
கம்பன் நின்ற இடமும் சிலம்பை வென்ற இடமும்
பேசப்படுவதில்லை.
இதுவும் இலக்கிய அரசியல் தான்.
இதுவரை பேசியதெல்லாம்
முழு உண்மையும் அல்ல.
முழு பொய்யும் அல்ல.
“கம்பரசம் “ வாசித்தவர்களில் , வாசித்து சிலாகித்தவர்களில் நானும் ஒருத்தி. இதெல்லாம் சொல்லித்தான் இதையும் சொல்லியாக வேண்டி இருக்கிறது.!!
வடமொழியில் எழுதப்பட்டதையும் வடமாந்தர்களையும் தமிழுக்கு கொண்டுவரும் போது கம்பனின் மொழி மட்டுமல்ல, உள்ளமும் தமிழாகவே இருந்திருக்கிறது. ஆனால் தமிழ் மாந்தர்களை தமிழ் நாட்டு களத்தை எழுதிய இளங்கோவடிகளின் உள்ளம் மட்டும்
ஏனோ தமிழரின் வாழ்வியலை மறந்து அவனை மேனிலையாக்க உத்தியாக பார்ப்பனிய சடங்குகளைக் கொண்டுவந்து புகுத்தி இருக்கிறது!
இளங்கோ காட்டும் கண்ணகி கோவலன் திருமணம், மதுரை எரியும்போது விதிவிலக்களிக்கப்படும் பார்ப்பனர்கள்.. செங்குட்டுவன் கதை, சிலம்பில் வரும் சென்ற பிறவிப்பயன் தொடரும் பக்கங்கள்.. இப்படியாக பல உண்டு.
கம்பனுக்கோ.. ராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்பு சந்திக்கும் புதியதொரு காட்சியை அவன் தமிழரின் களவியல் அத்தியாயத்திலிருந்து எடுத்துக் கொள்கிறான். அவன் உள்ளத்தில் தோய்ந்திருக்கும் தமிழர் வாழ்வியலின் பல்வேறு கருத்துகள் வடமொழி காப்பியத்தை தமிழுக்கு கொண்டுவரும்போதும் உயிர்ப்புடன் இருந்திருக்கின்றன..
என்ன செய்வது…?
அவரவருக்கு அவரவர் அரசியல்..
யாரும் முழு உண்மையை சொல்வதுமில்லை.
சொன்னதெல்லாம் முழு பொய்யுமல்ல..
ராபியா அ பால்கி ..முதல் பெர்சியன் பெண்கவி. அன்றைய பால்க்
இன்றைய ஆப்கானிஸ்தான். அவள் கவிதைகள் எழுதி இருக்கிறாள்.
ஆனால் அவை மொத்தமாக கிடைக்கவில்லை!
அவள் வாழ்ந்த வாழ்க்கையை அவள் காதலை ஆப்கானிஸ்தான்
பெண் சமூகம் தங்கள் வாய்மொழியாக கடத்திக்கொண்டிருந்தார்கள்.
ஷாகிரூதின், நூருதீன் கவிதைகளில் அவள் வாழ்க்கை சரித்திரம்
துண்டு துண்டாக பேசப்படுகிறது என்பதைத் தவிர அவள் வாழ்ந்த
வாழ்க்கையின் சுவடுகளை மிகவும் கவனமாக அதிகார வர்க்கம் துடைத்து வைத்திருக்கிறது. ஆனாலும் அவள் அவர்கள் இலக்கியத்தின் முதல் பெண் கவி என்பதாலோ என்னவோ அவளுக்குரிய நினைவிடங்களை உருவாக்கி அவளை சிலையாக வடித்து வழிபாட்டுக்குரியவளாக்கி நிஜ வாழ்க்கையிலிருந்து வெகுதூரத்தில் கொண்டு வைத்திருக்கிறது.
அவள் அவனுக்காக தன் தேகத்தின் ரத்தத்தால் எழுதிய கவிதைகள்
அவள் காதலை ரத்தவாடையுடன் பேசிக்கொண்டிருக்கின்றன.
அவளோ மேட்டுக்குடிப்பெண். அவள் காதலித்த அவன் ஓர் அடிமை.
தன் சகோதரிடனிடம் அடிமையாக இருந்த துருக்கி அடிமை பக்தாஷ்க்காக அவள் எழுதிய கவிதைகளை பிற்காலத்தில் அவள் இறைவனுக்கு எழுதிய கவிதைகளாக சூஃபியசம் வகைப்படுத்திக் கொண்டது.
&&
அவள் :
இன்மையுன் உண்மையுமாக நீயே இருக்கிறாய்.
நீ என்னிடம் இல்லையென்றால்
வேறு எங்கிருக்கிறாய்?
என் விழிகள் உன்னால் பிரகாசமடைகின்றன.
என் உள்ளம் உன்னால் அர்த்தமுள்ளதாகிறது.
வா.. என் விழிகளையும் ஆன்மாவையும்
அழைத்துச் செல்ல வா.
அல்லது
ஒரு வாளால் என் உயிரை எடுத்துவிடு..
&&
அவன்:
உன்னைப் பார்க்கவே முடியவில்லையே
நீயின்றி எனக்கு அமைதியும் நிம்மதியும் இல்லையே
நீயின்றி இந்த அவஸ்தையை
எப்படி சுமக்கப்போகிறேன்?
உன் கூந்தலின் நுனி என் தலைப்பாகையை துளைக்கிறது.
உன் முகம் என்னைக் காதலில் தள்ளுகிறது.
உன் கூந்தலால் என் வாழ்க்கை முடிந்துவிட்டது.
&&
.08 மார்ச்.. சர்வதேச மகளிர் தினத்தில் ராபியாவுக்கும்
அவள் காதலையும் வாழ்க்கையையும் தங்கள் வாய்மொழியில்
கட்த்தி வந்திருக்கும் பெண்களுக்கும் இன்றும் அவள் நினைவிடத்தில்
இளைப்பாறும் பெண்களுக்கும் சேர்த்தே “மகளிர் தின வாழ்த்துகள்”.