Thursday, January 16, 2014

லீனா மணிமேகலையும் நானும்....., நடந்தது என்ன?

பெண்ணிய உரையாடல் நிகழ்வில் நடந்தது என்ன?
சுற்றறிக்கை வெளியிட்ட பின்னரும் பலர் என்னிடம் கேட்கிறார்கள்.
ஏனேனில் அந்த இடத்தில் அத்தருணத்தில் நான் சாட்சியாக மட்டுமல்ல
பாதிக்கப்பட்ட முதல் நபராகவும் நின்று கொண்டிருந்தேன்.

பெண்ணிய உரையாடல் தமிழ் மண்ணில் புலம் பெயர் பெண்களுடன் சேர்ந்து
நடக்க வேண்டும் என்பது என் பல வருடங்களின் கனவு. அக்கனவை நனவாக்க
நான் செய்த முயற்சிகள் பல. சென்னை பல்கலை கழகமும் சென்னை
பெண்களின் சந்திப்பும் - அ. மங்கை, வ.கீதா மற்றும் ரேவதி
எம் முயற்சியை முழுமையாக சாத்தியப்படுத்தி மிகச்சிறப்பாக
தமிழக பெண்ணிய படைப்பாளர்கள், களப்பணியாளர்களையும் அழைத்து
பெண்ணிய உரையாடல் வெளியைத் திறந்து வைத்தார்கள்.

இச்சூழலில் தோழர் லீனாவின் முதல் நாள் அமைதிப்போராட்டம் நடந்தது. லீனா
வெள்ளைவேன் துண்டறிக்கை வெளியிட்ட பிறகுதான் அரங்கில் இருந்த
அனைவருக்கும் அப்பிரச்சனை குறித்து முதன் முதலாக தெரியவந்தது.
தன் கருத்துகளை பொதுமேடையில் கவனத்திற்கு கொண்டுவர தோழர் லீனா
எடுத்த முதல்நாள் அதாவது ஜனவரி3 மாலை 4 மணி பொது நிகழ்வு
முயற்சியில் என் போன்றவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை.
அப்போது தான் முதல் முறையாக நான் தோழர் லீனா அவர்களை நேரில்
சந்திக்கின்றேன். நான் அழைத்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும்
முனைவர் தங்கம் அவர்களை அழைத்துச் செல்ல ஆட்டோ டிரைவர் அரங்கின்
வெளியில் காத்திருந்தார். தொடர்ந்து கைபேசியில் அவர் தொடர்பு கொண்டிருந்த
சூழலில் அரங்கில் வைத்து கைபேசியில் பேச முடியாத சூழலில் நான் அரங்கிலிருந்து
எழுந்து வெளியில் செல்லும் தருணம், லீனாவைக் கடந்து சென்றே ஆகவேண்டும்.
'நீங்கள் புதியமாதவி தானே?" என்று அவர் கேட்டதும் நான் "ஆம்" என்று தலையசைத்து
கடந்து சென்றதும் எங்கள் முதல் சந்திப்பு.
துண்டறிக்கை என் கைக்கு வரவில்லை.

அன்றிரவு நானும் என்னுடன் தங்கி இருந்த கவிஞர் சுகிர்தராணியும் றஞ்சி
மற்றும் ஆழியாளுடன் இதுபற்றிய விவரங்களைக் கேட்டறிந்தோம். அப்போதும்
றஞ்சி உங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்டிருக்கின்றேன், இனி தோழர் லீனாவின்
தரப்பில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கேட்டுவிட்டு தான் எங்கள்
நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்று சொன்னேன்.ஊடறு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அல்ல இது.
அப்படியும் ஊடறுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நான் என்ன சுவிட்சர்லாந்தா
போக முடியும் ? என்று கேட்ட தோழர் லீனாவின் கேள்வியின்
நியாயத்தை அக்கணத்தில் புரிந்து கொண்டவர்களில் நானும் ஒருத்தி.
தன் எதிர்ப்பை பதிவு செய்வது மட்டுமே தன் நோக்கம் என்றால்
அவருடைய முதல்நாள் போராட்டத்தில் எனக்கும் உடன்பாடே.


