Wednesday, September 11, 2019

அரபிக்கடலுக்கு ஆணையிடுங்கள் அமித்ஷா ஜி



Image result for amit shah with ganpati
மதிப்பிற்குரிய அமித்ஷா அவர்களுக்கு
நமஸ்தே.
வழக்கமாக எல்லோரும் மோதிஜியை முன்னிறுத்தி
 தான் எல்லாவற்றையும் பார்க்கும் சூழலில் நான்
 உங்களுக்கு எழுதும் கடிதம் உங்களை
ஆச்சரியப்படுத்தாது…
அதிகாரத்தின் முகம் நீங்கள் தான்.
நீங்கள் தான் மோதிஜியின் அரசியல் வாழ்வின் சூத்திரதாரி.
கோத்ராவிலிருந்து காஷ்மீர் வரை கோடு போட்டு
கட்டம் போட்டு பிஜேபிக்கு அசுரபலம் தந்தவர்
நீங்கள் நீங்கள் நீங்களே தான்…
உங்கள் முன்னால் மோதிஜி கூட காற்றடைத்த வெறும் பலூன்..
அது பறப்பதும் திசை மாறுவதும் உங்கள் கைகளில்
இருக்கும் மந்திர சக்தியால்…
ஆகையினால்.. உங்களுக்கு இக்கோரிக்கையை
வைக்க முன்வருகிறேன்.
காரணம் உங்களால் மட்டுமே
இதை நடைமுறை படுத்த முடியும் என்பதால் தான்!
உங்கள் புத்திசாலித்தனம், அதிரடி நடவடிக்கைகள்
அகண்ட பாரதக் கனவுகளின் பக்கங்கள் எல்லாம்
நடந்த து, நடப்பது , நடக்கப்போவது
அனைத்துக்கும் நீங்களே சூத்திரதாரி என்பதை
உணர்த்துகின்றன.
மதிப்பிற்குரிய அமித்ஷா அவர்களே…
கண்பதி உற் சவத்தின் அரசியலுக்குள் போக விரும்பவில்லை.
மும்பையில் கனமான மிகப்பெரிய கணபதி சிலைகளை
 உற்சவத்தில் எடுக்கிறார்கள். 
அந்தச் சிலைகள் களிமண்ணால்
செய்யப்பட்டவை அல்ல. 
அவை POP statues.
Giant size statues made of Plaster of Paris (POP) with toxic paints of 
LORD GANESH are bring dumped in the river, lakes and sea.
 Won’t this POP made statues increase the water level of the river?
 AT Lalbaug in MUMBAI, as giant size GANESH STATUES 
have been Dropped in sea, the ARABIAN sea has entered
 into the PAREL AREA, and this flooding has happened
 without rain and up-tide of the ocean.

பாலாகங்காதிர திலகர் எதற்காக 
இந்த கண்பதியை இப்படி ஊர்வலமாக்கினார் 
என்பதையோ அந்த அரசியலையோ 
பேசுவது உங்களை எரிச்சலூட்டும்.
அப்படி எதுவும் செய்ய விருப்பமில்லை.
நீங்கள் கோப ப்பட்டால் என்னவாகும்?

சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.
. POP சிலைகள் கரைவதில்லை, 
Toxic நீர் நிலை உயிர்களுக்கு ஆபத்தானது 
என்றெல்லாம் இத்தனை ஆண்டுகள் பேசியாகிவிட்ட து
. எனவே நான் அதை எல்லாம் பேசப்போவதில்லை.

