வைத்தீர்கள்
அந்த தேசப்பிதாவைக்
கொன்றவனின் கூட்டத்தைக் கூட
உங்கள் அரசியல் வானத்தில்
தலைவர்களாக
அடையாளம் கண்டீர்கள்.
ஒரு பாரதப் பிரதமரைக்
கொன்றவர் என்பதற்காய்
தலைப்பாகைக் கூட்டத்தை
ஒதுக்கவில்லையே..!
ஏ.. பாரதமாதா..
இதெல்லாம் உனக்கு
மறந்துப் போயிருக்கலாம்
மன்மோகன்சிங்கே ..
உங்களுக்கு எப்படி
மறந்துப் போனது?

இப்போதும்
வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது

சரித்திர உண்மைகளை
மாற்றி எழுதிய
உங்கள் பொய்முகத்தை
அண்ணாவின் ஆரியமாயை
கிழித்து எரிந்ததை
அவாள்கள் மறக்கலாம்
அண்ணாவின் தம்பியர் மறந்தது ஏன்?

ஆரியமாயையின் புதியநாமம்
இந்தியமாயை.
ஆங்கிலேயன்
அடிமைகள் கழுத்தில் தொங்கவிட்ட
அந்த அடையாள அட்டையுடன்
உலாவருகிறீர்கள்
வரலாற்றில் கறைப்படிந்த
உங்கள் கரங்களால்
ராஜீவின் கதையைச் சொல்லிச்சொல்லி
எங்கள் வரலாற்றைக்
களங்கப்படுத்தாதீர்கள்!
முடிந்தால்-
ஒரு கணமேனும்
உங்கள் முகமூடியைக்
கழட்டி வைத்துவிட்டு
உங்கள் முகத்தைப் பாருங்கள்

பஞ்சாபி என்றும்
வங்காளி என்றும்.
மராட்டியன் என்றும்
அசாமி என்றும்
பீகாரி என்றும்
காஷ்மீரி என்றும்
உங்கள் முகங்கள்
உங்கள் முகங்களாக
ஒப்பனைகளின்றி தெரியும்.
அந்தப் பிம்பங்களுக்கு நடுவில்தான்
உங்களால் பார்க்கமுடியும்
எங்களை-
எங்கள் தமிழ் முகத்தை
எங்கள் ஈழ தமிழ் நிலத்தை.

வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது
இது இனி அரசியல் கோஷமல்ல.

உலகச்சந்தையில்
இந்திய முகங்களைப்
பட்டா போட்டு
விற்றுத் திரியும்
பாரதமாதாவே..
உன் புதல்வர்களிடன் சொல்லிவை.

வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது
இது அன்று பாடிய மரபுக்கவிதையல்ல.
இது போராளிகள் எழுதும் புதுக்கவிதை.
இதில் மரபுச் சட்டங்கள் உடையும்
பயமுறுத்தும் சீர்-தளை சிதையும்
";நவீனக்கவிதை";
இங்கேதான் விதைக்கப்பட்டது என்று
நாளைய வரலாறு
எங்கள் கல்லறைகளில் எழுதும்.
இது எங்கள்
உயிர் எழுத்துகளின்
போர்ப்படை அணிவகுப்பு.
மெய்யெழுத்துகளில்
புதைத்து வைத்திருக்கும்
புதிய கண்ணிவெடிகள்.
இது வெடிக்கும்.
வெடிப்போம்..
எங்கள் களத்திலிருந்து
அக்னிக்குஞ்சாய்
புறப்படும்
அமைதிப் புறா.
எங்கள் பிள்ளைகளுக்கு
கற்றுக்கொடுக்கும்
கூடுகள் கட்டும் வித்தையை.
குஞ்சுகளைப் பறக்க வைக்கும்
வாழ்க்கையை.
----------------------------------

Thursday, February 5, 2009

போராட்டத்தின் திசைகள்- நயனம்

நண்பர் நாக.இளங்கோவின் நயனம் வலைத்தளத்தில் எழுதப்பட்டிருக்கும் கருத்துகள்
அனைத்தையும் அப்படியே நானும் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டின் இச்சூழலில்தான் ஒரு நிஜமான தலைமை உருவாகும் என்று இதுவரை அறிந்த உலக சரித்திரத்தின் வழி
நம்புகிறேன்.



