Friday, June 9, 2017

பயணிப்புறா

Image result for பயணிப்புறா
கருக்கலின் மெல்லிய வெளிச்சத்தில்
உன் மெலிந்தக் கைகளைத் தொட்டுத் தடவிக்கொண்டிருக்கிறேன்.
உனக்குப் பிடித்தமான நெருடா கவிதைகளை எடுத்து வாசிக்கிறேன்.
அன்றிருந்த நாம் அன்றிருந்தவர்கள் அல்ல..
புல்வெளியில் விழும் பனித்துளிப் போல...
நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அந்த வரிகளை
என் ஆன்மா அவளை இழந்ததால் நிறைவுற்றது
என் குரல் கம்மியது.
நீ இருமினாய். உன் எச்சிலில் சளியும் இரத்தமும் கலந்திருந்தன.
துருத்திக்கொண்டிருக்கும் உன் நெஞ்சு எலும்புகள்
ஈட்டியைப் போல அவ்விருளைக் கிழித்துக்கொண்டு வெளிவந்தன.
மூடிய விழிகளை மெதுவாக திறக்கிறாய்.
நானும் நெருடாவும் நனைகிறோம்.
வறண்ட உன் இதழ்களிலிருந்து காய்ந்துப் போன சருகுகளைப் போல
முத்தங்கள் உதிர்கின்றன.
விதைகள் தற்கொலை செய்து கொண்ட  என் பூமியில்
மழைப் பெய்தால் என்ன?
பொய்த்தால் என்ன?
ஏறி இறங்கும் உன் மூச்சுக்கூட்டிலிருந்து
வாலையும் சிறகுகள் போல விரித்து
பறந்து செல்கிறது பயணிப்புறா.
வல்லரசுகளின் துப்பாக்கிகள் வரிசையாக
வெடிக்கின்றன.
பயணிப்புறாவின் கடைசிப் பயணத்தைப் பார்க்க முடியாமல்
காடுகள் பற்றி எரிகின்றன.


5 comments:

  1. உணர முடிந்தது
    மனம் கனக்கச் செய்து போகும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அர்த்தம் பொதிந்த வரிகள் அருமை.

    ReplyDelete
  3. //அன்றிருந்த நாம் அன்றிருந்தவர்கள் அல்ல..
    புல்வெளியில் விழும் பனித்துளி போல...//
    (நெருடாவின் வரிகளா?) அழகு.
    //வறண்ட உன் இதழ்களிலிருந்து காய்ந்து போன சருகுகளைப் போல முத்தங்கள் உதிர்கின்றன.//
    மனதை வருடும் வார்த்தைகள்.
    அழகிய ஆக்கம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் , நெருடாவின் வரிகள் தான் அவை. மிக்க நன்றி.

      Delete