இன்று பெரிய பெரிய கண்பதிகளை 
கரைத்தாக வேண்டும். எனக்கு அச்சமாக இருக்கிறது..
ஏற்கனவே இம்மாதிரி ஒரு பெரிய கண்பதியை
 எடுத்து வந்து பிரதிஷ்டை செய்யும் போது
 மேடை சரிந்து சிலை உடைந்து பக்தனின் 
கால் உடைந்து 3 உயிர்கள் எங்கள் தாராவிப்பகுதியில்.. . 3 உயிர் 
சரி வேண்டாம் அதெல்லாம் .. 3 உயிர் என்ன 
3000 உயிர் இதெல்லாம் நீங்கள் பார்க்காதாதா..
 அறியாததா…
கோமாதாவை வணங்கும் நீங்கள் அதன் சாணத்தின்
மகிமையை அறிவீர்கள். 
சாணத்தால் பிடித்து வைக்கும் கண்பதிகள்
 எங்களுக்குப் புதிதல்ல
உங்கள் வானளாவிய அதிகாரத்தால் 
இனிமேல் சாணி + களிமண்ணால் செய்யப்பட்ட 
கணபதியை மட்டுமே உற்சவத்தில் எடுத்துவர வேண்டும்
என்று ஆணையிட முடியுமா..
இந்த மகா மகா கண்பதி சிலை வியாபாரம் , 
அலங்காரம் இதை ஒட்டி நடக்கும் வியாபாரம் 
முடங்கி விட்டால் 
அது நம்ம பொருளாதரத்தின் GDP ஐ பாதித்துவிடுமே…!

ஆகையினால்.. ப்ளீஸ்..
இந்த அரபிக்கடலுக்கு ஆணை இடுங்கள்..

எதைக் கொண்டு போட்டாலும் சரி
எதைக் கொட்டினாலும் சரி..
பொங்கி கரைக்கு வரக்கூடாது என்று
ஆணையிடுங்கள்..
உங்களால் முடியும் அமித்ஷாஜி..
அது எப்படி நீங்கள் சொல்லி
உங்கள் ஆணையை மீறி
கடலலை கரைக்கு வந்துவிடும்?????
உங்களால் மட்டுமே முடியும்..
எதையாவது செய்து
ஆர்ப்பரிக்கும் இந்தக் கடலைக்கொஞ்சம்
அடக்கி வையுங்கள்…
ஓம் கண்பதி நமஹ..
அமித்ஷா வாழ்க..

ஜெயமோகனின் விஷ்ணுபுர பிம்பம்

Image result for ஜெயமோகன்
ஜெயமோகன் என்ற எழுத்தாளருக்கு அவருடைய
 கருத்தை முன்வைப்பதற்கான கருத்து சுதந்திரம் 
இருக்கிறது. அதை மறுப்பதற்கில்லை. 
ஆனால் ஜெயமோகன் என்ன சொல்கிறார்
 என்பதைச் சுற்றியே எப்போதும் வலம் வந்து 
கொண்டிருப்பதும் ஜெயமோகனை அனைத்துக்குமான 
விஷ்ணுபுர அவதாரமாக மாற்றியது 
ஜெயமோகனோ ஜெயமோகனைச் சுற்றி இருக்கும்
 ஒளிவட்டமோ அல்ல. 
மாறாக ஜெயமோகனை விமர்சிக்கிறோம் பேர்வழி 
என்று எதற்கெடுத்தாலும் ஜெ.மோ வை
 ஓர் அளவுகோலாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் தான்!
ஜெ.மோ தன்னைப் பற்றி விமர்சிக்கும் எவரையும்
எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து
களத்தில் நிற்பதன் மூலம் அவர் தன் பிம்பத்தை
மிகவும் கனமாக கட்டமைத்திருக்கிறார்.
ஆனால் தொடர்ந்து ஜெ.மோ வை விமர்சனம்
 என்ற பெயரில் கவனக்குவிப்பை அவர் மீது
 தொடர்ந்து எல்லா விடயத்திலும் செலுத்துவதன் மூலம்
 அவர் தன் படைப்புகளையும் தாண்டிய
 இன்னொரு பிம்பமாக மாற்றம் பெறுகிறார். 
இதை ஏனோ அவரை விமர்சிக்கும் ஆளுமைகளும் கூட 
கவனிக்கத் தவறி இருப்பதாகவே நினைக்கிறேன்.

ஜெ.மோ வை நானும் வாசிக்கிறேன். ரசிக்கிறேன்.
விமர்சிக்கிறேன். முரண்படுகிறேன்.
முரண்வெளி உரையாடல்களை சாத்தியப்படுத்த
முயற்சிக்கிறேன்.
இறுதியாக,
அளவுகோல்கள் எப்போதுமே ஆபத்தானவை தான்.

