Monday, October 8, 2018

NO BODY IS PERFECT


நான் எழுதப் போவதை வாசித்துவிட்டு 
தோழியர் சிலர் என் மீது கோபப்படலாம்!
பெண்ணியத்திற்கு எதிரானக் கருத்தாக
இதை எடுத்துக் கொண்டு இன்னும் சிலர்
என்னை ரொம்பவும் பிற்போக்குவாதியாக
முத்திரைக் குத்தலாம்,… 
அண்மையில் மத்தியர்  முக நூல் குழுவில் பெருகி வரும்
விவாகரத்து குறித்த ஒரு பதிவு வாசித்தேன். 
அப்போதிருந்தே இதைப் பற்றி எழுதியாக
வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு



…..

விவாகரத்துகள் எதிர்க்கப்பட வேண்டியவை அல்ல.
திருமணம் ஆயாச்சு..
இனி கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்
என்று இருக்க வேண்டாம்.
கொடுமைப்படுத்தும் ஆண்கள், 
வன்கொடுகைகள், டவுரி கொலைகள்..
மாமியார் கொடுமை.. நாத்தானர் கொடுமை..
சகிக்க முடியாத ஆணாதிக்க கொடுமைகள்
இருக்கிறது.. அவை இல்லை என்றும் சொல்லவரவில்லை.
இவற்றிலிருந்து பெண்ணுக்கோ ஆணுக்கோ
விடுதலைத் தரும் விவாகரத்துகளை மதிக்கிறேன்.
ஆனால் இன்று குடும்ப நலக்கோர்ட்டுகளில் வரும்
விவாகரத்துகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கின்றன?
இந்த விவரங்கள் இன்னும் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன!

இன்றைய பெண்களைப் பற்றி எனக்கு
மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டு.
என்னால் தாண்ட முடியாத உயரங்களை 
அவர்கள் தாண்டுகிறார்கள்.
என் கற்பனைக்குள் எட்டாத செயல்களை
அவர்கள் செய்துவிட்டு அடுத்த செயலுக்கு
நகர்ந்துவிடுகிறார்கள்.
ஆனால்அவர்களின் குடும்ப உறவுகள் 
குறித்த செயல்பாடுகள் என்னைப் பயமுறுத்துகின்றன.
பெண்கள் என்றாலே திருமணம் கட்டாயம்
செய்து கொள்ள வேண்டும் என்றோ..
திருமணம் செய்து கொண்டால் கட்டாயம்
குழந்தைப் பெற்றுக்கொண்டு தாய்மை கீரிடத்தை
தலையில் சுமந்தாக வேண்டும் என்றோ..
கட்டாயமில்லை.
பெண்களுக்கு தனக்கான லைஃப் பார்டரைத் 
தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் உண்டு என்ற
புரிதலில் இருந்து இதை எழுத ஆரம்பிக்கிறேன்.

ஆண் என்றால் வெறுமனே சம்பாதித்துக் கொடுக்கும்
ஒருவன் மட்டுமா?
அவன் உன் ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற
வேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்கள்
அவனுடைய ஆசைகள் விருப்பங்களை மதிக்கின்றார்களா?
ஆண் வெறும் கணவன் மட்டுமல்ல,
ஆண் தன் குழந்தைகளின் தகப்பன் மட்டுமல்ல.
ஆண் தன் பெற்றொர்களுக்கு மகன்..
ஆண் தன் தங்கைகளுக்கு அண்ணன்.
ஆன் தன் அக்காக்களுக்கு இனிய தம்பி..
கணவன் என்பவன்.. கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.
ஆனால் அவன் கட்டாயம் அனாதையாக
இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்
மன நிலை பெண்ணுக்கு எங்கிருந்து வந்தது?
எந்த ஒரு ஆண்மகன் தன் பெற்றோர்களை
மதிக்கிறானோ நேசிக்கிறானோ
அவன் மட்டும் தான் 
தன் மனைவி பிள்ளைகளை உண்மையாக
நேசிப்பவனாக இருப்பான்..
இது தான் ஒவ்வொரு பெண்ணும் புரிந்துக் கொள்ள
வேண்டிய வாழ்க்கையின் ரகசியம்
பெண்ணைப் பெற்றவர்கள்….
பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டால்
அவளுடைய வாழ்க்கையில் எல்லாவற்றிலும் 
தலையிடுவது அவளுக்குச் செய்யும் உதவி அல்ல!

