Thursday, January 6, 2022

சித்தார்த்தா.. ஆன்மீகப்பயணத்தின் கவித்துளிகளில்

 நான் வேறு நீ வேறு.

நதி பேசும் மொழியின் சொற்கள் ஒன்றாக இருந்தாலும்
அர்த்தங்கள் ஏன் மாறிவிடுகின்றன"
கவித்துவ மாய ஜாலங்கள்.
புத்தரின் காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு
(பிராமண)இளைஞனின் ஆன்மீகப்பயணம் இக்கதை.
புத்தரின் போதனைகள் அன்றைய இளைஞர்களைக்
கவர்ந்திழுத்தக் காலத்தில் இக்கதை நடக்கிறது.
இளைஞர்கள் துறவு வாழ்க்கையைத் தெரிவு செய்து
கொண்டு புத்தம் தழுவி ஓரிடத்தில் நிரந்தரமாக
தங்கிவிடாமல் “நிர்வாண’ வாழ்க்கையை நோக்கிப்
பயணிக்கிறார்கள்.
உடல்பசி, (வயிற்றுப்பசி, காமப்பசி) செல்வம் உறவுகளின்
பந்தம் என்று ஒவ்வொரு மனிதனுடனும் இயற்கையாக
இருக்கும் உணர்வுகளை வென்றெடுப்பது தனிமனிதரின்
போதனைகள் வாயிலாக சாத்தியப்படுமா?
தனிமனிதனின் போதனைகள் எப்போதும்
அக்குறிப்பிட்ட மனிதரின் தனிப்பட்ட
அனுபவங்களிலிருந்து வருவது தானே.
ஒருவரின் வாழ்க்கையை இன்னொருவர்
வாழ்ந்துவிட முடியுமா?
முடியாதுதானே!
அப்படியானால், ஒருவரின் போதனைகள்
எப்படி இன்னொருவருக்கு வழிகாட்டுவதாக
அமைய முடியும்?
இந்த தத்துவ விசாரணைக்குள் வருகிறது “சித்தார்த்தா”.
புத்தரின் காலத்தில் புறவாழ்க்கையை துறந்து –
வீட்டிலிருந்து புறப்படும் இரு இளைஞர்கள்..
ஒருவன் பெயர் சித்தார்த்தா, இன்னொருவன் பெயர் கோவிந்தா.
இருவரும் நண்பர்கள். இருவரும் தங்கள் பயணத்தில்
ஒரு நாள் புத்தரை சந்திக்கிறார்கள்.
புத்தரின் போதனைகளை செவிமடுத்து கேட்கிறார்கள்.
கோவிந்தா புத்த சன்னியாசி ஆகிவிடுகிறான்.
முதல்முறையாக கோவிந்தா நண்பன் சித்தார்த்தனின்
நிழலிருந்து விடுபடுகிறான். அவன் வாழ்க்கையை அவன் தீர்மானித்துக்கொள்கிறான்.
தன் நட்பிலிருந்து கோவிந்தா விடுபடுவதை
சித்தார்த்தனும் விரும்புகிறான்… கதை இப்படித்தான் நகர்கிறது.
கதைப்போக்கில் எதை எல்லாம் விட்டுவிட வேண்டும்
என்று புத்தர் போதிக்கின்றாரோ அதை எல்லாம்
தன் அனுபவமாக்கி அதன் பின் அதைத் துறந்துவிடும்
தனிமனித அனுபவத்தை சித்தார்த்தன் அடைகிறான்.
ஆனால் கமலாவுடன் கொண்ட உறவில்
அவனுக்குப் பிறந்த மகனை அவன் சந்திக்கும்போது..
வாழ்க்கை மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து
நிற்கிறது. எல்லாவற்றையும் ஆண்டு அனுபவித்து விட்டு
விடுதலையாகி ஓடக்காரனின் நண்பனாகி வாழும்
சித்தார்த்தனுக்கு தன் இரத்த உறவாக தன் இளைய
வடிவமாக தன்னைப்போலவே தன் முன்
நிற்கும் தன் மகனை விட்டுப் பிரிவது
அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை!
இந்த நாவலில் நதி ஓர் உருவகமாக காலத்தின்
உருவமாக நம்மோடு பேசுகிறது. நதியின் கவித்துவம்..
நதியின் மொழி, நதியைக் கடக்கும் மனிதர்கள்,
அவர்களின் முகங்கள், நதியைக் கடந்து அக்கரைக்கு
செல்லும் மனிதர்களுக்கு உதவும் ஓடக்காரன்
வாசுதேவன்.. இவை எல்லாமே படிமங்களாக
கவிதைகளாகின்றன.
படைப்பின் உச்சத்தை இப்புனைவு தொடும் இடங்களில்
வாசகன் பித்து மன நிலைக்குப் போய்விடுகிறான்.
நதி என்பது பிறவி
நதி என்பது காலம்,
நதி என்பது உறவு.
நதியைக் கடப்பதும் நதிக்குள் மூழ்கி கரைவதும்
அவரவர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை..
….
வாசிப்பில் சில துளிகள்:
 Knowledge can be conveyed, but not wisdom.’
 Wisdom cannot be passed on.
 Wisdom which a wise man tries to pass on to someone always sounds like foolishness.
 The opposite of every truth is just as true.
 A person or an act is never entirely SANSARA or entirely NIRVANA.
 A person is never entirely HOLY or entirely SINFUL.
 I have experienced on my body and on my soul that I needed SIN very much.
சித்தார்த்தா.. சில கேள்விகள்..
>புத்தனை சந்திக்கும் பிராமண இளைஞனின் பெயர்
சித்தார்த்தா!
ஹெர்மன் ஹெசேவுக்கு இந்தியச் சமூகத்தின்
சாதிப்படினிலையும் வேத இந்தியாவும் தெரிந்திருக்கும்.
அப்படி எல்லாம் தெரியாமல் அவரால் இப்படி
ஒரு தத்துவார்த்த விசாரணைக்குள் மூழ்கி
இருக்க முடியாது. அவர் வாழ்க்கை குறிப்பில் அவர்
இந்தியாவுக்கு பயணித்திருக்கிறார் என்பதை
அறிந்து கொள்ள முடிகிறது.
பெயர்களை எதேச்சையாக அவர் புனைவில்
கொண்டுவருவதாகவே வைத்துக்கொண்டாலும்
கதையில் இடம்பெறும் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும்
பின்னால்இந்திய சமூகத்தின் அடையாளங்கள் இருக்கின்றன.
ஓடக்காரனாக வந்து மறையும் தத்துவமாக வாசுதேவன்!
புத்தர் போதனையைக் கேட்டுவிட்டு உடனே
அவர் பின்னால் கூட்டத்தில் ஒருவனாக வரும்
கதைப்பாத்திரம் கோவிந்தா..
இந்தப் பெயர்கள் வெறும் பெயர்கள் மட்டுமல்ல.
இப்படி எல்லாம் யோசிப்பது ‘சித்தார்த்தா’வின்
கவித்துவத்தை நான் சிதைப்பதாக எனக்கு
இதை எழுதும்போது ஓர் எண்ணம் எழுவதை
தவிர்க்கமுடியவில்லை.
மொழியின் மாயஜாலத்தில்
என்னை ஏமாற்றிக்கொள்ள இனியும் முடியாது .
கவித்துவம் தான் ரசிக்கிறேன்.
அதையும் தாண்டி நானும் யோசிக்கிறேன் ..
யோசிக்க கூடாதா என்ன..? சொல் சித்தார்த்தா..
நானும் உன்னருகில் உன் நதியோடு அமர்ந்திருக்கிறேன்.
நதி பேசுகிறது..
நதி பேசிக்கொண்டே இருக்கிறது..
அதில் என் காதில் விழுவதும் உன் காதில் விழுவதும்
ஒரே மொழியல்ல. சொற்கள் ஒன்றாக இருந்தாலும்
அதன் அர்த்தங்களை நதியின் ஆழத்தில்
மூழ்கடிக்கப்பட்டவர்களின் மொழியில் கேட்கிறேன்.
ன்.. சித்தார்த்தா,,,
அதை நீ கேட்க முடியவில்லை.?
நம் அனுபவங்கள் வேறு.
உன் போதனைகள் என் வாழ்க்கையின்
தத்துவங்களாகிவிட முடியாது. ஆஹா
நீ வேறு நான் வேறு..
ஆம் நாம் இருவரும் வேறு வேறானவர்கள்.
ஓம் ஓம் ஒம்.
பிகு:
ஹெர்மன் ஹெசே நோபல் பரிசு பெற்ற
நாவலாசிரியர், கவிஞர், ஓவியர்.
ஜெர்மனில் பிறந்தவர். சுவிசில் வாழ்ந்து முடிந்தவர்.
ஜெர்மனில் எழுதிய நாவல் தான் சித்தார்த்தா.
தனிமனித தேடல்களையும் தனிமனித அகமன இரட்டை மன நிலையின்பிளவுகளையும் இவர் அதிகமாகஎழுதியிருப்பதாக இவரைப் பற்றிய குறிப்புகள்தெரிவிக்கின்றன.

புத்தகத்தை பரிசாக அனுப்பிய இனிய தோழி மீராவுக்கு அன்பும் நன்றியும்.


1 comment:

  1. எதைச் சித்தார்த்தா கேள்வி ஆக்கினானோ அதையே சித்தார்த்தாவுக்கும் கேள்வியாக்கி இருக்கிறீர்கள். Fissen and fusion அல்லது இயங்கியல்.

    ReplyDelete