Wednesday, September 4, 2019

பாவமய்யா எங்க ஊரு கண்பதி பப்பா

Image result for ganpati in crowd  2019

40,000 காவல்துறையினர் இரவு பகலாய்..காவல்
5000 சிசிடிவி காமிராக்கள் சுழன்று கொண்டிருக்கின்றன.
7703 கண்பதி சிலைகள் கண்பதி மண்டல்களில்.
வீடுகளில் மட்டும் 1,63000 கண்பதி சிலைகள் சிறிதும் பெரிதுமாய்.
கண்பதி சிலைகளுடன் கெளரி சிலையும் 11,667..
இவைகளைக் கரைப்பதற்கு 129 நீர் நிலைகள் …
கண்பதி ஊர்வலத்தை முன்னிட்டு 56 ரோடுகள்
 பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து மூடப்படும். 
18 ரோடுகளில் கன ரக வாகன ங்கள் செல்ல தடை, , 
99 கார் பார்க்கிங்க் ஏரியாவில் கண்பதி உற்சவத்தை முன்னிட்டு 
14 நாட்களும் பொதுமக்கள் பயன்படுத்த தடை…
அப்புறம்.. வழக்கமா போயிட்டு வருகிற
 பெஸ்ட் பஸ் ஓட்டுனர்கள் கண்டக்டர்கள் ..
 கண்பதி ஊர்வலம் வரும் போது.. அப்படியே ஒதுங்கி
நின்னுட்டு வேடிக்கைபார்க்கனும்..
நாங்களும் தான்…
கண்பதியை நினைச்சாலும் பாவமா தான் இருக்கு..
திருடனுக்கு அவரும் ரொம்ப பயப்படுத மாதிரி இருக்கு!
மாதுங்கா கிங்க் சர்க்கிள் பகுதி கண்பதி சிலையை மட்டும் 
264 கோடி ரூபாய்க்கு இன்சூர் செய்திருக்கிறார்கள்.
அம்புட்டு தங்கமும் வைரமும் போட்டுட்டு அவரு
இருப்பதைப் பார்க்கவே கூட்டம் அலைமோதுகிறதாம்!
ஒரு குடைடைப் பிடிச்சிட்டு அவரு போட்டிருக்கிற
தங்கம் வைரத்தை கண்ணால பார்த்துட்டு வந்துடலாம்னா..
இந்த மழை வேற.. நை நைனு.. விடாம..
என்னவோப்பா சரவணா…
இதெல்லாம் ரொம்ப பழகிப்போச்சு.
ஆரம்பத்தில் கண்பதி உற்சவ வரலாறெல்லாம் தேடிப்
பிடிச்சி எழுதிப் போட்டேன்.
அப்புறம் நீர் நிலைகளைப் பாதிக்குதுனு சுற்றுசூழல்
பார்வையை அச்சத்துடன் சொல்லிப் பார்த்தேன்.
இப்போ.. பேசாமா .. கொழுக்கட்டையைத் தின்னுட்டு
வேடிக்கைப் பார்த்திட்டு இருக்கலாம்னு முடிவு
பண்ணிட்டேன்…
ஆனா .. பாவம்.. இந்த கண்பதி ப்ப்பா..
(அம்ச்சி மும்பை.. 2019 கணக்கு மட்டும் தான் இதெல்லாம்.
 மும்பையைத் தாண்டி .. போனா.. சரவணா.. )

