Monday, January 17, 2022

நாக்பூர் பெளத்தமும் மீனாட்சிபுர இசுலாமும்

 பேசு பொருளும் பேசாக்கிளவியும்

நாக்பூர் பெளத்தமும் மீனாட்சிபுர இசுலாமும்
கோவேறு கழுதையும் கல்மண்டபமும்
நாக்பூரில் ஒரு கருத்தரங்கு நிகழ்வில் (CERI CONFERENCE) கலந்து கொண்டபோது நல்ல வாங்கிக்கட்டிக் கொண்டேன்.
ஆனால் அத்தருணம் எனக்கு வருத்தம் தரவில்லை.
இனம் புரியாத சந்தோஷத்தைக் கொடுத்தது.
நாக்பூரில் பெளத்தம் மாறியதால்
என்ன மாற்றம் நடந்திருக்கிறது?
இப்போதும் பெளத்தம் தழுவியவ தலித்துகளை
“நவீன பெளத்தர்கள்” என்றுதானே அழைக்கிறார்கள் ?
என்று என் பேச்சின் ஊடாக சொல்லிவிட்டேன். எ
னக்குப் பின் பேசிய சட்டக்கல்லூரி பேராசிரியர்
என்னைப் பிடிபிடி என்று பிடித்துவிட்டார்.
Do You Know? Do you know?
என்று அவர் ஒவ்வொன்றாக சொல்லும்போது
எனக்குள் வருத்தமோ வெட்கமோ வரவில்லை.
சந்தோஷம் அப்படியே மொட்டவிழும் தருணமாக
அது மாறி இருந்தது.
(அவர் பேசி முடித்தப்பின் அவர் கையைப் பிடித்துக்கொண்டு
5 நிமிடம் கைலுக்கியதாக தோழர்கள் சொல்லி சிரித்தார்கள்.)
பாபாசாகிப் அம்பேத்கருடன் மதம் மாறிய
குடும்பத்திலிருந்து வந்தவர் அவர்.
பெளத்தம் தழுவுவதற்கு முன் ஒடுக்கப்பட்ட வீட்டில்
திருமணம் நடந்தால் அந்த ஊரின் பண்ணையார்
“சாந்திமூகூர்த்தம்” நடத்தியபிறகுதான்
கணவனுடன் அப்பெண்ணின் வாழ்க்கை ஆரம்பிக்கும்
அவலம் இருந்திருக்கிறது. மதம் மாறியபின் அவர் அம்மா
தன் திருமணத்தில் அதை எதிர்த்திருக்கிறார்.
நான் இந்துவல்ல, உன் படுக்கைக்கு வருவதற்கு,
போடா” என்று சொல்லும் துணிச்சலை
பெளத்தம் என் அம்மாவுக்கு கொடுத்தது,
டூ யு நோ ?என்று கேட்டார்..
1981ல் திரு நெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தைச்
சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இசுலாம் மத ்திற்கு மாறினார்கள்.
அப்போது தமிழக முதல்வராக இருந்த எம் ஜி ஆர்
“இது அரபு நாட்டு பணம் செய்த வேலை”
என்று சொன்னார். ஆனால், சட்டப்பேரவையில்
விவாதம் நடந்தப்போது நாவலர் நெடுஞ்செழியன்
“ அவர்கள் சமூக க் கொடுமைகளால்தான் மதம் மாறினார்கள்”
என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.!
அன்றைய பிஜேபி தலைவர் வாஜ்பாயி சம்பவ இடத்திற்கு
கிலோ மீட்டர் நடந்தே சென்றார்.
விஷ்வ இந்து பரிஷத் யாகம் நடத்தினார்கள்,
கழிவறை கட்டித்தருகிறோம், பள்ளிக்கூடம் கட்டித்தருகிறொம்
என்று ஆசைக்காட்டினார்கள். அன்றைய ஒன்றிய
அரசின் பிரதமர் இந்திராகாந்தி தன் அமைச்சர்
யோகேந்திர மக்வானாவை அனுப்பினார்.
தமிழக காங்கிரசு தலைவர் இளைய பெருமாள்
மீனாட்சிபுரத்திற்கு விரைந்து சென்றார்.
எதுவும் நடக்கவில்லை. அவர்கள் மதம் மாறியது மாறியதுதான்.
யாரும் “இந்துவாக “ திரும்பவில்லை!
தமிழ்ச்சமூகத்தில் சமகாலத்தில் நிகழ்ந்த
ஒரு கலகம் இது. ஆனால் இது இலக்கியமாகவில்லை!
இந்த மதமாற்றம் குறித்துதான் விசிக தலைவர்
தோழர் தொல். திருமாவளவன் முனைவர் பட்ட ஆய்வு செய்தார்.
“Mass religious conversion of Meenakshipuram – A Victimological Perspective”
என்ற தலைப்பில் அவர் முனைவர் ஆய்வு வெளிவந்திருக்கிறது.
இதுவும் பேசப்பட்டிருக்க வேண்டும்.
கருத்தரங்குகளின் ஆய்வுப்பொருளாக மாறி இருக்க வேண்டும்.
ஆனால் எல்லா முனைவர் பட்ட ஆய்வுகளையும்
போல இதுவும் பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது
கோப்புகளில்!
சிலவற்றை பேசக்கூடாது என்பதில் நம் அறிவுச்சமூகம்
ரொம்பவும் கவனமாக செயல்படுகிறது.
உட்சாதி பிரச்சனைகள் சாதிக்கொடுமையின்
இன்னொரு கூர்மையான ஆயுதம், இதைப் பேசிய எழுத்தாளர்
சகோதரர் இமையம் அவர்களின்
‘கோவேறு கழுதைகள் “ மிக முக்கியமான நாவல்.
சந்தேகமில்லை.
ஆனால் பிராமண சமூகத்திலிருக்கும் உட்சாதி கொடுமையைப்
பேசிய சுமதியின் “கல்மண்டபம்”
குளத்தில் போட்ட கல்லாக கிடக்கிறது.
பிராமணர்களின் சாவு வீடுகளில் ஈமச்சடங்கு செய்யும்
சவுண்டி பிராமணர்களின் கதை “கல்மண்டபம்”
சாதியப்படி நிலையில் உச்சத்தில்
இருக்கும் ஒரு சமூகம், கல்வி வசதி வாய்ப்பு படைத்த
ஒரு சமூகத்திற்குள் நிலவும் “தீண்டாமை”யை அவர்கள்
பேசி இருக்க வேண்டும். பேசவில்லை.
பேசாமல் கடந்து செல்வதில்
கவனமாக இருந்திருக்கிறார்கள்.
இங்கு பேசப்பட்டவைகளுக்கு இருக்கும் அரசியலைவிட
பேசாமலிருப்பதற்குள் இருக்கும் அரசியல் ,
நுண் அரசியல் கேவலமானது.
அது தொடர்ந்து சாதியையும் மதத்தையும்
காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
Like
Comment
Share

No comments:

Post a Comment