மறுநாள் பொதுநிகழ்வில், என் தலைமையில் நிகழ்ச்சி
நடந்துக் கொண்டிருக்கும் போது
எழுத்தாளர் பாமா பேசி முடித்து
எழுத்தாளர் தமிழ்ச்செல்வி தன் படைப்பை வாசிக்கும் தருணத்தில்
லீனா மேடையை நோக்கி வந்தார். அவர் நேரடியாக எழுத்தாளர் பாமாவை நோக்கிப்
பேசினார். முதல் நாள் நிகழ்வுக்கு வராத பாமாவுக்கு எதுவும் புரியவில்லை.
அந்நிலையில் நான் எழுந்து லீனாவிடம்
"இந்த நிகழ்வு முடிந்து பேசலாம் தோழர்"

லீனா வின் எதிர்ப்பு


"உங்கள் சகப்படைப்பாளர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்,
அவர்களை மதிப்போம், நிகழ்ச்சி முடியட்டும் தோழர், பேசலாம்"

லீனா எதிர்த்தார். கேட்கவில்லை.

"எனக்கும் உங்களுடன் பேச வேண்டி இருக்கிறது தோழர்,
கட்டாயம் நேரம் தருகின்றேன், பேசலாம் தோழர்"

நீ என்ன சொல்வது, நான் என்ன நீ சொல்லிக் கேட்பது என்கிற
தோரணையில் அப்போதே அக்கணமே அந்த மேடை தனதாக
வேண்டும் என்று உரத்தக்குரலில் லீனா மீண்டும் என்னிடம்...

நான் பொறுமை இழக்கவில்லை.
லீனாவுக்கு பேச இடம் கொடுத்தால் என்ன நடக்கும்? என்பதை நான்
அறிந்திருந்தாலும் அதற்கும் நான் அச்சப்படவில்லை.
என்னால் முடியும் என்ற நம்பிக்கை அக்கணம் வரை என்னிடம் இருந்தது.

ஆனால்...?


நான் என் பொறுப்பிலிருந்து தோழமையுடன் கேட்டுக்கொண்ட எந்த ஒரு சொல்லையும்
உள்வாங்கிக் கொள்ள தோழர் லீனா ஏன் மறுத்தார்?

"எனக்கும் உங்களுடன் பேச வேண்டி இருக்கிறது தோழர் " என்று நான் சொன்ன
வார்த்தைகள் அரங்கில் கடைசி வரிசையில் இருந்தவருக்கும் கேட்டிருந்ததே,
லீனாவுக்கு மட்டும் , அதுவும் என்னருகில் நின்ற தோழர் லீனாவுக்கு மட்டும்
ஏன் கேட்கவில்லை?
கேட்கும் மனநிலையில் அவர் இல்லையா?

என்னையும் என் வேண்டுகோள்களையும் நிராகரித்தன் மூலம் லீனா
அந்த அரங்கத்தில் எதை எதிர்பார்த்தார்?
ஜனநாயக முறையில் நடந்துக் கொண்ட என்னை தோழர் லீனா
ஏன் அவமதித்தார்?
அந்த நிகழ்வில் தலைமை என்ற பொறுப்பிலிருந்து நான் திறந்த
அனைத்து கதவுகளையும் கடந்து சென்றவர் தோழர் லீனா அவர்கள் தான்!


நிகழ்ச்சி என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவியதற்கு யார் காரணம்?


பேச வேண்டும் என்றும் அதற்கு நான் நேரம் தருவேன், கட்டாயம் வாய்ப்பு
தரப்படும் என்று என் தரப்பிலிருந்து உறுதி தரப்பட்ட பிறகும்
தோழர் லீனா தன் இருக்கையில் அமர்ந்திருக்கலாம், பேசி இருக்கவும்
முடியும்,
ஒருவேளை அந்த மேடையில் வெள்ளைவேன் குறித்து பேச வேண்டும்
என்ற நோக்கமே அவருக்கு இல்லையோ என்னவோ?
தனக்குத் தரப்பட்ட வாய்ப்பை அவர் நிராகரித்ததை எப்படித் தான்
புரிந்து கொள்வது?

லீனாவின் விளம்பர உத்திகளையும் வெள்ளைவேன் கதைகளை எல்லாம்
புறம்தள்ளிவிட்டு அதிகார துர்வாசனை என்று கூவம் நதிக்கரையில்
நின்று கொண்டு அவர் அலறும் குரலும் அதன் வீச்சும் டில்லி,
கேரளா என்று பறந்து கொண்டிருக்கிறதாம்.

