Sunday, July 31, 2022
சதுரங்க வரலாறும் அரசியலும்
Friday, July 29, 2022
ராக்கெட் அரசியல்
Sunday, July 17, 2022
பச்சையம் துளிர்க்கும் கார்காலம்
தூறல்
சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றுவிட்டது.
மெல்லிய வெளிச்சத்தையும் பிடுங்கித் தின்ற இரவு
தன் பசி அடங்காமல் படுத்திருந்தது.
மழைநேரத்தில் மின்சாரத்தடைக்குப் பழகிய கால்கள்
மெல்ல அறையை விட்டு வெளியில் வருகின்றன.
வேர்களின் தாகத்தைத் தணிக்கும்
இலைகளின் ஈரம்
சொட்டுசொட்டாக வடியும் இரவு
சலனமின்றி தூங்கும் மலை.
கனவுகள் விழித்திருப்பதோ தூங்குவதோ
பாறைகளைத் தொந்தரவு செய்வதில்லை.
காற்றின் அசைவுகள் கல்மீது படிவதில்லை.
சாரல் அடித்து அடித்து அருவி விழிக்கிறது.
கனவுகள் குடைப்பிடித்து
வெளியில் வருகின்றன.
குடைப்பிடிப்பது யாராக இருந்தாலும்
நனைவது மட்டும் நானாகவே இருக்கிறேன்.
இலைகளின் மழைமொழி இசையாகி..
என்னை மீட்டிக்கொண்டே இருக்கின்றது
மழைமொழி என்னை எழுதுகிறது.
மழைக்காலம் என்னை வாசிக்கிறது.
புயல்
த்த்த்தட தட த்த்த்தட தட
ஸ்ஸ்ஸ்ஸ்ஸோஸ்ஸ்….
டக்க் டக் டக்க் டக்க்
ஸ்ஸ்ஸூ ஸ்ஸ்ஸூஊஊஊஊஊ
ட்டமீற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ஜன்னலை இழுத்து மூடு.
இடி இடிக்குது.
திரைச்சீலையை இழுத்துவிடு.
கர்ப்ப கிரஹத்தில் மின்னல் வெளிச்சம்..
காற்றில் அசையும் தீபத்தின் நாதம்..
தேவி… கருவறை திறக்கிறது.
பரவசமாகி அவரவர் வேண்டுதல்களுடன்
அவள் மடியை நிறைக்கிறார்கள்.
குமரி அவள்.
கடல் அலைகள் தாலாட்டும் குமரி அவள்.
தொட்டில் கட்டித் தாலாட்ட முடியாமல்
தவிப்பது ஏன்?
பனிக்குடம் உடைந்த ஈரப்பிசுபிசுப்பு தரை எங்கும்.
கர்ப்பஹிரகத்தில் இருளின் வெளிச்சம்.
புயலுக்குப்பின் சலனமின்றி கடல்
அவள் பிரசவ வேதனையை
தனக்குள் வாங்கிக்கொள்கிறது.
அவள் எட்டுக்கைகளாலும் தன் பிள்ளைகளை
தூக்கி எடுத்து தழுவி முத்தமிடுகிறாள்.
கண்ணனைக் கூடையில் சுமந்து கொண்டு
ஆற்றுவெள்ளத்தை யாரோ கடந்து செல்கிறார்கள்.
கடல் அலைகளை
நார்நாராக கிழித்து எடுத்து கூடை செய்து
மின்னலை விரித்து மெத்தையாக போர்த்தி
தன் பிள்ளைகளை மிதக்கவிடுகிறாள்..
சுறா மீன்களும் கடல்குதிரைகளும்
நட்சத்திரகைகளும் வலம்சங்கு முகங்களும்
கூட்டணி சேர்ந்து கூடையைக் கவுத்துவிடுகின்றன.
உப்பு நீருக்குப் பழகிப்போனவனும்
கடல் அலைகளில் நீந்த தெரிந்தவளும்
தீவுகளைத் தேடி பயணிக்கிறார்கள்.
குமரியின் மூக்கூத்தி வெளிச்சத்தில்
தடுமாறும் மின்னல்
கடலைப் பார்த்தால் அவள் கன்னிமைக்கெடுமென
கட்டுப்பாடுகள்..