Thursday, August 29, 2019

RBI ரூ 176,000 கோடி.... கோவிந்தா.. க்க்கோவிந்தா



கோவிந்தா க்கோவிந்தா
Image result for rbi 1.76 lakh crore

RBI க்கு கோவிந்தா..
தொகை கொஞ்சம் பெரிசு..
ரூ 176,000 கோடி..
யாருக்குமே இப்படி ஒர் அறிவுப்பூர்வமான படா கில்லாடித்தனமான
 பொருளாதர சிந்தனை வரவே இல்லை. அடேங்கப்பா….
அடிச்சிப் புடுச்சி.. இல்லாத தகிடு்தத்த்தமெல்லாம் செய்து 
கடைசியா.. பிடுங்கின தொகை..
ரூ. 176,000 கோடி.
பிஜேபி அரசுக்கு இதுக்காகவே 176 வடை செய்து 
வடைமாலை சாத்தனும்..
அப்புறம்.. இந்தப் பொருளாதர வல்லுனர்கள் எல்லாம்
 இருக்கும் இந்திய நாட்டின் மத்திய வங்கி..
ரிசர்வ் பேங்க்க்.. க்கு
கோவிந்தா கோவிந்தா..
இனிமே .. என்ன பொருளாதர சரிவு வந்தாலும்
எங்க பணப்பெட்டி பீரோவும் 
அடுக்களையில் காயம் டப்பாவில் போட்டு வச்ச 
சில்லறையும் காப்பாத்திடும்னு எகானிமிக்ஸ் டைம்ஸில
ஃபீலா விட்டீங்க.. .. 
அப்போ தான் இருக்கு.. 
உங்களை எல்லாம் துண்டைக் காணும் துணியைக் காணும்னு
 பாஷா ரேஞ்சில ரிசவ்ர் வங்கி முன்னால அப்படியே 
அந்த பங்குச் சந்தையைச் சுற்றி சுற்றி ஓட விடனும்.. 

எந்தப் பொருளாதரத்தில் இப்படி எல்லாம்
 சொல்லிக்கொடுத்தாங்கனு தெரியலயே..

ட்டேய்.. சரவணா.. 
எங்களுக்கும்.. ஆடிட்டரை ஏப்பம் விடறதிலிருந்து
 வருமான வரியை ஏமாத்தற வித்தை வரை தெரியும்.
 எண்களுடன் எப்புடி விளையாடறதுனு  வித்தை எல்லாம்
 தெரியும்டே.. ஆனா..
இப்படி ஒரு வித்தையை எவராலும்
 கற்பனை கூட பண்ண முடியாதோடேய்..
….
ரிசர்வ் வங்கி சாமியாடிக்கெல்லாம் 
என்ன பூஜை செய்தாங்கனு தெரியலையே.
அது என்னப்பா.. போன நிதியாண்டில் 50,000 கோடியாக
 இருந்த உபரி வருமானம் (EXCESS INCOME) 
இந்த நிதியாண்டில் ரூ 176,000 கோடி நு
ச்சுய்ங்க் நு மேல ஏறிடுச்சி..
எப்பா.. என்ன செஞ்சு தொலைச்சீங்கனு தெரியலையே..
சரவணா..
ரூபாய் மதிப்பு ஏறுவதும் இறங்குவதும்..
அதுவும் இப்போ எல்லாம்
ஒரே இறங்குமுகத்தில் குடை ராட்டினம் ரிப்பேராகி
 கிடக்கும் போது
என்னத்தை செய்து இந்த அதிக வருமானம் 
காட்டுனாகனு தெரியலையே
மவராசா.. கணக்கு எங்க்டேயோ உதைக்குதே வாத்தியாரே..
Image result for rbi 1.76 lakh crore

எப்பா.. இந்த தேசத்தின் பொருளாதர சரிவுகளை 
சரிகட்ட டாலரை விற்பதுனு கேள்விப்பட்டிருக்கேன்..
 அது நடந்தும் இருக்கு.
ஆனா.. இவுக தொந்தரவு பொறுக்காமா.. நீங்க பாட்டுக்கு 
வெளி சந்தையிலே
வச்சிருக்கிற டாலர் பணத்தை வித்துட்டீகளா..
ஒன்னுமே புரியல..
எப்படிப்பா இம்புட்டு அதிகமாச்சு திடீர்னு..
2018ல் உங்க கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தப்போவே
 உங்க திட்டம் படா டேஞ்சரா தான் இருக்கும்னு தோணிச்சி.
இப்போ..என்னவோ .. நடந்துப் போச்சு.
ட்டேய் சரவணா.. அப்படி என்ன
சமாளிக்க முடியாத பேரிடர் வந்துவிட்ட து?
தேசத்தின் இன்சூரன்ச் பாலிசி அதன் வட்டி 
இதெல்லாம் தான் ரிசர்வ் வங்கியின் இச்சேமிப்பு.

இதை எடுத்து செலவு செய்ய வேண்டிய அளவுக்கு
இந்திய தேசத்தின் பொருளாதர நிலை இருக்கிறதுனு..
ஒத்துக்கிட்டாங்கய்யா...
நிச்சயமாக யானைப் பசிக்கு இது சோளப்பொரிதான்..

