Friday, May 10, 2019

அவதார புருஷர்கள் ஏன் அவதரிக்கவில்லை??


அவதார புருஷர்கள் இனி இவ்வுலகில் 
அவதரிக்கப் போவதே  இல்லை. ...

அவள் எதொ  கலகம் புரட்சி மாற்றம் 
இதெல்லாம் பற்றி பேசுகிறாளாக்கும் என்று
 நானும் எங்கள் உரையாடலைத் தொடர்ந்தேன்.
அவள் அடுக்கடுக்காக அடுக்கிய காரணங்களைக் 
கேட்டுவிட்டு என் தலை பாரம் தாங்காமல் 
ஒரு பக்கமாக சரிய ஆரம்பித்து விட்ட து.

காரணம் 1) 
இப்போதெல்லாம் குடும்பத்தில் நாமிருவர்  நமக்கிருவர்
 என்று கட்டுப்பாடு வந்துவிட் ட து காரணமாம்.
இது எப்படி காரணமாகும் தோழி ?

குருஷேத்திரம் நட த்திய பகவான் கிருஷ்ணன் 8வது குழந்தையாம்.
இப்போ எந்தக் குடும்பத்தில் 8 வரை பெத்துக்கொள்கிறார்கள்?

அட டா.. நல்லது தானே.. இனி பங்காளி சண்டைகள் 
இருக்காதுனு நினைச்சுக்கலாமே! 
சரி உன் லாஜிக் படியே எடுத்துப்போம். 
உங்க ஸ்ரீராமன் முதல் பிள்ளை தானே!”

அய்யோ, அப்படி இல்லைமா.. உனக்கு இப்படி
 சொன்னா புரியாது.
உனக்குத் தெரியுமோ.. மகாத்மா காந்தி அவரோட
 அப்பாவுக்கு 4 வது மனைவிக்குப் பிறந்த மகனாக்கும்!

 என்ன இது.. ! அப்போ  நம்ம ஆம்பிளைகள எல்லாம்
 4 மனைவி கட்டிக்கச் சொல்றியா, 
நாலாவது மனைவிக்குத் தான் மகாத்மா பிறப்பார்னு
 இது என்ன புதுக்கரடி.. உண்மை என்ன தெரியுமா.. 
காந்தியின் அப்பாவுக்கு வாய்த்த 3 மனைவியரும்
 பிரசவத்தில் இறந்துப் போனவர்கள். 
அப்படித்தான் அவருக்கு 4 வது மனைவி வாய்த்தார். 

மீண்டும் அவர் விடவில்லை. 
“உனக்கு இதெல்லாம் புரியாது. உனக்கு நல்லா
 விவரமா புரியற மாதிரி சொல்லனும்னா.. ஹாங்க்… 
அம்பேத்கர் அவரோட அம்மா அப்பாவுக்கு
 14 வது குழந்தையா பிறந்தவர் . .. 
இப்போ இதுக்கு என்ன சொல்றே! “

சரவணா.. தாங்க்க முடியலடா..
எங்கிருந்து இந்த மாதிரி புதுசு புதுசா கண்டுப் பிடிச்சி
பரப்புதாங்களோ தெரியலையே..
சரிந்துப் போன என் தலையை நிமிர்த்த முடியாமல்
கோணங்கி ஆகிவிட்டேன் நான்.



Sunday, May 5, 2019

DHARAM SANKAT MEIN



dharam sankat mein க்கான பட முடிவு
இது ரொம்ப ரொம்ப தர்மச் சங்கடமானது தான்.
DHARAM SANKAT MEIN- மதம் / தர்மா சங்கட த்திலிருக்கிறது 
என்பது கதை.
இந்து இசுலாமிய மதப் பிரச்சனைகள் எப்போதும்
 அணையாமல் இருக்கும் நம் தேசத்தில் இம்மாதிரி 
ஒரு கதையை எவ்விதமான சிக்கலோ சிடுக்கோ
 இல்லாமல் எடுக்க முடியும் என்பதைக் காட்டிய
இயக்குனர் + கதையாசிரியர் + வசனகர்த்தா வுக்கு 
ஒரு சபாஷ் போடலாம்.
பொதுவாகவே ஒரு திரைக்கதையை மதம் சார்ந்த
 பின்புலத்தில் எடுக்கும் போது சார்பு நிலை 
எடுத்துவிட்டால் அவ்வளவு தான்.
அந்தப் படம் ஒரு சாராருக்கானதாக மாறி
 இன்னொருவரின் பகைமையை வளர்த்தெடுக்கும்.
 ஆனால் அப்படி எதையும் இப்படம்
தன் காட்சி வசன ங்களில் செய்யவில்லை !

