Monday, February 11, 2019

கறுப்பி நான்..

நான் கறுப்பு பெண்
இந்தப் ‘பெண்” - நான் பெண் என்று சொல்வதிலிருந்து
வித்தியாசமானது.
நான் “கறுப்பு” என்று சொல்வதிலிருந்தும்
வித்தியாசமானது.
‘கறுப்பி’ என்று சொன்னால்
என் சருமத்தின் நிறத்தைச் சொல்வதல்ல அது.
நான் கறுப்பி.
கறுப்பு நான் என்பதால்
அணுகுவதற்கு கடினமானவள் என்பதல்ல.
கறுப்பு நான் என்பதால்
காதுவளையத்தைப் பிடித்து திருக தயாராக வேண்டும் என்பதல்ல.
நான் கறுப்பு என்பதால்
கற்பித்தல் கடினம் என்பதல்ல.
நான் கறுப்பு என்றால் என்ன பொருள்
தெரியுமா?
எல்லாவகையிலும் தனித்துவமானவள்
என்னால் முடியாத து எதுவுமில்லை
நீங்கள் அறியாத தையும் அறிந்து கொள்ளும்
தகுதிப்படைத்தவள்.
நான் தனித்துவமானவள்.
நான் கறுப்பு பெண்.
‘கறுப்பு” என்ற சொல்லை அழுத்தமாகச் சொல்லும்போது
அது வெறும் இனக்குறியீடு மட்டுமல்ல.
அது நான் வாழும் எங்கள் வாழ்க்கையின் அர்த்தம்.
எதைச் செய்து பழக வேண்டும்
எதைச் செய்யக்கூடாது
என்ற எதிர்ப்பார்ப்புகளில்
கறுப்பு என்றால் என்னவென்று
இந்த உலகத்திற்கு பாடம் புகட்ட
நாங்கள் தயாராகிறோம்.
எப்படி என்றால்…
சில கடைவீதிகளில் நீங்கள்
ஓரக்கண்ணால் பார்க்கும் பார்வை,
மின் தூக்கியில் அவளைக் கண்டவுடன்
உங்கள் பணப்பையை இறுகப்பிடித்துக் கொள்ளும் தருணம்..
இலக்கணப்பிழையின்றி பேசினால்
‘வெள்ளையர்களைப் போல நடிப்பதாக’
உங்கள் விமர்சனம்.
மிடுக்கான உடையில் அறைக்குள் நுழைந்தவுடன்
ஆச்சரியமாகப் பார்க்கும் உங்கள் முகங்கள்
மூன்றாம் வகுப்பு சரித்திரப்பாட த்தில்
‘அடிமைகள்’ அத்தியாயம் வந்தவுடன்
திரும்பிப் பார்க்கும் உங்கள் பார்வை…
கறுப்பு பெண் நான்.
நான் கறுப்பி என்பதால்
உங்கள் தகுதிப்படி நிலையில் என்னைப் பொருத்திக்கொள்ள
கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது.
பரந்த உலகத்தில் எனக்கான இட த்தைக்
கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது.
இனிப்பு க் குச்சி மீது பரவிய
ஒரே ஒரு கறுப்பு சாக்லெட்டாய் நான்.
இந்தக் கறுப்பு இனத்தின் ஒரே அடையாளம்
நான் மட்டுமா?
புரிந்து கொள்ள முடியாத இந்தக் குழப்பத்திலிருந்து
வெளியில் வந்துவிட்டேன்.
சிலரால் இன்னும் வரமுடியவில்லை.
எனக்கு கிடைத்த ஆதரவு
அவர்களுக்கு இல்லாமல் போய்விட்ட தே!
எல்லோரும் வாழ்க்கையில் எல்லா தருணங்களிலும்
கறுப்பு ஆளுமையாய் இருப்பது
சாத்தியமில்லை தான்.
எல்லோருக்கும் வரப்போகும் ஆபத்துகளிலிருந்து
பாதுகாக்கும் பெற்றோரின் கரங்கள் கிடைப்பதில்லை.
வளர்ச்சியைச் செதுக்கும் வளர்ப்பு
வளரும் பருவத்தில்
வாய்ப்பதில்லை எல்லோருக்கும்.
வாய்த்துவிடுவதில்லை எல்லோருக்கும்
என்னைப் போல வாய்ப்புகளும்
நான் கறுப்பு பெண்.
ஆம்…
கடைவீதியிலோ மால்களிலோ
கேட்கிறது அவர்களின் குரல்.
எனக்குப் புரிகிறது
என்னிடம் இருக்கும் எதோ ஒன்றை
அவர்கள் விரும்புகிறார்கள் என்பது.
அது என்னிடம் இருக்கிறது என்பதால்
அதை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள
வேண்டுமா என்ன?
எனக்கு வயது 16… என்பதும்
இன்னும் இந்த வயதுக்கான அது நடக்கவில்லை
என்பதும்
அவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
எனக்குத் தெரியும்
நான் மற்றவர்களைப் போல இல்லை.
ஆனால் எனக்குப் புரியவில்லை
இதற்காக ஏன் வருத்தப்படுகிறேன் என்று.
நான் கறுப்பு பெண்..
ஆதலால்
கடந்த காலத்தை வெளியிலிருந்து பார்க்க
கடினமாக இருக்கிறது.
ஆனால் சற்று யோசித்துப் பார்த்தால்
குழப்பம் தெளிகிறது.
“இந்த உலகம் என் வரவுக்காக காத்திருக்கிறது”
பணம் சம்பாதிக்க கடவுள் என்ன கொடுத்திருக்கிறார்?
நான் வேலிகளைத் தாண்டுவேனா?
உலக மேன்மைக்காக அமையுமா என் வாழ்க்கை?
இப்படியாக நான் என்னவாகப் போகிறேன்
என்று அறிந்துகொள்ள
இந்த உலகமே ஆர்வமாக இருக்கிறது.
நான் கறுப்பு பெண்.
என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு
நானே வழிகாட்டி.
மாதா பிதாவுக்கு
அவர்களின் இலட்சிய வடிவம்.
வயதுக்கு மீறிய அறிவானவள் நான்.
இருண்ட அறையில் வெளிச்சம் நான்
உங்கள் விழிகளின் மகிழ்ச்சி நான்.
உள்ளத்தில் எரியும் அணையா நெருப்பு நான்.
என் குடும்பத்தின் விடுதலை கீதம் நான்.
எனக்கு முன் வாழ்ந்தவர்களின் உழைப்பு நான்.
கடினமான காலமும் நான்.
மகிழ்ச்சியான நேரமும் நான்.
தேவைப்படுபவர்களுக்கு எப்போதும் நான்.
ஏனேனில்…
நான் வலிமையானவள்
சுதந்திரமானவள்
கறுப்பி.
நான்…
இதுதான் நான்.
இந்தக் கவிதையின் நான்..
என்னைப் பற்றியது தான்.
( நன்றி.. POWER POETRY.ORG.
 .. IAM A BLACK GIRL)
இந்த மாதம் - பிப்ரவரி - கறுப்பு இனத்தின் சிறப்பு மாதம்.
அப்பெண்ணின் இனத்தின் கறுப்பு கவிதையை
 மொழியாக்கம் செய்திருக்கிறேன்..அவள் முகம்
 என்னுடன் பயணிக்கும் இருள் சூழந்த
 இரவு நேரம் 12.24... நாளை விடியும் தானே.
. நம்பிக்கையுடன் அவளுடன் நானும் ...

No comments:

Post a Comment