மும்பை டில்லி நண்பர்கள் என்னிடம் சொல்லி சொல்லி
கவலைப்படும் தொனியில் துக்கம் விசாரிக்கின்றார்கள்!முதல் நாள் நிகழ்வில் அமைதியாக போராட்டம் நடத்தி சென்ற தோழர்
லீனா இரண்டாவது நாள், அதிலும் குறிப்பாக தலித் தலைமை, தலித்
படைப்பாளர்கள் இருக்கின்ற அரங்கில் வந்து தலித்துகளை அவமதித்தார்
என்று அரங்கிலிருந்த இளைஞர் ஒருவர் என்னிடம் சொன்ன போது
உண்மையில் அதிர்ந்து போனேன்!
அவரிடம் தலித் அரசியலுக்கும் தலித் படைப்புகளுக்கும் இம்மாதிரியான'
விளம்பரஙகள் தேவையில்லை, தயவுச்செய்து பிரச்சனைகளைத் திசைத்'
திருப்பாதீர்கள் " என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.


ஜனநாயகத்தின் எல்லா கதவுகளையும் உடைத்து எறிந்துவிட்டு
வன்முறையைத் தூண்டி அதில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம்
என் போன்றவர்களுக்கு இல்லை.


வேதனைத் தருகிறது தமிழகத்தின் அரசியல் சூழல் மட்டுமல்ல,
தங்களைப் போராளிகளாக பெண்ணியவாதிகளாக படைப்பாளர்களாக
எப்போதும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி சுயவிளம்பரங்களில்
சுயலாபங்கள் தேடும் பெண் முகங்கள் கண்டும் வெட்கப்படுகின்றேன்.

மிகச்சிறந்த கட்டுரைகளும் பேசு பொருள்களுமாக நடந்து முடிந்த
பெண்ணிய உரையாடலின் முதல் பதிவு இம்மாதிரியான ஒரு
பதிவாக நடந்துவிட்ட அவலத்திற்காக வேதனைப்படுகின்றேன்.
8 comments:

 1. நீங்கள் வருந்தவேண்டியதில்லை. உங்கள் தரப்பு நியாயம் சரியாகவே இருக்கிறது.
  வெற்று ஆரவாரம் விளம்பரநோக்கம் படைப்பை வளர்க்காது. லீனாவின் நோக்கம், ஊடறு தோழர்களை அவமானப்படுத்துவதுதான் என்று கருதுகிறேன். அதற்கு நியாயமிருக்கிறதா என்றும் தெரியவிலலை. ஆனால் அவரது வழிமுறையே சரியில்லாதபோது நோக்கம் எப்படிச் சரியாக இருக்கும். விட்டுத்தள்ளிவிட்டு வேலையைப் பாருங்கள்.

  ReplyDelete
 2. தோழர் லீனாவின் முகநூல் பதிவும்
  என் மின்னஞ்சல் தொடர்பிலிருந்தும்...

  I have always registered in all my articles that u wanted to give me time but it was spoiled by Arasu, which is only true. thanks

  ReplyDelete
 3. புதிய மாதவி தோழர்,நீங்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்! நாம் தொலைபேசியில் பேசியிருக்கிறோம்! இமெயிலில் தொடர்பும் கொண்டிருக்கிறோம்! முதல் நாள் நீங்கள் கடந்து சென்றபோது முதல் சொல் பரிமாறிக்கொண்டோம்! நீங்கள் அரங்கம் முடிந்து என்னை என்னவென்றாவது விசாரிப்பீர்கள் என்று நினைத்தேன்!கேட்கவில்லை! பரவாயில்லை! மங்கையே கேட்கவில்லை என்னும்போது,நீங்கள் கெட்காததில் ஆச்சர்யமில்லை! இரண்டாம் நாள், பேச கேட்டேன்! நீங்கள் உறுதியாக சொல்லவில்லை!நான் கேட்டது ஒரே ஒரு பரிவான உறுதியான சொல்லே! நான் மீண்டும் கேட்டது அந்த சொல்லிற்கான உத்தரவாதம் தான்!நாம் பேசிக்கொண்டிருக்கும் பொது இடையிட்ட அரசு தன் கடுமையான சொற்களால் சூழலை மாற்றினார்!அதற்கு விளக்கம் அளிக்க முற்பட்ட போது நான் மாணவர்களால் வெளியேற்ற பட்டேன்.