அவளுக்கும் கடலுக்குள் நடுவில்
ஆயிரம் கண்டங்கள்
மழைத்துளிகள் மீட்டுவரும்
நினைவுகளின் வாசனை
கடற்கரையில் மோதி அலைந்து திரிந்து
முகவரியைத் தேடும் அனாதைகளாக
கரை ஒதுங்கி இருக்கின்றன கிளிஞ்சல்கள்
வெள்ளம்
மழை பொழிந்த அந்த நள்ளிரவில் கடலின் சீற்றம்.
அலைகள் பாறைகளின் எல்லைகளைத் தாண்டி அத்துமீறி
ஆவேசம் கொண்டு தழுவுகின்றன.
காலடியிலிருந்த மண்..
குழிப்பறித்து இழுத்துச் செல்லும் வேகம்
என்னால் நிற்கமுடியவில்லை.
மழை வெள்ளத்தில் சிக்குண்டு
அடித்துச் செல்லப்பட்ட
தண்டவாளங்கள் என்னைப் பயமுறுத்துகின்றன.
நீர்வழிப்படூஉம் யானும்..
கடல் அலையும் மழை வெள்ளமும்
கட்டுக்கடந்காக் காமத்துடன்
கட்டிப்பிடித்து முத்தமிடுகின்றன.
கோடைக்காலத்தின் புழுக்கம்
சூடு தணிக்கும் ஆவேசம்
கடற்கரையைக் காணவில்லை.
யாரும் கடலுக்குள் போகவேண்டாம்.
படகுகளுடன் வலைகளும் பதுங்கிக்கொள்கின்றன.
கடலடியிலிருந்து மீனராசா எட்டிப்பார்க்கிறான்.
ஜீவராசிகளின் கூடல்மொழி ஓசையின்றி எழுத்துகளின்றி
மழை நீரில் மிதந்து வருகிறது.
அதிலிருந்து வடியும் ஒவ்வொரு துளியாக கையிலெடுத்து
பசலைத் தணிக்கிறேன்.
பாறைகளுக்கு இடையில் கனன்று கொண்டிருந்த
அடுப்பின் சூடு ஒருவழியாக தணிகிறது.
அடுப்பிலிருந்து பொங்கி வழிந்தப் பால்
பாத்திரம் தாண்டி விளிம்புகள் கடந்து
வழிந்து கரைந்து மழைவெள்ளத்தில் மிதந்து
கடல் நீரில் நுரையாகிப் போனதறியாமல்
பாத்திரத்தை மூடிப் பத்திரப்படுத்துகிறேன்.
கடல் அலையில் பால் நுரைகள்
தீவுகளில் மோதும் பால்திட்டுகள்..
மீனராசா பாலருந்தி பால் அருந்தி
மயக்கம் தெளிகிறான்.
மீண்டும் மீண்டும்
பால்சொரியும் முலைகள் தேடி அலைகிறான்.
கடலடியில் அவன் அந்தப்புரத்து மச்சக்கன்னிகள்
அவன் பசியாற்றமுடியாமல் தவிக்கிறார்கள்.
பசியின் வேட்கை..
அவனைத் தின்று துப்பிய சக்கையாக
படுக்கையில் கிடக்கிறான்.
மச்சக்கன்னிகள் தீவுகளிலிருந்து கொண்டுவந்த பச்சிலைச்சாறுகள்
அவன் உதட்டோரத்தில் வழிந்து
கடல்மேல் விழுந்த கரும்பாறைகளாக மிதக்கின்றன.
பாய்மரத்தின் உச்சியில் கட்டியிருந்த திசைக்காட்டி
தலைகீழாக சுழல்கிறது.
திசையறியமுடியாமல் படகுகள்
கடலுக்கு நடுவிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதை
கடல்குதிரைகள் வேடிக்கைப் பார்க்கின்றன.
துருவ நட்சத்திரம் கதவடைத்துக் கொள்கிறது.
கார்மேக கூட்டத்தின் படையெடுப்புக்கு அஞ்சி
பிற நட்சத்திரங்களும் இடம் மாற்றிக்கொண்டு
வேறொரு பூமிக்குப் போய்விடுகின்றன.
மச்சக்கன்னிகள் மீனராசாவை கைகளில் ஏந்தி
கடற்கரைக்கு வருகிறார்கள்.
நட்சத்திரங்களில்லாத ஆகாயம்
நிலவில்லாத மேகம்
இருளைத் தின்று துப்பிய கடல்வெளி
மழை நீரில் மிதந்துவரும் காலம்
கடல் அலையும் மழை வெள்ளமும்
ஒன்றை ஒன்று கூடி புணர்ந்து
ஒன்றை ஒன்று எதிர்த்துப் போராடி
ஒன்றில் ஒன்றாக முடியாமல்
வெள்ளக்காடு..