இன்று பெருகி வரும் விவாகரத்துகள் ….
அதற்கான காரணங்கள்.. 
நாம் பேசும் பெண்ணிய தளங்கள்..
ஆண் பெண் உறவு நிலை
இதில் பாதிக்கப்படும் ஆண் பெண் ..
எல்லா நிலையிலும் இருந்து தான் இதைப் பார்க்கிறேன்.
குறைந்ததுஆண் பெண் உறவு நிலையில்
புரிதல் இல்லை என்றால் அவசரப்பட்டு
குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள்!
உங்கள் ஈகோ.. உங்கள் புரிதலின்மை..
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை
எவ்வளவு பெரிய கேள்விக்குரியாக்குகிறது?
பணம் மட்டும் வாழ்க்கையல்ல
காதலும் வாழ்க்கையும்.. 
நீங்கள் பயணிக்கும் காரிலோ
உங்கள் விலை உயர்ந்த கைபேசியிலோ
உங்கள் கணினியிலோ
உங்கள் 6 இலக்க மாதச்சம்பளத்திலோ 
இல்லை இல்லை இல்லவே இல்லை
வாழ்க்கை .. கொஞ்சம் விட்டுக்கொடுத்தலில் இருக்கிறது.
யாரிடம் தான் குற்றம் குறைகள் இல்லை.
NO BODY IS PERFECT IN LIFE…

வாழ்க்கை .. கொஞ்சம் கொஞ்சம் ஊடலில் இருக்கிறது.
வாழ்க்கை.. அவனுக்காக நீயும்
உனக்காக அவனும் என்ற 
தோழமையில் இருக்கிறது.

என்றாவது
 உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி
என்று தோள்களில் சாய்ந்து வாழ்க்கையை
வாழ்ந்துப் பாருங்களேன்..








Saturday, October 6, 2018

கல்கியின் வாசகர் வட்டம்



சிவகாமியின் சபதம் வாசித்தப்பின்
நாங்களே சிவகாமிகளானோம்..!”



கல்கியின் வாசகர் வட்டம் பிரமிப்பு ஏற்படுத்தும்.
இன்று கல்கியை என்னால் மீள்வாசிப்பு செய்யமுடியவில்லை
என்பதும் உண்மை. ஆனால் கல்கி என்ற சமுத்திரத்தைக் 
கடந்து வந்ததில் பெருமை கொண்ட தலைமுறை 
எங்கள் தலைமுறை. கல்கியின் எழுத்துகளுக்கு
பல தரப்பட்ட வாசகர்கள் இருந்தார்கள்.
பள்ளிக்கூட நாட்களில் கல்கியின் பொன்னியின் செல்வன்
வாசித்த என் போன்றவர்கள் முதல் கல்கி இதழில்
தொடராக வந்ததை வாசித்த குடும்பப்பெண்கள் வரை..
இப்படியாக இந்த வாசகர் வட்டம் விரிந்துக் கொண்டே

உரை நடை இலக்கியம் வந்தப் பிறகு காவிய இலக்கியத்தின்
பிம்பத்தை தன் உரை நடை இலக்கியமான நாவல்களில்
கையாண்டு வெற்றி பெற்றவர் கல்கி என்றே சொல்லலாம்.
சிவகாமி சபதமும் போரெடுத்து வந்து தன்னை மீட்டுச் செல்லும்படி
அவள் கூறுவதும்.. போரும் காதலும்.. ஏதோ ஒருவகையில்
இராமயணம் வாசித்தவர்களுக்கு கல்கி வழங்கிய விருந்து.
கதைக்குள் கதை, கதைகளுக்குள் உபகதைகள் என்று
விரிந்து கொண்டே போன மகாபாரத இதிகாசத்தின்
உத்தியைத்தான் கல்கி தன் பொன்னியின் செல்வனின்
கையாண்டு வெற்றி பெற்றார்.
நரசிம்ம பல்லவர், மாமல்லன், காஞ்சிப் பேரரசு, வதாபி சாளுக்கிய
அரசன், புலிகேசி.. பல்லவர்களுக்கு சாளுக்கியர்களுக்குமான போர்..
இவை எல்லாம் அசலான சரித்திர நிகழ்வுகளும்  சரித்திரத்தில்
இடம் பெற்ற கதாப்பாத்திரங்களும்.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல பல்லவர்கள் உருவாக்கிய
மாமல்லபுரம் கோவில்கள்.. சிற்பங்கள்.

