Monday, March 8, 2021

வம்பாயில (பம்பாயில) வாக்கப்பட்டு......

 

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்ப

தேன் வந்துப் பாயுது காதினிலே…’


வாஷிங்க் மிஷுனு, கொடுக்காக.

சிலிண்டர் கொடுக்காக

மின்சாரம் கொடுக்காக

கைபேசி கொடுக்காக

அதில பேசிட்டே இருங்கனு  wifi கொடுக்காக.

ரேஷன்ல அரிசி பருப்பு சீனி சர்க்கரை

எல்லாம் தான் கொடுக்காக.

கவலை இல்லாமல் அடுப்பை பத்தவைக்க

சிலிண்டரும் கொடுக்காக.

டாக்டர் செக்கப் செய்வாகளாமே.

ஆத்தாடி.. அப்போ டாக்டரு எழுதற

மருந்து மாத்திரையும் கொடுக்காமலா

இருப்பாக!

காலை நீட்டு வூட்ல இருந்துக்கிட்டு

சீர்யல் பாக்கறதுக்கு டிவியும்ல கொடுக்காக.

இதெல்லாம் காணாதுனுட்டு

கைச்செலவுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு

அள்ளிக்கொடுக்கப்போறகளே..


அடி ஆத்தா..

இந்த வெம்பாயில(பம்பாயில) வந்து 

வாக்கப்பட்டு

என்னத்தைக் கண்டேன்?

எதாச்சும் பஞ்சு மிட்டாய் கொடுக்கக் கூட

வக்கத்த ஊர்ல குடித்தனம் நட த்தி

வீணாப்போயிட்டேனே..   

என் மக்கா…

எதுக்குய்யா.. இங்க கிடந்து இந்தப்பாடு

படனும்..

காலு மேல காலுப்போட்டு நம்ம

ஊர்ல ராசா மாதிரி ராசாத்தி மாதிரி

இருக்கறதை விட்டுட்டு..

இது என்னய்யா.. பம்பாயி..

செந்தமிழ் நாடெனும் போதினிலே

இன்பத் தேன் வந்துப் பாயுது

பாயுது பாயுது பாயுதுடே…

 

.

 

Friday, March 5, 2021

வாசிக்க விரும்பும் புத்தகம்(கள்)

 


வீட்டில் புத்தகங்கள் வைப்பதற்கான இடமில்லை தான்

. வாழ்க்கை அப்படித்தான் எனக்கு வரமளித்துவிட்டது.

முன்பெல்லாம் நான் வாசிக்க விரும்பும் புத்தகங்கள்
என்று ஒரு நீள்பட்டியல் இருக்கும். அதில் பாதியாவது
தாண்டிவிடுவேன். இப்ப்போது...?
ஏனோ தெரியவில்லை..
நீளம் ரொம்ப ரொம்ப குறைகிறது..
வாசிக்கும் காலமும் குறைந்துவிட்டதோ என்னவோ!

மனம் எதை வசப்படுத்த/அடைய விரும்புகிறதோ
அதை எப்படியும் அடைந்தே தீரும்..
இப்படியான ஒரு விசித்திரமான நம்பிக்கை
கொண்டவள் நான்!
இந்த ஆண்டு 3 புத்தகங்கள் மட்டும்
வாங்கி வாசித்துவிட வேண்டும் என்று காத்திருக்கிறேன்.
*தஞ்சை பிரகாஷ் எழுதிய :
புரவி ஆட்டம் (வெளிவராத சிறுகதைகள் )
*ஆண் எழுத்து + பெண் எழுத்து = ஆபெண் எழுத்து
ரமேஷ் பிரேதன் எழுதியது.

*உடலும் உணவும்.
கலைமாமணி. டாக்டர். எஸ். அமுதகுமார் எழுதியது.


****
என் உலகம் ரொம்பவும் சுருங்கிவிட்டது.
நட்புகளுடன் உரையாடலும் மவுனித்துவிட்டது.
உறவுகள் பொய்த்துவிட்டன.
புத்தகங்கள் இன்றுவரை ஏமாற்றவில்லை.
பிரபலங்களின் புத்தகவரிசையைக் கொண்டாடும்
உலகத்தில் என் வாசிப்பும் என் உலகமும் எறும்பைப் போல இயங்கிக்கொண்டிருக்கிறது.

#myreadings_puthiyamaadhavi
Like
Comment
Share

Wednesday, March 3, 2021

புத்தகவரிசையில் அபுனைவுகள்

 

புத்தகவரிசையில்…

1)   *சங்கமி

இப்புத்தகம் எல்லோருக்குமானதல்ல. ஆம். ஆனால் கல்லூரி மாணவர்கள், பெண்ணியம் சார்ந்த ஆய்வாளர்கள் அனைவருக்கும்

மிகவும் உதவியாக இருக்கும். சங்கமி புத்தகம் இந்தியா மற்றும்

உலக நாடுகளின் பெண் எழுத்தாளர்கள் / களப்பணியாளர்களின்

நேர்காணல்களைத் தொகுத்து ஊடறு வெளியிட்டிருக்கும் புத்தகம்.

காவ்யா பதிப்பகம் வெளியீடு.

இப்புத்தகத்தை தொகுத்தப்போது இன்னும் சிலரின் நேர்காணல்களை

அவர்களின் வெளிப்படையான மதம் சார்ந்த சில கருத்தியல் காரணமாக தொகுப்பிலிருந்து எடுத்துவிட்டோம். அப்பகுதியை மட்டும்

நீக்கிவிட்டு வெளியிடுவது அவருடைய உரிமையில் நாங்கள் தலையிடுவதாக அமையும். எனவே காட்டமான சிலரில் நேர்காணல்களை இணைக்க முடியவில்லை. பிரபலமானவர்கள் மட்டுமல்ல, ஊடகங்கள் வெளிச்சப்படுத்தாத களப்பணியாளர்களையும்

கலைஞர்களையும் இணைத்திருக்கிறோம்.

ஒரு தொகுப்பாசிரியராக எனக்கு மிகுந்த மன நிறைவைக்

கொடுத்த புத்தகம் “சங்கமி”

ஊடறு றஞ்சிக்கு நன்றியுடன். 

