Saturday, November 12, 2016

அப்பாவின் நினைவுகள்



அப்பாவின் அரசியல் எனக்குப் பாடம் மட்டும் தான்"
மும்பையிலிருந்து செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்.
அவள் தனியாக மூன்றாம் ஏசியில். அவளுடன் ஆண்கள்
பயணிக்கிறார்கள். எதிரில் ஒரு வயதானவர். அவள் தான்
கொண்டு வந்திருந்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கிறாள். .
கூடப்பயணிப்பவர்களுடன் உரையாடல் நடத்துவதை அவள் தவிர்க்கிறாள்.
எதிரில் இருந்தவர் போனில் உரையாடும் போது தமிழில் பேசுவதும் அவளுக்குத் தெரிந்த உறவுக்காரரின் பெயரைச் சொல்லி அவர் உடல்நலம் விசாரிப்பதும் அவள் காதுகளில் விழுகிறது. அவளால் அதற்குமேலும் 
அமைதியாக இருக்க முடியவில்லை. மெளனம் கலைகிறது. உரையாடல் வழி அவளைப் பற்றி அவர் விசாரிக்க விசாரிக்க அவள் விவரங்களைச் சொல்ல சொல்ல அவள் இன்னாரின் மகள் என்ற விவரத்தை அவர் அறிந்தவுடன் அவர் அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.
எப்படிப்பட்ட மாமனிதரம்மா உன் அப்பா... என்று அவர் சொல்லும் போது அந்த மனிதரின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது. மும்பைக்கு பிழைக்க வந்தவர்களில் பலருக்கு வேலை வாங்கிக்கொடுத்தவர், பிள்ளைகளுக்கு
படிப்பதற்கு பணம் கட்ட வேண்டும் என்று அவர் வீட்டு வாசலைத் தட்டியவர் எவரும் வெறும் கையுடன் வந்ததில்லை ... அப்படி ஒரு
மனுஷனை அதன் பிறகு என் வாழ்நாளில் நான் சந்திக்கவே இல்லைமா"
அவர் சொல்ல சொல்ல அவள் மனம் கனக்கிறது.
(உடன் பயணித்தவர் மும்பையில் புகழ்ப்பெற்ற டாக்டர் மச்சிவேல் அவர்களின் அண்ணன், அவள் இதோ அந்த நினைவுகளை மீட்டிக்கொண்டு)
2 வயது வித்தியாசத்தில் 7 பிள்ளைகள்.. வரிசையாக. அதிலும் 6 பெண்கள்..
அவர் பெரிய வீடு வாங்கவோ ஏன் தான் ஆசைப்பட்ட படி ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கவில்லை! வாழ்க்கையை இப்படியும் வாழமுடியும் என்று வாழ்ந்துக் காட்டியவர்.... இன்று அவரின் நினைவு நாள்..(. 12 & 13 நவம் 1986)
"அப்பா... ஒரு இதிகாசத்தைப் போல வாழ்ந்திருக்கிறீர்கள்.
என் எழுத்துகளில் உங்களைப் பற்றி எழுத வரும்போதெல்லாம் அடுத்தப் புள்ளிக்கு நகர முடியாத அளவுக்கு கனமாகிவிடுகிறது.
என்னை இன்றும் அலைக்கழிக்கிறது உங்களின் அரசியலும் கடைசி நாட்களும். 
அப்பா... உங்கள் அரசியல் ... எனக்குப் பாடம் மட்டும்தாம்..
ஓடி ஓடி ... ரொம்பவும் சோர்ந்துப் போயிருக்கிறேன் அப்பா. 
நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு துளியை ...
எனக்குத் தருவீர்களா..?
(புகைப்படம்... அப்பாவின் மறைவுக்குப் பின் 21 ஆண்டுகள் கழித்து எங்கள் சொந்தவூர் பத்தமடையில் அப்பாவின் பெயரால் - பி.எஸ். வள்ளிநாயகம் - திமுக கொடிக்கம்பம் எழுப்பப்பட்டது ... திமுக திரு. ஸ்டாலின் அவர்கள் கொடி ஏற்றுகிறார்.. நன்றி அனைவருக்கும்.)

No comments:

Post a Comment