Wednesday, December 23, 2009

பனைமரம்

ஒற்றைப் பனைமரம்
-------------------

உங்கள் தோட்டத்தில்
பனைமரத்தின் வேர்கள்
அத்து மீறி நுழையவும் இல்லை
ஆசைக் கொண்டு அலையவுமில்லை.

உங்கள் தென்னை மரங்களுக்கு
குழித் தோண்டி
பக்குவம் பார்த்த நீங்கள்
இந்தப் பனைமரத்தின்
மண்ணையும் வளைத்து
வேலிப்போட்டு
தோட்டம் கண்டீர்கள்.!

தனிமரங்கள் தோப்பாகாது
மரங்களுடன் இருப்பதே
இந்த மரத்திற்கும் சிறப்பு
கனவுகளின் மயக்கத்தில்
உங்கள் தோட்டத்தின்
கம்பீர தோற்றத்தில்
உலாவந்தது பனைமரத்தின்
பச்சை நிழல்கள்.

கறுப்பின விடுதலையை
கர்ஜித்து கர்ஜித்து
வைரம் பாய்ந்த கறுப்பு தோள்களுடன்
வலம் வந்தது
பனை மரத்தின் கருக்குகள்.

மரங்கள் அடர்ந்த உங்கள்
தோட்டம்
சோலையானது.
பலருக்கு மாலையானது
எப்போதும் தொடர்ந்தது
மாலைகளுக்கான
மரியாதை அணிவகுப்புகள்.

ஒருவர் நிழலில்
ஒருவர் மயங்கி
ஒருவர் நிழலில்
ஒருவர் ஒதுங்கி
தனக்கென நிழல்களில்லாத
மரங்கள் அடர்ந்த
உங்கள் தோட்டத்தில்
ஒற்றைப் பனைமரத்தின்
நிழல்..
தோட்டத்தின் நிழல்களைத் தாண்டி
விழுவதைக் கண்டு
தீடிரென ஒருநாள்
அதிர்ந்து போனது
உங்கள் தோட்டத்து முள்வேலிகள்.


முகம்மாறிய
உங்கள்
முகம் அறியாமல்
தன் நீண்ட நெடிய நிழல்காட்டி
உங்கள் மேடையில்
நாட்டியமாட நினைத்தது
பனைமரம்.
கறுத்த பனைமரங்களுக்கு
இடமில்லை.
விலக்கி வைத்தது
உங்கள் புதுப்புது விதிகள்.

யாரையோ சந்தோஷப்படுத்த
எப்போதும்
விலக்கி வைக்கப்படுகிறது
பனைமரத்தின் நிழல்.
பனைமரத்தின் மண்ணில்
பத்திரமாய் வளர்ந்தக்கதையை
மறந்து போனது
எல்லா மரங்களும்.
'வெட்டுவது கூட
கிளைகள் வளர்வதற்குத்தான்'
தத்துவம் பேசுகிறது
வாழை.
"எல்லா தத்துவங்களும் எல்லோருக்கும்
பொருந்துமானால்
ஏன் பிறக்கிறது
இன்னொரு தத்துவம்?"
கிளைகளே இல்லாத
பனைமரத்தை
வெட்டினால்
எப்படி ஜீவிக்கும்
இந்த ஒற்றைப்பனை.?

கேட்கிறது
தோட்டக்காரனிடம்.
'உன் நிழல்கள்
தோட்டத்திற்குள் மட்டுமே விழவேண்டும்'
ஆணையிடுகிறது
ஆட்சி அதிகாரம்.
உயரமாக இருப்பதும்
கிளைகள் இன்றி
பிறப்பதும்
கறுப்பு பனைகளின் கம்பீரம்.
நிழல்களைச் சுருக்குவதும் விரிப்பதும்
பனைமரங்களின் வசமில்லை.
அரசும் அதிகாரமும்
மாற்ற முடியாத
பிரபஞ்சத்தின் விதியை
கிழக்கில் உதிக்கும் சூரியனிடம்
கேளுங்கள்
சொல்லக்கூடும்-
.இயக்கவாதிகளின்
நிழல்களைக் கூட
கட்டுப்படுத்தும் அதிகாரம்
தன்னிடம் இல்லை என்பதை.