 

*மாபெரும் தமிழ்க்கனவு.


 இந்து தமிழ்த்திசை வெளியிட்டிருக்கும் அறிஞர் அண்ணாவைப் பற்றிய புத்தகம். பல பதிப்புகள் வந்தாகிவிட்ட து, இந்து தமிழ்த்திசைக்கு  நல்ல

அறுவடை. உ.பிக்களும் ர.ர.க்களும் வாங்கியிருப்பார்கள்.

அவர்களில் யாராவது புத்தகத்தைப் புரட்டினார்களா?

இதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வி!

ஆனால் வளரும் இளம் அரசியல்வாதிகளுக்கு

அண்ணாவின் நாடாளுமன்ற உரைகள்.. இந்திய கூட்டாட்சி

அரசியலமைப்பையும் அரசியலையும் புரிந்து கொள்ள

வழிகாட்டும். நான் மிகவும் விரும்பி வாசித்தப் புத்தகம்.


*அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்:

பிரேம் அவர்களின் கட்டுரைத்தொகுப்பு.

கலை இலக்கிய தளத்தில் போற்றப்படும் புனிதங்களையும்

 தூய்மைகளையும் கட்டுடைத்து
மாற்று அரசியலுக்கான பாதையை,
ஒடுக்கப்பட்ட மக்களும் ஒடுக்கும் மக்களும் இணையும் புள்ளியாக

 நிகழ வேண்டிய அறப்போராட்டங்களை அயோத்திதாசரின்
எழுத்துகளின் ஊடாக கண்டடைகிறார் பிரேம்.

 

*காலம்தோறும் பிராமணீயம் – அருணன்.


7 பாகங்களாக வந்திருக்கும் இந்திய சமூக வரலாற்றின் பக்கங்கள்.

தேச முன்னேற்றத்தை மதமும் கலாச்சாரமும் எப்படி சீரழித்துக் கொண்டிருக்கின்றன என்பதை வரலாறு இலக்கியம் கலைகளின் ஊடாக

கண்டு கட்டுடைத்து விடை தேடும் நூல்.

 

*இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும்

அழிந்தனவும்



ஆசிரியர்: தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா (விடியல் பதிப்பகம்)

இந்தியத் தத்துவப் பரம்பரையைப் பற்றிய ஒரு மதிப்பீடு

இன்று தேவைப்படுகிறது. எனவே இப்புத்தகம் மீள்வாசிப்புக்குரியது.

#Chennai_bookfair2021

#myreadings_puthiyamaadhavi


 

 

 

Monday, March 1, 2021

தமிழ் நாடு தேர்தல் களம் 2021



 தேர்தலில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது

ஆதரவு ஓட்டுகள் அல்ல. எதிர்ப்பு அலைகள் தீர்மானிப்பதே.
இன்னாரை ஆதரிக்கிறேன்,
இந்தக் கட்சி மீது/ கட்சி தலைமை மீது நம்பிக்கை இருக்கிறது
என்ற ஓர்மையைவிட இந்தக் கட்சி வராமல் இருந்தால் போதும்,
என்ற எண்ணம் , அக்களத்தில் நிற்கும் இன்னொரு கட்சிக்கான
ஆதரவு ஓட்டாக மாறுவதே தமிழகத்தின் தேர்தல் களம்
கற்பிக்கும் பாடம்.
மேலும் கொஞ்ச காலமாக திராவிடக் கட்சிகளுக்கு
மாறி மாறி ஒட்டுப்போட்டு அலுத்துவிட்ட வாக்காளர்களில் சிலர்
மாற்று அரசியலை மூன்றாவது அணியைப் பற்றி யோசிக்கிறார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.75 %
சீமானின் நாம் தமிழர் கட்சி 4.50%
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5.50%
அதாவது இந்த ஓட்டுகள் அனைத்தும் திமுக + அதிமுக வுக்கு
எதிரான ஓட்டுகள் தான்.
இந்த எதிர் ஓட்டுகள் சற்றொப்ப 14% இதில் மற்ற
உதிரிக்கட்சிகளையும் சேர்த்தால் கணக்கு உதைக்கிறது.

ஆனாலும் நம் தேர்தல் என்பது எந்தக் கட்சி
எவ்வளவு வாக்குகள் பெற்றது என்பதல்ல,
எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பது தான்.
அவர் 5 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும்
அவர்தான் வெற்றி பெற்றவர். அவர் கட்சியின் வெற்றி அது.
எனவே இந்த மூன்றாவது அணியின் எதிர்ப்பு ஓட்டுகளின்
கூட்டுத்தொகையை வைத்துக்கொண்டு
கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டுவிட முடியாது.
அத்துனை விசித்திரமானது நம் ஜன நாயகம்.
ஆனால் இந்த 3வது அணி ஓட்டுகளைப் பிரிக்கும்.
வலுவான எதிர்க்கட்சியோ ஆளும்கட்சியா இல்லாத
ஸ்திரமற்ற மா நில அரசு அமைவது என்றைக்குமே
ஆபத்தானது. குதிரைப்பேரங்களுக்கு வழிவகுக்கும்.
அதைத்தான் டில்லி அதிகாரம் விரும்புகிறது.
மைனாரிட்டி வெற்றியுடன் ஆட்சி அமைக்கும்
மாநிலங்களை தன் காலனியாக மாற்றுவதிலும்
குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதன் மூலம்
ஒருவகையில் மாநில கட்சிகளின் பல்லைப்பிடுங்கி
“ஆடு பாம்பே விளையாடு பாம்பே” என்று
மகுடி வாசிக்கவே டில்லி விரும்புகிறது.

இங்கே கமல், சீமான், சசிகலாவின் உதவி பெற்றவர்கள்
ஒரு பக்கம்.. இவர்கள் அதிமுக ஓட்டைப் பிரிப்பார்கள்.!
இது பிஜேபி தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பை
உருவாக்குமா என்பதை எளிதில் கணிக்க முடியாது.
அதிமுக மட்டுமல்ல, திமுகவும் கூட பிஜேபியுடன்
அதிகாரத்தைப் பங்கிட்டு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்
அதை ஒதுக்குபவர்கள் அல்ல.
வரப்போகும் தேர்தல் களம் திமுகவு தலைமைப் பொறுப்பில்
இருக்கும் திரு. ஸ்டாலின் அவர்களுக்குத்தான்
எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாக்குச்சீட்டு.
தமிழக மக்கள் எப்போதுமே ஓட்டுப்போடும் போது
நாடாளுமன்ற தேர்தலுக்கும் சட்டசபை தேர்தலுக்கும்
வித்தியாசமாக யோசித்து ஓட்டுப்போடும் விவரமானவர்கள்!

மராட்டிய மா நிலத்தில் பிஜேபியுடன் கைகோர்த்து
கூட், டணி ஆட்சியிலிருந்த சிவசேனா ..
மா நிலக் கட்சிகளின் முகவரியை C/O முகவரியாக
மாற்றும் நடுவண் அரசு/பிஜெபியைப் புரிந்து கொண்டு
எதற்காகவும் மாநில மக்களின் அரசியல் உரிமைகளை
விட்டுவிட மாட்டோம் என்று துணிந்து எழுந்து நிற்கிறது.
மாநில உரிமைகளை இந்திய அரசியலில் முன்வைத்த
தமிழக அரசியல் இன்று அப்படின்னா என்ன?
என்று கேட்கும் அவல நிலை!

… என்னவோ போ.. சரவணா..

ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரு + பாயிண்ட்..
அதிமுக அரசின் குறைபாடுகளையும்
பிஜேபி குளறுபடிகளையும்
சரியாக மக்கள் மன்றத்தில் வைக்கும் பிரச்சார உத்திதான்.
இதற்காக கட்சி தொண்டர்களை நம்ப வேண்டுமே தவிர
காசு கொடுத்து விலைக்கு வாங்கும் ஆலோசகர்களை அல்ல,

திமுக ஆட்சி, கலைஞரின் ஆட்சியை அறிந்த தமிழகம்,
திமுக ஸ்டாலின் தலைமையில் ஆட்சிக்கும் வாய்ப்பு
கொடுக்கட்டுமே.. என்ன பெரிதாக கெட்டுவிடப்போகிறது?
ரஜினி வாயைப்பொத்திக்கொண்டு இருப்பது தேர்தல்
கணக்குப்போட நல்லது.
திமுக வின் இரண்டாவது வரிசை தலைவர்கள்
கொஞ்ச காலத்திற்கு ஊடகங்களில் பேட்டிக்கொடுக்காமல்
இருப்பதும் ஸ்டாலினுக்கு நல்லது.

#tamilnaduElection2021_puthiyamaadhavi




அவள்களின் நாட்குறிப்புகள்



திரெளபதிி என்ற பாஞ்சாலி எனது பதின் பருவத்தில் அறிமுகமானது ராஜாஜியின் வியாசர் விருந்து வழியேதான் . அந்த வயதின் வாசிப்பு அனுபவத்திற்கேற்ப பாஞ்சாலி பாரதத்தில் வரும் ஆயிரக் கணக்கான 

கதை மாந்தர்களில் ஒருவள் . அவ்வளவே . 

பின்னர் சில வருடங்கள் கழித்து பாரதியாரின் “ பாஞ்சாலி சபதம் “ முழுமையாக வாசித்து முடித்ததும் பாஞ்சாலி குறித்த 

என் பார்வை சற்றே அகலமானது . அதன் பின்னர் 

மகாபாரதத்தின் வெவ்வேறு மீள்பார்வைகளாக உருவான 

பல கதைகள் பாஞ்சாலி குறித்த பார்வைகளை விரிவு படுத்திக் 

கொண்டே போயின . ஆனால் 2015 ல் வாசித்த 

“ யார்லகட்ட லஷ்மிப்ரசாத் “ எழுதிய தெலுங்கு நாவலான

 “ திரெளபதி “ யின் தமிழாக்கம் , திரெளபதி குறித்த எனது

 பார்வையையே திருப்பிப் போட்டு விட்டது . 

மகாபாரதம் பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்ட நாவல் அது

 . [ குறிப்பாக திரெளபதியின் பார்வையில் ] 

அதை வாசித்தபின் திரெளபதி என்பது வெறும் பெயரோ 

அல்லது ஒரு கதை மாந்தரோ அல்ல – அது ஒரு குறியீடு

 என்பதை உணர்ந்தேன் . அதுவாவது 350 பக்கங்களுக்கு 

மேற்பட்ட ஒரு நாவல் . அதன் விரிவான தளத்தில் 

படைப்பாளிக்கு திரெளபதி குறித்த ஒரு புதுப் பார்வையை

 உருவாக்குவது எளிதாக இருந்திருக்கலாம் . ஆனால் 

கவிதை என்ற குறுகிய வடிவத்தில் பாஞ்சாலியை

 இன்றைய காலகட்டத்தின் அன்றைய பிரதிநிதியாக 

உருவகப்படுத்த முடிந்திருக்கிறது புதியமாதவிக்கு 

அவரது புதிய கவிதைத் தொகுப்பான “ அவள்களின் நாட்குறிப்புகள் “ 

மூலம் . 

மொத்தத் தொகுப்பும் திரெளபதியை முன்னிலைப் படுத்தி 

எழுதப்படாத போதும் , கவிதைகளில் வரும் எல்லாப் பெண்

 குரல்களும் திரெளபதியின் குரலாகவே ஒரு பிரமையை உருவாக்கி விடுகின்றன . ஆண் X பெண் எனும் இரு பாலினத்தரில் 

ஏன் பெண் தொன்மம் தொட்டே இரண்டாம் இடத்திலேயே வைக்கப் பட்டிருக்கிறாள் என்ற கேள்வியை உரக்க எழுப்புவதோடு 

சமயங்களில் அந்த பிம்பத்தை உடைக்கவும் செய்கிறார் 

தனது வலிமையான மொழி மூலம் .

 ஒவ்வொரு கவிதையுமே வாசிப்பவனின் பிரதியாக மாறி 

படைப்பாளி காணாமல் போகிறார் .