சிவகாமியின் சபதம் நாவலை வாசித்துவிட்டு
அந்த மயக்கத்தில் எங்கள் மாணவர் பருவத்தில்
மாமல்ல புரத்திற்கு சுற்றுலா சென்ற போது
இதோ இந்த இடத்தில் தான் சிவகாமி.. நின்றிருப்பாள்..
இதோ.. சிவகாமி.. இப்படித்தான் ஆடி இருப்பாள்..
மாமல்லன் அவளை இந்த இடத்தில் சந்தித்திருப்பானா,
மாட்டானா.. என்றெல்லாம் பேசிக்கொண்டதும்
நாங்களே சிவகாமிகளாகி மாமல்ல புரத்தை வலம் வந்ததும்
கதையல்ல. 
சிவகாமியின் சபதம் எழுதிய கல்கியின் வெற்றி தான்
எங்கள் மாமல்லபுரத்தின் ரசனையாக விரிந்தது.

சிவகாமி என்ற கதாபாத்திரமும் அவள் மாமல்லனைக்
காதலித்ததாக எழுதியிருப்பதும் புனைவு என்று
அதன் பின் அறிந்துக் கொண்டாலும்..
இன்றும் மாமல்லபுரத்தில் சிவகாமியே 
ஆடிக்கொண்டிருக்கிறாள்!

கல்கி எழுதிய பார்த்திபன் கனவும் பொதுஜன வாசிப்பில்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய புதினம்.
திரைப்படமாகவும் வெளிவந்து வெற்றி பெற்றது.
அக்கதையின் கரு தமிழர்களுக்கு அவர்களின்
கடந்துப் போன பொற்காலத்தை மீட்டெடுக்கும்
கனவுக்கு  உயிர்க்கொடுத்தது.
பலர் அக்காலத்தில் தங்கள் மகவுக்கு
தங்கள் கனவுகளை மீட்டெடுக்கப் பிறந்தவன் என்பதன்
குறியீடாகபார்த்திபன்என்று பெயர் வைத்தார்கள்.

இப்படியாகத்தான் கல்கியும் அவர் கதைகளும்
ஒரு தலைமுறையின் வாழ்க்கையில் 
இடம் பிடித்திருந்தன.

Friday, October 5, 2018

பிரபஞ்சத்தின் வாசலில் கோலங்கள்








பிரபஞ்சத்தின் ரகசியம் எதில் இருக்கிறது?
ஆற்றல், அதிர்வு எண், அதிர்வு இந்த மூன்றிலும்
பிரபஞ்சத்தின் ரகசியம் இருக்கிறது 
என்று சொல்கிறார் நிக்கோல டெஸ்லா.
(If you want to find the secrets of the universe, 
think in terms of energy, frequency and vibration.”)
இசை ஏன் நம் வாழ்வுடன் பயணிக்கிறது,
துன்பம் நேர்கையில் யாழெடுத்து மீட்டும்
சுகத்தை இசை எப்படி தருகிறது என்றால்
அதற்கு காரணம் நிக்கோல சொல்லும்
அதிர்வுகளும் அதிர்வலைகளின் விசையும் தான்.



அதிர்வுகள் சில உருவங்களை உருவாக்குகின்றன.
அந்த உருவங்களை நாம் பார்க்கும் போது 
நம் மூளையில் அதிர்வுகள் உருவாக்கிய
அதே அதே ஆற்றல் உருவாகிறது.
இன்னொரு வகையில் சொல்லப்போனால்
Vibrations creates geometric patterns. That 
Same geometric patterns recreate the vibration
Through eyes in our brain!