கதை ஒரு இந்து குடும்பத்தைப் பற்றியது. 

பொதுவெளியில் என்ன பிரச்சனை
வந்தாலும் அதற்கெல்லாம் காரணம் இசுலாமியர்கள்
 என்று நினைக்கும் மனைவி, மசூதியிலிருந்து வாங்கு 
சொல்லும் குரலில் எரிச்சலடையும் கணவன், 
திடீரென முளைத்த நீல ரங்க் இந்து சாமியார் குழுவில்
 தீவிரமாக இருக்கும் பக்தரின் மகளைக் காதலிக்கும் மகன்,
 மகனின் காதலுக்காக சாமியார் கூட்ட த்திற்கு வேண்டா 
வெறுப்பாக போகும் அப்பா,,, 
எதற்கெடுத்தாலும் வக்கீல் நோட்டீஸ் விட்டு தொந்தரவு கொடுக்கும்
பக்கத்து வீட்டுக்கார இசுலாமிய வக்கீல்… 
இப்படி ஓடிக்கொண்டிருக்கும்
வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை வருகிறது. 
குடும்பத்தலைவரின் அம்மா
இறந்துப் போகிறாள். அவளுடைய வங்கி லாக்கரை
 மகன் அப்போது தான் திறந்துப் பார்க்கிறான்.
அதிர்ச்சி அதிர்ச்சி.. அவர் .. அதாவது 
அந்தக் குடும்பத் தலைவனாக வரும் 
தரம்பால் த த்தெடுக்கப்பட்ட விவரம், 
சர்டிபிகேட்.. தரம்பால் தன் மரபணு
அப்பாவைத் தேடிய போது தெரியவருகிறது 
அவர் ஒரு இசுலாமிய குடும்பத்தில் பிறந்தவர் என்ற உண்மை.
மகன் தன் அப்பாவைத் தேடி அலைந்து இசுலாமியர்கள் காப்பகத்தில்
இருக்கும் அப்பாவைப் பார்க்க வருகிறார்.

“ நீ இசுலாமியனாக வா, இசுலாமிய மதச் சடங்குகளை
 அறிந்துக் கொண்டு வா, பார்க்க அனுமதிக்கிறோம் என்று
சொல்கிறார்கள். அப்பாவைப் பார்க்க அவர் இசுலாமிய
 வழிபாட்டு முறைய கற்க முன்வருகிறார். 
அதற்கு இசுலாமிய வக்கீல் துணை நிற்கிறார்.
கதை இப்படியான சிக்கலுக்கு நடுவில் ..
ஒரு சாதாரண பிரஜையின் 
மன நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது. 
இதுதான் இக்கதையின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். 
பரேஷ் ராவல் தான் தரம்பாலாக நடிக்கிறார். 
அவருடன் துணை நடிகர்களாக வரும் நசுரூதின் ஷா, அன்னுகபூர் …

தரம் சங்கட் மே … திரைப்படம் இந்திய தேசத்தின் இன்னொரு முகம்.

Thursday, May 2, 2019

அவர் தான் பெரியார்

பெரியார் க்கான பட முடிவு
ஈவெரா என்ற தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ
விருது/அங்கீகாரம் கிடைத்ததா கிடைக்கவில்லையா
இந்த ஆய்வுகள் தீவிரமாக நடக்கின்றன.
ஆனால் யுனெஸ்கோ விருது கொடுத்தாலும்
கொடுக்காவிட்டாலும் பெரியார் பெரியார் தான்
.
பெரியாரை உங்களில் சிலர் வெறுக்கலாம்.
பெரியாருடன் பலர் முரண்படலாம்.
பெரியாரை அறியாமலும் அறிந்தும் கூட
விமர்சிக்கலாம். அதெல்லாமே அவரவர்  நிலைப்பாடு.
இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட நபரின்
உரிமை. ஆனால் பெரியார் என்ற சொல்
சமூகவியல் வரலாற்றில் அவரை எதிர்ப்பவர்களும்
விமர்சிப்பவர்களும் ஆதரிப்பவர்களும் தவிர்க்க
முடியாதப் புள்ளி. அதுதான் பெரியார்.