  ReplyDelete
 4. உங்கள் கட்டுரை உங்கள் மௌனத்திற்கான நியாயத்தை செய்யவில்லை. நிகழ்ந்த வன்முறையை கண்டிக்கவில்லை! அரசு அப்படி நீங்கள் பேச வேண்டாம்
  என்று சொல்வதற்கும்,இப்போது கூட அதை கண்டிப்பதற்கும் உங்களை எது தடுக்கிறது?தோழர் எனக்கு எதற்கு சுய விளம்பரம்? நானும் குறிப்பிட்ட வெள்ளை வேன் படமும் கூட அந்த அரங்கை விட பிரபலமானதே! சம காலத்தில் இயங்கும் பெண்ணிற்கு நீதி மறுத்து விட்டு, அவமதிப்பை யும் செய்துவிட்டு நடந்த அந்த பெண்ணிய உரையாடலில் எதைக் காப்பாற்றினீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை? இதற்குப் பிறகும் ஊடறு மௌனம் தான் சாதிக்கிறது! நடந்த எல்லாவற்றையும் திசை திருப்ப,மங்கை,ரேவதி புதிய புதிய பொய்களை வேறு உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள்! கேமிராவை அடித்துப் பறித்து,மெமரி கார்டை அழித்தது, இந்தப்பொய்களையும் வதந்திகளையும் நம்பித் தான் போலிருக்கிறது! சரி தோழர்! உங்கள் தீர்ப்பை சொல்லிவிட்டீர்கள்!நான் என் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறேன்! நான் இன்னுமே உங்களை மிக நேசிக்கிறேன்! உங்களுக்கு என் புதிய புத்தகங்களையும், குறுந்தகடுகளையும் அனுப்பி வைக்கிறேன். அன்றும் இன்றும் உங்களிடம் எதிர்பார்ப்பது பரிவான சொல்லே!
  5 hours ago · Like · 1
  Sorry, I tried to post this comment in ur blog as well! It disappears! I request you to publish it on ur blog as well. thanks and warm regards
  5 hours ago · Like · 1

  ReplyDelete
 5. சற்று நீண்ட விமர்சனங்களை என் வலைப்பகுதியின் விமர்சனம் ஏற்பதில்லை. அதைச் சரி செய்யும் கணினி தொழில்நுட்பம் எனக்குத் தெரியவில்லை. எனவே தோழர் லீனாவின் முகநூல் பதிவுகளை அவர்
  கேட்டுக்கொண்டதற்கிணங்க இங்கே பதிவு
  செய்திருக்கின்றேன்.

  ReplyDelete
 6. முழுவதும் புரியாவிட்டாலும், ஒன்று புரிகிறது. ஒரு நிகழ்வு நடக்கும்போது,முன்திட்டம் இல்லாமல் பேச, அமைப்பு இடம்தராது. எனக்குத் தெரிந்து அரசுவும் மங்கையும் கோபக்காரர்களே தவிர அநியாயக்காரர்களல்ல “it was spoiled by Arasu”,
  “மங்கையே கேட்கவில்லை என்னும்போது,நீங்கள் கெட்காததில் ஆச்சர்யமில்லை!“ மற்றும்
  “எனக்கு எதற்கு சுய விளம்பரம்? நானும் குறிப்பிட்ட வெள்ளை வேன் படமும் கூட அந்த அரங்கை விட பிரபலமானதே!” எனும் லீனா அங்கு வரவேண்டிய தேவையென்ன? இவை மமதை மிகுந்த சொற்களின் வெளிப்பாடு அல்லவா? அதனால் அரசு-மங்கைக்கு எதிராக உன்னை நிறுத்தி அணிசேர்க்கும் புதிய உத்தியாகத் தோன்றுகிறது கவனமாக இருக்க வேண்டுகிறேன் தோழி!

  ReplyDelete
 7. எனது வலைப்பக்கததில் இதன் தொடர்ச்சி போய்க்கொண்டிருக்கிறது.. இயலுமெனில் கருத்துக் கூற வேண்டுகிறேன். அரசுவிடம் பேசினேன். அவர், வலைப்பக்கக் குப்பைகளுக்கு பதில் சொல்ல நேரமிலலை என்று கூறுகிறார். அது சரியல்லவே?

  ReplyDelete