Saturday, December 5, 2020

டிசம்பர் 06 அம்பேத்கர் நாள்

 இந்துவாக பிறந்த நான் இந்துவாக இறக்க மாட்டேன்”

1935 ல் ஒலித்த அம்பேத்கரின் குரல் காற்றில் கரைந்துவிடவில்லை.

அந்த மனிதருக்குள் அக்னிக்குஞ்சாக அணையாமல் இருந்த து.
அக்டோபர் 14, 1956 ஞாயிறு..
அன்று அசோகர் விஜயதசமி நாள்.
(அசோக சக்கரவர்த்தி பவுத்தம் தழுவிய நாள்)
நாக்பூரில் தான் அவரின் கனவு வரலாற்றி நிகழ்வானது.
உலக வரலாற்றில் ஒரே நாளில்
ஓரிட த்தில் கூடி 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள்
முதல் முறையாக மதம் மாறினார்கள்.



நாக்பூர்.. பவுத்தம் வளர்த்த
பூமி. இந்திய தொல்குடி மக்களாகிய நாகர்களின் மண்.
அங்கிருந்து தான் அம்பேத்கர் தன் வாழ்வில்
தன் கனவை நிறைவேற்றினார்.
எழைகளுக்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கு
மதம் தேவைப்படுகிறது. கடவுள் தேவைப்படுகிறார்”
என்பதை ஏற்றுக்கொண்ட சமூக விஞ் ஞானி.
அம்பேத்கர். கடவுளின் தேவை உளவியல் ரீதியானது.
இதை ஏற்றுக்கொள்வதில் அவர் அறிவு
அவருக்கு தடையாக இல்லை.
(For the poor, religion is a necessity. Religion is necessary
for people in distress. The poor man lives on hope. 'Hope!'- )
எப்போதும் தன்னை முன்னிலை படுத்தியே அவர்
பேசவில்லை. முடிவுகள் எடுக்கவில்லை.
ஒட்டுமொத்த சமூகத்தின் விடுதலையை அவர்
முன்னிலைப்படுத்தினார். அதற்காக அவர் எவருடனும்
சமரசம் செய்து கொள்ள முடியாமல் தவித்தார்.
பல தருணங்களில் அவன் தனிமரமாகவே நின்றார்.
அக்டோபர் 14, 1956.. அந்த நாள்..
அவரைப் பொறுத்தவரை.. எப்படி இருதிருக்கும்?
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

ரங்கூனிலிருந்து வந்திருந்த பவுத்த துறவி
நமிட் பிக்கு சந்திரோமொனி
வழி நட த்த அம்பேத்கர் உறுதிமொழி ஏற்ற நிகழ்வு..
“I will not practice untouchability and will regard all human beings as equal”
கூட்டம் ஒரு கணம் சலனமின்றி ஸ்தம்பித்து நிற்கிறது,
அதே உறுதிமொழியை மராட்டி மொழியில்
அம்பேத்கர் சொல்ல சொல்ல அங்கே கூடியிருந்தவர்கள்
உறுதிமொழி ஏற்கிறார்கள்…
வரலாறு மவுனமாகி தன்னை
ஒரு சாட்சியமாக நிறுத்திக்கொள்கிறது..
.. நாக்பூரில் அந்த தீக்ஷாபூமிக்கு போயிருக்கிறேன்.
அந்த பெரிய மைதானம்.. அம்பேத்கர் .. பேசிய அந்த இடம்..
அந்தக்கூட்டம்.. அந்த மக்கள்… அவர்களின் நம்பிக்கை..
என்னை மெல்ல அசைத்துப்போட்ட து.
வாழ்வில் மிகப்பெரிய ஒரு முடிவு
எடுத்திருக்கிறார்.
அவர் பின்னால் அவரை நம்பிய மக்கள் கூட்டம்..
அவர் மன நிலை எப்படி இருந்திருக்கும்..?
அந்த மன எழுச்சியின் அலைகள் எனக்குள் ..
சற்றொப்ப 45 நிமிடங்களுக்கும் அதிகமாக அந்த நினைவு
மண்டபத்தில் உட்கார்ந்திருந்தேன்..
அந்தக் குரல் என் காதுகளில் ஒலித்த து.
அந்த மக்களின் முகங்கள் பேரலையாக எழுந்து வந்தன.
அழ வேண்டும் போலிருந்தது. அழவில்லை.
அழுதுவிட்டால் இந்த மனசின் கனம் இறங்கிவிடுமோ..
வேண்டாம். இந்தப் பூமி சுமந்த
கனம் எனக்குள்ளும் அப்படியே இருக்கட்டும்.




