Monday, March 1, 2021

தமிழ் நாடு தேர்தல் களம் 2021



 தேர்தலில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது

ஆதரவு ஓட்டுகள் அல்ல. எதிர்ப்பு அலைகள் தீர்மானிப்பதே.
இன்னாரை ஆதரிக்கிறேன்,
இந்தக் கட்சி மீது/ கட்சி தலைமை மீது நம்பிக்கை இருக்கிறது
என்ற ஓர்மையைவிட இந்தக் கட்சி வராமல் இருந்தால் போதும்,
என்ற எண்ணம் , அக்களத்தில் நிற்கும் இன்னொரு கட்சிக்கான
ஆதரவு ஓட்டாக மாறுவதே தமிழகத்தின் தேர்தல் களம்
கற்பிக்கும் பாடம்.
மேலும் கொஞ்ச காலமாக திராவிடக் கட்சிகளுக்கு
மாறி மாறி ஒட்டுப்போட்டு அலுத்துவிட்ட வாக்காளர்களில் சிலர்
மாற்று அரசியலை மூன்றாவது அணியைப் பற்றி யோசிக்கிறார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.75 %
சீமானின் நாம் தமிழர் கட்சி 4.50%
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5.50%
அதாவது இந்த ஓட்டுகள் அனைத்தும் திமுக + அதிமுக வுக்கு
எதிரான ஓட்டுகள் தான்.
இந்த எதிர் ஓட்டுகள் சற்றொப்ப 14% இதில் மற்ற
உதிரிக்கட்சிகளையும் சேர்த்தால் கணக்கு உதைக்கிறது.

ஆனாலும் நம் தேர்தல் என்பது எந்தக் கட்சி
எவ்வளவு வாக்குகள் பெற்றது என்பதல்ல,
எந்தக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பது தான்.
அவர் 5 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும்
அவர்தான் வெற்றி பெற்றவர். அவர் கட்சியின் வெற்றி அது.
எனவே இந்த மூன்றாவது அணியின் எதிர்ப்பு ஓட்டுகளின்
கூட்டுத்தொகையை வைத்துக்கொண்டு
கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டுவிட முடியாது.
அத்துனை விசித்திரமானது நம் ஜன நாயகம்.
ஆனால் இந்த 3வது அணி ஓட்டுகளைப் பிரிக்கும்.
வலுவான எதிர்க்கட்சியோ ஆளும்கட்சியா இல்லாத
ஸ்திரமற்ற மா நில அரசு அமைவது என்றைக்குமே
ஆபத்தானது. குதிரைப்பேரங்களுக்கு வழிவகுக்கும்.
அதைத்தான் டில்லி அதிகாரம் விரும்புகிறது.
மைனாரிட்டி வெற்றியுடன் ஆட்சி அமைக்கும்
மாநிலங்களை தன் காலனியாக மாற்றுவதிலும்
குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டுவருவதன் மூலம்
ஒருவகையில் மாநில கட்சிகளின் பல்லைப்பிடுங்கி
“ஆடு பாம்பே விளையாடு பாம்பே” என்று
மகுடி வாசிக்கவே டில்லி விரும்புகிறது.

இங்கே கமல், சீமான், சசிகலாவின் உதவி பெற்றவர்கள்
ஒரு பக்கம்.. இவர்கள் அதிமுக ஓட்டைப் பிரிப்பார்கள்.!
இது பிஜேபி தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பை
உருவாக்குமா என்பதை எளிதில் கணிக்க முடியாது.
அதிமுக மட்டுமல்ல, திமுகவும் கூட பிஜேபியுடன்
அதிகாரத்தைப் பங்கிட்டு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால்
அதை ஒதுக்குபவர்கள் அல்ல.
வரப்போகும் தேர்தல் களம் திமுகவு தலைமைப் பொறுப்பில்
இருக்கும் திரு. ஸ்டாலின் அவர்களுக்குத்தான்
எதிர்காலத்தை தீர்மானிக்கும் வாக்குச்சீட்டு.
தமிழக மக்கள் எப்போதுமே ஓட்டுப்போடும் போது
நாடாளுமன்ற தேர்தலுக்கும் சட்டசபை தேர்தலுக்கும்
வித்தியாசமாக யோசித்து ஓட்டுப்போடும் விவரமானவர்கள்!

மராட்டிய மா நிலத்தில் பிஜேபியுடன் கைகோர்த்து
கூட், டணி ஆட்சியிலிருந்த சிவசேனா ..
மா நிலக் கட்சிகளின் முகவரியை C/O முகவரியாக
மாற்றும் நடுவண் அரசு/பிஜெபியைப் புரிந்து கொண்டு
எதற்காகவும் மாநில மக்களின் அரசியல் உரிமைகளை
விட்டுவிட மாட்டோம் என்று துணிந்து எழுந்து நிற்கிறது.
மாநில உரிமைகளை இந்திய அரசியலில் முன்வைத்த
தமிழக அரசியல் இன்று அப்படின்னா என்ன?
என்று கேட்கும் அவல நிலை!

… என்னவோ போ.. சரவணா..

ஸ்டாலினுக்கு இருக்கும் ஒரு + பாயிண்ட்..
அதிமுக அரசின் குறைபாடுகளையும்
பிஜேபி குளறுபடிகளையும்
சரியாக மக்கள் மன்றத்தில் வைக்கும் பிரச்சார உத்திதான்.
இதற்காக கட்சி தொண்டர்களை நம்ப வேண்டுமே தவிர
காசு கொடுத்து விலைக்கு வாங்கும் ஆலோசகர்களை அல்ல,

திமுக ஆட்சி, கலைஞரின் ஆட்சியை அறிந்த தமிழகம்,
திமுக ஸ்டாலின் தலைமையில் ஆட்சிக்கும் வாய்ப்பு
கொடுக்கட்டுமே.. என்ன பெரிதாக கெட்டுவிடப்போகிறது?
ரஜினி வாயைப்பொத்திக்கொண்டு இருப்பது தேர்தல்
கணக்குப்போட நல்லது.
திமுக வின் இரண்டாவது வரிசை தலைவர்கள்
கொஞ்ச காலத்திற்கு ஊடகங்களில் பேட்டிக்கொடுக்காமல்
இருப்பதும் ஸ்டாலினுக்கு நல்லது.

#tamilnaduElection2021_puthiyamaadhavi




No comments:

Post a Comment