 விளைவாக எண்ணற்ற கேள்விகளை வாசிப்பவனிடம்

 உருவாக்கி விடுகிறது பிரதி . நீள் கவிதைகளும் , குறுங்கவிதைகளுமாக அறுபது கவிதைகள் . தொன்மங்களை பயன் படுத்துவதின் மூலம் நிகழ்காலத்து நிஜமான அவலங்களை வெறும் குமுறல்களாக 

இல்லாமல் அறிவு பூர்வமான அறச் சீற்றக் குரல்களாக

 வெளிப் படுத்துவதில் படைப்பாளி வெற்றி பெறும் தருணங்களை 

தொகுப்பை முழுவதுமாக வாசித்து முடித்ததும் உணர முடிகிறது . 

ஒவ்வொரு கவிதையும் ஏராளமான கேள்விகளை

 எழுப்பிச் செல்கின்றன வாசிக்கையில் . 

முதல் கவிதை –

கிருஷ்ணை நதிக்கரையில் / குளித்துக் கரையேறியவள்
நினைவுகளை உலர்த்துகிறாள் .
பீமனின் எச்சில் முத்தங்கள் / அவளைத் தின்று பசியாறுகின்றன .
அவள் அவர்கள் தேசத்தில் / அரசியா அடிமையா
கண்ணன் அறியாத புல்லாங்குழல்
பெண்மொழியின் அர்த்தங்கள் புரியாதவனா
புருஷோத்தமன் !
காதலரின் பால்வீதியில் / அவள் சிறகுகளின் படபடப்பு .
அந்தப்புர மனைவியர் பார்க்காத உலகம்
அவள் மவுனத்தை வாசிக்க முடியாமல்
தடுமாறுகிறான் தருமபுத்திரன் .
சிதையில் சொற்களை எரித்து / காற்றுவெளியில் கரைவதற்குள்
எழுத்துக்கூட்டியேனும் வாசித்துவிடுவானா / காண்டீபன்

திரெளபதியின் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதில் விடைகள்

 கிடைத்து விடுமா ? ஆனால் வாசிப்பவனுக்கு இன்னொரு 

கேள்வி எழுகிறது . மூவரைச் சொன்னவள் ஏன் நகுலனையும் , சகாதேவனையும் விட்டு விட்டாள் ? அவர்கள் மாத்ரியின் புத்திரர்கள் என்பதாலா ? தனது அந்த நிலைக்குக் காரணமான வேண்டுகோளை 

[ பொதுவானதுதான் எனினும் ] வைத்த குந்தியின் மீதான கோபமாக இருக்கலாமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது .

 முதல் கவிதையைத் தொடர்ந்து மேலும் சில கவிதைகளும் 

பாஞ்சாலியின் குரல் வழியாகவே வெளிப்படுகின்றன 

. இன்னொரு கவிதை - 

கொட்டு மழையே கொட்டு .

 / யுகம் யுகமாகச் சுமந்தலையும் 

காதலும் காமமும் கரைந்து / போகட்டும் . 

கொட்டு மழையே , கொட்டு . 

ஆடைகளை அவிழ்த்துவிட்டேன் . / 

முழுவதும் நனைந்தாக வேண்டும் .

 கொட்டு மழையே கொட்டு . / கொட்டித் தீர்த்துவிடு 

. மழை என்பது மழைதானா , இல்லை 

கண்ணீரின் உருவகமா ? யோசித்துக் கொண்டிருக்கையிலேயே 

இடையில் வரும் இரு வரிகள் ஓர் அழுகைக் கவிதையை

 அழகியல் கவிதையாக்கி விடுகின்றன . **************************************************** 

மழையில் நனைவதும் மழையை ரசிப்பதும் ஒன்றல்ல . ******************************************************** 

 நீலகண்டனைப் பிரசவித்த வலியுடன் 

அலைகள் கரை ஏறுகின்றன . 

வந்தச் சுவடு தெரியாமல் / 

காற்றில் கரைகிறேன் .

 நீலகண்டனின் ஆகாயத்தில் / 

மலைக்குன்றுகள் அசைகின்றன . 

சிவனைப் பார்த்து சக்தி பேசுவதாக ஒரு கவிதை – 

சக்தியில்லையேல் சிவமில்லை என்ற கூற்றினை 

கேலி செய்வதுபோல . 

உன் கோட்டைகள் அதிர / 

வெற்றிமுரசுகள் ஒலிக்க உன்னோடு ஆட ஓடோடி /

 வருகிறேன் … 

என்பவை போன்ற வரிகளில் சக்தியின் ஊழிக்கூத்து 

வெளிப்படுகின்றன .

 [ எழுத்துப் பிழைகள் அவ்வளவாக இல்லாத தொகுப்பில் 

“ உன்னோடு “ என்ற சொல் “ உன்னேனாடு “ என்று உள்ளது 

பிழையா அல்லது வேறு பொருளிலா ? ] 

தோழீ .. வருவான் தானே கவிதையின் சிதையில் கனவுகளுக்கு

 எரியூட்ட ..

 ********************************************** 

 முத்தங்களின் சுமையுடன் நானும் கடலும் . 

பாய்மரக்கப்பலில் வருவதாகச் சொன்ன 

அவனை மட்டும் காணவில்லை . -

 போன்ற வரிகளில் சங்க காலக் கவிதைகளின் 

தாக்கம் தூக்கலாக நிற்கின்றது . ஆனால் அவை காட்டுவதோ 

கணினிக் காலத்தை . படைப்பாளியின் சொற்கிடங்கின்

 ஆழம் காட்ட தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கின்றன வரிகள்

 … வெட்கமறியாத காமத்தீயில் / 

கங்கையைத் தெளித்து 

புனிதங்களைப் போர்த்தாதே . 

******************************************** 

 இரவு கேட்காததை / பகலின் வெளிச்சம் கேட்குமோ 

. பனித்துளிகள் அவன் தாகம் தீர்க்குமோ .. ? **********************************************

 வெயிலின் வெக்கையும் / 

நினைவுகளின் புழுக்கமும் தாளாமல் 

எத்தனை முறைதான் / குளித்துக் கரையேறுவது ? ! ********************************************** 

 ஆண்டாளின் தாயின் குரலாக ஒலிக்கும் கவிதையில்

 நிகழ்காலமும் சேர்த்தே கேள்விக்குள்ளாகின்றன . 