சரி.. இது என்ன திடீரென பெளதீக வகுப்பு எடுக்கிறமாதிரி
என்று எரிச்சல் வருகிறதா.. ப்ளீஸ்.. இன்னும் ஒரு வரி
பாக்கி இருக்கிறது
அதிர்வுகள் உருவாக்கும் டிசைன்கள் எல்லாம் 
வாசல் தெளித்து
நம் அம்மாக்களும் அப்பச்சிகளும் வரைந்த
கோலம் டிசைன்கள் தான்!
இதோ நேரமிருப்பவர்கள் இந்த விடீயோவை க்ளிக் செய்து
பார்த்து பரவசப்படுங்கள்..


வீட்டு வாசலில் கோலமிடுவோம்..
என்னைப் போன்ற அப்பார்ட்மெண்ட் வாசிகள்
எதாவது வழி கண்டுப்பிடிப்போம்.
பிரபஞ்ச ரகசியம் நம் வாசல் தேடி
வரட்டுமே!
(ஹய்.. எனக்கும் கோலம் போடத் தெரியுமே!)






Wednesday, October 3, 2018

மகாத்மா இல்லாத கஸ்தூரிபா



மகாத்மாஇல்லாத கஸ்தூரி பா..புகைப்படம்..



முகனூலில் காந்தி சரளாதேவி பற்றிய என் பதிவு
அதிகமாக பகிரப்பட்டது, பின்னூட்டங்களும் இருந்தன.
ஆனால்.. ஆனால்..
யாரும் கேட்கவில்லை பாதிக்கப்பட்ட அவளைப் பற்றி!

 அந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதியவர்களோ 
பகிர்ந்தவர்களோ லைக் போட்டவர்களோ யாராவது 
காந்தி- சரளாதேவி உறவை காந்தியின்
மனைவி கஸ்தூரிபாய் எப்படி எடுத்துக் கொண்டார் ? என்று
ஒரு கேள்வியைக் கூட முன்வைக்கவில்லை!
அது ஏன்?
காந்தி என்ற மகாத்மா பிம்பத்தில் கஸ்தூரி என்ற தனித்துவமிக்க
ஆளுமை கொண்ட ஒரு பெண் மறக்கப்படுகிறாள்..
வரலாற்றிலும் சரி.. வாழ்க்கையிலும் சரி..
இந்தக் கடந்துப் போதல் எவ்வளவு எளிதாக இருக்கிறது
எல்லோருக்குமே! 
காந்தியின் மனைவி தான் கஸ்தூரி பா.
ஆனால் கஸ்தூரி பா என்ற பெண்
காந்தியின் மனைவி மட்டுமல்ல...
ஒரு மகாத்மாவின் இருத்தலுக்காக அவள் இழந்தது அதிகம்.
ஒரு மகாத்மாவின் புனிதங்களுக்காக அவள் மவுனித்த
தருணங்கள் சத்தியசோதனையை விட வலிமையானவை.
சரளாதேவியுடனான தன் நட்பு/உறவைக் காந்தி குறிப்பிடும்
இடங்களில் எல்லாம் சரளாதேவியின் இளமையும்அறிவும்
 அழகும் போற்றப்பட்டது மட்டுமே நம் கண்களுக்குத் தெரிகிறது.
ஆனால் கஸ்தூரி பா... காந்தியை விட 1 வயது மூத்தவர் என்பதும்
சரளாதேவியுடன் ஒப்பிடும்போது இச்சமூகம் 
ஏற்றுக்கொண்டிருக்கும் அழகு அறிவு அளவுகோல்களில் 
கஸ்தூரி பா கீழிறக்கம் செய்யப்படுவதும் 
தானாகவே வந்து விடுகிறது... 
இந்த முக்கோணத்தில் நேரடியாக..பாதிக்கப்பட்டவர் கஸ்தூரி பா
தான்.அவர் இத்தருணங்களைஎப்படி கடந்து வந்திருப்பார்?
எவ்வளவு வலி மிகுந்த தருணங்களாக 
அந்த நாட்கள் இருந்திருக்கும்? 
மகாத்மாவின் முகம்,மகாத்மாவின் பேச்சு,
மகாத்மாவின் எழுத்து ...இதைஎல்லாம் ஊடறுக்கும்
கஸ்தூரி பாவின் அந்த ஒற்றைப் பார்வையை...
இந்த உலகமேஇன்றும் கொண்டாடும் மகாத்மா..
எப்படி எதிர் கொண்டிருப்பார்?
கஸ்தூரிகளின் மவுனம் தான் இன்றும் 
கஸ்தூரிகளுக்கு ஆகச்சிறந்த ஆயுதமாக இருக்கிறதா..
மகாத்மாக்களைவிட 
எனக்கு கஸ்தூரிகள் எப்போதுமே...பிரமிப்பூட்டுகிறார்கள்.

