Sunday, March 19, 2017

சாமிக் கொண்டாடிகளும் என் சனங்களும்


அது என்னவோ தெரியல நான் எங்க ஊருக்குப் போயிட்ட
(அதாவது நான் வாக்கப்பட்டப் போன ஊரைத்தான் சொல்றேன்)
நான் அப்படியே மாறிப்போயிடுதேன். அது என்ன மாயமோ தெரியல.
காலையில எழுந்திருச்சி  வாசப்பெருக்கி முற்றம் தெளிச்சி கோலம்
போட்டு தோட்டமெல்லாம் பெருக்கி ... அப்படியே வயக்காட்டுக்குப்
போயி மோட்டார் போடற கிணற்றில் குளியல் போட்டு துணியைத்
துவைச்சி வீட்டுக்கு வந்து அசைக்கயிற்றில் காயப்போடுவது வர..
எல்லாமே என் ஊருக்கான ஸ்பெஷாலிட்டி தான்.அப்படித்தான் எங்க
ஊரு சாமிகளும் சாமிக்கொண்டாடிகளும். நாங்க போனவுடனேயே
சாமிக்கொண்டாடி வந்து சொல்லிட்டுப் போயிடுவாரு.. கோவிலுக்குப்
பூஜை செய்யது பற்றி. ஒரு வெள்ளியோ செவ்வாயோ கோவிலையும்
கோவில் சுற்றுப்புறத்தையும் தூய்மை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.
கோவிலைச் சுற்றி வளர்ந்திருக்கும் முள்மரங்களை வெட்டுவது தண்ணீர்
தெளிப்பது என்று எல்லோரும் சேர்ந்து வேலை செய்வதைப் பார்க்கவே
நல்லா இருக்கும். அப்போது சூடான அரசியல் பேச்சும் நடக்கும்.
அவர்களுக்கு ஊரில் காபிக்கடை வைத்திருப்பவர் தன் சார்பாக
காபியும் வடையும் கொடுத்து கவனித்துக் கொள்வார்.
மாலையில் பூஜை ஆரம்பிக்கும். நான் நல்லபெண்ணாக எந்த
விவாதங்களும் செய்யாமல் அவர்களுடன் கலந்து நிற்பேன்.
சர்க்கரைப் பொங்கல் வைத்து பூஜை நடந்தப் பிறகு வரும் பாருங்கள்
சாமிக்கொண்டாடிக்கு அருள்... அப்படியே அவர் ஆட ஆரம்பித்து
விடுவார்.. பெண்கள் அவரிடம் நல்வாக்கு கேட்பார்கள்..

" அந்த மனுஷன் திரும்பி வருவாரா இல்ல.. அப்படியே
போயிடுவானா.."
-யாரு உன் புருஷனைதானே கேட்கே.. அவன் அங்க ஒரு தொடுப்பிலே
இருக்கான்... எப்படியும் இந்தப் பங்குனி மாதத்திற்கு பிறகு வந்திடுவான்
பாரேன்.  -

'உன்ன நல்லாதானே வச்சிருக்கோம். இப்படி தோட்டமெல்லாம்
காய்ந்து போயி கிடக்கே.. .."
சாமிக்கு இப்போது அருள் உச்சத்தை தொடும்.
"என்ன மறந்திட்டீங்க... என்ன மறந்தீட்டிங்க.."  என்பார்.
ஊரிலிருக்கும் பெரியவர் சாமியிடம் கோவித்துக் கொள்வார்.
"தோட்டமும் வயலும் செழிப்பா இருந்தா உன்ன என்ன பட்டினியா
போடுவோம்.." என்பார்.

'கிணத்திலே தண்ணி இல்ல. விதைச்சிட்டேன். மழை வருமா ..
விளையுமா சொல்லு..'
"வர்ற அமாவாசைக்கு முந்தின நாள் மழை ஆரம்பிக்கும்.
குளம் குட்டை கிணறெல்லாம் நிரம்பிடும். அம்மா சொல்லிட்டா"
இப்படியாக அவர் நல்வாக்கு சொல்ல ஒருவழியாக நாங்கள்
 எல்லோரும் சுவையான சர்க்கரைப் பொங்கலை
அங்கேயே இலைப்போட்டு சாப்பிட்டுவிட்டு வருவோம்.
 பூஜைக்கு வைத்த தேங்காய் ,பழம் , எஞ்சிய சர்க்கரைப் பொங்கல்
ஊரில் அனைவரின் வீட்டுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

அமாவாசை வரும் போகும் வரும் போகும்.
மழை ஏன் வரவில்லை என்று அவரிடம் யாரும்
 எதிர்கேள்வி கேட்பதில்லை.
அவரும் தோட்டத்திற்கு வயலுக்கும் நடையா நடந்து இளைத்து
களைத்துப் போயிருப்பார். பல வருடங்கள் இதைப் பார்த்து
என் சனங்களின் தெய்வங்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.
இந்த தெய்வங்களுக்கும்  கருவறையில் வீற்றிருக்கும்  கடவுளின்
அதிகாரத்திற்கும் சம்பந்தமே இல்லை.
 தெய்வங்கள் அவர்களில் ஒருவராக இருக்கிறார்.
அவர்களைப் போலவே அவர்களின் தெய்வங்களும் வெயிலில் வாடி
கறுத்து மழையில் நனைந்து ஒதுங்குவதற்கு மேற்கூரையின்றி
வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர்கள் தெய்வத்துடன்  பேசுகிறார்கள்
 கோவித்துக் கொள்கிறார்கள்
சண்டைப் போடுகிறார்கள். ஏன் அவர் அவர்களுடன் சேர்ந்து
சாராயம் வேறு குடிக்கிறார்
.இப்படியாக வாழ்ந்த சாமிக்கொண்டாடிகள்  பலரில்
நல்வாக்கு கேட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு சாமிக்கொண்டாடி
போய்ச்சேர்ந்தப் பிறகு ஊரிலிருந்து சங்கருக்கு அடிக்கடி போன்
வருகிறது
. " அண்ணே.. நம்ம ஊர்ல சாமியாட இப்போ யாருமில்லைன்ணே"
என்று. என் சனங்களின் கவலை நியாயமானதுதான்.

3 comments:

  1. அவரவர் நம்பிக்கை அவர்களுக்கு. இன்றும் கிராமங்களில் சாமியாடிகளும், ஒப்பாரி பாடும் கிழவிகளும் இன்றியமையாத தேவையாக இருக்கிறார்கள்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  2. இறை நம்பிக்கை
    மக்களின் நம்பிக்கையே!

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    ReplyDelete
  3. நல்ல ஒரு பதிவு.
    மக்கள் நல்லாவருவார்கள்!

    ReplyDelete