கருவறை நெருப்பில் / 

 துளசிமாடம் எரியுதடி . 

ஆண்டாளு .. அடியே ஆண்டாளு .. 

மொத்தத்் தொகுப்பின் சாரத்தையும் படைப்பாளி தன்னுடைய முன்னுரையில் ஒரு பகுதியாக தந்து விடுகிறார் . 

நம் வீடுகளில் கன்னி தெய்வங்களின் காலடி மண்ணில் 

புதைந்திருக்கிறது அவளின் நாட்குறிப்பு பக்கங்கள் – 

என்ற வரிகளை மனத்தில் இருத்தி வாசிக்கையில் 

தொகுப்பின் கனம் புலப்படுகிறது மிகத் தெளிவாக . 

வழக்கமான பெண்ணியக் குரலாக இல்லாமல் 

அழகியலோடு அவலத்தையும் சரியான விகிதத்தில் 

கலந்து நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது

 தொகுப்பு . 

 “ அவள்களின் நாட்குறிப்புகள் “ [ கவிதைத் தொகுப்பு ] 

ஆசிரியர் – புதியமாதவி 

வெளியீடு – அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

 விலை – ரூ 100 / [ முதல் பதிப்பு டிசம்பர் 2020 ] பக்கங்கள் – 88 .

 சென்னை புத்தகக் காட்சி 2021 அரங்கு எண் 264 [ அம்ருதா பதிப்பகம் ] 


#சுப்ரா


மிக்க நன்றி சுப்ரா & வாசிப்போம்  குழுமம்

Sunday, February 28, 2021

Ever green books

 கல்கியின் பொன்னியின் செல்வன் சலுகைவிலையில் கிடைத்த தாக சொன்னார் அந்தப் பெண். அதனால் வாங்கிவந்ததாகவும் சொன்னார். 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அவர் இன்னும் அப்புத்தகத்தைப் பிரித்துப் பார்க்கவில்லை. இப்படியும் இருக்கிறார்கள் புத்தகப்பிரியர்கள்! பாவம்.. பொன்னியின் செல்வன். 

கல்கியை வாசிக்க வேண்டும் என்றால் பொன்.செ. பக்க அளவு பயமுறுத்தலாம்.. அதனால் சிவகாமியின் சபதம் வாங்குவது நல்லது.. 

சிறுகதைை என்று வந்துவிட்டால் புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, கு.பா.ரா , லா..ச.ரா..எப்போதும் வாசிக்கலாம். 

மீசைை என்பது மயிறு.. ஆதவன் தீட்சண்யா.. ரொம்பவும் வித்தியாசமானது. 

ஜெயமோகன் கொரொனா காலத்தில் எழுதிய சிறுகதைகள் புத்தகமாக வந்துவிட்டால் வாங்கிவிடலாம். 

யமுனாா ராஜேந்திரனின் மொழியாக்க கவிதைகளும் வாசிப்பின் புதிய வாசலைத் திறக்கும். 

(ஆ.தீ, ஜெ.மோ, ய.ரா… அடுத்தடுத்து எழுதியதற்கு எந்தக் காரணமும் இல்ல. அப்படி வந்திடுச்சி…ப்ளீஸ் நம்புங்க) 

தமிழ்் ஸ்டுடியோ இதழ்கள் நவீன சினிமாவைத் தேடும் வாசகனை ஏமாற்றாது. 

 “ உயிர் எழுத்து “ இதழ் மீண்டும் ஆரம்பித்திருப்பதாக சுதிர் செந்திலின் முக நூல் பக்கம் சொல்கிறது. தமிழ் இதழ்களில் உயிர் எழுத்து வரவேற்கப்பட வேண்டியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. (உயிர் எழுத்து பழைய இதழ்கள் மொத்தமாக தோழர் மதி கண்ணன் இல்லத்தில் தங்கி இருக்கும் போது வாசித்தேன்.) 

கொஞ்சம்் தத்துவ விசாரணையும் தேடலும் இருப்பவர்கள் “மிர்தாதின் புத்தகம்” – மிகெய்ல் நைமி எழுதியது. “இதயத்தால் வாசிக்க வேண்டிய புத்தகம்” என்று ஓஷோ சொல்வது முழுக்க உண்மை. PDF கிடைக்கிறது என்றாலும் கூட புத்தகமாக நம்முடம் மிர்தாத் பயணிக்கும் அனுபவம் இனிது. 

மொழியாக்க நாவலில் இதிகாசங்களை விரும்பி வாசிப்பவர்களுக்கு எப்போதுமே “பருவம்” நாவல் தாம் . கன்னட த்தில் பைரப்பா எழுதியது. பாவண்ணன் தமிழாக்கம். 

இன்னொருபுதினம் “அக்னி நதி” உருது மொழியில் குர் அதுல் ஜன் ஹைதர் எழுதியது. தமிழாக்கம் செளரி. . பவுத்தம். அத்வைதம் துவைதம், சூஃபி பவுத்தம் சமூகத்தில் பரவிய காலத்தின் கதையாக விரிகிறது. இப்படி எல்லாம் எழுதமுடியுமா என்று வாசித்துவிட்டு நான் பிரமித்த நாவல். 

விமர்சனக்கட்டுரையில்் ராஜ்கெளதமன் எழுதிய “சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்” . ஆனால் சுந்தர ராமசாமியை தலையில் வைத்துக் கொண்டாடும் வாசகனுக்கு இப்புத்தகம் அவ்வளவு உவப்பானதாக இருக்காது. (இன்றைக்கு இவ்வளவுதான் நினைவில் வந்த்துச்சு.. தொடரலாம்) 

 #chennaibookfair2021 

#MyReadings_puthiyamaadhavi

Friday, February 26, 2021

இந்திய அரசியலில் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு

 https://youtu.be/ToWZUv6P7Q0

இந்திய அரசியலில் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பு.

