Monday, February 16, 2009

இது அரசியல் கோஷமல்ல
வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது..

இது-
அரசியல் கோஷமல்ல.

வடக்கில் வங்கத்துப் போர்முனையில்
வடக்கில் பஞ்சாபின் படுகொலையில்
பாய்ப்போட்டு
படுத்து உறங்கிய
இந்திய இறையாண்மை
தெற்கே
இந்துமாக்கடலில் மட்டும்
இரவெல்லாம் விழித்திருந்து
காத்திருந்து
காவல் காக்கிறதாம்!
யாருக்காக?
எதற்காக?
இப்போதும் வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத்தேய்கிறது

பக்கத்துவீட்டு பாகிஸ்தானின்
பங்காளிச்சண்டையில்
வங்கதேசம் வந்துதித்த வரலாற்றை
எழுதி எழுதி
பூரித்துப்போன பாரதமாதாவுக்கு
தெற்கே
இலங்கைத் தேசத்தில்
ஈழம் மட்டும்
கசக்கிறதா..?

வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது

இந்திய தேசத்தில்
இவர்தான் "தேசப்பிதா" என்று
பாடப்புத்தகத்தில்
எங்களைப் படிக்க வைத்தீர்கள்
அந்த தேசப்பிதாவைக்
கொன்றவனின் கூட்டத்தைக் கூட
உங்கள் அரசியல் வானத்தில்
தலைவர்களாக
அடையாளம் கண்டீர்கள்.
ஒரு பாரதப் பிரதமரைக்
கொன்றவர் என்பதற்காய்
தலைப்பாகைக் கூட்டத்தை
ஒதுக்கவில்லையே..!
ஏ.. பாரதமாதா..
இதெல்லாம் உனக்கு
மறந்துப் போயிருக்கலாம்
மன்மோகன்சிங்கே ..
உங்களுக்கு எப்படி
மறந்துப் போனது?

இப்போதும்
வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது

சரித்திர உண்மைகளை
மாற்றி எழுதிய
உங்கள் பொய்முகத்தை
அண்ணாவின் ஆரியமாயை
கிழித்து எரிந்ததை
அவாள்கள் மறக்கலாம்
அண்ணாவின் தம்பியர் மறந்தது ஏன்?

ஆரியமாயையின் புதியநாமம்
இந்தியமாயை.
ஆங்கிலேயன்
அடிமைகள் கழுத்தில் தொங்கவிட்ட
அந்த அடையாள அட்டையுடன்
உலாவருகிறீர்கள்
வரலாற்றில் கறைப்படிந்த
உங்கள் கரங்களால்
ராஜீவின் கதையைச் சொல்லிச்சொல்லி
எங்கள் வரலாற்றைக்
களங்கப்படுத்தாதீர்கள்!
முடிந்தால்-
ஒரு கணமேனும்
உங்கள் முகமூடியைக்
கழட்டி வைத்துவிட்டு
உங்கள் முகத்தைப் பாருங்கள்

பஞ்சாபி என்றும்
வங்காளி என்றும்.
மராட்டியன் என்றும்
அசாமி என்றும்
பீகாரி என்றும்
காஷ்மீரி என்றும்
உங்கள் முகங்கள்
உங்கள் முகங்களாக
ஒப்பனைகளின்றி தெரியும்.
அந்தப் பிம்பங்களுக்கு நடுவில்தான்
உங்களால் பார்க்கமுடியும்
எங்களை-
எங்கள் தமிழ் முகத்தை
எங்கள் ஈழ தமிழ் நிலத்தை.

வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது
இது இனி அரசியல் கோஷமல்ல.

உலகச்சந்தையில்
இந்திய முகங்களைப்
பட்டா போட்டு
விற்றுத் திரியும்
பாரதமாதாவே..
உன் புதல்வர்களிடன் சொல்லிவை.

வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது
இது அன்று பாடிய மரபுக்கவிதையல்ல.
இது போராளிகள் எழுதும் புதுக்கவிதை.
இதில் மரபுச் சட்டங்கள் உடையும்
பயமுறுத்தும் சீர்-தளை சிதையும்
";நவீனக்கவிதை";
இங்கேதான் விதைக்கப்பட்டது என்று
நாளைய வரலாறு
எங்கள் கல்லறைகளில் எழுதும்.
இது எங்கள்
உயிர் எழுத்துகளின்
போர்ப்படை அணிவகுப்பு.
மெய்யெழுத்துகளில்
புதைத்து வைத்திருக்கும்
புதிய கண்ணிவெடிகள்.
இது வெடிக்கும்.
வெடிப்போம்..
எங்கள் களத்திலிருந்து
அக்னிக்குஞ்சாய்
புறப்படும்
அமைதிப் புறா.
எங்கள் பிள்ளைகளுக்கு
கற்றுக்கொடுக்கும்
கூடுகள் கட்டும் வித்தையை.
குஞ்சுகளைப் பறக்க வைக்கும்
வாழ்க்கையை.
----------------------------------

3 comments:

 1. வடக்கு வாழ்கிறது
  > தெற்குத் தேய்கிறது
  > இது இனி அரசியல் கோஷமல்ல.

  > இது போராளிகள் எழுதும் புதுக்கவிதை.
  > இதில் மரபுச் சட்டங்கள் உடையும்

  முத்துக்குமார், இரவி, அமரேசன் போன்ற போராளிகள்
  இங்கே தோற்றியிருக்கும் அடிப்படை அறிவு பெருகும்.

  "தெற்கு வாழும்";

  தமிழரை வதை செய்வதைப் பேசுவதையே தடைசெய்யும்
  கட்சிகளும் குழுக்களும் ஆசாமிகளும் முகவரி அற்றுப் போவர்.
  எத்தனை நாள்களுக்குப் பொய்பேச முடியும்.
  காலம் வரும் காத்திருப்போம்.


  > இது எங்கள்
  > உயிர் எழுத்துகளின்
  > போர்ப்படை அணிவகுப்பு.
  > மெய்யெழுத்துகளில்
  > புதைத்து வைத்திருக்கும்
  > புதிய கண்ணிவெடிகள்.

  நல்ல வரிகள்.

  அன்புடன்
  நாக.இளங்கோவன்
  Elangovan N (nelango5@gmail.com)
  Sent: 17 February 2009 22:53PM
  To: tamil_ulagam@googlegroups.com

  ReplyDelete
 2. அக்கா இதில் முக்கியமான ஒன்றையும் சேர்த்துக்கொள்ளனும் அது...
  ராஜீவுக்கு யாரோ மரணதண்டனை வழங்கியபோது அவர் பாரத பிரதமர் இல்லை.
  ஆனால் சிறீலங்கா மாப்பிள்ளையிடம் துப்பாக்கி பிடங்கால் அடிவாங்கியபோது
  பிரதமர் மற்றும் அவன்களின் விருந்தினர்.
  இந்த கதையெல்லாம் மறைத்துவிட்டுதான்
  காங்கிரசு மச்சான்கள் பிணந்தின்னி கழுகுக்கு (ராஜபக்க்ஷே)
  (இவன் பெயருக்கு தமிழில் இதுதான் பொருள்)
  வக்காலத்து வாங்குறான்கள்

  KAVIMATHY (kavimathy@gmail.com)
  Sent: 17 February 2009 20:15PM
  To: tamil_ulagam@googlegroups.com

