Wednesday, November 21, 2018

காலச்சுவடும் சு.ராவின் நினைவுக்குறிப்பிலிருந்து..

காலச்சுவடு.. .. சு.ராவின்
நினைவுக்குறிப்பிலிருந்து சில வரிகள்
இதை இப்போ ஏன் எழுதுகிறேன் என்று
வாசிப்பவர்கள் குழம்ப வேண்டாம்.
சத்தியமா இப்போ நான் தேடியது பாரதிதாசனையும்
பாப்லோ நெருடாவையும் தான்.
வீட்டில் நான் இல்லாத சில மாதங்களில் என் 
புத்தகங்களின் அடுக்குவரிசை
மாறியதால் வந்த வினை இது!

என் கையில் இப்போது அகப்பட்ட து எப்போதோ
நான் வாசித்த சுந்தர ராமசாமியின் புத்தகம்
“வானகமே இளவெயிலே மரச்செறிவே” 
சு.ராவின் நினைவிலிருந்து சில குறிப்புகளில்
அடிக்கோடிட்ட என் பென்சில் ...
இன்னும் கூர்மை மாறாமல் என் கண்களில்
அப்படியே தென்பட்டது..
நீண்ட இடைவெளிக்கும் அனுபவத்திற்கும் பிறகு
சில அடிக்கோடுகள் வெறும் குறிப்புகளாக
மட்டும் மாறி இருக்கின்றன.
ஆனால் இந்த அடிக்கோடுகள்..?
காலையிலிருந்து இந்த வரிகளை
அசைப்போட்டுக்கொண்டிருக்கிறேன்.
சில கதவுகளைத் திறக்கின்றன.
சில கதவுகள் ‘டாமர்’னு மூடும் ஓசை ..
காற்று வேகமாக அடிக்கிறது.
இதோ அந்த வரிகள்..:
“நான் காலச்சுவடு இதழை ஆரம்பித்த போது
தெளிவான மன நிலையில் இருக்கவில்லை. …
….இதழின் பெயரைக் கண்டுப்பிடிக்கும் தவிப்பில்..
சிற்றிதழ்களுக்குப் பொருந்தும் சுமார் 100 பெயர்கள்
வரைத் திரட்டினோம். அதன் பின் கடந்த 
அரை நூற்றாண்டில் மலர்ந்த சிற்றிதழ்களின்
 அநேகத் தலைப்புகள் எங்கள் பட்டியலில்
 இருந்தவையோ பரிசீலனையில் இருந்தவையோ தாம். 
ஆனால் சுபமங்களா, கவிதாசரண்,சுந்தர சுகன்
 போன்ற சில பெயர்கள் எங்கள் கற்பனைக்குத்
 தட்டுப்படாதவை. 
இந்தச் சந்தர்ப்பத்தில் க. நா.சு. சொன்னது நினைவுக்கு 
வருகிறது. அவர், ஒரு முறை 
பிரபலமான புள்ளி ஒருவரைப்
பார்க்கப் போனாராம். அப்போது அவர்
க.நா.சுவிடம்
ஒரு பத்திரிகை தொடங்கப்போகிறேன்.
‘க’ வில் தொடங்கும் தலைப்பு ஒன்று சொல்லு
என்று கூற க.நா.சு. “கக்கூஸ்” என்றாராம். 
மூன்று ‘க’ இருந்தும் கூட ஏனோ அவர்
அந்தப் பெயரை வைக்கவில்லை 
என்று வருத்தப்படுவது போல சொன்னார் க.நா.சு.
…….
எழுதக் கேட்க வேண்டியவர் பெயர்களையும்
கேட்க கூடாதவர் பெயர்களையும் பட்டியல் போட்ட
போது , முதல் பட்டியல் மிகச் சிறியதாகவும்
இரண்டாம் பட்டியல் மிக நீளமாகவும் இருந்தது.

1 comment: