Tuesday, January 14, 2020

பொங்கலின் அடையாளங்களுடன்..

பொங்கலின் அடையாளங்களுடன்
எம் பொங்கல் வருகிறது போகிறது..
கடையில் தான் புது அரிசி வாங்குகிறேன்.
என்றோ எப்போதோ என் பாட்டனும் பாட்டியும்
வயலில் விளைந்த நெல்லை அறுத்து வந்து
உரலில் குத்தி அரிசியாக்கி அந்தப் புது அரிசியில்
பொங்கல் படைத்தார்கள் என்பதன் அடையாளம்
மட்டுமே நாம் கடையில் வாங்கிவரும் பச்சரிசி.
என் பாட்டி பொங்கல் வைப்பதற்கென்றே
புதுப்பானை வாங்கி வருவாள். அதில் அவள்
தன் கைவிரல்களால் சந்தணமும் மஞ்சளும்
குங்கும மும் தீட்டுவாள்.. அதுவே ஓர் அழகான
ஓவியம் போல இருக்கும். நானும் நேற்றிரவே
வெங்கல உருளிப்பானையை பளபளனு தேய்த்து
தயாரா வைத்திருக்கிறேன்.. அந்தப் பானையின்
புதுமண் மணம் இதில் வரவே முடியாது என்பது
எனக்குத் தெரியும்.
வீட்டு தொழுவத்திற்கு அருகில் தானே முளைத்திருக்கும்
 அருகம்ப்புல்லை கிள்ளிவந்து சாணிப்பிள்ளையாருக்கு 
தலையில் சொருகி வயலில் மண்ணோடு பிடுங்கி வந்த 
மஞ்சள் இஞ்சி குலையுடன் கரும்பும் வாங்கி 
தென்னை மரத்திலிருந்து பறித்த புது தேங்காயின்
நிறமாறாமல் புதுப் பொங்கல்.. மணக்கும்..
தோட்ட்த்தில் பறித்த வாழை இலையில் அந்தப்
புதுப்பானை சோறும் அரிசிப் பாயாசமும் வீட்டில்
தயாரித்த நெய் மணமும் கலந்து அப்படி ஒரு
தேவாமிர்தமாக இருக்கும்.. அதில் எல்லா காய்கறியும்
போட்டு ஒரு குழம்பு வைப்பார்கள்.. அட டா.. மூன்று
நாளைக்கு அந்தக் குழம்பு கெட்டுப்போகாது. 
சுடாக்கி சுடாக்கி சாப்பிடும் போது அதன் சுவையும் கூடும்.
பன ங்கிழங்கு பொங்கல் வைக்கும் போதே
அடுப்புத்தீயில் ஒரு ஓரமாக சுட வைப்பார்கள்.

எல்லாம் வாங்கியாச்சு..
கடையில் தான்..
ஆனாலும் பன ங்கிழங்கு வாங்கி வர
மறந்தாச்சு.. முலுண்ட் மார்க்கெட்டில் கிடைக்கவில்லை.. 
எப்படியோ.. பொங்கலின்
அடையாளங்களை மட்டுமே சுமந்து
கொண்டு எனக்கும் வருகிறது போகிறது
பொங்கல்..

வயல்களும் தோட்டங்களும்
கிணறும் கால் நடைகளும்.. எனக்குத் தெரியும்..
ஆனால் என் வாழ்க்கையில் இல்லை.
என் பிள்ளைகளுக்கு இவற்றைக் காட்டி இருக்கிறேன்.
அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின்
பிள்ளைகளுக்கு அவர்கள் காட்டுவதற்கு .. இந்த
வாழ்க்கையின் அடையாளங்களை தக்க
வைத்திருக்கிறோமா…அவர்கள் கூகுளில் தேடிக்
கண்டடையக் கூடும். ஏன் அமேசான் இதை எல்லாம்
பொங்கல் செட் என்று சொல்லி விற்பனை செய்யும்.
(இப்போதே ஆரம்பித்துவிட்டார்களாம்!)

மண்ணின் வாசனையை கனவுகளில் மட்டுமே
சுவாசிக்கும் ஒரு பெரு நகர வாசியின்
..இனிய பொங்கல் வாழ்த்துகள்

5 comments:

  1. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அன்றைய நினைவுகளின் இனிமை இன்றைய பொங்கலினும் மிகவும் அதிகம்.தங்களது எழுத்து அதைத்தான் உணர்த்துகிறது. ஆனால் படித்து முடிக்கையில் நெஞ்சம் கனக்கிறது.

    ReplyDelete
  4. ஞாபகம் நம்நினைவவுகளில் மட்டும் தான்மாட்்டூ பொங்கல் வைக்க கிராமத்தில் கூட மாடூ இல்லை அருமையான பதிவு

    ReplyDelete