Monday, January 13, 2020

பச்சைக்குதிரை - நாவல் ஒரு பார்வை

பச்சைக் குதிரை - புதிய மாதவி - ஒரு பார்வை - பொன். குமார்


எழுத்தாளர் புதிய மாதவியின் படைப்புகள் விளிம்பு நிலை மக்களை, 
அடித்தட்டு மக்களை, பாதிக்கப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட
 மக்களை மையப்படுத்தி இருக்கும். மேம்படுத்துவதில் 
முன்னணியில் இருக்கும். கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, 
நாவல் என அனைத்துத் தளங்களிலும் எழுதும் பேராற்றல் மிக்கவர். 
எழுதுவது எதுவாயினும் அவரின் தனித்தன்மை இருக்கும்.
 ' பச்சைக் குதிரை' என்னும் நாவல் அவரின் நாவல்களில்
 முக்கியமானதாகும்.
பச்சைக் குதிரை என்பது ஒரு கிராமத்து விளையாட்டு.
 ஒருவரைக் குனிய வைத்துத் தாண்டுவது. 
ஒருவர் குனிகிறார் என்பதற்காக தாண்டிக் கொண்டே
 இருப்பதும் தவறு. குனிந்து நிற்பவரும் நிமிர்ந்து நிற்கும் காலம் வரும். 
அவரும் தாண்டும் நிலை ஏற்படும். பச்சைக் குதிரை களாக 
பெண்களை வைத்து எழுதப்பட்ட நாவல் ' பச்சைக் குதிரை'. 
பெண்கள் பச்சைக் குதிரைகளாக இருந்து வருகிறார்கள் என்றும் 
பச்சைக் குதிரைகளாக பெண்கள் இருக்கக் கூடாது என்றும்
 பச்சைக் குதிரை உணர்த்துகிறது.
 " அம்மா, மகள், மனைவி, காதலி, பாட்டி, தோழி என்று 
பச்சைக் குதிரைகள் பல்வேறு பெயர்களில் உங்கள்
 வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. 
நீங்கள் உயரங்களைத் தாண்டிக் கொண்டே இருக்கிறீர்கள். 
பச்சைக் குதிரைகள் நிமிர்ந்து விட்டால்... 
பச்சைக் குதிரைகளுக்குக் கொம்பு முளைத்து விட்டால்... 
எப்படி இருக்கும்? "
இது புதினத்திற்கான முன்னுரை அல்ல. " 
என்று முன்னுரையில் ஆண்களை எச்சரித்துள்ளார்.
 முன்னுரை அல்ல என்றாலும் இதுவே நாவலின் மையம், கரு.
ஒன்றாக படித்த சமாதான மேரி ( சமா), செந்தாமரை ( செத்தா),
 சங்கீதா, கண்மணி ஆகிய நான்கு பெண்களை மையச் சரடாகக்
கொண்டே நாவல் புனையப்பட்டுள்ளது. 
சமாவே நாவல் முழுதும் நாயகியாக வருகிறாள். 
சங்கீதா தவிர சமா, செந்தா, கண்மணி ஆகிய மூவரின் 
வாழ்க்கையில் ஆண் புயலால் எவ்வாறெல்லாம் அவர்கள்
 வாழ்வில் பாதிக்கப்பட்டது என நாவல் விவரிக்கிறது. 
நாவலின் எல்லா அத்தியாயங்களிலும் பெண்களையே 
பிரதானப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. பெண்களுக்கான 
ஒரு நாவலாக உள்ளது ' பச்சைக் குதிரை'.

