மின்சார வண்டிகள் - சிறுகதைகள் - புதிய மாதவி -
ஒரு பார்வை - பொன். குமார்
கதை சொல்லும் மரபு காலம் காலமாய்த் தொடரும் ஒன்று.
வாய்மொழிக் கதையாய்த் தொடங்கி இன்று எழுத்தாய்
பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் சிறுகதையே பிரசித்தம்.
இலக்கியத் துறையில் காலடி பதித்த எவரும் சிறுகதை
முயற்சியில் ஈடுபடவே முயல்வர். அவ்வகையில் வந்திருந்தும்
தொகுப்பு 'மின்சார வண்டிகள்'. இதன் ஆசிரியர் புதிய மாதவி.
'ஹே ராம்' என்னும் புதுக்கவிதைத் தொகுதி மூலம்
அறியப்பட்டவரின் இலக்கியத்தில் இரண்டாம் பிரவேசம் இது.
இத்தொகுப்பில் பதினைந்து சிறுகதைகளும் ஒரு குறுநாவலும்
உள்ளன. குறு நாவலின் தலைப்பே
' மின்சார வண்டிகள்'. அதுவே தொகுப்பின் தலைப்பும் ஆயிற்று.
'ஆண்டாளும் ஆத்தங்கரைச் சாமியும்' என்பதே முதல் சிறுகதை.
மேலோட்டமாக ஆத்தங்கரை சாமி
குறித்து பேசினாலும் மறைமுகமாக தவித்தியருக்கான
ஒரு குரல் மெல்ல ஒலிக்கிறது. மிக நயமாக
இப்பிரச்சினையை முன் வைக்கிறார்.
கதையை ஆண்டாளின் காதலோடு சொல்லிச் சென்று முடிவில்
' ஆண்டாளின் சந்நிதிக்குப் போகும்போது
ஆத்தங்கரைச் சாமியும் நினைவுக்கு வந்தது
ஒற்றைக்காலுடன்... வெறியுடன்... பலி தீர்க்கும் வெறியுடன் -
என் கர்ப்பகிரகத்தில்" என நிறுத்தி
வாசக சிந்தனைக்கு வழியேற்படுத்தி உள்ளார்.
' பிச்சிப்பூ ' ஒரு கூட்டுக் குடும்பத்தில் சிக்கிச் சுழலும்
ஒரு பெண் பற்றிய கதை. ஆயினும் ஓர் ஆண் வாயிலாக
இக்கதை சொல்லப்பட்டுள்ளது. அவனுக்கு அவள் மேல்
காதலைத் தாண்டிய ஒரு ப்ரியம்.
அவளோடு தன் மனைவியை ஒப்பிட்டுப் பார்ப்பதே
முக்கியத்துவம் பெறுகிறது. அவளை முதன்மைப்படுத்துகிறது.
இறுதியாக'
பிச்சிப் பூவை வரையலாம். நிறைய எழுதலாம்.
படம் பிடிக்கலாம். பிச்சிப்பூவின் வாசனையை?
என வினவியிருப்பது. "ரோஜாப்பூவை நாரில் கட்டலாம் -வாசத்தை?" என்னும்
நிர்மலா சுரேஷின் கவிதையை நினைவூட்டியது.
மக்களிடம் மாட்டிக் கொண்டு பிள்ளையார் பேசுவதான கதை
'கணப்பதி பப்பா. மோரியாஸ்.' பிள்ளையார் ஊர்வலத்தை
மக்கள் எதிர்த்து வருன்றனர். இதில் பிள்ளையாரே
எதிர்ப்பதாக காட்டியுள்ளார்.
சோகமெனினும் சிரிப்பே முன்னிற்கிறது.
பாலியல் வன்முறை மிகக் கொடுமையானது.
இதற்கு எதிராக பெண் அமைப்புகள் போராடி வருகின்றன.
ஆனால் ஒரு தந்தையே அவர் மகளை உடலுறவு கொள்வது
மிருகத்தனத்தை விட மோசமானது.
இக்கதையின் தலைப்பு 'கவுரியின் எதிர்காலம்?'.
கருக்கலைப்பே செய்யாத ஒரு பெண் மருத்துவர்
இளம் பெண்ணின் பரிதாப நிலைகண்டு
கருவைக் கலைக்க முன்வருவது குறிப்பிடப்பட வேண்டியதாகும்."
அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவளது
அப்பனுக்கு 2004 செப்டம்பர் 10ல்
மும்பை ஹைகோர்ட்டில் நீதிபதி ஆயுள் தண்டனை
என்று தீர்ப்பு வழங்கினார்" என்றெழுதி இது உண்மைச் சம்பவம் என்று உறுதிப்படுத்துகிறார். இது எடுத்துக் காட்டிய நோக்கம் இவ்வாறு
நிகழக்கூடாது என்பதே.
இதே போன்று 'செய்தி' யை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட
மற்றொன்று 'செய்தி ஒன்று கதையானது'. இத்தொகுப்பில் ஒரு
முக்கிய கதை இது. பாகிஸ்தான் அதிபர் முஷரப் வருகையையொட்டி எழுதப்பட்டது. முஷரப்பை வளர்த்த தாயின் பிள்ளைகள் அனைவரும் இந்திய நாட்டிற்காக போரில் மரணமடைந்தவர்கள்
என காட்டி முஷரப்பை மனமுடையச் செய்துள்ளார்.
பழையதைப் போற்றி பாதுகாக்க வேண்டும்
என அறிவறுத்தியது 'பழையன கழிதலும் புதியன
புகுதலும்' . இப்பழமொழியை உணர்த்தும் விதமாய்
அழகாய் கதையாக்கியுள்ளார்.
எந்தப் பெண்ணுக்காக மகன் குதிலையும் கும்பாவையும்
வெளியேற்றினானோ அவளே வீட்டுக்கு விலைக்கு
வாங்கி வருவது வேடிக்கை. வியப்பு. குதில், கும்பா கிராமங்களில்
காணப்படுவது.
அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தது
' கூட்டணி' . தலைவனுக்காக உயிரை விடும் தொண்டர்களுக்கு பாடம்.
'கிழவி' யின் பரிதாப நிலை மனத்தை கனத்திடச்செய்கிறது.
விலைமகள் என வெறுக்கப்பட்ட பெண் ஒரு '
பிச்சைக்காரள்' க்கு உதவுவதான கதை ' தீபாவளி பரிசு'.
ஆனால் வெறுத்தவள் உதவவில்லை. இருவரில்
எவர் உயர்ந்தவள் என எடை போடச் செய்கிறது.
பொங்கல் என்பது கிராமங்களில் மிகவும்
விமரிசையாக கொண்டாடப்பட்ட பண்டிகை. இன்று கிராமங்கள் அருகி வருவதோடு இப்பண்டிகையும் மறைந்தே வருகிறது. இன்று பழைய பண்பாடு
இல்லை. நவீனப்படுத்தப்பட்டு விட்டது. '
பொங்கலைத் தேடி' என்னும் இச்சிறுகதை கதையின்
நாயகன் போலவே வாசகரையும் ஏமாற்றமடையச் செய்கிறது.
ஏக்கம் கொள்ள வைக்கிறது.
'சிஸ்டர் 'சிந்தனைக்குரியவள். சிஸ்டர் எனபவள் எல்லாம் மறந்து ,
துறந்து மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவன்
பிறர் துயரைத் துடைப்பவன். அவளுக்குள்ளும் துயருண்டு
என உணர்த்தியது.
இதுவொரு நல்ல கதை.
இன்னொரு நல்ல கதை ' தாராவியில் ஒரு தாய்'.
குழந்தையைப் பெற்று விட்டு இறந்து போகிறாள் ஓர் இந்துத் தாய்.
பசியில் அழும் அக்குழந்தைக்கு தன் குழந்தையோடு
பாலூட்டுகிறாள் ஒரு முஸ்லிம் தாய். இது சமத்துவம்
ஊட்டுகிறது மதக்கலவரங்கள்
தொடாத்த போதும் இவ்வாறான நிகழ்வுகள், நெகிழ்வுகள்.
இந்தியா ஒன்றானாலும் கர்நாடகத்தில்
தொடங்கும் காவேரி தமிழகத்திற்கு வர தடை.
இதனால் தண்ணீர் பற்றாக்குறை. இது மும்பையில்
வாழும் தமிழனை எவ்வாறு பாதித்துள்ளது என்பதே '
பாசுவின் தவம்'. தண்ணீர் விரயம் செய்யப்படுவதை
பாசு விரும்பவில்லை. மும்பையில் வாழ்ந்தாலும்
தமிழ்நாடு குறித்த அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளது.