பி.கு:
நிர்மலா சீதாராமன் அவர்களின் பட்ஜெட் பாடல் வரிகளைக் 
கொண்டு ரிசர்வ் பேங்கிடம் எப்படி பணம் வாங்குவது 
என்பதை விளக்கவும்.
விளக்கவுரை:
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறைவு இல்லதும் பல்நாட்டு ஆகும்
நூறுசெறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே
வாய்புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவன் ஆகி,வைகலும்
வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போல
தானும் உண்ணான் உலகமும் கெடுமே ! “
(புறம் 184)
அரசே! நெல்லை அறுத்து யானைக்கு உணவு சமைத்துப் போட்டால், அது பலநாட்களுக்கு உணவாகும். அதுவே, யானையே சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று யானையை நெல்வயலில் விட்டால், அது பசியாற உண்பதைக் காட்டிலும் அதன் காலால் மிதித்துச் சிதைப்பது மிகுதியாகும். அதுபோல அறிவுடைய அரசனே குடிமக்களிடம் (ரிசர்வ் பேங்க்கிடம்)முறையாக வரி (உபரி வருமானத்தை ) வாங்கினால் கோடியாக செல்வம் வளரும் நாட்டு மக்களும் விரும்புவர். முறையற்று தன் ஆட்களை ஏவி கருணை இன்றிப் பிடுங்கும் செல்வமானது யானை புகுந்த நிலம் போல் ஆகும். தானும் உண்ண மாட்டான். மக்களும் கெடுவார்கள்” என விளக்குகின்றார்.
----------------------------
இதனால் அறிய வருவது என்னவென்றால் பிசிராந்தையார் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பது தான்.. !
--- நாளைக்கு இன்னொரு ப்ரேக் நியுஸ் வந்திட்டா
சரவணா..நம்ம ஆட்கள் அதில ப்ஸியாகிடுவோமில்ல.

Wednesday, August 21, 2019

தொல் திருமாவளவனின் தேர்தல் அரசியலும் அரசியல் நோக்கமும்

Image result for thol thirumavalavan interview kaveri channelகூட்டணிகள் எப்போதுமே கூட்டணி கட்சிகள் தங்களின் அடிப்படைக் கொள்கைகள் என்று அறிவித்திருக்கும் கொள்கைகளின் ஒட்டுமொத்த அடிப்படையில் அமைவதில்லை.
குறைந்தபட்ச எதிர்கால திட்டங்களின் அடிப்படையில்
 கூட்டணிகள் இந்திய அரசியல் தேர்தல் களத்தில் அரங்கேறி
பல காலமாகிவிட்ட து.
ஆனால் தொல். திருமாவளவன் அவர்கள் மட்டும்
கொள்கை மாறாத தேர்தல் கூட்டணி வைத்தாக வேண்டும்.
(அடேங்க்கப்பா.. என்ன ஒரு எதிர்ப்பார்ப்பு.. மயிர்சிலிர்க்கிறது!!)
திராவிட அரசியலைப் பேசிய / அடையாளப்படுத்திக்கொண்டிருப்பதான
ஓர் அடையாளத்தை வைத்திருக்கும் திமுக ..
ஒரு காலத்தில் பிஜேபியுடன் கூட்டணி வைத்த்தும்
அவர்கள் கூட்டணி தர்மத்தில் வாஜ்பாய் அவர்கள் 
மகான் ஆக்கப்பட்ட தையும்
எவ்விதமான சலசலப்பும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட
புத்திஜீவிகள் தான்..
திருமா கொள்கை கூட்டணியைப் பற்றி 
பதில் சொல்லியாக வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்!
அதுமட்டுமல்ல…
ராகுல்காந்தி சட்டைக்குள் போட்டிருக்கும் 
பூணூலை எடுத்துக் காட்டியது ஏன்? 
அது மதவாதமல்லவா.. என்ற கேள்விக்கெல்லாம் கூட
தோழர் திருமா தான் பதில் சொல்லியாக வேண்டும்!