சமா ஒருவனைக் காதலிக்கிறாள். சாதி பிரச்சனையால் 
கல்யாணம் செய்து கொள்ள வாய்ப்பின்றி போய் விடுகிறது. 
ஆனால் இப்பலவீனத்தைப் பயன் படுத்தி சமாவின் அக்கா கணவன் 
சமாவைத் திருமணம் செய்து கொள்ள முயல்கிறான்.
 இப்போராட்டத்தில் சமா திருமணமே செய்து கொள்ளாமல்
 ஒரு கல்லூரியில் பேராசிரியராகவும் விடுதிக் காப்பாளராகவும் 
பணிபுரிகிறார். விதி விடுவதில்லை. காதலனுக்கு கல்யாணமாகி
 அவன் மகளுக்குக் கல்லூரியில் படிக்கவும் உதவி செய்ய
 வேண்டியுள்ளது. காதலனின் மகள் காதல் திருமணத்திற்கும்
 உதவ வேண்டிய ஒரு கட்டாய நிலை சமாவிற்கு ஏற்பட்டு விடுகிறது.
 வேண்டாம் என்றாலும் விடாமல் துரத்துகிறது சமாவை ஆணினம். 
சமாவும் எல்லா கட்டத்திலும் ஒரு பச்சைக் குதிரையாகவே
 இருந்துள்ளார்.
சமாவின் அக்காவின் வாழ்க்கையும் கிளைக் கதையாக வருகிறது.
 அக்காவின் கணவன் மாமியார் வீட்டில் கட்டாய வசூல் செய்து 
வாழ்பவனாக உள்ளான். அக்கா கல்யாணத்திற்கு போட்ட நகைகளை
 அக்காவின் கணவன் அவன் சகோதரிக்கு போட்டு கல்யாணம்
 செய்விப்பவனாக உள்ளான். அக்காள் வீட்டிற்கும் 
சமாவே உதவி வருகிறாள். அக்கா கணவனின்
 தொடர் தொல்லைகளால் அக்கா தற்கொலைக்கே முயல
 அவளையும் காப்பாற்றி வாழ வைக்கிறாள் சமா.

சமாவிற்கு திருமண வாழ்வில் உடன்பாடில்லை. 
திருமணங்கள் என்னும் ஒரு கட்டாய சடங்கு இல்லாவிட்டால்
 பெண்கள் சுதந்திரமாக வாழ்வார்கள் என்பதை சமாவின் கருத்தாக,
 சிந்தனையாக பதிவு செய்துள்ளார். 
தான் திருமணம் செய்து கொள்ளாததற்காக பெருமையும்
 படுகிறாள். திருமணங்கள் பெண்களை அடிமைப்படுத்தும்
 என்பதையும் குறிக்கிறது.
. .
செந்தாமரை என்னும் செந்தா ஓர் அரசியல்வாதியின் மகள்
 என்பதால் ஓர் அரசியல்வாதிக்கே திருமணம் செய்து வைக்கப்படுகிறாள். 
அரசியல் அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் 
அவளுக்குக் கட்டிவைத்தவன் அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும்
 அப்பா என்னும் ஆணால் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்படுகிறது.
ஒரு குழந்தை பிறக்கிறது. கோஷ்டி தகராறில் கணவனும் கொல்லப்படுகிறான். அவளும் அரசியலில் இறக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகி விடுகிறாள். 
ஆணாதிக்க அரசியல் வாழ்க்கையில் அவள் அடிக்கடி கர்ப்பமுற நேரிடுகிறது. கர்ப்பத்தைக் கலைத்து உதவுகிறார் அவள் தோழி மருத்துவர் சங்கீதா. 
அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி செந்தாவும் தோழிகளுக்கு
 உதவி வருகிறாள்.

செந்தாமரை விதவையானதையும் சாதகமாக்கிக் கொண்டு 
அவளுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்னும்
 எண்ணம் இல்லாமல் அரசியல் செய்து வந்த செந்தாவின் 