Monday, February 02, 2009 தமிழ்நாட்டின் போராட்ட திசைகள் எப்படி
அமையவேண்டும்?
தமிழக அரசியல் கட்சிகள் பலவற்றின்
முகத்திரை இன்று கிழிபட்டுக் கிடக்கிறது.
அவற்றின் நாணயமும் வஞ்சகமும்
தமிழினத்தின் முன் நகைக்கப் பட்டுவிட்டது.
வரலாற்றில் இக்கட்சிகள் கறையாகிப் போய்
விட்டன. தமிழினத்திற்கு எதிரான
இந்திய வஞ்சகமோ எக்காளமிடுகிறது.

முத்துக்குமாரும் இரவியும் பற்றிக்கொண்ட தீ
பற்ற வைத்திருக்கும் தன்மான உணர்வு
தமிழனுக்கெதிராக செயல்படும் அகில
உலகத்தையும் அடக்கி வைக்க வேண்டாமா? -
என்ற எண்ணம் எழாத தமிழன் இல்லை.

கிளர்ந்தெழும் தமிழ்நாட்டுக் குமுகம்
தனது போராட்டத் திசைகளை எப்படி
வகுத்துக் கொள்ளும் - என்னவெல்லாம்
அதன் திசைகளாக இருக்கக் கூடும்
என்பதே தமிழ் மக்களின் சிந்தனையாக
உள்ளது.

தமிழினம் என்ற போதெல்லாம் அப்பழுக்கின்றி
உறுதியான குரல் கொடுத்து
நிற்கும் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன்,
பெரியார் தி.க இராமகிருட்டிணன் இவர்களுடன்
தா.பா, நல்லகண்ணு, இராமதாசு
மற்றும் பல தமிழர்கள்
இணைந்து ஏற்படுத்தியிருக்கும்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகள் அளப்பரியன.

தமிழ்நாட்டின் போராட்ட திசைகளை இவர்கள்
சிறப்புடன் அமைக்கவேண்டும்.

*திசை-1:* தமிழினத்தின் எதிரி யார்,
துரோகி யார் என்பது தெளிவாகிவிட்ட பின்னர்,
அவர்களை நேரடியாக மக்கள் முன் நிறுத்துதல்
வேண்டும். நெடுமாறனும் வைகோவும் திருமாவளவனும்
"இந்திய அரசு இப்படிச் செய்கிறது" என்று
சொல்லாமல் நேரடியாக ஒன்றும் தெரியாதவர்
போல் இவ்வளவுக்கும்
காரணமாக இருக்கும் சோனியா காந்தியை
நேரடியாகக் கண்டிக்க வேண்டும்.

திருமாவளவன் இதனைச் சரியாக
உண்ணாநோன்பின் போது செய்தார்.
ஆனால் கருணாநிதி குறுக்கே புகுந்து
"காங்கிரசைக் குறை சொல்லி
திசை திருப்புவதா?" என்று எகிறவும்
திருமா குறைத்துக் கொண்டார்.

இது தவறு. நேரடியாக சோனியாவையும்
காங்கிரசையும் கண்டிக்க வேண்டும்.
காங்கிரசின் தமிழகத் தலைவர்களை
எதிர்த்து கறுப்புக் கொடி காட்டவேண்டும்.

அதேபோல, கருணாநிதியும் அன்பழகனும்
செயலலிதாவும் தமிழகத்தில்
செல்லும் இடங்களில் எல்லாம்
கறுப்புக் கொடி காட்டவேண்டும்.

இதனை கிளர்ந்தெழும் தமிழினம்
முக்கியமாகச் செய்யவேண்டும். அப்படிச்
செய்தால்தான் வாக்கு வங்கிப் பயம் வரும்.
அதுதான் அரசியல் கட்சிகளின்
அடிமடி. அதில் அடிக்க வேண்டும்
தயவு தாட்சனை இன்றி.

*திசை-2:* தமிழக ஆதிக்க சக்திகளான
தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு
ஆகிய மூன்று கட்சிகளின் ஆதரவுடைய
தொலைக்காட்சிகள், காங்கிரசு
சார்ந்தவரின் தொலைக்காட்சிகள்,
இந்து நாளேடு, துக்ளக் நாளேடு,
தினமலர் நாளேடு ஆகியவை தமிழினத்திற்குத்
தொடர்ந்து மொழிவகையானும் இனவகையானும்
நலிவை ஏற்படுத்துகின்றன.

இவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று
பேசிக் கொண்டிருந்த போது
எனது அருமை நண்பர் ஒருவர் இதுவே
அமெரிக்கா போன்ற நாடுகளானால்
இப்படிச் செய்யாமல், இம்மிடையங்களில்
விளம்பரம் கொடுக்கிறார்களே
அந்தப் பொருள்களையெல்லாம் புறக்கணிப்பார்கள்.
அப்பொழுதுதான்
இம்மிடையங்களின் அடிவயிற்றில் அடிவிழும்
என்று சொன்ன கருத்து சிறப்பெனப் பட்டது.

ஆகவே, கிளர்ந்தெழும் தமிழினத்திற்குத்
திசைகாட்டும் தலைவர்கள் இதனை
முன்னெடுக்க வேண்டும். சிங்கள இரத்தினம்
இந்து இராமுக்கும், தினமலர்,
துக்ளக்கிற்கும், சன், கலைஞர்,
செயா தொ.காகளுக்கும் பதில் எழுதியோ,
அவர்களின் கொடுமைகளை எண்ணிப்
புலம்பியோ இருப்பது பேதைமை.

தமிழ் மக்களிடம் இதனைச் சரியாக
சென்று சேர்த்து விட்டால் தமிழ் மக்கள்
சொன்னபடி மிடையங்கள் கேட்கும்.
இன்றைக்கு இது தலைகீழாக இருக்கிறது.

ஆகவே, *"தமிழினத்திற்கு துரோகம்
செய்யும் ஆதிக்க சக்திகளின் மிடையங்களிலும்
தமிழினத்திற்கு எதிராக செயல்படும் மிடையங்களிலும்
எந்தப் பொருள்கள் விளம்பரப் படுத்தப் பட்டாலும் *
*அதனைத் தமிழர்கள் வாங்க மாட்டார்கள்!"*
என்பது தமிழர்களின் கிளர்வின் ஒரு திசையாக
ஆக வேண்டும்.

*திசை-3:* தமிழ் இணையம் என்ற மிடையம்
மேற்கண்ட திசைக்கு முன்னோட்டமாக
அமைய, இணையத்திற்கு வரும் எந்தத்
தமிழரும் தமிழினத்திற்கு எதிராக
எழுதும் எந்தத் தமிழ் இதழையும்
தொடக் கூடாது. இந்தக் கட்டுரையை
வரைவதற்கு முன்னர் நான்
இதனைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டேன்.

இதனைச் செய்ய எந்தத் தலைவரும்
வழி காட்ட வேண்டியதில்லை. இணையம்
என்ற இந்த தமிழ் உணர்வுள்ள குமுகம்
எளிதில் செய்ய முடிந்தது.

அப்படியான இதழ்களும் நாளேடுகளும்
என்னதான் தமிழர்க்கெதிராக
எழுதினாலும் அதை நாம் படிக்க வேண்டிய
பகிர்ந்து கொள்ள வேண்டிய
அவசியம் நமக்கு என்ன?

ஆகவே இணையக் குமுகம் உடனடியாகச்
செய்ய வேண்டியது, தமிழினத்திற்கு
எதிரான இந்த மிடையங்களைப் படிப்பதில்லை
என்று முடிவு கட்டி விடவேண்டும்.

*திசை-4:* அடுத்ததாக தமிழினத்திற்கு
எதிராக இருக்கும் நாடுகளைப்
புறக்கணிக்க வேண்டும்.

1) சீனாவும் சப்பானும் சிங்கள
பவுத்த வெறியர்களுக்குத்
துணை போவதற்கு அவர்களின்
தன்னலமே காரணமல்லவா?
ஆகவே, தமிழினம் சீனாவிலும்
சப்பானிலும் தயாரிக்கப் பட்ட எந்தப்
பொருளையும் வாங்கக் கூடாது.

வணிகர்கள் அந்நாடுகளில் தயாரிக்கப் பட்டுத்
தமிழகச் சந்தைக்குள் வரும்
பொருள்களை விற்கக் கூடாது.
வணிகர்கள் *"சப்பான் சீனா நாட்டுப்
பொருள்கள் இங்கே விற்கப் படாது"*
என்று கடைகளில் எழுதிப் போடவேண்டும்.
வெள்ளையன் போன்றோர் வணிகர்
சங்கத் தலைவர்களாக இருக்கையில்
இது நடக்கக் கூடியதே.
இப்படிச் செய்தால் தமிழ் மக்கள் மனமார்ந்த
ஆதரவினைத் தருவார்கள்.

