Friday, January 21, 2022

தந்தை பெரியாரும் சு.ரா இலக்கியவட்டமும்




 உங்கள் காற்றில் கலந்த பேரோசையில் ஜீவாவைப் பற்றி எழுதியுள்ளீர்கள். பெரியார் உங்களைப் பாதிக்கவில்லையா? இத்தேர்வுக்கு அரசியலும் ஒரு காரணமாக இருக்குமோ?

ஜீவா எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பத்து வயது வாக்கில் நான் அவரைப் பார்த்தாயிற்று. பின்பு அவரது மறைவு வரையிலும் அந்தத் தொடர்பு நீடித்தது. எங்கள் ஊருக்குப் பெரியார் வந்துபோகக் கூடியவர் என்றாலும் என் குடும்பப் பின்னணியில் அவர் பெயர் அடிபடவே இல்லை. சிறுவயதில் நான் மலையாள எழுத்தாளர்களைத்தான் அதிகம் படித்தேன். எம். கோவிந்தன், சி. ஜே. தாமஸ், தகழி, பஷீர் போன்றவர்களை. எங்கள் பகுதி தமிழகத்துடன் இணைந்த பின்புதான் எனக்குப் பெரியார்மீது கவனம் வந்தது. அவருடைய உண்மை உணர்ச்சியை நான் ஏற்றுக்கொண்டேன். அந்த உண்மைகளை அவர் முன்வைக்கும் முறைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் ஈரமோ, அழகியலோ, அரவணைப்போ இல்லை.

பெரியாரை நீங்கள் நிராகரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மொழி சம்பந்தமாக மட்டும்தானா?

பெரியாரை நான் நிராகரிக்கவில்லை. அவருடைய கருத்துகளில் பெரும்பான்மையானவை நான் ஏற்றுக்கொள்ளக்கூடியவைதான். சொல்முறை பற்றிச் சொன்னேன். மொழிக்கும் கருத்துக்குமான உறவு எனக்கு மிக முக்கியம். அவரது இயக்கத்தில் அவர் ஒருவர்தான் சொல்லோடு செயலை இணைத்திருந்தவர். பின்னால் வந்தவர்கள் எவரையுமே அப்படி சொல்ல முடியாது. அரசியல் தளத்தில் ஆகப் பெரிய அநாகரீகங்களை உருவாக்கியவர்கள் அவர்கள். அந்த இயக்கத்தின் இன்றையச் சரிவு கொடுமையானது.

 

அழியாச்சுடர்களில் இடம்பெற்ரிருக்கும் எழுத்தாளர் சு,ராவின் நேர்காணல்.

 

இதில் சு. ரா முன்வைக்கும் மொழியின் ஈரம் அழகியல் என்பது என்ன?

இதைக் கட்டுடைத்தால் அது ஓர் அணுகுண்டைப் போல வெடித்து சிதற்கிறது.

சு.ராவின் முதல் நாவல் “புளியமரத்தின் கதை”யை எடுத்துக்கொண்டால்

அதில் திருவிதாங்கூர் மன்னர் வந்துப்போகும் காட்சிகள் வரும். 

திருவிதாங்கூர் மன்னர் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வரும் 

சமூக நிகழ்வுகள் எதுவும் அதிலிருக்காது. அவர் வீட்டுக்கு 

அருகில் தான் சவேரியர் சர்ச் இருக்கிறது.

பல இலட்சம் மக்கள் மதமாற்றம் நடந்திருக்கிறது. 

அதுவும் அவர் எழுத்தில் வரவில்லை. அவர் காலத்தில்

 நிகழ்ந்த மண்டைக்காடு கலவரம் அவருக்கு

மிக அருகில் நடைபெற்ற சம்பவம். அவர் அப்போது 

தன் இரண்டாவது நாவலை எழுதி வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

 அவர்களைப் பொறுத்தவரை “தனிமனித

அனுபவம் மட்டுமே இலக்கியம்,

 அதாவது அவர்களைப் பாதிக்காத எதையும்

அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான்  நடந்திருக்கிறது!

 

இலக்கியத்திற்கு சமூகப்பொருளாதர நிலைமைகளால் மானிடரில் பல வர்க்கங்கள்

பாதிப்புக்கு உள்ளாகும் அவலங்களைவிட , பாரபட்சமான ‘தரும ம்’ நிலவுகின்ற

நம் சமுதாயத்தில் இந்த மானுடம் படுகின்ற அவலங்களைப் பற்றிப் பேசுவதைவிட

இதை எல்லாம் பேசாமல் ஒட்டுமொத்த “மனித நேயம்” பற்றிய போர்வையை

எடுத்துப் போர்த்திக்கொள்கிறார்கள்.

 

அதனால் தான் சு.ரா. தோட்டிச்சியின் பிரசவ வலியைப் 

பற்றி பேசுவது மட்டும்  இலக்கியமல்ல, 

அது பிரிட்டிஷ் இளவரசியின் பிரசவ வலியைப் பற்றியும் 

பேச வேண்டும் என்று “வலிகளை ‘ ஒன்றாகப் பார்க்கிறார்!

இருவரின் வலிகளும் ஒன்றா?


சரி , பிரசவவலி என்பது சு.ரா சொல்வதுபோல

அவரின் சுய அனுபவமாகும் வாய்ப்பே இல்லை என்பதால்

விட்டுவிடலாம். 

பெரியாரின் மொழி வலிகளை மட்டும் பேசுவதில்லை. 

அவர் என்ன வசதியான அறையில் உட்கார்ந்து கொண்டு 

தன்னைச் சுற்றி தன் தொண்டரடி எழுத்தாளர்

பட்டாளங்களுடன் இலக்கிய அவஸ்தையை ஈரத்துடன் பேசத்தெரியாதவர்.

தோட்டிச்சி வலி வந்து துடிக்கும்போது அவளுக்கு மருத்துவ வசதி ஏன் இல்லை?

தோட்டிச்சிகள் ஏன் பிரசவத்தில் செத்துப்போகிறார்கள்? தோட்டிச்சிகளின்

தொட்டில்களில் ஏன் நகரக்குப்பைகளின் மணம் கலந்திருக்கிறது?

மானுட வாழ்வின் இயற்கை நிர்ணயித்திருக்கும் 

பிறப்பும் இறப்பும் தோட்டிச்சிக்கு

ஏன் கெளரவமானதாக இல்லை? 

இப்படியாக கொஞ்சமும் ரசனை இல்லாமல்

ஈரம் இல்லாமல் பெரியார் பேசி இருக்கிறார். சரிதானே!

போகிற இட்த்திலெல்லாம் கோதுமை தோசையும் 

ரவா  தோசையும் பற்றி

பெரியாருக்கு சிலாகிக்க தெரியவில்லை! 

என்ன மனிதர் அவர்!

 

இப்போதுதான் நான் ஓர் அக்மார்க் இலக்கியவாதியா

யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

 


No comments:

Post a Comment