Tuesday, February 10, 2015

கண்ணாடி நகரத்தில் சிதையும் என் பிம்பங்கள்முகநூல் வழியாக கவிஞர் ஜெயதேவன் என் முகவரி பெற்று
கண்ணாடி நகரம் - அவர் கவிதை தொகுப்பை அனுப்பித்தந்தார்.
செளந்தர சுகன் ,மற்றும் கல்வெட்டுப்பேசுகிறது ஆகிய சிற்றிதழ்களில்
கவிஞர் ஜெயதேவன் கவிதைகள் அறிமுகம் ஏற்கனவே எனக்குண்டு.
அப்போதெல்லாம் அவர் கவிதைகளில் தென்படும் வானம்பாடிகளின்
வாடையை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவர் கவிதை தொகுப்பிற்கு
கவிஞர் யவனிகா கொடுத்திருக்கும் அணிந்துரையில் அவர் வானம்பாடிக்
கவிஞர் என்பதையும் மாறிவரும் இலக்கியப்பரப்பில் அவர் தன்னை
நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் முயற்சிகளையும் தெளிவாக
உணர்த்திவிடுகிறார். அவருடைய விமர்சனங்கள் கண்ணாடி
நகரத்தின் உடைபடாத பிம்பங்களை மிகவும் தெளிவாகக்
காட்டிவிடுகிறது.

96 பக்கங்களில் நம் வாசிப்புக்கு வரும் கண்ணாடி நகரத்தின்
16 பக்கங்களில் நான்கு பேர் இவர் கவிதைகள் குறித்து
அணிந்துரையாகவும் அவர்களில் அமிர்தம் சூர்யா மட்டும்
விதிவிலக்காக சில விமர்சனப்பார்வைகளையும் வைத்திருக்கிறார்.
கவிதைகளில் பார்க்கும் கண்ணாடி நகரத்தின் 4 வீதிகளிலும்
இந்த நால்வரும் நடந்திருக்கிறார்கள். கண்ணாடி நகரம் குறித்த
ஒட்டு மொத்தப் பார்வையையும் இவர்களின் பதிவுகள்
மொத்தமாக அடக்கிவிடுகின்றன.

பொதுவாக கவிதை நூலுக்கு ஆர்வக்கோளாறில் நாம் இணைக்கும்
அதிகப்படியான அணிந்துரைகள் கூட வாசகனுக்கு ஒரு தற்காலிக
இடையுறாகி அவன் பார்வையை மறைக்கும் ஆபத்தை விளைவிக்கிறது
கண்ணாடி நகரத்தில் எவ்வளவொ முயற்சி செய்தும் என் வாசிப்பில்
அந்த அணிந்துரைகளின் பார்வை அடிக்கடி வந்து இடையூறு செய்தது
என்பதால் இதை எழுத வேண்டியதாகிவிட்டது!.


