Wednesday, November 2, 2016

ஒரு கோப்பையின் விளிம்பில்


 " கொஞ்ச நேரத்திற்கு கவித்துவம், இரசனை,
கவிதை, அழகியல், நுண் அழகியல்
என்பதையெல்லாம் பேசி உரை நிகழ்த்துவதை
நிறுத்திவிட்டு மெளன அஞ்சலி செலுத்தவும் " *

தமிழ் இலக்கியப்பரப்பில் எதிர்ப்பிலக்கியம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.
கலை இலக்கிய வடிவங்கள் பெரும்பாலும் கலகக்குரலின்
வெளிப்பாடுகள் தான்.  அதிகாரத்திற்கு எதிராக தன் ஆயுதங்களுடன்
களத்தில் நிற்பவன் கலைஞன், கவிஞன்.  பொதுஜன அபிப்பிராயங்களுடன்  அவன் ஒத்துப்போவதில்லை. பொதுஜனத்திற்கு விருப்பமானதை மட்டுமே கொடுக்கும் வியாபர உத்திகள் அறியாதவன் அவன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் நாட்டார் கலை இலக்கிய வடிவங்கள்
பத்திரிகையோ தொலைக்காட்சியோ கணினியோ இல்லாத
அக்காலத்தில் சமூக தளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த
வல்லவையாக இருந்திருக்கின்றன.
சித்தர்களின் பாடல்கள்  எதிர்ப்பிலக்கியம் தான். சித்தர்கள் இறை நம்பிக்கையை முற்றாக மறுக்கவில்லை. நாத்திகம் பேசவில்லை.
ஆன்மிக தளத்தில் சித்தர்களின் கலகக்குரல் ஒரு முக்கியமான
புரட்சியின் அம்சமாகும்.

பெண்ணிய தளத்தில் இந்திய வரலாற்றில் ஆணுக்கும் ஆண் ஏற்படுத்திய அதிகார கட்டமைப்பிற்கும் எதிராகக் குரல் கொடுத்த
புத்த பிக்குனிகள் பாலி மொழியில் எழுதி இருக்கும் "தேரி கதா "
எதிர்ப்பிலக்கியமாகும்.
சிலப்பதிகாரம் பேசும் அறமும் :அறம் பிழைத்தவன் நாட்டை ஆளும்
அரசனாகவே இருந்தாலும் ஒரு சாதாரண பெண்ணால் அவனை
எதிர்த்து வெற்றி பெற முடியும் என்ற கருத்தை முன்வைக்கும்
எதிர்ப்பிலக்கியம் ஆகும். இப்படியாக எதிர்ப்பிலக்கியத்திற்கு
வரலாறு நெடுகிலும் ஒரு சரித்திரம் உண்டு. ஆனால் எதிர்ப்பிலக்கியத்திற்கு என்று தனிப்பட்ட வடிவமோ மரபோ இல்லை.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எதிர்ப்பிலக்கியம் தனக்கான
வடிவத்தை கண்டடைகிறது, அந்த வடிவத்தின் ஊடாக தன்னைப்
புதுப்பித்துக்கொள்கிறது.

