Saturday, January 8, 2022

தந்தை பெரியார் VS நவீன கவிதை

 



பெரியாரும் இன்றைய திராவிட அரசியல் கட்சிகளும் ஒன்றல்ல.

பெரியார் எதிர்ப்பு என்பதில் நவீன இலக்கிய வாதிகள் மூர்க்கத்துடன் செயல்பட்டார்கள்.

நவீன இலக்கியவாதி வரிசையில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் பெரியாரை எதிர்க்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் பெரியாரைப் பற்றி பேசாமல் கடந்துவிடவேண்டும். அதையும் மீறி பேசினால் இந்த ஜென்மத்தில் அவர்களின் இலக்கிய அந்தஸ்த்து வரிசையில் இடம் பெற முடியாது. இதில் தலித்திய இலக்கியவாதிகளும் அடக்கம். எங்கே நாமும் நம் எழுத்துகளும் கண்டுகொள்ளப் படாமல் விலக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிரந்தரமாக்கப்பட்டிருக்கிறது.

கவிதைகள் அரசியல் பேசுவதாக குற்றம் சுமத்துவார்கள். உரக்கப் பேசுவதாக கிண்டலடிப்பார்கள்.

சமூக அக்கறையுடன் எழுந்த வானம்பாடி இயக்கம் , கல்லூரி காலங்களில் என் போன்றவர்களுக்கெல்லாம் மிகுந்த நம்பிக்கைகையைக் கொடுத்த ஓரியக்கம். ஆனால் என்னவானது?

திராவிட இயக்க  அரசியலை மறுப்பதற்கான நியாயத்துடன் மார்க்சிய சார்பைக் கொண்ட வானம்பாடிகளும் பெரியாரை

ஒதுக்கிவைத்தார்கள்!

 வானம்பாடிகள் ஒரு சமூக அரசியல் புரட்சியை ஏற்படுத்தி இருக்க முடியும். ஆனால் கோவை ஞானி அய்யா அவர்கள் சொல்வது போல இவர்களும் "கவியரங்கம் நிகழ்த்த ஒரு சிறு குழுவைச் சேர்த்துக்கொண்டு கச்சேரி செய்து கொண்டிருந்தது. கவிதையில் கச்சேரியும் உரைநடையில் பட்டிமன்றமும் நடத்திக்கொண்டிருந்தார்கள். கருப்பொருளுக்கு கவிதை இயற்றுவது என்பதற்கு மேல் இது செல்லவில்லை. தாம் கேள்விப்படும் அரசியலை அப்படியே அங்கீகரித்துக் கொண்டார்களே தவிர கேள்விக்கு உட்படுத்திச் சரிவரத் தெரிந்து கொள்ளவில்லை. இவர்கள் சிந்தனாவாதிகளாக விமர்சகர்களாக விரிவடையவே இல்லை" என்கிறார்.

இவர்களும் திராவிட அரசியல் கட்சிகளின் விருதுகள், அங்கீகாரங்கள், பதவிகளுக்குள் தொலைந்து போனதும் நவீன இலக்கியவாதிகளின் ஓளிவட்டத்தை அதிகப்படுத்தியது.


பெரியார் எதிர்ப்பு என்பது தலித்திய சிந்தனாவாதிகளுக்கான இன்னொரு அடையாளமாக வளர்த்தெடுக்கப்பட்டது.


இத்தருணத்தில் பெரியாரியம் பேசியவர்களும் பெரியார் எதிர்ப்பை கையாண்டவிதம் என் போன்றவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது பெரியாரை எதிர்த்த உடன் " நன்றி கெட்டவன்' " பெரியார் மட்டுமில்லை என்றால் நீ செருப்பு போட்டு நடந்திருப்பாயா?..இத்தியாதி விமர்சனங்கள் சூத்திர இடைநிலை சாதிகளின் ஆதிக்கசாதி மனநிலையின் வெளிப்பாடாகவே இருந்தன. 


இதை எல்லாம் தாங்கிக் கொண்டு தொடர்ந்து இலக்கிய உலகில் பயணிப்பது என்பது நடைமுறையில் அவ்வளவு எளிதல்ல.


கி.ராவின் நேர்காணலில் இருந்து சில வரிகள்


இந்து பத்திரிகையிலிருந்து சம்ஸ் கேள்வி:

(மாபெரும் தமிழ்க்கனவு.. பக். 270)

தமிழ் இலக்கியவாதிகளும் சரி; பெரும்பான்மை சிறுபத்திரிகைகளும் சரி; திராவிட இயக்கத்தைப் புறக்கணித்தும் எதிர்த்துமே செயல்பட்டிருக்கின்றன. நவீனத் தமிழ் இலக்கியம் என்பது பிராமண, பிள்ளைமார் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திய இடம் என்பதும் இந்த இரண்டு சமூகங்களுமே திராவிட இயக்கத்தால் தங்கள் மேலாதிக்கத்தில் சரிவு கண்ட சமூகங்கள் என்பதும் இந்தப் போரிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடியவை அல்ல. தமிழ்நாட்டில் இன்று அரசியல் மீது ஒரு வெறுப்பும் தீண்டாமை உணர்வும் நிறுவப்பட்டிருக்கிறது என்றால், நவீனத் தமிழ் இலக்கியவாதிகளுக்கு அதில் முக்கியமான ஒரு பங்கிருக்கிறது. நான் விமர்சனங்கள் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை ஒரு இடையீடாக இல்லை என்று சொல்கிறேன். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாப்லோ நெருடா அவருக்கு ஒரு மகத்தான இடத்தைக் கொடுத்து எழுதுகிறார். அப்படியான ஓரிடம் இங்கே உருவாகவில்லை. தவறு ஒரு தரப்பினுடையது என்று மட்டும் நான் சொல்லவில்லை. ஆனால், இலக்கியவாதிகளின் பின் ஒரு சாதி அரசியல் இருந்தது. திராவிட இயக்கத்தினர் மீது மலிந்த பார்வை இருந்தது. இதற்கான அடிப்படை பிராமணியம்தான் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கி.ராவின் பதில்:

சரிதான். இந்த பிராமணியத்தைப் பத்திச் சொன்னீங்க பாருங்க, அந்தக் கருத்துல ரொம்ப ரொம்ப உடன்பாடு உண்டு எனக்கு. அது ‘மணிக்கொடி’ ஆட்கள்கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். நீங்க சொன்ன ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது.

மேலும் இதே நேர்காணலின் இறுதியில் கிராவின் வாக்குமூலமாக வெளிவரும் சொற்கள் …” எங்களால ‘மணிக்கொடி’ பக்கமும் போக முடியல, ‘திராவிட நாடு’ பக்கமும் போக முடியல. ரெண்டு மேலேயுமே விமர்சனம் இருந்துச்சு. …… நாம இதை ரெண்டையுமே சொல்லக்கூடிய நிலையில இல்லை. சொன்னா, முழுசா கட்டம் கட்டப்பட்டிருப்போம்கிறதுதான் உண்மை நிலை. ஆனா, இன்னைக்குத் தோணுது, நீங்க கேட்கும்போது, அண்ணாதுரையைப் பத்தி நாலு வார்த்தை பேசக்கூட நமக்கு வரலியேன்னு. நொந்துக்க ஏதுமில்ல, காலம் இப்படித்தான்!...”


# பெரியார்_நவீனஇலக்கியம்

No comments:

Post a Comment