தோழி.. சிவ காமீ
பச்சையமில்லாத
பாலையின் கனவுகள்
தண்ணீரில்லாத
தேசமாய்..
அடியே
பச்சைக்கிளி அறியுமோ
வைகை நதிக்கரையில்
வசந்தமாக வந்தவனும்
அவன் தான்
என்பதை.
பசுமை
தர மறுத்தவனை
பாலை மணலாறு
மறக்கவோ
மன்னிக்கவோ..!
நதியின்
பிழையன்று கொடுமணல்.
சுட்டெரிக்கும்
பயணத்தில்
கனவுகளை
மட்டுமே சுமந்தலைவது
காதலைக்
கொல்லுமோ?
காலத்தை
வெல்லுமோ..!
என் செய்வேன்..!
கத்துவேன்
கொல்? முட்டுவேன்
கொல்?
பெரு நகர
இரைச்சலில்
இராட்சத
பல்சக்கரங்களுக்கு நடுவில்
சிக்கித்
தவிப்பது கனவுகள் மட்டுமா?
சொல்லடி
அவனிடம்.
தோழி..
வன ங்களை
அழித்து
மரங்களை
நடுபவன்
அறிவானோ
மழையின்
தாகத்தை.
கடல் நீர்
பாய்ந்து
கழனிகள்
விளைவதில்லை..யென
காரணங்களை
அடுக்கி அடுக்கி
கண்ணீரத்
துடைக்கிறாயோ..
அடியே.. சிவகாமி..
ஏமாற்றுவது நீயல்ல.
திணைமயக்கங்களும்
புதிதல்ல
கங்கையைச்
சுமப்பவன் அறியாதா காதலா!
பொருளதிகாரம்
புரியாதவனா அவன்!
புணர்ச்சி
விதிகளின் ஒற்றுப்பிழைகள்
தண்டனைக்குரியதா..?
அரண்மனையின்
விதிகளும் சட்டங்களும்
அந்தப்புரங்களோடு
முடியட்டும்
அலைகளிடம்
காட்டாதே
அடங்கிப்போ
வென
உரக்கச்
சொல்லடீ..தோழீ
கோட்டைக்கதவுகள்
தாண்டி எதிரொலிக்கட்டும்.
கடற்கரையில்
உப்புவிற்றவள்
வெள்ளத்தில்
கரைவாளோ
அடியே.. கடைபரப்பி நிற்பதுதான்
விதியோ
வினையோ?
கனவுகளை
விதைத்த மருத நிலத்தவன்
விதைகளை
மட்டும் விதைக்காமல்
விட்ட
தென்ன?
பச்சையமற்ற
பூமி
காற்றடித்து
மணல்வெடித்து
எரிகிறதே..சுடுமணலில்
கனவுகளும்
எரிக்கிறதே.
தேவீ.. உன் கழுத்துமாலையின்
மண்டை
ஓடுகள்
நிஜத்துடன்
உரசி உரசி
பற்றி
எரிகிறதே..
பாலைக்கிழத்தியே..
கனவுகளைக்
காப்பாற்றி விடு.
கனவுகள்
ரொம்பவும் முக்கியமானவை.
கனவுகள்
தான் வாழ்க்கை.
கனவில்
வருகிறான்.
கட்டிப்பிடிக்கிறான
தோளணைத்து
தூங்குகிறான்
கனவுகளில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
அவன் முத்
தத்தின் வாசனை
தோழீ .. வருவான் தானே
கவிதையின்
சிதையில்
கனவுகளுக்கு
எரியூட்ட..
( நன்றி..காக்கைச்சிறகினிலே. ஜனவரி 2020)
No comments:
Post a Comment