முப்பா கூட்டம் 92/ பொழிவு 19

Wednesday, February 24, 2021

திராவிட இயக்கத்தின் கலை இலக்கியப் பங்களிப்பு

 

 

“திராவிட இயக்கம் மேலான தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ரா. பேட்டி



                திராவிட இயக்கத்தின் கலை இலக்கிய பங்களிப்பு தொடர்ந்து

இலக்கிய மேதாவிகளால் இருட்டடிக்கப்படுகிறது. அப்படியே யாராவது

திராவிட இயக்கத்தின் கலை இலக்கியப் பங்களிப்பு என்று பேச ஆரம்பித்தால்

அப்படி பேசுபவரின் கலை இலக்கியப் பங்களிப்பையே கேள்விக்குட்படுத்தி’விடுவார்களோ என்ற அச்சத்தில் பலர் இன்றும்

வாய்த்திறக்காமல் மவுனமாக இப்பக்கங்களைப் புரட்டிவிடுகிறார்கள்.

இதற்கான காரணங்களை மூத்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனின்   நேர்காணல் மிகத் தெளிவாக முன்வைக்கிறது. கி.ராவும் தன் மவுனத்திற்கான காரணத்தை ஒற்றைவரியில் சொல்லிச் சென்றிருப்பதும் இன்னும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

இந்து பத்திரிகையிலிருந்து சம்ஸ் கேள்வி:

(மாபெரும் தமிழ்க்கனவு.. பக். 270)

தமிழ் இலக்கியவாதிகளும் சரி; பெரும்பான்மை சிறுபத்திரிகைகளும் சரி; திராவிட இயக்கத்தைப் புறக்கணித்தும் எதிர்த்துமே செயல்பட்டிருக்கின்றன. நவீனத் தமிழ் இலக்கியம் என்பது பிராமண, பிள்ளைமார் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திய இடம் என்பதும் இந்த இரண்டு சமூகங்களுமே திராவிட இயக்கத்தால் தங்கள் மேலாதிக்கத்தில் சரிவு கண்ட சமூகங்கள் என்பதும் இந்தப் போரிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடியவை அல்ல. தமிழ்நாட்டில் இன்று அரசியல் மீது ஒரு வெறுப்பும் தீண்டாமை உணர்வும் நிறுவப்பட்டிருக்கிறது என்றால், நவீனத் தமிழ் இலக்கியவாதிகளுக்கு அதில் முக்கியமான ஒரு பங்கிருக்கிறது. நான் விமர்சனங்கள் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை ஒரு இடையீடாக இல்லை என்று சொல்கிறேன். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாப்லோ நெருடா அவருக்கு ஒரு மகத்தான இடத்தைக் கொடுத்து எழுதுகிறார். அப்படியான ஓரிடம் இங்கே உருவாகவில்லை. தவறு ஒரு தரப்பினுடையது என்று மட்டும் நான் சொல்லவில்லை. ஆனால், இலக்கியவாதிகளின் பின் ஒரு சாதி அரசியல் இருந்தது. திராவிட இயக்கத்தினர் மீது மலிந்த பார்வை இருந்தது. இதற்கான அடிப்படை பிராமணியம்தான் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கி.ராவின் பதில்:

சரிதான். இந்த பிராமணியத்தைப் பத்திச் சொன்னீங்க பாருங்க, அந்தக் கருத்துல ரொம்ப ரொம்ப உடன்பாடு உண்டு எனக்கு. அது ‘மணிக்கொடி’ ஆட்கள்கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். நீங்க சொன்ன ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது.

மேலும் இதே நேர்காணலின் இறுதியில் கிராவின் வாக்குமூலமாக வெளிவரும் சொற்கள் …” எங்களால ‘மணிக்கொடி’ பக்கமும் போக முடியல, ‘திராவிட நாடு’ பக்கமும் போக முடியல. ரெண்டு மேலேயுமே விமர்சனம் இருந்துச்சு. …… நாம இதை ரெண்டையுமே சொல்லக்கூடிய நிலையில இல்லை. சொன்னா, முழுசா கட்டம் கட்டப்பட்டிருப்போம்கிறதுதான் உண்மை நிலை. ஆனா, இன்னைக்குத் தோணுது, நீங்க கேட்கும்போது, அண்ணாதுரையைப் பத்தி நாலு வார்த்தை பேசக்கூட நமக்கு வரலியேன்னு. நொந்துக்க ஏதுமில்ல, காலம் இப்படித்தான்!...”

                காலம் இப்படித்தான் இருக்கிறது என்று கடந்து செல்ல முடியாது. கலை இலக்கியத்தின் மீதான சாதி ஆதிக்கத்தை ஒழித்து இலக்கியப்பிதாமகன்களின் சாதிய

இலக்கியப்பட்டியலைக் கிழித்து அதில் அப்பட்டமாக தெரியும் சாதி முகத்தை அடையாளம்

காணும் அறிவை அவர்களின் நுண்ணரசியலை தமிழர்களுக்கு கொடுத்ததில் பெரும்பங்காற்றி இருப்பது திராவிட இயக்கத்தின் பங்களிப்பு தான்.

இலக்கியமும் வாசிப்பும் சில சாதியினருக்கானவையாக இருந்ததை மாற்றி அமைத்து

இன்று திராவிட இயக்க்த்தின் மீது ஒவ்வாமையைக் காட்டும் இலக்கியங்களையும்

வாசிக்கும் வாசகர் பரப்பை உருவாக்கியதும் திராவிட இயக்கமே.  இலக்கியநோக்கில் பல மாறுதல்கள் சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் உருவானவை. . பகுத்தறிவை வலியுறுத்துகின்ற சிந்தனை எழுத்துலகில் பெருகியது.

சற்றொப்ப 400 மாத வார நாளிதழ்களால் திராவிட இயக்கம் வளர்த்த து அரசியல் மட்டுமல்ல.

அதனூடாக வாசிப்பும் வாசகப்பரப்பும் வளர்த்தெடுக்கப்பட்டதை வசதியாக மறந்துவிடுகிறோம்.

