Thursday, April 23, 2009

விற்பனைக்காக விந்துவும் கருமுட்டையும்


Life is beautiful.. pass it on என்ற வாசகத்துடன் வளவளப்பான காகித அட்டையில் அச்சடிக்கப்பட்ட
துண்டறிக்கையை வாசித்தவுடன் மற்ற துண்டறிக்கைகள் போல தூர வீச முடியவில்லை.
க்ரையோஸ் இந்தியா - CRYOS -India வங்கியின் துண்டறிக்கை. இந்திய மண்ணில் உலகத்தரம் வாய்ந்த முதல் பன்னாட்டு விந்து - கருமுட்டை வங்கி.

டென்மார்க் தலைநகராகக் கொண்ட உலகின் மிகப்பெரிய விந்துவங்கி. அமெரிக்க ஐரோப்பிய
மருத்துவ சட்டத்திட்டங்கள், சுகாதார வழிமுறகளைப் பின்பற்றி இந்தியாவில் நுழைந்திருக்கும்
வங்கி.

குழந்தைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத தம்பதியர் வாழ்க்கையில் வசந்தத்தை
வழங்கும் தேவதைகள் / தேவதூதர்கள் நீங்கள்! எங்கோ யாருக்கோ தேவைப்படலாம் உங்கள்
விந்துவும் கருமுட்டையும். இம்மாதிரியான சமூக அக்கறை தொனிக்கும் வாசகங்கள்..நம்மை
யோசிக்க வைக்கிறது. கவர்ச்சிகரமான வரிகளைத் தாண்டி யோசிக்கும் போது அமெரிக்க ஐரோப்பிய
தாராளமயம் எதை எல்லாம் தாராளமயமாக்கி விற்பனைக்கான கடைச்சரக்காக நம் சந்தைக்குள்
நுழைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

போர்க்களத்தில் பணிபுரியும் வீரர்கள், இராசயணம், பூச்சிக்கொல்லி, கதிர்வீச்சு ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதில் வேலைச் செய்பவர்களுக்கும் தங்கள் வாரிசுகளை எப்போது
வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் உரிமையை இந்த வங்கிகளில் அவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் விந்துகளை சேமித்து வைப்பதன் மூலம் பெறமுடியும் என்பது
மகிழ்ச்சிக்குரியதுதான். அறிவியல் உலகத்தின் மிகச்சிறந்த பயன்பாடு என்றும் கொண்டாடலாம்தான்.
ஆனால் நடைமுறையில் இந்த வங்கிகளில் என்ன நடக்கிறது?

விந்து தானம் கொடுப்பவருக்கு 10 சாம்பிளுக்கு குறைந்தது ரூ.5000 முதல் 10,000 வரை!
கருமுட்டைக்கு விலை அதிகம். குறைந்தது ரூ 40,000 முதல் ரூ 60,000 வரை. வாடகைத்தாய்க்கோ
ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுக்க குறைந்தது 2 இலட்சத்திலிருந்து 3 இலட்சம் வரை .

தகுதிகள்:

*விந்து தானம் வழங்கும் ஆண் 18 வயதுக்கு மேல் 42 வயதுக்குட்பட்டவராய் இருக்க வேண்டும்.
* ஆரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் தேவை.
* இரண்டு தலைமுறையின் மருத்துவக்குறிப்புகள் தேவை.
*தொடர்ந்து 6 முதல் 9 மாதங்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது விந்து வங்கிக்கு வருகைத் தந்து
விந்துதானம் செய்ய தயாராய் இருக்க வேண்டும்.
*விந்துதானம் செய்வதற்கு முன் பாலியல் நோய்கள் (HIV & Hepatitis) மற்றும் பிற தொற்றுநோய்கள்
இருக்கிறதா என்றறியும் சோதனைக்கு உடன்பட வேண்டும்.
* விந்துதானம் செய்வதற்கான மேற்குரிய தகுதிகளுடன் இன்னும் சில விதிமுறைகள் அடங்கிய
ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.

விந்துதானம் வழங்கும் ஆணைப்போலவே கருமுட்டை தானம் வழங்கும் பெண்ணுக்கும்
*வயது 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.
*ஏற்கனவே தாய்மை அடைந்தப் பெண்ணாக இருப்பது சிறப்புத்தகுதி!
*கருமுட்டை உற்பத்திக்கான ஹார்மோன் ஊசி மருந்துகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்.
*தொடர்ந்து இரு முறையாவது கருமுட்டை தானத்திற்கு உடன்பட வேண்டும்.
*கருமுட்டை தானத்திற்கான மருத்துவ முறைக்கு- மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மயக்க மருந்து கொடுத்தல், கருமுட்டையை எடுக்கும் மருத்துவமுறை - உடன்பட வேண்டும்.
*பாலியல் நோய்கள்/தொற்றுநோய்கள் அறியும் மருத்துவ சோதனைக்கு உடன்பட வேண்டும்.