இதைக் காங்கிரசுக்கார்ர்களிடம் கேட்க மாட்டார்கள்.
ஏன் .. ராகுல்காந்தியிடம் கூட கேட்க மாட்டார்கள்..
ஒருவேளை தமிழ் நாட்டில் காங்கிரசு இல்லவே இல்லை
என்று இவர்களே முடிவு செய்துவிட்டார்களோ..
இதைக் கவனிக்க வேண்டியது காங்கிரசு தான்.
தோழர் திருமா அல்ல.
அது என்ன.. 370 கூட திருமா வின் அரசியலாக
முன்வைக்கப்பட்டு கேள்விகள் அவசரம் அவசரமாக்
கேட்கப்பட்ட தன் பின்னணி என்ன?
அதிலும் .. எனக்குத் தெரியாது… என்று ரொம்பவும்
தெளிவாக தோழர் திருமாவளவன் அவர்கள் சொன்ன பிறகு
“ஆஹா.. இதுதான் நம்ம கேள்விக் கணைகளைத்
 தொடுத்து எப்படியும் தலையைச் சுற்றி 
ஒளிவட்ட த்தைக் காட்டியே ஆகவேண்டும் என்ற முனைப்பு…
ரொம்பவும் வேடிக்கையாக முடிந்துப் போனது.
370 குறித்து வைகோ தான் அதிகம் பேசினார்.
ஆம்…
காஷ்மீருக்கு இந்திய அரசு செய்த துரோகத்தின்
 வரலாறு நேரு காலத்திலேயே ஆரம்பித்துவிட்ட து.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து குறித்து 
இந்தியச் சட்டம் சொல்வதும் 
காஷ்மீர் சட்டம் சொல்வதும் ஒன்றல்ல..
காஷ்மீரில் 70 ஆண்டுகள் நடந்த கலகம் 
தொடர் போராட்டங்கள்
இவை அனைத்துக்குமே காரணம்
 இந்தியா அரசு செய்த இந்த ஏமாற்றுத்தன வேலைகள் தான்.
இதை எல்லாம் மறைத்துவிட்டு…
அம்பேத்கரின் பெயரை வேண்டுமென்றே 
கேள்வியில் இழுத்துக் கொண்டு வந்து .. 
தன் கேள்விகளின் நோக்கம் என்ன என்பதை
வெட்ட வெளிச்சமாக்கிய 
மதன் அவர்களுக்கு கோடானக் கோடி நன்றிகள்…

We , the people of the state of the Jammu Kashmir…
ஜம்மு காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள்….
இந்தியக் குடிமகன் எவனாவது இப்படி சொல்ல முடியுமா..
தமிழ் நாட்டு குடிமகனாகிய நாங்கள்… என்று
கேள்வி கேட்ட நீங்கள் சொல்ல முடியுமா..
இந்தியச் சட்டம் அனுமதிக்குமா..
எது என்னய்யா.. அவர்கள் ஜம்மு காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள் …
(ஜம்மு-காஷ்மீர் குடிமக்களாகிய நாங்கள், இந்த எங்கள் மாநிலம் 26.10.1947இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதையும், அதன் பிரிக்க முடியாத பகுதியாக ஆனதையும் தொடர்ந்து, இந்தியாவுடன் ஆன எங்கள் உறவை வரையறுக்கும் தன்மையிலும் உறுதி பூண்டு இச்சட்டதை இயற்றிக் கொண்டோம்.)

உங்கள் கேள்வியில் ரொம்பவும் திடமான வலுவான கேள்வி
370 காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதை
மயாவதி ஆதரிப்பதும் திருமா எதிர்ப்பதும் ஏன்? என்ற கேள்விதான்.
ஆனால் தமிழகத்தின் மா நில சுயாட்சி அரசியலை
முன்வைத்து பதில் சொல்லி இருக்க வேண்டிய 
ஆகச்சிறந்த வாய்ப்பை தோழர் திருமா அவர்கள் 
நழுவ விட்ட தில் எனக்குச் சின்னதாக ஒரு வருத்தம் ஏற்பட்ட து.