Monday, October 1, 2018

மகாத்மாவின் ஆன்மீக மனைவி



காந்தியின் ஆன்மீக மனைவி 


"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும்
போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்"
காந்தி எப்போதுமே நம் விமர்சனத்திற்கும்
வியப்புக்கும் உரியவராகவே இருக்கிறார்.
இன்று அக்டோபர் 02.. அந்த மனிதனின்
நினைவுகளின் ஊடாக அந்த மனிதனின்
மனம் கவர்ந்த அவளும் .. 
அப்பெண்ணின் பெயர் சரளாதேவி. 
தன் “ஆன்மிக மனைவியாக”spiritual wife
என்றே எழுதுகிறார் காந்தி.
தென் ஆப்பிரிகாவில் இருக்கும் தன் நண்பருக்கு
10 ஆக 1920 ல் எழுதியக் கடிதத்தில் 
எங்கள் உறவு எந்த வரையறைக்கும் உட்பட்டதல்ல.
நான் சரளா தேவியை என் ஆன்மீக மனைவி என்று 
சொல்கிறேன்.. “
சரளாதேவியும் அவர் கணவரும் காந்தியைப் பின்பற்றி
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அவர் 
கணவர் சிறை சென்றவர். சரளாதேவி வங்கக்கவிஞர்
ரவீந்திர நாத் தாகூரின் சகோதரி மகளாவார்.
இவர்களின் உறவைப் பற்றிப் பேசும் காந்தியின்
பேரன் ராஜாஜியின் கண்டிப்பான கடிதத்திற்குப் பிறகுதான்
காந்தி தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக
எழுதுகிறார். 
ஆன்மிக மனைவி, ஆன்மிகத் திருமணம்,
ஆன்மிக உறவு இவை எதுவுமே நடைமுறையில் 
சாத்தியமானவை அல்ல என்று சொல்லி காந்தி
தன் மனம் கவர்ந்த சரளாதேவியின் உறவுக்கு
முற்றுப்புள்ளி வைக்கிறார். 
50 வயதில் தான் தான் சந்தித்த 47 வயது பெண்ணான
சரளாதேவி யின் அறிவும் அழகும் காந்தி என்ற
மனிதனுக்கு தேவைப்பட்டிருக்கிறது ,
ஆனால் மகாத்மாவுக்கு?
காந்தியும் சாதாரண மனிதர்களின் இச்சைகளுடன்
வாழ்ந்திருக்கிறார். ஆனால் அதை அவர் கடந்து
வந்த பயணம்.. முக்கியமானது.
மனித உறவுகளுடன் எப்போதும் அவர் போராடிக் கொண்டே
இருந்திருக்கிறார். அந்தப் போராட்டத்தில் அவர்
தனக்குத் தானே எதிரும் புதிருமாக நின்று போராடியதில்…
சரளாதேவியும் ஒரு அத்தியாயம்.
சத்தியசோதனையில் அடங்காத அத்தியாயம்.

Saturday, September 29, 2018

தூய்மைவாதமும் நம் தலைவர்களும்.



தூய்மைவாதமும் நம் தலைவர்களும்.