அதே நேரத்தில் சோனி, தோசிபா போன்ற
நிறுவனங்களின் பொருள்களை
மக்கள் விடுவார்களா என்ற ஒரு கேள்வி
எழத்தான் செய்கிறது. ஆனால் இது
ஒரு இயக்கமாகக் கிளம்பினால்
தமிழ் மக்கள் தவமாக ஏற்றுக் கொள்வர்.
வெள்ளையர்களை வெளியேற்ற
தமிழ் மக்களும் அவர்களின் பொருள்களைப்
புறக்கணித்தார்கள்தானே!
அந்த அமைதிப் போர்
தற்போது நிகழ வேண்டும்.

நானும் இந்தத் தவறைச் சின்னாள்களுக்கு
முன்னர் செய்தேன். இனிச் செய்யேன்.

2) இத்தாலிப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும்.
இத்தாலி நாட்டு ஆடைகள், கண்ணாடிகள்
போன்ற பொருள்கள் புறக்கணிக்கப் பட
வேண்டும். ஏனென்றால் இத்தாலியைச்
சேர்ந்த சோனியா காந்தி தமிழர்களை அழிக்கிறார்
என்ற செய்தியை இந்தியாவிற்கும் உலகிற்கும்
அறிவித்து தமிழினத்தின் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு கடையிலும்
*"இங்கே இத்தாலி நாட்டுப் பொருள்கள் *
*விற்கப்படாது*"
என்று எழுதிப் போட்டால் தமிழகம் என்ன,
இந்தியாவின் பெரும்பகுதியும்
மகிழ்ச்சிதான் அடையும்.

3) பாக்கித்தான், வங்கதேசம், மாலத்தீவுகள்
ஆகிய நாடுகளை நம்மால் பெரிதும் எதுவும்
செய்து விட முடியாது. ஏனென்றால் அங்கிருந்து ஏதும்
நமக்கு வருவதில்லை. ஆனால், வங்கதேசத்தில்
இருந்து அகதிகளாகவும்,பிழைப்பு தேடியும்
தமிழகத்தில் நிறைய வங்கர்கள் இருக்கின்றனர்.
இவர்களைத் தமிழ்நாட்டை விட்டு
வெளியேற்ற வேண்டும். வங்கதேச நாட்டில்
இருந்து பல ஆயிரம் பேர் பிழைப்பு
தேடி தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.
பெரும்பாலும் அவர்கள் கடைநிலை
ஊழியம் செய்கிறார்கள். அவர்களை
எல்லாம் தமிழ்நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்.
அப்பொழுதுதான் வங்கதேசத்திற்கும்
இந்தியாவிற்கும் நமது எதிர்ப்பைச் சொல்ல முடியும்.

4) சிங்களத்தில் இருந்து என்ன பொருள்கள்
வந்தாலும் - குறிப்பாக தேயிலை - அவற்றைப் புறக்கணிக்க
வேண்டும். ஒவ்வொரு தமிழனும் இதனைத்
துண்டுச் சுற்றுகள் மூலமும் வணிகர்கள்
மூலமும் செயல் படுத்த வேண்டும்.

இந்த நாடுகளின் பொருள்களைப் புறக்கணிக்கும்
போது அந்நாடுகளோடு பல்வேறு வணிகத்
தொடர்புகள் கொண்ட அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும்
புரிபட வைத்தால் போதும்.

*திசை-5:* வைகோ, இராமதாசு,
திருமாவளவன் ஆகிய மூவருக்கு மட்டும்
தமிழ்மக்கள் ஒரு நெஞ்சார்ந்த அன்பு
வேண்டுகோளை வைக்க வேண்டும்.

இவர்கள் இன்றே வருகின்ற பாராளுமன்றத்
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கும்
சொல்லலாம்தான் - ஆனால் அதன்
தலைமை என்ன செய்யும் என்று
நமக்குத் தெரியாது. ஆனால், வைகோவிடமும்
இராமதாசிடமும் திருமாவிடமும்
உரிமையாகவும் எதிர்கால சூக்குமமாகவும்
இதனை நாம் கேட்டுக் கொள்ளவேண்டும்.