கூட்டணியில் கொள்கை தர்மம் இருக்க வேண்டும்
 என்று எதிர்ப்பார்ப்பது ஒரு கனவு. நடைமுறைக்கு ஒவ்வாத கனவு.
ஆனால் அந்த நடைமுறைக்கு ஒவ்வாத அனைத்தும்
தோழர் திருமாவளவனின் தேர்தல்அரசியலில் மட்டும் 
இருக்க வேண்டும், இருந்தாக வேண்டும்…
மற்றவர்கள் செய்தால் அரசியல் சாணக்கியம்.
தோழர் திருமா செய்தால் மட்டும் துரோகம்...
 இறுதியாக
நீ எப்படி மக்களை ஏமாற்றலாம்
என்றெல்லாம் கேள்வி கேட்பது…
உங்கள் கேள்வியின் அறத்தை வெளிப்படுத்தியதாக 
நீங்கள் நினைக்கலாம்.
. ஆனால் அது உங்கள் கேள்வியின் அரசியலை
வெளிப்படையாக உணர்த்திவிட்ட து.
வேறு எந்த ஒரு அரசியல் தலைவரையோ 
கட்சி மேலிட த்தையோ கேள்வி கேட்கும் போதெல்லாம் 
சவக்குழியில் கிடக்கும்\\தர்மங்கள் கொள்கைகள்.. எல்லாம்..
தோழர் திருமாவளவன் எதிரே உட்கார்ந்தால் மட்டும்
உயிர்ப் பித்துக் கொண்டு வெளிவருகின்றன.!
அந்த ஒற்றைத் தகுதி தோழர் திருமாவளவனுக்கு
மட்டுமே இருக்கிறதாக எடுத்துக் கொள்ளலாமா..
அல்லது
இதுதான் இவர்களின் குதர்க்கமான ஊடக அரசியல்
என்று புரிந்து கொள்ளவா..

Tuesday, August 20, 2019

அவளும் புடவையும்


அவளும் புடவையும்
அவள் புதுப்புடவை வாங்குவதற்கு காரணம் எதுவும் பெரிசா
இருக்காது. குடும்பத்தில் யாருக்குப் பிறந்த நாள் என்றாலும்
அவளுக்குப் புதுப்புடவை உண்டு. வி நாயகர் சதுர்த்தி முதல் தசரா வரை
அனைத்து பண்டிகைகளுக்குப் புதுப்புடவை வாங்கிவிடுவாள்.
ஏன் .. சுதந்திர தினத்திற்கு கூட புதுப்புடவை வாங்கிக் கட்டி
இருந்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இதெல்லாம் அதிர்ச்சியாக இல்லை.
தேர்தல் வந்தப் போது ஓட்டுச்சாவடியில் போய்
ஓட்டுப்போடுவதற்கும் அவள் புதுப்புடவை வாங்கிக் கொண்டு
ஓட்டுப் போட்டு மோதியை ஜெயிக்க வைத்த தாகச் சொன்னாள்..


அன்று அவளுடைய 50 வது திருமண   நாள்.
மிகவும் அழகானப் புடவையில் அவள் ..
நாங்கள் அனைவரும் அவளுக்கு வாழ்த்துகள் சொன்னோம்.
அவள் திருமண  நாளின் நினைவுகளில் மிதந்து கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் அந்த நாணம் … கண்களில் வெட்கம்..
அவள் கொண்டையில் செவ்வந்தி வேணி..
நான் எதுவும் சொல்லாமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் தன் கணவர் அவளைப் பெண்பார்க்க வந்த நாளில்
எந்த நிறத்தில் புடவை கட்டி இருந்தாலோ அதே வண்ணத்தில்
புடவை தேடி  அலைந்து வாங்கியதாகவும் ஆனால் பார்டர் மட்டும்
அப்படி கிடைக்கவில்லை என்றும் கொஞ்சம்
 வருத்தப் பட்டுக் கொண்டாள்..
அப்போதுதான் சொன்னாள்…
“எனக்கு அவர் வந்துப் பார்த்துவிட்டுப் போன பிறகு
 அந்தப் புடவையைக் கழட்டிக் கொடுக்கவே மனசு வரவில்லை. இப்படித்தான் வரன் பார்க்க வரும் போதெல்லாம்
 அம்மா பக்கத்து வீட்டில் அல்லது பக்கத்து தெருவில்
யாரிடமாவது நல்ல புடவையை வாங்கி வந்து தருவாள்.
நான் கட்டிக் கொள்வேன்.
அப்போதெல்லாம் தினமும் யாராவது
 என்னைப் பெண் பார்க்க வரக் கூடாதா 
என்று நினைப்பேன். 
அம்மா அடுத்தவர்களிடம்
வாங்கி வரும் புடவையைக் கட்டிக் கொண்டு 
கையளவு கண்ணாடியில் என்னைப் பார்ப்பதில் 
எனக்கு ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.