Tuesday, April 30, 2019

இவர்களுக்கு மே தினம் உண்டா

building contract workers in india photo க்கான பட முடிவு


மும்பை பெரு நகரின் வயிற்றைக் கீறி
ஆழமாகத் தோண்டி
இரும்புக் கம்பிகளால் சித்திரவதை செய்து
அதில் எங்கெல்லாமோ புதிது புதிதாக
அடுக்குமாடிக் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டே
இருக்கின்றன.. ஒரு 10 வருட த்திற்கு முன்பு கூட
 நான் பார்த்த முல்லை நிலம் இப்போது இல்லை.
அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டே
இருக்கின்றன. பெரு நகரத்தின் பசி அடங்க வில்லை.

இந்த இடங்களில் எல்லாம் வேலைப் பார்க்கும்
கட்டிட த் தொழிலாளர்கள் /சித்தாளு/
இவர்களும் தொழிலாளர்கள் தான். ஆனால்
இவர்கள் நம் தொழிற்சங்க தொழிலாளர்கள் அல்ல.
இவர்கள் ஊதிய உயர்வு கேட்டோ போனஸ் கேட்டோ
போராடியதாக எந்த வரலாறும் இதுவரைக் கிடையாது.
இவர்களும் தொழிலாளர்கள் தான்.
இவர்களுக்குத் தினக்கூலி உண்டு.
10 முதல் 12 மணி நேரம் வரை உடல் உழைப்பு.
தினக்கூலி ரூ 400 முதல் 800 வரை.
அதாவது மேஸ்திரி/ டைல்ஸ் போடுபவர் /
கொத்தனார் இவர்களுக்கு கூலி அதிகம்.
மற்றபடி தலையில் சிமிண்ட் சட்டியைச் சுமந்து
கொண்டு ஏறும் தொழிலாளிக்கு சம்பளம் குறைவு.

இவர்களின் வேலைக்கு உத்திரவாதமில்லை
என்பது மட்டுமல்ல, இவர்களின் உயிருக்கும்
உத்திரவாதமில்லை. பாதுகாப்பு உபகரணங்கள்
என்று சொல்லப்படும் எதைப் பற்றியும் இவர்கள்
அறிந்த து கூட இல்லை.
பொதுவாக இவர்கள் எங்கெல்லாம் புதிது புதிதாக க்
கட்டிடங்கள் கட்டப்படுகிறதோ அந்த இட த்திற்கு
அருகில் தங்கள் குடியிருப்புகளை மாற்றிக்கொண்டே
அலைகிறார்கள். 
இவர்களுக்கு நிரந்தர முகவரி இல்லை.
எனவே இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை.
இவர்களும் ஓட்டுப்போடும் ஜன  நாயக க் கடமையை
பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

இவர்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை.
எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்
இவர்கள் அக்க்வுண்டில் பணம் வரவு
வைக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.
இவர்கள் இந்தியா எங்கும் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு இந்தியர் என்ற அடையாள அட்டை
இல்லை என்பதாலேயே இவர்களை இந்தியர்கள்
இல்லை என்று எவரும் முடிவு செய்துவிட முடியாது.
இவர்கள் இருக்கிறார்கள்..
இவர்களும் நம்மோடு இருக்கிறார்கள்.
நாம் தான் இவர்களுடன் இருப்பதில்லை.