  ReplyDelete
 3. அன்புமிகு புதிய மாதவிக்கு,

  வணக்கம். போர்ப்பரணி உணமியின் மேல் உரத்து ஒலிக்கிறது.
  காந்தியை கொன்றதை பெருமையாகப்பேசுபவர்களை பரதமாதா செல்லமாக தட்டிக்கொடுக்கட்டும்.
  ஆனால் காந்தி கடைசிவரை எதிர்த்த வல்லரசாதிக்க கொள்கையை ஏன் சுட்டுக்கொன்றாள் பாரதமாதா?
  தோழில்,வணிகம், வேளாண்மை எங்கும் எதிலும் வல்லரசாதிக்கம் தாராளாமாய் ஒடிக்கொண்டு
  பக்கத்தில் சூழ்கிறதே--காந்தியம் பேசும் வேத நாயகர்கள் ஏன் முகம் திரும்பிக்கொள்கிறார்கள்?

  இந்திராகாந்தியை சுட்ட இனத்தின் கையில் இன்று பிரதமர் பதவி மட்டுமா? வல்லரசுகளுக்கு ஒட்டுப்போடும்
  மாந்தேக் சிங் அஹுலிவாலாவும் அல்லவா உள்ளார்.

  ராஜீவ் கொல்லப்பட்ட அன்று சில அப்பாவி போலீஸ்காரர்கள் மட்டும்தான் ராஜீவோடு மடிந்தனர்.
  மத்திய மாநில கட்சிக்காரன்,கட்சிக்காரிகள் கூட கூட ஏன் செல்லவில்லை.இந்த கேள்விக்கு ஏன் சரியான
  பதிலே கிடைக்கவில்லை. பாரதமாதாவின் பவித்திர புதல்வர்கள் பதில் சொல்வார்களா?

  இன்னொரு பிள்ளை சஞ்சய் காந்தி சாகவில்லையா?

  தாங்கள் சரியாக சொன்னது போல வெள்ளையன் அடிமைகளின் கழுத்தில் கட்டிய அடையாள அட்டையை
  இந்தியன் என்று பெருமையாக சொல்லிக்கொண்டோம்.
  பாரதமாதா மாயை என்பதை ஆள்பவர்கள் புரிந்துகொண்டார்கள்
  கற்பனைத்தாய் பாரதமாதாவை கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கிறது இன்றைய காங்கிரஸ்
  பயங்கரவாதம் என்று வாய்கிழியப்பேசும் கா.தொண்டர்கள்
  இந்திய உளவுத்துறைதான் ஈழத்தமிழருக்கு ஒரு நாள் தொட்டிலை ஆட்டியது என்பது தெரியாதா?

  முதுபெரும் மு.க.வுக்கு பிரபாகரனின் சர்வாதிகார எண்ணம் என்றோ தெரிந்து போய்விட்டதாம்
  ஐயாவுக்கு அவரது வீட்டில் நடக்கும் சர்வாதிகாரம் புரியவில்லையோ?

  இலங்கை,பாகிஸ்தான் இரண்டு நாடுகளிலும் இன்று அமெரிக்க செல்வாக்கோடு
  அடியாளாய் நுழையும் ஆளும் கூட்டம்
  தமிழ் இனத்தை மட்டுமா கைவிட்டுள்ளது
  பாரதமாதாவையையே விற்றுக்கொண்டிருக்கிறது

  முண்டாசுக்காரா ஆள்கிறார் ?
  புலிகள் இல்லாத இலங்கையில்
  இயற்கை வளம், எண்ணெய், வண்டிகள், மின் நிலையங்கள்
  கட்டுமானத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை என்று
  கழுதைப்புலிகள் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு காத்திருக்கின்றன

  தமிழ்த்தாயை வணங்கி காசு சேர்த்தவர்களும்
  பாரதாமாதா பெயரால் ஆதிக்கம் புரிபவர்களும்
  அசையப்போவதில்லை
  தூக்கித்தான் எரியவேண்டும்.
  அன்புடன்
  அரசு


  (gthirunavukkarasu@gmail.com)
  Sent: 17 February 2009 15:23PM
  To: tamil_ulagam@googlegroups.com

  ReplyDelete