              இருபதாம் நூற்றாண்டில் தமிழின் தொன்மையை வலியுறுத்தியவர்கள்

இரு பிரிவினராக இருந்தார்கள் . ஒருசாரார் கடவுள் மறுப்புக்கொள்கையை முன்வைத்த தந்தை பெரியார் வழியைப் பின்பற்றினார்கள். இன்னொரு சாரார் தமிழன் இந்துவல்ல, அவன் சைவ சித்தாந்த கொள்கை உடையவன் என்றார்கள்.  பார்ப்பனரல்லாத தமிழ் ஆராய்ச்சியாளர்கள் சைவ சித்தாந்தத்தை முன்வைத்தவர்களாக இருக்கிறார்கள். இதில் திராவிடமும் சைவ சித்தாந்தமும் கலந்தகலவையாக இருந்தவர் திராவிட இயக்க முன்னோடி , சைவத்தமிழ் ஆய்வாளர், பேராசிரியர்  -பெ. சுந்தரம் பிள்ளை. இவர் எழுதியதுதான் “நீராருங்கடலுடுத்த ..” தமிழ்த்தாய் வாழ்த்து . முதன்முதலில் திராவிடர் பெருமையைத் தமது நூல்களின் மூலமாக உணர்த்த முயன்ற இவரைத் திராவிட ஆராய்ச்சிகளின் தந்தை எனலாம்.

 

            ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் உருவான இந்திய தேசத்தின் கலாச்சார பண்பாட்டு அடையாளமாக

வேத இந்தியா முன்னிறுத்தப்பட்டது. அதாவது வெள்ளையரின் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக வேத இந்தியாவின் கலாச்சாரமும் மேன்மையும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதி போன்றவர்கள் கொண்டாடும் ஆரியவேதம், ஆரியதேசம்  இந்தவகைப்பட்டதுதான். ஆனால் அறிஞர் அண்ணா இந்த திசையை தன் இயக்கத்தின் ஆணிவேராக மிகச்சரியாக அடையாளப்படுத்திக்கொண்டார். இந்தியா என்ற ஒரு தேசம் பிறப்பதற்கு முன்பே தமிழர்களுக்கான தேசமும் தமிழ்த்தேச அரசியலும் தமிழ் மண்ணில் இருந்தது என்பதை 2000 வருடத்திற்கு முந்திய சங்க இலக்கியத்திலிருந்தும் மற்றும் இடைக்கால தமிழ்க் காவியங்களிலிருந்தும் எடுத்துக்கொண்டார். தமிழனின்

சங்க காலத்தைப் பொற்காலமாகவும் தமிழ் மொழியையும் இனத்தையும் அப்பொற்காலத்தின் அடையாளமாகவும் காட்டியதன் மூலம் தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் உலகத்தில் ஒரு புரட்சியை மிக எளிதாக ஏற்படுத்தினார்.

இந்தப் புரட்சிவிதைகள் காற்றில் கலந்து தமிழ் இலக்கியவெளியில்

பல்வேறு வண்ணங்களாக வெளிப்பட்டன.

 

            வானம்பாடி இயக்கத்தினராக-மார்க்சியச் சார்பானவர்களாக வெளிப்பட்ட கவிஞர்களும் திராவிட இயக்கத் தாக்கம் பெற்றவர்களே. அவர்களது கவிதைகளில் எல்லாம் திராவிட இயக்கச் சிந்தனைகள் வெளிப்படுவதைக் காணலாம். சான்றாக அப்துல் ரகுமான், முடியரசன், மீரா, புவியரசு, சிற்பி, மேத்தா, தமிழன்பன் போன்றோ ரைக் குறிப்பிட முடியும். தலித் இயக்கங்களின் பேச்சும் எழுத்தும்கூட திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்ற ஒன்றாகப் பலசமயங்களில் அமைந்துள்ளது.

பெண்ணிய பெருவெளியில் பெரும்வெடிப்பை ஏற்படுத்திய பெரியார் பெண்ணியம்

பெண்ணிய எழுத்துகளின் போக்கைத் தீர்மானித்தன. சாகும் தருவாயில்

இருந்த தமிழிசைக்கு உயிரூட்டியவர் பெரியார்தான். இப்படியாக திராவிட

இயக்கம் சமூக வெளியில் ஏற்படுத்திய மிகப்பெரிய மாற்றங்களும்

அரசியலும் செயல்பாடுகளும் இச்சமூகத்தை முன்வைத்து எழுத வந்தவர்களின்

எழுத்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தின.

                                                           

 இயல் இசை இலக்கியம் இவை அனைத்திலும் தமிழை முன்னிலை படுத்திய

திராவிட இயக்கத்தின் நாடகத்துறை பங்களிப்பு கலைத்துறையில் மிகவும்

முக்கியமானது. கலை வெளிப்பாடுக்காக எழுதப்பட்டு நடிக்கப்பட்டவை அல்ல

அவர்களின் நாடகங்கள். ஆனால் நாடகங்களின் முகவரியை மாற்றி எழுதியதில்

திராவிட இயக்கம் பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.

திராவிட இயக்க நாடகங்கள் என்ற கட்டுரையில் வெளி. ரங்கராஜன் சில

கருத்துகளை முன்வைக்கிறார்.

 

///////நாடகங்களை தூரத்தில் இருந்து பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் சக மனிதனின் பிரச்சினைகளைப் பேசி ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியவை திராவிடர் இயக்க நாடகங்கள். . அண்ணாவைப் பின்பற்றி கருணாநிதி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு போன்ற பல நாடக எழுத்தாளர்கள் உருவாயினர். ஆனால் சமூக விமர்சனத்தைத் தவிர இவர்களின் நாடகங்களில் அதிக கற்பனையோ, கலைநயமோ இல்லை. ஆனால், அண்ணாவிடம் ஒருவிதமான பல்நோக்கு பார்வை இருந்தது. இரு வேறுபட்ட இலக்குகள் இருந்தன. லெனினை கொலை செய்ய நிலவிய ஒரு சதி பற்றி `துரோகி கப்லான்' என்ற நாடகமாக எழுதினார். ரொம்பவும் திட்டமானதாகவும் கூர்மையாகவும் இருந்தது அந்த நாடகம். சுய சிந்தனையைக் கூண்டில் நிறுத்தி எதிரிகள் வழக்காடுவதாக `ஜனநாயக சர்வாதிகாரி' என்ற நாடகம் எழுதினார். இந்திய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை காங்கிரஸ் அனுமதிப்பதாக உருவக பாணியில் `சகவாச தோசம்' என்ற நாடகத்தை எழுதினார். பெரும்பாலான நாடகங்கள் நேரடித் தன்மை கொண்டிருந்தாலும் ஒரு விஸ்தீரமும் விசாரணையும் அவருடைய நாடகங்களில் பிரதானமாக இருந்தன. “



 

அண்ணாவின் பாணியைப் பின்பற்றாமல்  என்.எஸ். கிருஷ்ணன் நயமான நகைச்சுவை மூலம் சமூக விமர்சனக் கருத்துக்களை வழங்கினார்.  காந்தியத்தையும் பகுத்தறிவையுன் இணைத்து கொண்ட ஒரு போக்கை அவர் நாடகங்களில் காணலாம், அவருடைய நல்லதம்பி இதற்கு ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு.