வாடகைத்தாய்க்கும் மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் அவசியம். வயது வரம்பு 21 முதல் 35க்குள்.
இவைதவிர சம்பந்தப்பட்ட ஆண்/பெண் வாழ்க்கைத்துணையின் ஒப்புதலும் தேவை.

எது விற்பனைக்கு?
---------------------

பாக்கெட் மணி, ஆடம்பர இரவு விடுதி கேளிக்கைகள் இத்தியாதிகளில் மயங்கித்திரியும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் இம்மாதிரியான வங்கிகள் மின்மினிப்பூச்சிகளை
கவர்ந்திழுக்கும் விளக்குத்திரியாக இருக்கின்றன. பாக்கெட் மணிக்காக தன் நண்பன், பாட்டி தாத்தா
தம்பி தங்கை உறவுகளின் உயிருடனும் விளையாட துணியும் இன்றைய இளசுகள் விந்துவங்கியில்
கிடைக்கும் பணத்திற்காக அதிகமாக போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்தவிசயத்திலும் ஆண்களைவிட அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான்.
மாதம் ஒரு முறைதான் கருமுட்டைகள் உற்பத்தி என்ற இயற்கையின் விதி. எனவேதான் கருமுட்டைகளுக்கான விலையும் விந்துகளின் விலையை விட பன்மடங்கு அதிகம். ஒவ்வொரு முறையும் கருமுட்டை தானம் செய்யும் போது மருத்துவக்கண்காணிப்பு தேவைப்படுகிறது.
அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ஓவேரியன் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்பிரியா.
தீடிரென சரியத் தொடங்கியிருக்கும் பொருளாதரம், கணினி ப்பிபிஓ துறைகளின் ஆள்குறைப்பு
வேலை இழப்பு ஆகிய சூழல்கல் நிறைய இளம் பெண்களை கருமுட்டை தானம் செய்யும்
நிலைக்கு தள்ளி இருக்கிறது என்பதும் உண்மை.
வாடகைத்தாயாக இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய தமிழ்ச்சினிமா காட்சிகளும் பெண்ணுக்கு
ஏற்படும் குற்ற உணர்வும் இன்றைய எந்த வாடகைத்தாய்மார்களுக்கும் இல்லை.
இதை மனநிலை மாற்றம் என்பதா?
பொருளாதரம் தின்று செரித்துவிட்ட உணர்வுகள் என்பதா?

இரத்ததானம் செய்வது போலவே விந்துதானமும் கருமுட்டைதானமும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அறிவியல் பூர்வமாக அவர்கள் வாதத்தை உடைப்பது எளிதல்ல எனினும்
தன்னுடைய கண்,
தன்னுடைய உதடு
தன்னுடைய புன்னகை
தன்னுடைய நடை
தன்னுடைய நிறம்
தன்னைப் போலவே அச்சு அசலாக இன்னொரு உயிர்..
தன்னை தன் பரம்பரை விதையை தன்னுள் சுமந்து கொண்டு
தன் பரம்பரை சங்கிலியாய் இந்தப் பிரபஞ்சத்தின் உயிரணுவில் கலந்து.. நிற்கும்போது
அந்த உயிருக்கும் அந்த உயிரின் விதைக்கும் உள்ள தொடர்பு..
வெறும் இரத்ததானம் அல்ல.
அதற்கும் மேலான ஒன்று.

பலகோடிக் கணக்கில் செலவு செய்து மக்கள்தொகை அதிகமுள்ள இந்திய சந்தையில் திறக்கப்பட்டிருக்கும் இந்த விந்து வங்கிகள் விந்துதானம், கருமுட்டைதானம், வாடகைத்தாயின் தியாகம் என்ற அறச்சிந்தனைகளைப் புறந்தள்ளி எல்லாம் உலகச் சந்தையில் விற்பனைக்கே
என்ற விற்பனைச் சந்தையைக் கடைவிரித்திருக்கின்றன.

குழந்தை இல்லாத தம்பதிகள் அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற
விழுமியங்கள் எல்லாம் கடந்த காலமாகிவிடும்.

இங்கே இனி எல்லாமே விற்பனைக்குத்தான்.


Cryos International - India Pvt. Ltd.
Address :

209, Marathon Max, LBS-Link Road Junction,
Mulund (West), Mumbai - 400080
INDIA
Tel. : +91-22-25683998, +91-9322404849 +91-22- 2292 6264
Fax. : +91-22 2562 1308
E-mail : in@cryosinternational.com
Website : www.cryosinternational.com

No comments:

Post a Comment