மழை வெள்ளத்தில் மீனராசா
கடல் அலையில் அவள்..
இடம் மாறிப்போன படகுகள்
மீண்டும்
தீவுகளை வந்தடையுமோ?
இடி மின்னலுடன் மழை..
சலனமின்றி படுத்திருக்கும் அவன்..
அலைகளில் நர்த்தனமிடும் ஆதிசேஷன்..
புல்லாங்குழலோசையில் மிதக்கும் பிருந்தாவனம்.
அவள் போர்த்தியிருக்கும் போர்வையை
மெல்ல விலக்கி இருளின் வெளிச்சத்தில்
மின்னும் மீன்செதில் மேனியை
அதிசயமாகப் பார்க்கிறாள்.
தூரத்தில் கடல் அலைகளில் மீதேறி
கை அசைத்து செல்கிறான் மீனராசா.
கடல் நீர் வற்றுவதில்லை.
அடுத்த மழைக்கும் அவன் வருவான்.
ஆனால், அந்த மச்சக்கன்னிகள் வரவிடுவார்களா?
கடலைக் கடைந்தவன் விஷமேறிச் செத்துப்போவதற்குள்
அமுதருந்த வந்துதானே ஆகவேண்டும்!
கடலில் ஒரு சின்னப்புள்ளியாக
அவன் மறையும்வரை காத்திருக்கிறேன்..
போர்வையை விலக்கி சன்னலை அடைக்க
பிரயத்தனப்படுகிறேன்.
படுக்கையிலிருந்து எழும்போதுதான்
கவனிக்கிறேன்.
என் கால்கள் இருந்த இடத்தில்
மீனராசாவின் வால் நீண்டு நெளிகிறது.
மழை வெள்ளத்தில் நீந்தி நடனமாடுவேனா..
முலைகள் தேடி அவன் வருவானே..
எதைக்கொண்டு அவன் விஷம் தணிப்பேன்!
மீனராசா… தேடித் தேடி அலைகிறான்,
துடிக்கிறான்.. தவிக்கிறான்..
கடலில் நீந்திக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து
மச்சக்கன்னிகள் சிரிக்கிறார்கள்.
இடி மின்னல்
அர்ஜூனா அர்ஜூனா..
மின்னல் பாய்கிறதே..
கருவறை கருகிய வாசனை.
உடைந்தப் படகுகளின் துடுப்புகள்
கடலில் மிதக்கின்றன.
குமரி அவள்.
சுமப்பதை பிரசவிக்க முடியாமல்
கடலுக்குள் விழுந்து தற்கொலை.
மடி நிறைத்த அலைகள்
தொட்டில் கட்டித் தாலாட்ட
முடியாமல் கதறி அழும்
மழைக்காலம்.
அவள் மொழியை ரகசியமாக
மேகக்கூட்டத்தில்
பத்திரப்படுத்துகிறது.
( நன்றி : கதவு இதழ் 38 ஜூலை 22)
Monday, July 11, 2022
பெருந்திணையாகும் ஐந்திணை
முதற்பொருளான நிலமும்
நிலத்தின் கருப்பொருளும்
சிதைக்கப்பட்டால்
ஐந்திணை பெருந்திணை ஆகிவிடும்.
பெருந்திணை சமூகத்தில்
எந்த நியாயங்களையும்
எதிர்பார்க்க முடியாது.
என் உரை லிங்க:
Thursday, June 30, 2022
சைபுன்னிஷா - சிவாஜி காதல்
Sunday, June 26, 2022
அதிமுக அரசியல் திமுகவின் எதிர்காலம்
அ.இ.அ.தி.மு.க. வின் அரசியல் இருத்தல் EPS OPS அரசியல் எதிர்காலமாக சுருக்கி விடுவது பேராபத்து. இது அதிமுக வுக்கு வந்திருக்கும் ஆபத்து மட்டுமல்ல. திமுக வின் எதிர்காலத்திற்கும் ஆபத்து. இன்னும் வெளிப்படையாக திமுக உ. பி. களுக்குப் புரிகிறமாதிரி சொல்லவேண்டும் என்றால் திமுகவின் அரசியல் வாரிசாக முன்வைக்கப்படும் திரு. உதயநிதி ஸ்டாலின் கருணாநிதி அவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்து. !!