எனக்கென்னவோ இந்திய சமூகம் இக்கருத்தில்
இலட்சியவாதிகளாக இல்லாமல் நடைமுறைவாதிகளாக
இருப்பதாகவே நினைக்கிறேன்., அதிலும் குறிப்பாக
தனிமனித தூய்மைவாதத்தில்.
தனி மனித ஒழுக்கம் என்பது போற்றுதலுக்குரியது தான்.
ஒழுக்கத்தின் வரையறைகளுக்கு அவரவர் பார்வையில்
எல்லைக்கோடுகள் வித்தியாசப்படுகின்றன.
ஒழுக்கவிதிகளை மீறுபவர்களுக்கு ஆதரவாக
பேசும்போது அத்தகைய மீறலின் காரணமாக
பாதிக்கப்படும் தனி மனிதர்களின் மன உளைச்சல்,
குடும்பம் என்ற நிறுவனத்தின் ஒப்பந்தங்கள்
உடையும் போது ஏற்படும் சிதைவுகளால்
சின்னாபின்னமாகும் எதிர்காலம், பொருளாதர
பிரச்சனைகள் , குழந்தைகளின் எதிர்காலம்
இப்படியான பல கோணங்களில் பார்த்தாக
வேண்டி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக இந்திய சமூகத்தில் பிரபலமான
தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்திலும் தூய்மைவாதத்திலும்
எந்தளவுக்கு தேர்ச்சி அடைவார்கள் என்பதை
யோசித்துப் பார்க்கிறேன்.
நேரு- மவுண்ட் பேட்டன் மனைவி
எல்லோரும் அறிந்த ரகசியமில்லாத ரகசியம் தானே!
“நான் திருமணமாகாதவன், ஆனால் பிரம்மச்சாரி இல்லை!”
என்று சொன்ன வாஜ்பாய்..
இந்த வரிசை நடுவண் அரசுடன் நிற்காது.
மா நில அரசுப்பட்டியலுக்கு வரும் போது
பல கிளைகளாக பிரிந்து மெகா தொடராகும்!
ஆனால் நம் அரசியல் கட்சிகளின் சில எழுதாத
ஒப்பந்தங்களின் படி இவை எதுவும் பொதுமேடையில்
பேசப்படுவதில்லை. காரணம் கண்ணாடிக் கூண்டுக்குள்
நின்று கொண்டு கல்லெறிவது பற்றி நன்கு அறிந்தவர்கள்
நம் அரசியல் கட்சி தலைவர்கள்.
அதுமட்டுமல்ல, நம் பொதுஜன உளவியல் இவற்றை
தலைமைத்துவத்திற்கான அளவுகோலாக எடுத்துக்கொள்வதில்லை
என்பதும் ஒரு காரணம். 
“We don’t expect politicians to be good people. 
We don’t need them to be good people. 
What we still need is for them to be good representatives,” 
voters are viewing personal transgressions far less 
seriously than abuses of power.
says Michael G. Miller, a political science professor 
at the University of Illinois !
மைக்கல் ஜி மில்லர் சொன்ன இந்த வரையறையின் ஒரு
பாதி தான் சரி. இன்னொரு பாதியான அதிகார துஷ்பிரயோகம்
பற்றிய கருத்து நம்ம அரசியல் தலைவர்களுக்கு
ஒத்துவருமா? 
இப்படியாக எல்லா வரையறைகளையும் தாண்டி
மீண்டும் மீண்டும் நாற்காலிகள் இந்தத் தலைவர்களை
எப்படி கொண்டாடுகின்றன என்பது தான்
எந்த அரசியல் ஆய்வாளருக்கும் பிடிபடாத
பரம ரகசியமாக ..

Thursday, September 27, 2018

Adultery is not a crime, “திருமண உறவுக்கு வெளியே ஆண்-பெண் பாலுறவு சட்டப்படி குற்றமல்ல”