வானம்பாடிகளின் பலமும் பலகீனமும் அவர்களின் சொல்லாடல்களும்
சொல்லாடல்களின் ஊடாக அவர்கள் கொண்டுவர எத்தனிக்கும்
கருத்தாடல்களும் தான். முதலாளித்துவத்திற்கும் உலகமயமாதலுக்கும்
எதிரான தம் கருத்துகளை ஒட்டு மொத்தமாக பதிவு செய்யவே
இவர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். இன்றைய சூழலில்
மூன்றாம் உலகப் பிரச்சனைகள் சவால்கள் முன் நிற்கின்றன.
நவீன காலனி ஆதிக்கத்திலிருந்தும் புதிய பழைய ஆதிக்கத்தில்
இருந்தும் தங்களையும் தங்கள் கவிதைகளையும் விடுவித்துக்கொள்ள
இவர்கள் தொடர்ந்துப் போராடுகிறார்கள். இப்போராட்டத்தில் தங்களையும்
தங்கள் இருப்பையும் அடித்து நொறுக்கும் அதிகாரம், அமைப்பு ஆகியவை
அறிவியல் என்ற பெயரில் தங்களிடமும் செயல்படுவதை இவர்கள்
உணர்ந்திருக்கிறார்கள். தங்களிடம் தங்களுக்காக மிஞ்சி இருக்கும்
தங்கள் சொற்களை , ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் சொற்களைச் சேகரித்து
தனக்கான கவிதையைக் கண்டு கொள்ள முனையும் போது சொற்கள்
மீண்டும் தற்காலிக இணைப்பை விட்டு தகர்ந்துப் போகின்றன.
இதைக் கவிஞ்ர்களின் இயலாமை என்று சொல்ல முடியாது.
ஏற்கனவே இருக்கும் சொற்களை வைத்துக்கொண்டு
புதிய உலகத்திற்குள் நுழையும் தருணத்தில் அந்தப் புதிய
உலகத்தின் இயலாமையை அதன் மீது தனக்கிருக்கும் அதிருப்தியை
வெளிககாட்ட முனையும் ஒவ்வொரு முதல் பயணியும்
சந்திக்க வேண்டிய புள்ளிகள். அதனால் தான் சொற்களும்
கருத்துகளும் கலந்து ஒட்டு மொத்தமாக ஒரு இலக்கிய
ரசவாத வித்தையை செய்யமுடியாமல் போய்விடுகிறது.

கண்ணாடி நகரத்தில் கவிஞர் ஜெயதேவன் ஒரு தேர்ந்தப் படைபபாளராக
வெற்றி பெற்றிருக்கும் புள்ளிகள் உண்டு. சில வரிகளிலும கவிதைகளிலும்
அது சாத்தியப்படாமலும் போயிருக்கிறது.
வீட்டுக்கு வராத வெளி, முதல் தகவல் அறிக்கை, காலிக்கோப்பைகள்
என்ற மூன்று கவிதைகளிலும் சொற்களும் படிமங்களும்
கண்ணாடி நகரத்தில் கவிஞனின் பிம்பங்கள்.

"இது கணினிகள் கர்ப்பம் சுமக்கும் காலம்"
என்ற வரியிலிருந்து மீள்வதற்கு சில மணி நேரங்கள் ஆனது.

கவிஞரின் கூர்மையான வரிகள் கவிதைகளில்
ஆங்காங்கே பளிச்சிடுகின்றன.

மின் காந்த அலைகளை உண்டு வாழும் வாழ்க்கையில்
"அவள் இப்போது மறந்துவிட்டாள்
ஒரு ஆணை முத்தமிடுவது எப்படி என்பதை"
என்று இன்றைய ஐடி அடிமை வாழ்க்கையில் இயல்பான
காதலும் ஆண் பெண் உறவும் தொலைந்துப் போனதை
மிக அருமையாக தன் கவிதைகளில் கொண்டுவந்திருக்கிறார்.

கவிதை வெறும் அழகியல் அல்ல.
கவிதை வாழ்க்கை. வாழ்க்கையின் ஓர் அங்கம்.
கவிதை வாழ்க்கையின் கனவு மட்டும் அல்ல.
கவிதை நாம் வாழ விரும்பும் உலகைக் கண்டு களிக்கும் கனவு.
கவிதையும் கவிஞ்னும் வேறு வேறு அல்ல.
உயிரைப் போல ஒவ்வொரு சொல்லும் கவிஞனிடம்.
வாசிப்பவனை சில வரிகள் மயக்கும். சில வரிகள் சிந்திக்க வைக்கும்.
சில வரிகள் இயலாமைகளை மட்டுமே சொல்லி மவுனத்தில் அழும்
சில வரிகள் எப்பொதும் தத்துவ விசாரணைக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும்.
வானம்பாடிக் கவிஞர்கள் தெத்தியடியாக சில உண்மைகளை
உடைத்து சொல்லிவிடுவார்கள். அந்த உண்மை உண்மையை
நேசிக்கும் வாசகனைச் சுடும். கண்ணாடி நகரத்தில்
அப்படியான சில அனல் பறக்கும் வார்த்தைகளில்
நானும் என்னைச் சுட்டுக்கொண்டிருக்கிறேன்.