கடந்த கால எதிர்ப்பு இலக்கியத்தின் தீட்டிய கூர்முனை எதை நோக்கி
தீட்டப்பட்டிருக்கிறது, யாருக்கு எதிராக/ எதற்கு எதிராக என்ற
அடையாளங்கள் ஓரளவு வெளிப்படையாக தெரிந்தன.
ஆனால் இன்றைய நவீன யுகத்தில் , மக்களாட்சியின் மகத்துவங்கள்
வாழ்ந்து கொ ண்டிருக்கும் காலத்தில் (!) , எதிர்ப்பிலக்கியம்
தனிப்பட்ட நபரையோ தனிப்பட்ட ஆட்சி அதிகாரத்தையோ
எதிர்க்க முடியாத நிலை. அரூபமாக மக்கள் கூட்டத்தில் மக்களில்
ஒருவனாக கலந்து கரைந்து நிற்கும்  அதிகாரப்புள்ளியை அடையாளம்
காண்பதும் அதை எதிர்ப்பதுமாக இரண்டையும் ஒரே நேரத்தில்
எதிர்ப்பிலக்கியம் செய்கிறது. அடையாளம் காண்பதில் அரசியல்,
சாதி மதம் என்று பல பின்னூட்டங்கள் தானாகவே வந்து சேர்ந்து
கொள்கின்றன.
இப்பின்னணியில் மலேசிய மண்ணில் புலம்பெயர்ந்து வாழும்
தமிழரான - மலேசிய தமிழரான கே.பாலமுருகனின்
"தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் " கவிதைத் தொகுப்பு
என் கவனத்திற்கு வந்தது.
தொலைக்காட்சியில் காட்டப்படும் மலேசியத் தமிழர்கள், சுற்றுலா
பயணியாக மலேசியாவில் சந்திக்கும் பளபளப்பான  தோற்றமும்
மிடுக்கும் மலேசியா மண்ணில் வாழ்க்கை சுகமானது என்ற ஒரு
பிம்பத்தை கட்டமைத்திருக்கிறது. மலேசியாவில் பாலாறும் தேனாறும்
பாய்ந்து வளம் கொழிக்கும் வாழ்க்கை வாழ்கிறார்கள் மக்கள் என்ற
கருத்தை மிகவும் கவனமாக ஊடகங்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து காட்சிப் படுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள்.
இச்சூழலில் இந்த வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கும்
பாலமுருகன் தன் குரலை உரக்கவே பதிவு செய்திருக்கிறார்.
வல்லினம் ம.நவீன் சொல்வது போல "அதிகாரத்தோடு ஒத்துப்போவது, அதிகாரத்திடம் சம்மரசம் செய்து கொள்வது, அதிகாரத்தின் முன் மெளனம் சாதிப்பது, அதிகாரம் வீசும்
எச்சில் இலைக்காக வாலாட்டி நிற்பது எனத் தமிழ்ச்சூழலில்
பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட பல எழுத்தாளர்களின் வளைந்த
முதுகெலும்புகளுக்கு மத்தியில் படைப்பிலக்கியம் மூலம்
பாலமுருகன் தனது எதிர்க்குரலை மீண்டும் மீண்டும் பதிவு
செய்வதே உவப்பான சூழலை உருவாக்கி இருக்கிறது " எனலாம்.
"அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 
ஒரு கவிதைக்குள் நீங்கள் நுழைந்திருக்கிறீர்கள்" என்று
பாலமுருகனே  தன் கவிதைகள் குறித்து அறிமுகம் செய்து
கொள்கிறார். அவர் வாழும் சமூகத்திற்கு அவசரமாக அறுவை
சிகிச்சை தேவை என்பதால் அவர் கவிதைகள் தன்னை அறுவை
சிகிச்சைக்குட்படுத்திக் கொள்கின்றன.
ஆண்களின் கழிப்பறை கவிதையில்
நடைமுறை காட்சியை எள்ளலுடன் விவரித்து வரும்வரை
அக்கவிதை ஆண்களின் கழிப்பறையாக மட்டுமே இருக்கிறது.
ஆனால்,
"நீங்கள் செலுத்தியது வெறும் 30  சென்
என்பதை மறக்க வேண்டாம்.
அதையும் மீறி கவிதைக்குள் எதையாவது தேடினால்"
என்று எச்சரிகை விடும்போது கழிவறை இலக்கிய பரப்பாக
இலக்கிய மேடையாக இலக்கியத்திற்கு போர்த்தப்பட்டிருக்கும்
பட்டுப்பீதாம்பரமாக விரிகிறது. இந்தத் துர்நாற்றமே நம் தேசத்தின் 
காற்று  மற்றும் ஊனமுற்ற பூச்சிகளின் தற்கொலை * என்ற தலைப்புகளில்  எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில்
கழிவறை தலைவர்களின் முகமாக, ஆட்சி அதிகாரமாக, கட்சி
அரசியலாக தன் வரலாற்றை விரிக்கிறது.

"புத்தாண்டு பரிசாக அனைவருக்கும்
பூட்டுகள் தரப்பட்டன.
எல்லார் உதடுகளிலும்
இரு பெரிய ஓட்டைகள்
இலவசமாய்ப் போடப்பட்டன..
....
.....
பூட்டு மிகவும் தரமானது
எத்தனை தலைமுறைக்கும் தாங்கும்
பூட்டு மறுபயனீடு மிக்கது. 
செத்தப் பிணத்திலிருந்து கழற்றி
அடுத்தச் சந்ததியினருக்கும் பூட்டலாம்
பூட்டு மிகவும் அழகானது
கண்ணாடியில் பார்க்கும் சில தருணங்களில்
அறிவைக் கவரக்கூடும்.
பூட்டு உத்திரவாதம் நிறைந்தது.."

Image result for கே பாலமுருகன்

மலேசிய தமிழ் இலக்கியத்தின் அரசியல் பக்கத்தை எழுதியதில்
பாலமுருகனின்" தூக்கிலிடப்ப்பட்ட நாக்குகள் "
காலம் கடந்தும் என்றும்  பேசப்படும்.

No comments:

Post a Comment