“திருமண உறவுக்கு வெளியே ஆண்-பெண் பாலுறவு
சட்டப்படி குற்றமல்ல”
இந்த தீர்ப்பு கொஞ்சம் சென்சிட்டிவ் ஆன விஷயம் தான்.
அப்படி எல்லாம் இல்லை என்று எந்தப் புரட்சி முகமூடியும்
போட்டுக்கொள்ள வேண்டியதில்லை.
“திருமண உறவுக்கு வெளியே ஆண்-பெண் பாலுறவு
சட்டப்படி குற்றமல்ல”
Adultery is not a crime, 
India's supreme court rules.
1860ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வயது வந்தோர் சட்டத்தின் கீழ், ஆண் ஒருவர், வேறொரு திருமணமான பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தால், அந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து புகார் அளித்தால், முறையற்ற உறவு சட்டத்தின் கீழ், பாலியல் உறவு கொண்ட ஆண் குற்றவாளியாக கருதப்படுகிறார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஐந்தாண்டு சிறை தண்டனை அல்லது அபராதம், சில சமயங்களில் சிறை தண்டனையும் அபராதமும் சேர்த்து வழங்கப்படும் என்று வழக்கில் இருந்த 157 ஆண்டுகால பழமையான சட்டத்தை இப்போது இந்த தீர்ப்பு
மாற்றி அமைத்துள்ளது.
இத்தீர்ப்பு திருமணத்தின் புனிதத்தைக் கெடுத்துவிடும், நீர்த்து போகச்
செய்துவிடும் என்பதே கலாச்சாரக் காவலர்களின் கவலையாக இருக்கிறது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சென்டர் பார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் சமூக ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் பிரவீனா கோடோத், "கணவரின் அனுமதியுடன் திருமணத்துக்கு வெளியே உறவுகொண்டால் அது குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் கணவரே கட்டாயப்படுத்தி தன் மனைவியை வேறு ஒருவருடன் உறவுகொள்ள வைத்தால் என்ன தண்டனை என்பது குறித்து கூறப்படவில்லை," என்கிறார்.
இத்தீர்ப்பு வந்தவுடன் ஆஹா ஒஹோ என்று கொண்டாடவோ 
அல்லது இத்தீர்ப்பை வைத்துக்கொண்டு இதுவே பெண்ணுக்கு
கிடைத்திருக்கும் பாலியல் விடுதலை என்று முடிவு செய்யவோ
முடியாது என்பதே என் கருத்து. காரணம்.. நடைமுறை வாழ்க்கை
என்பது இந்திய சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்பதைக்
கருத்தில் கொண்டு இத்தீர்ப்பை நான் அணுகுகிறேன். தோழி
கிருபா முனுசாமி அவர்கள் முன்வைக்கும் கருத்துடன் முழுக்கவும்
உடன்படுகிறேன். வழக்கறிஞர் கிருபா முனுசாமி 
“"பெண்களுக்கு சொத்துரிமை ஏற்கனவே சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடைமுறையில் இல்லை. திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்க முன்வரும் குடும்பங்கள், தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு சொத்தில் பங்கு வழங்காமல் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்குகின்றன. சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் தீண்டாமை, சாதியப் பாகுபாடு ஆகிய இன்னும் நடைமுறையில் உள்ளன. அதேபோல்தான் திருமணத்துக்கு 
வெளியேயான உறவு இனி சட்டப்படி குற்றமில்லை 
என்றாலும் நடைமுறைக்கு இது உடனடியாக வர 
வாய்ப்பில்லை," 
அதாவது வெளிப்படையாக சட்டப்படி குற்றமில்லை என்பதாலேயே
இந்திய பொதுச்சமூகம் இவற்றை ஏற்றுக்கொள்ளாது.
இதை எழுதும் போது அண்மையில் வாசித்த இன்னொரு கள ஆய்வும்
நினைவுக்கு வருகிறது. நம் இந்திய சமூகம் ஆண்-பெண் பாலியல்
உறவில் எப்போதுமே ஒரு முகமூடியைப் போட்டுக்கொள்கிறது.
அந்த முகமூடி தலைவர்கள் முதல் கடைக்கோடியில் கோவணத்துடன்
வாழும் ஆண்- பெண் வரை அனைவருக்குமானதாக இருக்கிறது.
முகமூடியின் கனமும் நிறமும் அவரவர் சூழலுக்கு ஏற்ப மாறுகிறது
அவ்வளவு தான். ஆனால் முகமூடிகள் நிஜமானவை. (Pls ref: 
Union government’s National Family Health Survey (NFHS-4), 
published in December 2017)
மகாராஷ்டிரா, உத்திரபிரதேச கள ஆய்வுகள் சொல்லும் சில
நடைமுறை பாலியல் உறவுகள்:
> பெண்கள் தங்கள் உடல் இச்சையைத் தீர்க்க பல்வேறு வழிகளைக்
கையாளுகிறார்கள்.
> வயிற்றுப்பசியைப் போலவே உடல் இச்சையான காமப்பசியும்.
இதில் ஆண் பெண் உடல்களுக்கு வேறுபாடில்லை.
>கணவனின் உடல் உபாதைகள்/ கணவனின் பிரிவு/ கணவனின் இயலாமை
இப்படியான காரணங்களால் அவன் மனைவி கணவன் குடும்பத்திலேயே இன்னொரு
ஆணுடன் உடலுறவு கொண்டிருப்பதை அக்குடும்பம் கண்டும் காணாமல் இருப்பது தொடர்கிறது காலம் காலமாக!
> குடும்பத்திற்குள் தொடரும் இந்த திருமணத்திற்கு அப்பாற்பட்ட
உறவை அக்குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்கள். காரணம்..
பிரச்சனை குடும்பத்திற்குள்ளேயே இருக்கும், வெளியில் தெரிந்துவிடாது
அத்துடன் பிறக்கும் குழந்தைகள் இக்குடும்பத்தின் இரத்தவாரிசாகத்தானே இருக்கும்! என்ற வலுவான காரணமும் 
> இன்னும் சில கிராமங்களில் இரு பெண்கள் சேர்ந்து வாழ்ந்து 
கொண்டிருக்கிறார்கள். ரகசியமாக பெண்களுக்குள் “ அவர்கள் 
இருவரும் கணவன் மனைவி போல’ என்ற நக்கல் சிரிப்பு மட்டும்
இருக்கும். ஆனால் அவர்களையும் கண்டும் காணாமல் இருக்க
மக்கள் பழகி இருக்கிறார்கள்.
மேலே சொன்ன அனைத்துமே நடைமுறை யதார்த்தங்கள்.
கள ஆய்வின் இந்த முடிவுகள் .. இந்திய சமூகத்தில் எத்தனை
முகமூடிகள் இருக்கின்றன என்பதை உணர்த்துகின்றன.
தனியறையில் உறவு நிலை எப்படி இருந்தாலும்
ஆண் - பெண் உறவுகளுக்குள் போட்டுக்கொண்டிருக்கும்
முகமூடிகள் கழட்டுவது சட்டத்திற்கும் சரி.. சமூகத்திற்கும் சரி
அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை.. என்றே நினைக்கிறேன்.