அப்பாவைச் சாடியதுடன் விதவைத் திருமணத்தையும் ஆதரித்துள்ளார்.
கண்மணியின் கதையோ வேறு விதமான மோசம்.
 கண்மணி மும்பையில் வசிக்கிறார். கண்மணியின் தாயார் கணவன்
 ஒரு வழக்கில் சிறை செல்கிறான். இதனால் ஒரு பெரியமனிதருடன்
 தொடுப்பு ஏற்படுகிறது. கணவனும் வந்துவிட பெரிய மனிதர் 
வீட்டிலேயே ஓட்டுநராகப் தங்க அனுமதிக்கப்படுகிறார். 
கணவன் மனைவி உடல் உறவு கொள்வதைக் கண்ட 
பெரிய மனிதன் வக்கிரபுத்தியுடன் அவன் கண்முன்னாலேயே
 உடல் உறவு கொள்ள நிர்ப்பந்திக்கிறான். இருவரும் பெரியமனிதரின் தொல்லையிலிருந்து விடுபட வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். 
ஓட்டுநருடன் ஓடிப்போனவள் என்னும் அவப்பெயர்
 அவள் மீது சுமத்தப்படுகிறது. கண்மணியும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். கண்மணியின் தாயின் கதை.
பெரிய மனிதரையே அப்பா என்றழைக்கும் கண்மணிக்கு 
ஒருவனிடம் காதல் ஏற்படுகிறது. அவன் ஏற்கனவே திருமணமானவன்.
 ஒரு நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட உடலுறவில் கர்ப்பமுறுகிறாள்.
 கலைத்து விடுகிறார்கள். அவன் ஒரு தேச துரோகி. கண்மணியின்
 அலைபேசியை அவன் படுத்தியதால் தேச துரோக வழக்கில்
 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள்.
 பின்னர் உண்மையறிந்து விடுவிக்கப்படுகிறாள். 
இதற்கு செந்தா, சமா, சங்கீதா உதவுகிறார்ர்கள்.
சங்கீதாவை அவள் அத்தை, அப்பாவின் அக்கா, மருத்துவ 
படிப்பிற்கு பணம் கட்டி படிக்க வைத்து தங்கள் மருத்துவமனையை
 வருங்காலத்தில் நிர்வகிக்க தகுதி இல்லாத தன் மருத்துவரான
 மகனுக்கு சுயநலத்துடன் மணம் முடித்துக் கொள்கிறாள்.
 சங்கீதா அப்பாவும் சம்மதித்து விடுகிறார். சூழ்நிலையில் 
சிக்க வைக்கப் படுகிறாள். அமைந்த வாழ்க்கையை ஏற்றுக்
 கொள்கிறாள். மருத்துவர் சங்கீதாவின் தனிப்பட்ட வாழ்க்கைக் 
குறித்து எதுவும் எழுதப் படாமல் தோழிகளுடன் தொடர்பு 
படுத்தியே நாவல் நகர்கிறது.

சாதி வேறுபாட்டின் காரணமாக ஏற்பட்ட காதல் தோல்வியால்
 தற்கொலைக்கு முயன்ற சமாவைக் காப்பாற்றிய கண்மணி
 காதல் தோல்வியால் தற்கொலை என்பது பைத்தியக் காரத்தனம்
 என்று கண்மணியின் வாயிலாக எழுத்தாளர் புதிய மாதவி தெரிவித்துள்ளார். 
பெண்கள் தற்கொலை முடிவிற்குச் செல்லக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

வாழும் போது மதத்தை, சாதியை ஒதுக்கி வைத்தாலும்
 இறந்த பிறகு மதமும் சாதியும் மனிதரை விடுவதில்லை என்றும் 
வருத்தப்பட்டுள்ளார். அனாதைகளையும் சாதி, மதம் விடுவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே குடும்ப அட்டை....
 நாடெங்கும் ஒரே குரல் ஒலித்துக் கொண்டுள்ளது.
 பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் ' ஒரே' என்பது ஒவ்வாதது
. ஒத்து வராதது. பச்சைக் குதிரை நாவலில் சாதி ஒழியாது என்பதை, 
ஒழிக்க முடியாது என்பதை எழுத்தாளர் புதிய மாதவி 
ஒரே வரியில் கூறியுள்ளார். அந்த ஒரே வரி 
" ஒரே சர்ச், ஒரே ஜீசஸ், ஒரே மாதா, ஒரே பைபிள்... 
எல்லாம ஒண்ணா இருந்தாலும் இந்தச் சாதி மட்டும்
 தனித்தனியா எங்கப் போனாலும் விடாம 
ஒட்டிக்கிட்டே இருக்குதாக்கும்"
 என்று கண்மணி உரையாடல் மூலம் உரைத்துள்ளார். '
ஒரே' என்பது சாத்தியமில்லை என்பதையும் உணரமுடிகிறது.