அதனால் என்ன இவர்கள் உழைப்பின் வியர்வை
 நாம் குடியிருக்கும் வீடு/ மால்/ சினிமா தியேட்டர்/
மருத்துவமனை என்று எல்லா கட்டிடங்களின்
அஸ்திவாரத்திலும்… நம் வாழ்க்கையை ஏந்திக்
கொண்டிருக்கிறது. சித்திரச் சோலைகளே…


Sunday, April 28, 2019

பொன்பரப்பியும் உங்கள் மனசாட்சியும்

பொன்பரப்பி
உள்ளிட்ட அனைத்து
சாதி மதவாத பாசிச வன்முறைக்கு
எதிராக எனது குரல்

Image result for பொன்பரப்பி ஜெயமோகன்
அண்மையில் நிகழ்ந்த இக்கூட்ட த்தில்
பேசியவர்களின் உரைகளைக் கேட்டேன்.
பொதுவாக இக்கூட்டம் குறித்து எழுந்த
சர்ச்சைகள் ஒரு பக்கம்,
இதன் மறுபக்கமாக எப்போதுமே பாதிக்கப்பட்ட
சாதியினரின் கண்டனக்குரலை மட்டுமே அறிந்த
பொதுவெளியில் தமிழ்ச்சமூகத்தின் கண்டனக்குரல்
ஒலித்தாக வேண்டும் என்பதும் அக்கண்டனக்குரல்
தமிழ்ச் சமூகத்தின் பொது அறமாக மாற்றும்
முயற்சியும் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது என்பதற்காகவும்
சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்றி சொல்வது
ஜன நாயக கடமை என்று நினைக்கிறேன்.
இனி….
இந்தக் கண்டனக்கூட்டம் காலத்தின் தேவையாகி
இருக்கிறது. இந்தக் கண்டனக்கூட்ட த்தில் தன்னுடைய குரல் நேரடியாக ஒலிக்க வேண்டும் ,
தன் எதிர்ப்பும் கண்டனமும் இந்தக் கூட்ட த்தின்
ஒரு பதிவாக இருந்தாக வேண்டும் என்று கலந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
இக்காட்சியும் மாற்றமும்
தோழர் தொல். திருமாவளவன்
முன்வைக்கும் ஜன நாயக அறத்தின் வெற்றியாக
கருதுகிறேன். ஆனால் இதுவே தனிமனிதனின்
மனசாட்சியின் குரலாக ஒலித்து மனசாட்சியின்
தார்மீக வெற்றியாக மாறி இருக்கிறதா என்று
பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மீண்டும் முதல் வரிகளை வாசிக்கவும்.
அந்த வரிகள் தான் பொன்பரப்பி கண்டனக்
கூட்ட த்தின் பதாகையில் இருந்த வரிகள்.
இந்த வரிகளை மனசாட்சியுடன் அணுகும்
நாள்.. வர வேண்டும்.

Wednesday, April 24, 2019

மும்பை பாமரனின் கேள்வி

தேர்தல் ஆணையம் கைப்பற்றும் பணத்தை
என்ன செய்கிறார்கள்?
இதுவரை ரூ 1400 கோடி கைப்பற்றி இருப்பதாக
செய்தி வந்திருக்கிறது.
சட்டப்படி சரியான ஆவணங்களைக் கொடுத்துவிட்டு
கைப்பற்றிய பணத்தை உரியவர்கள்
 பெற்றுக் கொள்ளமுடியும். 
ஆனால் வேடிக்கை என்னவென்றால்
கைப்பற்றிய பணம் தன்னுடையது இல்லை என்று
சொல்லிவிடுகிறார்கள்! 