பாம்பு கழுத்தைச் சுற்றி படம் எடுத்து ஆடுகிறது.. கடிக்காமல் விடாது.
கவனம்.. கவனம் கவனம்.
அதிமுகவின் எதிர்காலத்தைத் காப்பாற்ற வேண்டிய அரசியல் கடப்பாடு திமுக தலைமைக்கு ஏற்பட்டிருக்கிறது.
மராட்டிய மாநில அரசியலில் நடக்கும் விபரீதப் போக்குகள்.. மாநில இறையாண்மை மிக்க அரசியல் கட்சிகளை விழுங்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டவர்களுக்கு இது எதனால் நடக்கிறது என்பதை அறிந்து கொண்டவர்களுக்கும் நான் சொல்ல வருவது சட்டெனப் புரியும், புரியவேண்டும்.
அப்புறம்.. சரவணா..
.இது பெரியார்மண் ஆ வுனு
யாரும் வந்து கொடிப்பிடிக்க வேண்டாம்.
ப்ளீஸ்.
#அதிமுக_எதிர்காலம்_திமுக_அரசியல்
Saturday, June 25, 2022
பார்சிகளுடன் பயணித்த 22 ஆண்டுகள்
(The tower of silence at Malabar hill, Mumbai)
பார்சி நண்பர்களுடன் 22 ஆண்டுகள்
என் பன்னாட்டு வங்கி அனுபவத்தில் எனக்கு மிகவும் நெருங்கிய
ஆண் பெண் நண்பர்கள் அனைவருமே பார்சி சமூகத்தைச் சார்ந்தவர்கள்.
பொதுவாக வங்கிகளில் அன்றைக்கு கேஷியர்களாக அவர்களே இருந்தார்கள்.
அதற்கு முக்கிய காரணம் அவர்களின் நாணயம். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள் மட்டுமல்ல, மிகவும் நம்பிகையானவர்கள். அதிலும் குறிப்பாக பார்சி ஆண் நண்பர்கள்.. இந்திய மண்ணில் பன்மொழிப்பேசும் பல இன ஆண்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு என் வாழ்விடமும் பணியிடமும் கொடுத்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். பார்சி ஆண்கள் மிக மிக நம்பிக்கையானவர்கள்.பயமின்றி ஒரு பெண் பழகலாம்.
வெளி நாட்டு வங்கியில் பணி என்பதால் அதன் ஆங்கிலமும் பழக்க வழக்கங்களும் வித்தியாசமானவை. ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது ஆண் பெண் பேதமின்றி தோளணைத்து கட்டிப்பிடித்து
நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துவோம். அப்படியான வாழ்த்துகளை என் பார்சி நண்பர்களிடம் பெறும் போதெல்லாம் என் உயிர் சிலிர்க்கும். பிரபஞ்சத்தின் நேசத்தை அத்தருணத்தில் அனுபவித்திருக்கிறேன்.
அது என்னவோ தெரியவில்லை, என் மேலதிகாரிகளும் சக தோழமைகளும் கூட அவர்களாகவே அதிகம் இருந்திருக்கிறார்கள். பார்சி நண்பர்கள் எனக்கு
கொடுத்த செல்லப்பெயர்தான் “மல்ல்லு” மேற்கத்திய நடை உடை பாவனைகளுடனும் ஆங்கில உச்சரிப்புகளுடன் இருந்த பணியிடத்தில்
என்னைத் தடுமாறி விழுந்துவிடாமல் ஆதரவுடன் அணைத்து ..
அதை எப்படி சொல்வது..? இதுகளெல்லாம் உன் முன்னால ஒன்னுமே இல்ல மல்ல்லு.. என்று என்னை எனக்கு மீட்டெடுத்துக் கொடுத்த தாயுமானவர்கள்.
பிற்காலத்தில் EXPORT, DC, INM FINANCE CONTROL என்று வங்கியின் பலவேறு துறைகளில் தடம்பதித்து வெளியில் வந்தேன். தமிழ் இலக்கியம் படித்தவள்
வங்கியில் அதுவும் பன்னாட்டு வங்கியில் அம்பாசிடராக அடையாளப்படுத்தப்பட்டு வங்கி இதழில் என்னைப் பற்றி எழுதும் அளவுக்கு என்னை நிலை நிறுத்திக்கொண்டதில் என் பார்சி நண்பர்களின் அன்பும் அரவணைப்பும் பெரும்பாங்காற்றி இருக்கின்றன.