சமா பணிபுரியம் கல்லூரி விடுதியில் சர்மிளா என்னும் பெண் கருக்கலைப்புக்குள்ளாகிறாள். 
செந்தாமரையும் கருக்கலைப்புக்குள்ளாகிறாள்.
 கண்மணியும் கருக்கலைப்புக்குள்ளாகிறாள். 
கருக்கலைப்புகள் என்பது பெண்களுக்கு மட்டும் தண்டனை
 என்பதாக உள்ளது. பெண்களை ஆண்கள் ஒரு போகப் பொருளாக
 பயன்படுத்திக் கொள்வதன் விளைவு.
.
பெண்களின் வாழ்க்கையில் ஆண்கள் எவ்வாறெல்லாம் 
ஆதிக்கத்தை, அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர் என்று நாவல் நெடுக விவரித்துள்ளார் எழுத்தாளர் புதிய மாதவி. பெண்கள் மீது ஆண்கள் வன்முறை நிகழ்த்துதலையும் பெண்களை ஆண்கள் சுரண்டுதலையும் நாவல் நெடுக பேசப்பட்டுள்ளது.
மாதவிடாய் என்பது மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை
 என்றாலும் அந்த காலத்தில் பெண்கள் எவ்வாறெல்லாம் சிரமத்தை 
அனுபவிக்கின்றனர் என்பது வலியின் வெளிப்பாடாக பதியப்பட்டுள்ளது.
 மாதவிடாயின் போது பெண்கள் முன்பு கையாண்ட முறையையும் தற்போது கையாளும் முறையையும் எடுத்துக் கூறி இரண்டிலுமே 
பெண்களுக்கு அவஸ்தை உள்ளது என்கிறார். பெண்கள் பூப்பெய்துதலை ஒரு விழாவாகக் கொண்டாட வேண்டாம் என்ற தகவலும் 
நாவலில் காண முடிகிறது.

எழுத்தாளர் புதிய மாதவி தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும்
 தற்போது மும்பையில் வசிப்பவர்.
நாவலின் களமும் தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு பயணிப்பதாக
 எழுதப்பட்டுள்ளது. நாவலை ஒரே நேர்க்கோட்டில் கொண்டு சென்றுள்ளார். 
நாவலில் வருணனை ஏதுமின்றி நிகழ்வுகளை வைத்தே நாவல் 
எழுதப்பட்டுள்ளது. நான்கு தோழிகளின் வாழ்க்கையில்
 மாறி மாறி நேர்ந்த, நிகழ்ந்த சம்பவங்களைச் சரியாக
 பிணைத்து நாவலைத் தொய்வில்லாமல் கொண்டு சென்றுள்ளார். 
பச்சைக் குதிரை என்னும் விளையாட்டை பெண்ணியத்துடன் 
தொடர்பு படுத்தி எழுதியுள்ளது சிறப்பு. 
பச்சைக் குதிரை என்னும் விளையாட்டையும் நினைவுக் கூர்ந்து
 பெண்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டையும் அறியச் செய்துள்ளார். 
பெண்கள் சமூகத்தில் எந்த நிலையில் உள்ளனர் என்பதையும் காட்டியுள்ளார். 
ஆண் சிங்கங்கள் பெண் பச்சைக் குதிரைகளை வேட்டையாடுவதைத் தடுக்கும் பொருட்டு நாவல் எழுதப்பட்டுள்ளது. பெண்கள் எப்போதும்
 பச்சைக் குதிரைகளாக இருக்கக் கூடாது என்றும் 
இருக்க மாட்டார்கள் என்றும் பச்சைக் குதிரை நாவல் வழி
 நன்றாகவே புரியச் செய்துள்ளார் எழுத்தாளர் புதிய மாதவி.
 அவர் புதிய மாதவி அல்ல புதுமை மாதவி, புரட்சி மாதவி.
 நாவலில் ஆண்பாத்திரங்கள் எதிர்மறையாகவும் பெண் பாத்திரங்கள் நேர்மறையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது புனைவு என்பது பொய். ஒரு பெண்ணாக முழுக்க பெண்களைப் பற்றி புதிய மாதவி எழுதிய 
' பச்சைக் குதிரை' என்னும் நாவலை
 ' எழுத்தும் இயக்கமுமாய் பயணிக்கும் ப. சிவகாமி'
 என்னும் ஒரு பெண்ணுக்கு சமர்ப்பித்திருப்பது கவனிப்பிற்குரியது.

வெளியீடு
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
41 கல்யாண சுந்தரம் தெரு
பெரம்பூர் சென்னை 600011
விலை ரூ. 140.00

( தோழர் பொன்.குமார் அவர்களுக்கு நன்றியுடன்.. )

No comments:

Post a Comment