இத்தொகுப்பின் பதினைந்தாம் சிறுகதை
'என்னைப் பெத்த அம்மா...ஆ..'. மற்றவற்றிலிருந்து மாறுபட்டது.
இயல்பானது. கிராம பின்புலத்தில்
எழுதப்பட்டது. இறக்கும் தருவாயில் இருக்கும்
ஒரு மூதாட்டியின் மரணத்தை எதிர்நோக்கி
எழும் உரையாடல்கள் அசலானவை. நல்ல காட்சிப் பதிவு.
இறுதியான 'மின்சார வண்டிகள்' குறுநாவல் எனினும்
பதின்மூன்று அத்தியாயங்கள். மும்பையில் குடியேறும்
ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை. மும்மைச் சூழலில்
எவ்வாறு சீரழிகிறது என விவரிக்கிறது.'மின்சார வண்டிகள்'
ஒரு குறியீடு. மின்சார வண்டிகள் வருவதை போவதைப் போல
ஒரு குடும்பம் வருவதும் பிறிதொன்று போவதுமாக
குறுநாவல் முடிக்கப் பட்டுள்ளது. அன்னம் தவிர மணியக்கா.
மீனா மேடம் ஆகியோரை சறுக்கலாகவே சித்தரித்துள்ளார்.
ஒரு குறுநாவலுக்குள் பல சிறு கதைகள் உள்ளடங்கியுள்ளன.
கதையைத் தொய்வின்றி கொண்டு சென்றுள்ளார்.
கதாபாத்திரங்களையும்
அருமையாக
சித்தரித்துள்ளார். எவரும் மிகையல்ல. சிறுகதையை விட குறுநாவல்
முன்னணியில் உள்ளது. ' புதிய மாதவி' க்கு
நன்கு கைவரப் பெற்றுள்ளது. மும்பை வாழ் தமிழ் மக்களின்
சூழ்நிலையைத் தத்ரூபமாக விவரித்துள்ளார்.
காட்சி விவரிப்புகளும் கச்சிதம். உரையாடல்களும்
உறுத்தவில்லை. ஆனால் கதையில் இன்னும் அழுத்தம் தேவையோ
என்று உணரச் செய்கிறது.
'மின்சார வண்டிகள்' என்னும் இத்தொகுப்பில்
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இயங்குகிறது.
ஒன்றையொன்று நினைவுக்கூரவில்லை. தலித்
விடுதலை, பண்பாடு மீட்டல், பழமை போற்றுதல், மக்கள் மேம்பாடு என முற்போக்கான கருப்பொருள்களிலேயே கதைகள் அமைந்துள்ளன.
சில நிஜங்களாய் நெஞ்சை உரசுகின்றன. எழுத்து நடை
மக்கள் மொழியிலேயே உள்ளது. மும்பையின் வேக வளர்ச்சியில்
தன்னை கரைய விடாமல் இலக்கியம்
செய்து வருவது பாராட்டிற்குரியது. மும்பையில் வாழ்வதால் நல்லி, மாலா, சாய் போன்ற மும்பயில் புழங்கும் சொற்களைத் தவிர்க்க முடியவில்லை
என்கிறார் புதிய மாதவி. முயன்றிருந்தால் தவிர்த்திருக்க முடியும். 'மின்சார வண்டிகள் " மூலம் மும்பை வாழ் தமிழ் மக்களின் நிலையை எடுத்துக் காட்டியதோடு தன்னையும் சிறுகதை உலகில் நிலைநிறுத்த முயற்சிச் செய்துள்ளார். தொடர்ந்து' மின்சார
வண்டிகள் 'இயங்க
வாழ்த்துக்கள்
.புதிய மாதவியின் மின்சார வண்டிகள்'
மக்களை முன்னேறவே செய்கின்றது.
வாசிப்போரையும் மும்பைக்கு அழைத்துச் செல்கிறது.
வெளியீடு - மருதா
பிகு: என் முதல் சிறுகதை தொகுப்பு மின்சார வண்டிகள்.
புத்தகம் வெளியிட்ட மருதாவும் பதிப்புதுறையிலிருந்து
விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.
தற்போது இப்புத்தகம் என்னிடமில்லை!
பொன்.குமாரின் மீள்பதிவுக்கு நன்றியுடன்..
No comments:
Post a Comment