ஒரு வழியா திருமணம் ஆகி மும்பை வந்தப்போ..
அவரு வேலை வேலைனு .. அடிக்கடி வெளியில் போயிடுவாரு.
அவரோட தங்கை அவள் பெட்டியில் 
நிறைய நைலான் புடவைகள் வைத்திருந்தாள். 
ஒரு புடவையாவது தரமாட்டாளா, 
கட்டிட்டு கொடுக்கலாமே
என்று மனசு ஏங்கு. அவள் புடவை வைத்திருக்கும்
 பெட்டியை பூட்டுப் போட்டு
பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொள்வாள்…

வாழ்க்கை ஓடியது.. இரண்டு மகன், மகள் பிறந்தார்கள்..
கணவர் வெளியூர் போகும்போதெல்லாம் எனக்கு புடவை
வாங்கி வந்தார். நான் ரொம்பவும் சந்தோஷமாகிவிடுவேன்.
அதனாலேயே எங்கு போனாலும்
 எனக்குப் புடவை வாங்காமல் வர மாட்டார்.. 
அடுத்தப் பிறவி இருக்கானு தெரியல. இந்தப் பிறவியிலேயெ
எத்தனை விதமான புடவைகள் உண்டோ 
அத்தனையும் கட்டிடனும்னு ஆசை.. ..! ..”

இப்போதெல்லாம் அவள் புதுப்புது புடவையில் வரும்போது
நான் மறக்காமல் அவள் அந்தப் புடவையில்  ரொம்ப அழகா
இருப்பதாகச் சொல்லுகிறேன். ! 
 நான் அவளையும் அவள் புடவைகளையும் ரசிக்க
ஆரம்பித்துவிட்டேன்!




Thursday, August 15, 2019

பிச்சைப்பாத்திரம்

உறவுகள் & உடன்பிறப்புகள், நட்பு.. இவர்களின் விருந்துகளில் கறிவேப்பிலையாக இருந்திருக்கிறேன் என்பதை ரொம்பவும் காலம் கடந்து உணர்கிறேன்.
இளமையின் காதல் , வசந்தங்கள் , துடிப்பு உற்சாகம் உழைப்பு, பணம் இப்படியாக என் இழப்புகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இத்தனையும் இழந்ததெல்லாம் யாருக்காக?
அந்த இழப்பில் ஏதோ ஒரு போதை
தூக்கமில்லாத நாட்கள்
களத்தில் தனித்து நின்று களமாடிய நாட்கள்
தொட்டிலை ஆட்ட மறந்து
குழந்தைக்கு ஊட்ட மறந்து ஓடிய ஓட்டங்கள்
இணையவில்லை தண்டவாளங்கள்.
எதையுமதிர்ப்பார்க்காமல் எவரிடமும் கை ஏந்தாமல் 
கொடுத்தே வாழ்ந்தது
 பெருமைக்குரியதாக இல்லாமல்
 இவ்வளவு ஏமாளியாகவா இருந்திருக்கிறோம்
 என்று யோசிப்பது யார்?
அந்த நான் தானா!
என் நடை தள்ளாடுகிறது.
 அட்சயப்பாத்திரம் உடைந்துவிட்டதாக 
அவர்கள் நினைக்கிறார்கள்.
யாரறிவார்..?
அம்மாவின் ஏழுகல் மூக்கூத்தி மின்னுகிறது.
அவர்களிடம் பெறுவதற்கு எனக்கு எதுவுமில்லை.
திருவந்தாதியின் பக்கங்களைப் புரட்டுகிறேன்
கர்ப்பஹிரகத்தின் வாசலில் காத்திருப்பது 
எச்சில் பருக்கைகளுக்காக அல்ல.
சிவகாமி..யின் ஒரு துளி கண்ணீர்..
அது என் பிச்சைப்பாத்திரத்தை நிறைத்துவிடும்.
பேயுரு கொண்டு இரவும் பகலுமாய்
அலைந்து அலைந்து களைத்துப் போனவளின்
காயம் .. ஆறுமோ..
அடியே .. இன்னும் என்ன மெளனம்..?