=============================

2 மொட்டைப் பனைமரம்
--------------------------------
செந்நீரைச்
செம்மொழியில் கரைத்து
தெளித்துவிட்டார்கள்.
உப்புக்கரித்தது.

தித்திக்கிறது
என்று
தீர்மானம் போட்டார்கள்
பனைமரத்தையும்
பக்கத்தில் நிறுத்தி.

ஏமாந்து விட்டதையும்
ஏமாற்றிவிட்டதையும்
மறைக்காமல்
ஆகாயத்தை நோக்கி
அலறியது பனை.

கருக்குகளை வெட்டி
பனை ஓலைகளை
எரித்து
ஒற்றைப் பனைமரத்தை
மொட்டைப் பனைமரமாக்கி
நிறுத்திவிட்டார்கள்
ராட்சதக் காற்றாடிகள்
போட்டிப்போடும்
புஞ்சைக்காட்டில்
தன்னந்தனியாக.

இன்னும் விழுந்துவிடவில்லை
மொட்டைப் பனைமரம்.
எப்போதாவது
தோட்டங்களுக்குள்
நுழைவதற்கும்
நிழல்களில் அமர்வதற்கும்
அனுமதி மறுக்கப்பட்ட
கறுப்பு மனிதர்கள்
வரக்கூடும்
மொட்டைப் பனைமரத்தின்
ஒற்றை நிழலில்
ஒதுங்கி இளைபாற.

--------------------------

5 comments:

 1. ///எப்போதாவது
  தோட்டங்களுக்குள்
  நுழைவதற்கும்
  நிழல்களில் அமர்வதற்கும்
  அனுமதி மறுக்கப்பட்ட
  கறுப்பு மனிதர்கள்
  வரக்கூடும்
  மொட்டைப் பனைமரத்தின்
  ஒற்றை நிழலில்
  ஒதுங்கி இளைபாற.///

  அற்புதமான வரிகள், கவிஞரே.
  மொட்டைப் பனைமரத்தின் உச்சியில் ஓர் ஆலம் விதையை உமிழ்ந்துவிட்டுப் போகிறீர்கள், ஒரு குருவியாய். இந்த ஒற்றைப் பனைமர அடியில் நான்... நாம்... நமது மக்கள்..! – - சகோதரன் ரவி

  ReplyDelete
 2. பனைமரம் பற்றி எத்தனைக் கவிதைகள் படித்தாலும் அலுப்பதில்லை பனை நமது இரண்டாம் தாய். பனைக் கவிதைகள் இன்னும் முளைத்துக்கொண்டுதானிருக்கும். வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. thulasi thulasi (softmynd@gmail.com)
  Sent: 30 October 2010 20:19PM
  To: puthiyamaadhavi@hotmail.com  ஒற்றைப் பனைமரம் kavithai padithaen அரசும் அதிகாரமும்மாற்ற முடியாதபிரபஞ்சத்தின் விதியைகிழக்கில் உதிக்கும் சூரியனிடம்கேளுங்கள்சொல்லக்கூடும்-இயக்கவாதிகளின்நிழல்களைக் கூடகட்டுப்படுத்தும் அதிகாரம்தன்னிடம் இல்லை என்பதை. intha line arumai,enaku parata theriyathu enaku vimarsikavumtheriyavilai nan ilakiyathil gettikaran illai,ethirpartha onraikulanthai thanaku kidaithaudan santhosapadumae antha santhosam enakuerpatathu intha kavithai padithaudan. prasanna

  ReplyDelete
 5. மிகவும் சிறப்பான பனை மரத்தைப் பற்றிய தொகுப்பு தோழரே சூப்பர்...

  ReplyDelete