வேதம், புராணம், பக்தி என்ற பிராம்மணக் கலாச்சாரத்துக்கு மாற்றாக எளிமை, மனிதாபிமானம், சமத்துவம் கொண்ட புதிய தமிழ்க் கலாச்சாரத்துக்கு - மக்கள் கலாச்சாரத்துக்கு என்.எஸ். கிருஷ்ணன் ஆதாரமாக இருந்தார். 

 

எம்.ஆர். ராதா உருவகப்படுத்திய ஒரு கலகப் பண்பாடு திராவிடர் இயக்கத்தின் இன்னொரு முக்கியமான போக்கு. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக மேடைக்கு ஒரு புதிய அழுத்தத்தை உருவாக்கியவர் அவர். தமிழில் முதன்முதலில் தடை செய்யப்பட்டவை எம்.ஆர். ராதாவின் நாடகங்களே. அந்த அளவுக்கு ஒரு கலகக்கார நாடகக்காரராக அவர் விளங்கினார். மிகவும் உண்மையானதும் கசப்புமான யதார்த்தங்களை அவர் எடுத்துக் கூறினார். ராமாயணப் பாத்திரங்களை கேலி செய்து அவர் எழுதிய கீமாயணம் நாடகம் தடை செய்யப்பட்டது. தடையை மீறி திருச்சி தேவர் ஹாலில் அந்த நாடகத்தை நிகழ்த்திக் காட்டினார். நாடக மேடையில் ஒருவிதமான பரிசுத்த நாயகர்களையே காட்டிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் தறிகெட்டு அலையும் ஒருவனை நாயகனாக்கி `ரத்தக் கண்ணீரை' உருவாக்கினார். ரத்தக் கண்ணீர் நாடகம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் நிகழ்த்தப்பட்டது. பெரியாரின் கருத்துக்களுக்கு நாடக வடிவம் கொடுத்து தமிழ்நாடு முழுவதும் சுயமரியாதை பிரச்சாரத்திற்கு ஒரு மதிப்பை அளித்தவர் எம்.ஆர். ராதா. எம்.ஆர். ராதாவைப் பின்பற்றி திருவாரூர் தங்கராசு போன்றவர்களும் நாடகங்கள் நிகழ்த்தினர். என்.எஸ். கிருஷ்ணனின் கலை அம்சத்தையும், எம்.ஆர். ராதாவின் கலகப் பண்பாட்டையும்பின்பற்றி பலர் உருவாகாதது திராவிட இயக்கத்தின் ஒரு பெரிய குறைபாடு.

 

இந்த நாடக உணர்வை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல திராவிட இயக்கம் தவறிவிட்டது. சக மனிதனை முதன்மைப் படுத்துதல், சமூக யதார்த்தம் பற்றிய விமர்சனப் பார்வை ஆகியவை பல்வேறுபட்ட இலக்கியப் போக்குகளை உருவாக்கி இருக்க முடியும். ஆனால், தி.மு.க. அரசியலில் தீவிரமாகப் பங்கெடுக்க ஆரம்பித்ததுமே அதன் கலை, இலக்கியக் கண்ணோட்டத்திலும், சமூக விமர்சனப் பார்வையிலும் பெரும் சரிவு ஏற்பட்டது. பகுத்தறிவுக் கருத்துக்களின் பின்னணியில் ஒரு புதிய  எதிர்காலச் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய ஒரு இயக்கம் கடந்த காலப் பெருமைகளில் தன்னை இழக்க ஆரம்பித்தது. நம்முடைய வரலாற்றையும் இலக்கியங்களையும் பற்றிய அறிவு நிகழ்காலம் பற்றிய புதிய மதிப்பீடுகளுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமர்சனமற்று வெறும் கடந்த காலத்தைப் பூஜிப்பது மட்டுமே நிகழ்ந்தது.



ஆசாரம், பக்தி என்பதற்கு மாற்றாக அன்பு, சமத்துவம் ஆகியவற்றை முன்நிறுத்த வேண்டியவர்கள் போலித்தனம், கவர்ச்சி இவற்றில் மூழ்கிப் போனார்கள். ஆரம்பகால திராவிட இயக்க உணர்வுகள் நீர்த்துப் போய் சகமனிதனின் வாழ்நிலையும் சமூக யதார்த்தமும் மேடைப்பேச்சுகளில் நீர்த்துப்போனது தான் நடந்திருக்கிறது.

                       

கலை கலைக்காகவே..

கலை மக்களுக்காகவே..

மக்களுடன் கலைகள் பிறந்த காலம் முதல் இந்த இரண்டு பக்கங்களும்

இருக்கின்றன. கலை மக்களுக்காகவே என்ற கலை இலக்கியவாதிகள்

திராவிட இயக்கத்தின் பங்களிப்பை கொச்சைப்படுத்துவதில்லை.

இந்தப் புள்ளியிலிருந்து தான் மீண்டும் கி.ராவின் நேர்காணலை வாசிக்கும் போது

தமிழ் கலை இலக்கியவெளியின் நுண்ணரசியலும்

சாதி முகமும் அப்பட்டமாக தெரிகின்றன.

இலக்கியவெளியில் இத்தடைகளை ஊடறுத்து பயணிப்பவர்களை

வாழ்த்துவோம்

  நன்றி : keetru.com