இன்று என் நண்பர் மும்பை பாமரன் 
இது பற்றி என்னிடம் பேசினார். சட்டப்படி
யாரும் உரிமைக்கோராத பணத்தை அரசாங்க
கருவூலத்தில் செலுத்த வேண்டும் .என்று சொன்னேன்.
அப்படி இதுவரை எவ்வளவு பணம் கணக்கு
வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.
இவை தவிர மூக்குத்தி, வேட்டி, சேலை, கஞ்சா,
பீர், செல்போன், கிரடிட் டோக்கன்…இப்படி 
வகைவகையாக தேர்தல் ஆணையம் கைப்பற்றி
இருக்கிறது. இதை எல்லாம் என்ன செய்வார்கள்
என்று கேட்கிறார் என் நண்பர். 
என்ன செய்வார்கள்?????
கைப்பற்ற பட்ட தெல்லாம் பொதுமக்கள் பணமாம்
எனவே பொதுமக்களுக்கே அதை எல்லாம் திருப்பிக்
கொடுக்க வேண்டுமாம்.. என்று தீர்வு சொல்ல ஆரம்பித்தார்.
நான் அவரிடம் சொன்னேன்..
என்னுடைய பணமில்லை என்று சொல்லியதை
உங்களுடைய பணம் என்று ஆதாரத்துடன் கேட்டால்
கொடுத்துவிடுவார்கள்.. முயற்சி செய்து பாருங்கள்!
என்று சொன்னேன்.
மனுஷனுக்கு ரொம்பவும் கோவம் வந்துவிட்ட து.
அது என்ன.. எங்களைப் போல பாமரன் மட்டும்
எதைக் கேட்டாலும் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட்,
பான் கார்ட் , பொண்டாட்டி இருந்தா அவளோட
ஆதார் கார்ட் என்று எல்லா ஆவணமும் கேட்கிறவர்கள்
இவ்வளவு பணம் மட்டும் எப்படி ஆவணமே
இல்லாமல் வந்த துனு கேட்க மாட்டார்களா?
அவுங்களுக்கு மட்டும் எப்படி ஆவணம் இல்லாமல்
இம்புட்டு பணத்தை எடுக்க முடியுது..
உங்க சட்டம், உங்க பேங்க் எல்லாமே பாமரனுக்கு
எதிரானவை..என்று பேச ஆரம்பித்துவிட்டார்…
நான் "கப் சிப்"
ஆனால் அவர் கேள்வியில் தொனித்த நியாயத்தின்
குரலை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.
#election_commission

Friday, April 19, 2019

அச்சமூட்டும் தேர்தல் செலவுகள்


 மை லார்ட்..
தேர்தல் திருவிழாக்களை
ரத்து செய்துவிடலாம்.
இதற்கான காரணங்களை ஆதாரத்துடன்
இணைத்திருக்கிறோம்.
கணம் கோர்ட்டார் அவர்களே..
இந்திய மக்களின் பொது நலனில் அக்கறைக்கொண்ட
இந்தப் பொது நல வழக்கை கணக்கில் எடுத்துக் கொண்டு
தீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


ரூ. 90,000 கோடி செலவு செய்து இந்திய மக்களாட்சி 
திருவிழாவைக்கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
 ஆனால் ஆட்சிகள் மாறினாலும்
காட்சிகள் மாறுவதில்லை.
ஒரு விரல் புரட்சி என்ற உங்கள் புரட்சிகளில்
எங்களால் எதையும் சாதித்துவிட முடியவில்லை
என்பதை ஒத்துக் கொள்கிறோம்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்
தேர்தல் களமும் அதிகார நாற்காலி பங்கீடும்
எவ்வித த்திலும் எங்கள் வாழ்க்கையை 
மாற்றிவிடவில்லை.
எனவே.. எங்கள் வரிப்பணத்தில்
 இவ்வளவு செலவுசெய்து தான் ஆக வேண்டுமா ?
 என்ற கேள்வி எழுகிறது.


கணம் கோர்ட்டார் அவர்களே….
அனைத்துக் கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும்
அவர்களின் வாரிசுகளை பதவிக்கு கொண்டு வரட்டும்.

இதில் தொண்டர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை.
வாரிசுகள் என்று சொல்லும் போது
அந்த வாரிசுடமையைத் தீர்மானிக்கும்
அதிகாரமும் கட்சிகளின் மேலிட த்தை மட்டுமே
சார்ந்த தாக இருப்பதில் பொதுமக்களாகிய எமக்கு
எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை.
ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும்
நடக்கப்போவது என்னவோ இதுதான்.
இந்த யதார்த்தமான அரசியலை நாங்கள்
ஏற்றுக்கொண்டு விட்டோம்.
எனவே எங்கள் கோரிக்கையை.. கணம் கோர்ட்டார்
அவர்கள் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க
வேண்டுகிறோம்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை.
எங்ககளுக்குத் தேவை எல்லாம்
இலவச டாக் டைம்ஸ் + இலவச
இண்டர்னெட் வசதி.!
நாங்கள் மகிழ்ச்சியாக மரணிக்க
இதைவிட வேறு என்ன வேண்டும்
மை லார்ட்.!
ஆதாரங்கள்:

Estimate of total Lok Sabha election cost:
1.      Expenses relating to 1 crore election workers (Rs. 15,000 per person) – Rs. 15,000 crores
2.      Cost of setting up 10 lakh booths (Rs. 1 lakh per booth) – Rs. 10,000 crores
3.      Cost of EVM machines (including maintenance) – Rs. 2000 crores
4.      Cost of security – Rs. 2000 crores
5.      Cost of Logistics – Rs. 1000 crores
6.      Cost of communication, advertisement, training – Rs. 1000 crores
7.      Cost of Voter list preparation, voter registration – Rs. 1000 crores
8.      Postal ballot cost, counting centers etc. – Rs. 500 crores
Total  = Rs. 32,500 crore
Lok Sabha election costs Rs. 30,000 crores.
Then we have state elections and local body elections
 where same 100 crore citizen need to vote.
 In all we are spending around Rs. 90,000 crores
every 5 years on election
THANKS TO
Neeraj Gutgutia (neeraj@Right2vote.in, +91 9920591306

Thursday, April 18, 2019

சூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்..



Image result for ரஜினி இமயமலையில்

இப்போ நம் வேட்பாளர்கள் அனைவரையும்
சூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்.
உலக நாயகனுக்குப் பிரச்சனை இல்ல.
அவரு பேசமா டார்ச் லைட் அடிச்சிக்கிட்டு
புதுப்படம் நடிக்கப் போயிடலாம்.
ஏன்னா .. இன்னும் 30 நாட்கள்
ஜெயிச்சிட்டோமோ தோற்றுட்டோமானு
தெரிஞ்சிக்க முடியாமா..
நம்ம வேட்பாளர்கள் எல்லாம் என்னப்பாடு படுவார்கள்!
அதை நினைச்சா தான் எனக்கே ரொம்ப ரொம்ப
டென்ஷனா இருக்கு.
ப்ளீஸ் இந்தச் சூழலில் 
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தான்
எல்லோரையும் காப்பத்தனும்.
ரஜினி தலைமையில் எல்லோரும் 
இமயமலைக்கு போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.
ரஜினி கட்டியிருக்கும் தியான மண்டபம்
உங்களுக்காக காத்திருக்கிறது.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..
எனக்குத் தெரியும்..
சிலருக்கு ரஜினியைக் கண்டாலே ஆகாது.
ரஜினி வந்தவுடன் வீட்டுக்கதவை அடைத்துக் 
கொண்டவர்களும் உண்டுனு கேள்விப்பட்டேன்..
ம்ம்ம்.. நீங்க ரஜினியோட டிரிப் போகறது பிரச்சனைதான்..
பேசமா.. இந்தியாவிலிருந்து லண்டனுக்கோ சிங்கப்பூருக்கோ
குடும்பத்தோட போயிட்டு வரலாம்.
கூட்ட த்தோட போக விருப்பமில்லையா..
தனியாக கூட போகலாம்.
அப்படியே போன இட த்தில
ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கலாம்.
இந்த வெயில்ல தெருத்தெருவா போயி
பிராச்சாரம் செய்து உடம்பைக் கெடுத்துக் கொண்டீர்கள்!
அதை இப்போ சரி செய்து கொள்ளலாம்.
வெற்றியா தோல்வியா என்ற கவலையே
இல்லாதவர்கள் ஜாலியா இருங்க.
இந்த தேர்தல் சரியில்லை
ஓட்டு மிஷினு சரியில்லைனு
எதாவது டிவிக்காரன் உங்களுக்கு விவாத நிகழ்ச்சி
நட த்தி பாயிண்ட் பாயிண்டா கொடுத்திடுவாங்க.
தோற்றுப்போனவுடன் 
அதை அப்படியே உங்க வசனத்தில் சொல்லி
யு டியூப்பில் அசத்திடுங்க..
எப்படியோ.. நீங்கள் எல்லோரும் கட்சி வேறுபாடின்றி
எனக்கு முக்கியம் தான்.
நீங்கள் எல்லாம் தானே தேர்தல் திருவிழாவின்
தேர்கள்…
தேரோட்டம் இல்லை என்றால்
திருவிழாக்கள் ஏது..??!!