பாராளுமன்றத்தில் உறுப்பினராகி என்ன
செய்தோம் - இந்தியப் பாராளுமன்றம்
நமது குரலுக்கு மதிப்பளித்ததா?

பா.ச.க ஆட்சி செய்தபோது வைகோ
பொடாவில் போடப்பட்டார்.

அவர் பாராளு உறுப்பினராக இருந்தும் யாராலும்
எதுவும் செய்யப்படவில்லை. கேலிக்கு உள்ளானார்.
காங்கிரசு ஆட்சியில் கூட்டணியாக இருந்தும்
4 உறுப்பினர்கள் இருந்தும் இவர்கள்
குரல் ஏற்கப் படவில்லை.
ஆகையால் அந்தப் பாராளுமன்றமே
தமிழினத்திற்குத் தேவை இல்லை என்று
சொல்லி தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு ஆகிய
மூன்றனுக்கும் பெரும் இடரைத் தேர்தல்
களத்தில் கொடுக்க வேண்டும்.
இவர்களின் தமிழினத் துரோகத்தைக் கிழிக்க வேண்டும்.

இதன் மூலம் தேர்தல் உணர்வு குறைந்து,
தமிழ் உணர்வு மலரும்.

மாற்றாக இந்தத் தமிழின உணர்வாளர்கள்
மட்டும் தனியே கூட்டணி கண்டு
பாராளுமன்றத் தேர்தலில் துரோகிகளை
அடையாளம் காட்டி, வருகின்ற சட்டமன்றத்
தேர்தலில் தமிழ் உணர்வாளர்களாக
ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.
பாராளுமன்றத் தேர்தல் எக்கேடு
கெட்டுப் போயினும் வருகின்ற சட்டமன்றத்
தேர்தலுக்குள் தி.மு.க, அதிமுக,
காங்கிரசு ஆன மூன்றனையும்
செல்லாக்காசாக தமிழகத்தில் ஆக்கிவிடவேண்டும்.

இந்தப் பாராளுமன்றத் தேர்தல் கணக்குகளை
விட்டு விட்டு,தமிழ்க்கணக்குகளை மட்டும்
பார்க்க வேண்டும்.

இவர்களுக்கு மக்கள் விடும் கோரிக்கையாக
*"நீங்கள் முன்னே நின்றால் நாங்கள் *
*பின்னே வருவோம் - நீங்கள் *
*திமுக அதிமுக காங்கிரசு
பின்னால் நிற்காவிட்டால்"* என்ற
செய்தியைச் சொல்ல வேண்டும்,

இந்த ஐந்து திசைகளிலும், சான்றோர்களும்
பெரியோர்களும் சரியெனக் காட்டும் திசைகளிலும்
செயற்பட்டால், தமிழினத்தைப் படுகொலை செய்யும்
சிங்களம், இந்தியம், சீன சப்பானியம்
மற்றும் இன்ன பிற நாசகாரச் சக்திகளை
எதிர்த்துத் தோளோடு தோள் நின்று போராட
*"தமிழ்நாட்டில் இருந்து தமிழன் ஈழத்திற்குப் போவான்".
*
இது நடக்கும்; நடக்க வேண்டும்.
அந்தப் படை பெருகும்; பெருக வேண்டும்;

*"அடைய வேண்டிய முக்கிய எல்லை இதுதான்"
*
முத்துக்குமார் சாவு சென்னையில் நடந்ததல்ல.
அது கிளிநொச்சி, வன்னி, யாழ், திருமலை,
முல்லைக் கள முனையில நிகழ்ந்த வீரச்சாவாகவே
தமிழருக்குப் படுகிறது.

இதனைத் தமிழினப் பெரியோர்கள்
குறிக்கொள்ள வேண்டும்.

தமிழ்ப்படை பெருக உழைக்க வேண்டும்.

அப்பொழுது உலகமே திரண்டு வந்தாலும்
தமிழினத்திற்கு அழிவு இருக்காது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, January 31, 2009

வீரவணக்கம்

இக்கடிதம் நக்கீரன் செய்திகளிலே
வெளிப்பட்டிருக்கிறது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2652


மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம்


இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு வரவேண்டும் என்பதை
வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை
சேர்ந்த் வாலிபர் முத்துக்குமார் என்பவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே
இன்று காலை 10.45 மணிக்கு (பாஸ்போர்ட் அலுவலகம்), ஈழத்தமிழர்களுக்கான
ஆதவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே மண்ணென்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.



உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்
அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமார்,
தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல்
கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது
ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.



இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் நீ ஏன் தீக்குளித்தாய் என்று
மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள்,
சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில்
கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை
காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் நான் தீக்குளித்தேன் என
முத்துக்குமார் தெரிவித்தார்.



மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம்
செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர்
இருக்கிறார்கள். 'கொள்கை நல்லூர்' என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள்
என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில்
மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.



இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை
குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது
குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும்
சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.



26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு
கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு
பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி
அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள்
தெரிவித்தனர்.


ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்திட்ட இந்த தமிழர் ஈழப்பிரச்சனை
குறித்து கடைசியாக எழுதிய கடிதம் இதோ:


விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...


அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...


வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க
நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர்
முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம்
சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன்.


உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும்
பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக்
கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும்
எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.


வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும்
வந்தவனெல்லாம் வாழ, சொந்த இரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து
நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த
பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம்.
இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய
வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?


ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில
தனிநபர்களின் பழிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள்
சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்.


ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் மட்டும் குற்றம்
சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டியது
ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ் காந்தியைக் கொலை
செய்த கொலைகாரர்கள்தானா?


ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள்
முல்லைத்தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும்
குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா?
கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு
தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய
தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா,
தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன்
பங்கெடுக்க போகவில்லை என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால்
பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன.


மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம்
ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே
பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம்
பக்கம் இருக்கிறார்கள்?


கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று
அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப்
புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் லி இந்த மாசம், இந்த வாரம்,
இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல்
காமெடியைப் போல.


காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர்
என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும்
பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல்
காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில்
போய் ஒளிந்துகொண்டுள்ளார்.

தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து
சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ
செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா
இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே
நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...


பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி
மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சக தமிழனாக நின்று
வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத்
தமிழர் பிரச்சினை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும்
போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக
இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள்,
வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே
களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான்.


உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை
ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு
வழி வகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான
புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள்
என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய
தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு
முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ்
மண்ணிலிருந்து விரட்டியடித்தது.


ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு
மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில்
இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள்
போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டு விடாதீர்கள்.
போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த
விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான்.
ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த
தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து
உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை
நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை
எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.


உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில்,
இலங்கையில் இந்திய இராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது
மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச்
சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள்
அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்
புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு
வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்!
போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின்
இராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை இராணுவம் அவரவர்களுடைய பாலியல்
நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன
தெரிகிறது இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி
என்றல்லவா!, ஆக இந்திய இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின்
அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய
அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புக்களையும் உங்கள் பின்னால்
திரட்டுங்கள்.


இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை
இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை
உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் என்ற
இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும்
வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு
மாற்றட்டும். ஆட்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள்.


உங்களால் மட்டுமே இது முடியும். 'நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின்
உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதி கொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி
படிப்போம். எங்கள் தமிழர்க்கு இன்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்'
என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை
காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக்
கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து
போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ
செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால்
அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில்,
மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள்
போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இட
ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு
செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத் தமிழர்களுக்கு உங்கள்
பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?


தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும்
கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப்
பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம்
தமிழனும், ஈழத் தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை
தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு
வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.
இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில்
அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்தவர்கள் என்று
கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள்
தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும்
பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழி தவறுவது நம்புவது
மாதிரியில்லையாமா?


தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...


உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும்
வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால்
தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை
எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள்
இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை
செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை
இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள்
விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு
உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள்.
அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை
எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ,
ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும்
என்பது என் கருத்து.


தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...


உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம்,
தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது
போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள்
நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை
ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள்
காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய
விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம்
தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த
மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக
உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே,
பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப்
பாதுகாப்பது தமிழக பொலிஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக
காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த
மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர்
ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான
நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள்
மத்திய காவல் அதிகாரிகள்.


ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான்
தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தியைத் தமிழக
காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே
அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி பொலிஸ்காரர்கள்
என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி
வெண்ணெய் வெட்டி வீரரர்கள் லி அதுதான், இந்திய உளவுத்துறை லி ராஜீவின்
உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது
என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி
மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான்
இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில்,
நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற
பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக
அர்ப்பணித்துப் பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து
தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய
சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில்
கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான்
முல்லையாற்றின் மதுரை மாவட்டத் தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,
கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க
மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர்
மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள்.
மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.



களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே...


அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம்
உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும்
எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற
உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும்
கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி
ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை
பலப்படுத்துங்கள். 1965 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில
சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு
இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.


அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,


உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை
கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இன ஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது
என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த
காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை
மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும்
கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும்
வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு
வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப்
பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?


வன்னியில், விடுதலைப் புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது
என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள்
என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை
செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளைச்
சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி,
தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு.
இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும்,
ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும்
தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும்,
பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்
என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும்
தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார்.
மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.


புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா லி என்னவோ
பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போல..
உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர,
காரணகர்த்தாக்கள் அல்லர் இந்திய அரசு இந்தப் பிரச்சினையில்
ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப்
பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா
போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச்
சொன்னது.


நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர் வெடிகுண்டுகள், பிறகு
அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த
பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.
அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது
இந்தியாலிபாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச்
சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம்
ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான்
சண்டை என்கிறது.


ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ் காந்தி ஒரு கவுன்சிலரோ,
மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி
இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.
ராஜீவ் காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம்
சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும்
என்பது என் கோரிக்கைகளில் ஒன்று.


ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம்
இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர்.
இந்திரா, தமிழீழத்தின் சிறு தெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப்
பக்கத்திலிருப்பவர்.


இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா
நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி
இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத்
தலையிடக்கூடாது? புலிகள் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம்
குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த
காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.
இவர்கள் ஒரு நிர்ப்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு
ஒப்புக்கொண்டுவிட்டார்கள் என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை
ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று
எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற
நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளைலிஆயுதத்தைக் கீழே
வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.


உதாரணம் ரணில்லி கருணா. ஆனால், புலிகள் போர் நிறுத்தத்தைப்
பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக
நடப்பதுதானேலி ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள்.
சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா?


அப்பாவித் தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது
இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே
தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச்
சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை
இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான்
சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத்
தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா? பிரான்சின் 17 மனித
உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப் புலிகளா?
சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின்
ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச
சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்லிநியாயத்தின்பால்
பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத்
துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில்
நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள்
ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து
உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும்,
குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை.
அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற
நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு
ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப் புலிகள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை
இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.


காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியை விடக் கொடுமையானது.


1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத்
திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார்
போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட
வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற
பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக
மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா
பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.


2. ஐ.நா. பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான
சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு
வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு
வழங்கப்படக்கூடாது.


3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள் மீது தடை
விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை
செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும்
அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட
வேண்டும்.


4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள்
மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.


5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட
தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும்
வழங்கப்பட வேண்டும்.

6. ராஜீவ் காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான
குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும்.

7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய
ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ்
சோதனைக்குப்பட வேண்டும்.


8. அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம்
மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன
மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.

9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்து வந்த
தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு
ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள்
தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து
அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே
இறுதியானது.


10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப்
பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின்
தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று
விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட
வேண்டும்.

11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள
பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.


13. தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத் தம்பதியர் மீதான
பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக
அங்கீகரிக்கப்பட வேண்டும்.


14. சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான
வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.


என்றும் அன்புடன்,


அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,
கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை99



அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும்,
பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம்
ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில்
கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள்,
உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப்
பண்ணுங்கள் நன்றி.