நாக்பூரில் அம்பேத்கர் தங்கியிருந்த
ஹோட்டல் சியாம்
(Hotel Shyam in Sitabuldi area of the city has historic importance as Dr Ambedkar had stayed here for four days, from October 11 to 16 in 1956,)
அந்த அறையில் அதன் பின் வேறு யாருமே
தங்குவதற்கு அந்த ஹோட்டல் உரிமையாளர்
அனுமதிக்கவில்லை. அந்த அறை அந்த மனிதரின்
தூக்கமில்லாத அந்த இரவுகளை
அப்படியே சுமந்து கொண்டிருக்கிறது.
அந்த ஹோட்டலை அரசுடமையாக்க
அம்பேத்கரியவாதிகள் எடுக்கும் முயற்சி
கைகூடவில்லை. ஹோட்டல் உரிமையாளர்கள்

மாறிய பின் என்ன நிலவரம் என்பது தெரியவில்லை.
CERI கருத்தரங்கிற்காக நாக்பூர் போயிருந்தப்போது தான்
இந்த அனுபவம் கிட்டியது. கருத்தரங்கில்
காலை முதல் அமர்வில் கொஞ்சம் வாங்கிக்கட்டிக்கொண்டேன்.
பவுத்தம் தழுவிய பின் மக்களின் வாழ்க்கையில்
என்ன மாறுதல் ? என்ற கேள்வியை முன்வைத்தேன்.
எனக்குப் பின் பேசியவர்..
(என்னை வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார்)
"புதியமாதவி..உங்களுக்குத் தெரியுமா..
என்ன நடந் த து என்று…
எம் அம்மாவிடம் கேளுங்கள்.
என்பாட்டியிடம் கேளுங்கள்.. என்ன நடந்த து என்று
அவர்கள் சொல்வார்கள் "என்றார்.
திருமணம் முடிந்தப் பின் அன்றிரவு மணப்பெண்ணை
அந்த ஊரிலிருக்கும் பண்ணையார் வீட்டுக்கு
அனுப்ப வேண்டும். அவன் அனுபவித்தப் பிறகுதான்
அந்தப்பெண் அவள் கணவனுக்கு உரியவள்.
பவுத்தம் தழுவிய பிறகு..
“போடா எங்க பொண்ண அனுப்பி வைக்க முடியாது “
என்று சொல்லும் சுயமரியாதையை
பவுத்தம் எங்களுக்கு கொடுத்திருக்கிறது
என்று முழங்கினார்.

நாக்பூரில் பலரைச் சந்தித்தேன். தோழி வின்னிமேஷ்ரம்
அவர் ஆரம்பித்திருக்கும் பவுத்த பள்ளிக்கூடம்
இதெல்லாம் என்னை மிகவும் கவர்ந்தன.
என் முதல் நாவல் பச்சைக்குதிரையில்
வின்னிமேஷ்ரமும் அவள் பவுத்தப்பள்ளியும்
தானே வந்து தன்னை எழுதிக்கொண்டன.
பவுத்தம் தழுவி 2 மாதங்களுக்குள்
அம்பேத்கர் மறைந்துவிட்டார்.
டிசம்பர் 1954 ல் ரங்கூனில் நிகழ்ந்த பவுத்த மா நாட்டில்
அவர் கலந்து கொண்ட தற்குப் பின் இந்த
மதமாற்ற முடிவை நோக்கி வேகமாக
பயணிக்கிறார். காலம் அவருக்கு அதற்கு மேல்
அவகாசம் கொடுக்கவில்லை.
அவர் இன்னும் சில ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால்
ராமச்சந்திர குஹா சொல்வது போல
அவருடைய பவுத்தம்.. அவர் கண்ட புத்தர்..
இன்னும் தெளிவாகி இருக்கலாம்.


டிசம்பர் 06 அவர் தன் மக்களிடமிருந்து விடை பெற்ற நாள்..

மாமனிதரைப் போற்றுவோம்.

#December6_Ambedkar

No comments:

Post a Comment