பொங்கள் உழவர் திருநாள், தமிழர் திருநாள்..
அதனால் தான் அந்த நாளை நாம் கொண்டாட வேண்டும்
என்று என் மகனிடம் பொங்கல் திருநாள் குறித்து
விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த
என் மகன். என்னிடம் கேட்டான்...

உழவும் உழவர்களும் இவ்வளவு பெருமைக்குரியவர்கள்,
போற்றுதலுக்குரியவர்கள், கொண்டாடப்பட வேண்டியவர்கள்..
என்றால்...
ஏன் அம்மா...
நீயும் தந்தையும் உழவர்களாக இல்லை?
ஏனம்மா என்னை நீ ஒரு உழவனாக்கவில்லை?

என் மகன் கேட்ட அதே கேள்வியை கவிஞர் ஜெயதேவன்
தன் கவிதைகளின் ஊடாக என்னிடமும் ...

"செடி பார்க்க வேண்டுமென்றால்
நீ செடியாகு..

இல்லை நட்டு வை உன் மகளை/மகனை
உன் களத்து மேட்டு ஈரமண்ணில்
அவள் நிச்சயம் பார்ப்பாள் குளம்..

கண்ணாடி நகரம் என்னையும் என் வாழ்க்கையையும்
என் வாழ்க்கையின் கீறல்களையும் எனக்கு காட்டியது.
இதுவே கண்ணாடி நகரத்தில் என் பிம்பம்.

----


நூல்: கண்ணாடி நகரம் - கவிதை தொகுப்பு
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.
பக்: 96  விலை ரூ.70/

2 comments:

  1. வணக்கம் மேடம்.கண்ணாடி நகரம் பற்றிய தங்களுடைய மதிப்புரையை ஒரு நண்பரின் உதவியால் தங்களுடைய வலைத்தளத்தில் பார்வையிட்டேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். பல்வேறு இதழ்களில் தங்களின் செயல்பாடுகளை மற்றும் படைப்புக்களை பலவருடங்களாக வாசித்தும் கவனித்தும் வந்திருக்கிறேன். தங்கள் மீது எப்போதும் மரியாதை உண்டு. சுகன், மற்றும் சொர்ணபாரதி ஆகியோரும் தங்களுடைய சமூக செயல்பாடுகள் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். வெளிமாநிலங்களில் இயங்கிவரும் பெண்படைப்பாளிகளில் அம்பைக்கு அடுத்து தங்களின் பெயரைத்தான் இதுவரை நான் முன்னிறுத்தி வந்தேன். அதனால்தான் தங்களுடைய மதிப்புரை எனக்கு உயர்ந்ததாகக் கருதி நூல் அனுப்பி வைத்தேன். அதற்கு உங்களுடைய விரிவான மதிப்புரை ஒரு மகுடமாகவே அமைந்திருக்கிறது என்று கருதுகிறேன். முழுதும் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். வழக்கமான நடைமுறையிலிருந்து மாறிச் செய்யவேண்டும் என்பதற்காக நான்குபேரிடம் முன்னுரை வாங்கினேன். நவீனக் கவிஞர்களில் பலர் முன்னணியில் இருப்பதால் ஒருவரைத் தேர்வு செய்வதில் இடர் இருந்தது. அத்தோடு அவர்களுக்குள்ள பணியில் முழுநூலையும் வாசித்து எழுவதில் அவர்களும் இடர் உண்டு. எனவே நான்கு முன்னுரைகளை தவிர்க்க முடியவில்லை. தங்களின் கவிதை குறித்தான கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். உங்களுடைய அயராத அன்றாடப் பணிகளுக்கு இடையே இவ்வளவு ஆழமான மதிப்புரையை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றியும் அன்பும்.... ஜெயதேவன்.

    ReplyDelete