Wednesday, September 26, 2018

உடல்மொழியின் மறுபக்கம்



உடல்மொழியின் மறுபக்கம்


வரப்போரத்தில்பிரசவித்து
கதிர் அறுக்கும் அருவாளால்
என் தொப்புள் கொடியை
அறுத்தவள்
ஓடையிலே கால்கழுவி
எனக்காக 
ஓடிக்கொண்டிருக்கிறாள்.
நானோ
உன் பட்டுப்போன்ற
சானிடரி நேப்கினைத்
தொட்டுப் பார்க்கும்
ஆசையில்
அம்மாவின் கிழிந்தப் புடவை
தொடைகளில் அறுக்க
குனிந்து வளைந்து
பத்துப்பாத்திரம் கழுவி
வீடுவீடாக 
ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறேன்.

பெண்மொழியை
உடல்மொழியாக்கிய
உன் மொழியைப்
போற்றிப்புகழும் 
புத்திஜீவிகளுக்கு நடுவில்
அனாதையாகிவிடுகிறது
ஆலமரங்கள்
வயல்களில் எழுதிய 
எம் வாய்ப்பாட்டு.
------------------------------

எங்கிருந்தோ ஒலிக்கிறது
என்னை அழைக்கும்
உங்கள் குரல்
ஓடிவந்து உங்கள் வரிசையில்
என்னையும் நிறுத்தும்
கனவுகளுடன்
விழித்துக்கொள்கிறது
என் பூமி.

ஏதொ ஒன்று....
இனம்புரியாத முள்வேலியாய்
நம் எல்லைகளுக்கு நடுவில்.

எல்லைத் தாண்டிய
உம் மேகங்கள்
என் எல்லைக்குள் நுழைவது
சாத்தியமில்லை
உரக்கச் சொல்கிறார்கள்
பிரபஞ்சத்தை ஆட்டுவிக்கும்
நட்சத்திரங்கள்.

அவர்களிடம் சொல்
முள்வேலியைத் தாண்டி
ரத்தம் சொட்டும் பாதங்களுடன்
உன் பச்சைப்புல்வெளியில்
தடம் பதிக்கப்போவது
எம் பாதங்கள் என்பதை.

(மீள்பதிவு )