Saturday, January 15, 2022

பலகீனங்கள் விற்பனைக்கல்ல

 புலம்புவதும் கண்ணீர் விடுவதும்...

போதும். நிறுத்துங்கள்.
எதோ ஒரு வகையில்
உங்களின் அதீத ஆசை, திடீர்னு கிடைக்கும் புகழ்,
நாய்களுக்குப் போடுகின்ற எலும்புத்துண்டுகள் மாதிரி
உங்களுக்கு வீசி எறியப்படும் சில பொன்னாடைகள்
ஊடக வெளிச்சங்கள், காமிரா பளீச் பளீச் மின்னல்கள்..
இந்த வலையில் விழுந்துவிட நீங்கள்
என்ன விட்டில் பூச்சிகளா?
புகழும் அதனால் கிடைக்கும் அடையாளமும்
உங்களைத் தேடி வரவேண்டும்.
நீங்கள் அவைகளைத் தேடி செல்லும்போது
அறிந்தே தான் அதன் முகவர்களின் வலைக்குள்
சிக்கிக் கொள்கின்றீர்கள்.
உழைப்பும் தகுதியும் இன்றி கிடைக்கும் எதுவும்
இங்கே காலத்தின் முன்னால்
தகுதி இழந்துவிடும் ..
இது என்னவோ பொன்மொழி அல்ல.
சில பெரிய விருதுகள் பட்டியலில் போய்
(பெயர் சொல்ல விரும்பவில்லை) அவர்களின்
படைப்புகளை எடுத்து வாசித்துப் பாருங்கள்.
இன்று அவர்களின் படைப்புகளை இனாமாகக்
கொடுத்தாலும் வாசிக்க ஆளில்லை.
ஏன்?
காலத்தின் முன்னால் அவை நிற்கவில்லை.
அவர்களுக்கு அப்போது கிடைத்த அந்த அங்கீகாரமும் கூட
அவர்களின் எதனால் கிடைத்திருக்கிறது என்பதையும் சேர்த்து யோசிக்கும்போது உங்களுக்கு
நான் சொல்ல வருவது புரியும்!
அதிகாரத்தில் இருக்கும் ஆண்களின் பலகீனத்தை
பயன்படுத்திக்கொண்டு அதைக் காட்டி பணம்
பறிக்கும் வில்லன் களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் அதையே தன்
குறுக்குவழியாக வைத்திருக்கும் கும்பல்,
உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை
முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
அந்தக் கும்பலிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
தகுதியும் உழைப்புமில்லாமல் கிடைக்கும்
எதுவுமே கோமாளிக்கு மாட்டிவைத்த கிரீடம்
போலத்தான் இருக்கும், இருக்கிறது.
இதில் விதம் விதமான நூதனமான ஏமாற்றுகள்
அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
உங்கள் கணவர் அரசு அதிகாரத்தில் பெரிய பதவியில்
இருப்பவராய் இருந்தால் அவரையும் இதே வலையில்
சிக்க வைத்து உங்களுக்கு மன உளைச்சலைத்
தருவதற்கும் பணம் பிடுங்கவும் ஒரு கூட்டம் அலைகிறது.
அடுத்தவ புருஷனின் செலவில் ஷாப்பிங்க் செய்கிற
இன்னொரு கூட்டம் அலைகிறது.

உங்களைச் சுற்றி இருக்கும் அவர்களின்
வலையில் நீங்கள் விழுவதற்கு
அவர்கள் மட்டும் காரணமில்லை.
உங்கள் பலகீனம்.. ஆம்..
உங்கள் பலகீனம்தான் காரணம்.
அதைவிட்டு வெளியில் வாருங்கள்.
ஒவ்வொரு உழைப்புக்கும் பின்னால் கிடைக்கும்
சின்ன சின்ன பாராட்டுதல்கள், நமக்கு கிடைக்கும்
அங்கீகாரத்தின் வரைபடம் மெல்ல மெல்ல தனக்கான
இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை...வேண்டும்.
சரி... அப்படித்தான் எதுவும் நடக்கவில்லை
என்றாலும்...
ஒன்றும் குடிமுழுகிவிடாது.
உங்கள் சுயம் .. கடைசிவரை
உங்களுடன் நிற்கும்.
அது ரொம்பவும் முக்கியம்..
எனதருமை தோழியரே..
இப்போதுதான் எழுத வந்திருக்கும்
என் இளஞ்சிட்டுகளே...
சுயம் ரொம்ப ரொம்ப முக்கியம்டா..
அதை வித்துட்டு
எதையும் அடைந்துவிட முடியாதுடா செல்லங்களே..
ப்ளீஸ்..
புலம்புவதை நிறுத்துங்கள்.
கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்.
பெண் பலகீனமானவள் அல்ல.
ஆணின் பலகீனத்தைப் பயன்படுத்திக்
கொண்டு அடைவது எதாக இருந்தாலும்
அது... "த்தூ"
வெளியில் வாருங்கள்.
உன் மீது நம்பிக்கை வை.
நீ பலகீனமானவள் இல்லை.
உழைப்பில்லாமல் கிடைக்கும் எதுவும்
உன்னோடு ஒட்டாதுடா..
இதை எழுதும் நான்
நீ நிமிர்ந்துப் பார்க்கும் பிரபலமாகவோ
ஸ்டாராகவோ உன் பார்வையில்
நான் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் ..
என் சுயம்..
என்னோடு இருக்கிறது.
அது என்னை சமரசமின்றி
இயக்கிக் கொண்டிருக்கிறது.
அது எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பதை
அனுபவித்துப் பார்..
புரிந்து கொள்வாய்.
இதோ.. இத்தருணத்தில்
என் தோள்களில் சாய்ந்துக் கொள்.
கொஞ்சம் கொஞ்சமாக
இப்போது உன் சுயம்
உன்னிடம் திரும்பி வருகிறதா..
வரும்.. எனக்கு எப்போதும்
உன் மீது நம்பிக்கை உண்டு.
nd 10 others

1 comment:

  1. பாராட்டுகளை விரும்பாதவர் யார் உளர்?
    அதே சமயம் பாராட்டுக் குவியலாய் வரும்போது, புகழ் போதையில் மயங்கி வி(வீ)ழ்ந்து விடுகின்றனர் - ஆண், பெண் யாருமே!
    அவைகளைத் தாண்டி தன்னுழைப்பில் உயர்வு கொள்ளல் சிறப்பு!

    ReplyDelete