மதிய உணவை என்னோடு பகிர்ந்து கொண்ட நண்பன் உண்டு. இன்னொரு நண்பனின் மகளுக்கும் என் ,மகளுக்கும் ஒரே வயது. தன் மகளுக்கு என்ன வாங்கினாலும் என் அம்முவுக்கும் வாங்கிவருவான்.
எதுவும் பேசித்தான் புரியவைக்க வேண்டும் என்பதில்லை. என் மவுனத்தைக் கூட வாசித்த நண்பர்கள் உண்டு. இதில் இன்னும் சில வேடிக்கைகளும் உண்டு.. என் ஆண் நண்பர்களுக்காக நான் என் பெண் பார்சி தோழிகளிடம் “காதல் தூது” சென்றிருக்கிறேன்!!! என் நண்பர்களில் சிலர் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் என்ற நிறுவனத்தின் “பொறுப்பு” என்பது அவர்களுக்கு வாழ்க்கையின் சுமையாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அனைவருமே இறை நம்பிக்கையாளர்கள்.
என் தோழியின் அம்மா இறந்தப்போது நான் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அவளுடனேயே இருந்தேன். ஆம்.. அவர்கள் நம்மைப் போல வாய்விட்டு அழுவதில்லை. ஆனால் அழாமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை, மன அழுத்தம் தருவது என்பதைப் புரிந்து கொண்டேன்.
மலபார் ஹில் பகுதியில் இறந்த உடல்களைக் கொண்டு வைக்கும் “சைலன்ஸ் டவர் “ the tower of silence வரை போயிருக்கிறேன்.அவர்களின் மதச்சடங்குகளில் கலந்து கொள்ளவோ கோவிலுக்குள் நுழையவோ பார்சி அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கும் வசதி உண்டு. சைலன்ஸ் டவரிலும் தோழியுடன் நாங்கள் சென்றிருந்தோம். உயிர்ப்போன பிறகு உடல் புனிதமிழந்துவிடுகிறது. நிலம் நீர் தீ இந்த மூன்றும் அவர்களின் மத நம்பிக்கையில் புனிதமானவை என்பதால் தான்
புனிதமிழந்த உடலை அவர்கள் புதைப்பதோ நீரில் விடுவதோ எரிப்பதோ இல்லை என்று காரணம் சொல்கிறார்கள். துக்க நாட்களில் வெள்ளை உடை அணிவது அவர்கள் வழக்கம்
கொரொனா எல்லாவற்றையும் புரட்டிப்போட்ட்தைப் போல அவர்களையும்
புரட்டிப்போட்டுவிட்டது. ஆம்.. கொரொனாவில் மரணித்த உடல்களை
சைலன்ஸ் டவரில் போடவில்லை. !
அவர்கள் “தீ”யை வழிபடுகிறார்கள். அவர்களின் வழிபாட்டு இடங்களில் எரிந்து கொண்டிருக்கும் தீ அணைவதில்லை. ஈரானிலிருந்து புலம்பெயர்ந்து வரும் போது எடுத்து வந்த “தீ” யின் நாக்குகள் அணையவில்லை. அவர்களும் எட்டாவது நாள், பதினாறாவது நாள் , சிரார்த்தம் என்று பலசடங்குகளைச் செய்கிறார்கள்.
“நவஜோட்’ என்ற சடங்கு பார்சிகளின் வாழ்க்கையில் முக்கியமானது.
ஆண் – பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதற்கு முன் இச்சடங்கு செய்துவிட வேண்டும். இச்சடங்கு இந்தியாவில் வாழும் பிராமணர்களின் “பூணூல்” சடங்கு மாதிரியான சடங்கு. இச்சடங்கு செய்தப்பிறகுதான் அக்குழந்தை “பார்சி” சமூகத்தின் அடையாளம் பெறுவதாக நம்புகிறார்கள்.
இந்த நவஜோட் சடங்கு ஒரு திருமணத்தைப்போல வெகு விமரிசையாக கொண்டாடப்படும். உணவுவகைகள் மட்டுமே 30 முதல் 50 வரை பரிமாறப்படும். அசைவ உணவுகளும் உண்டு.
விருந்துக்கு அழைக்கும் அழைப்பிதழில் ஒரு அட்டை இணைக்கப்பட்டிருக்கும். அதில் வருகிறேன் / வரவில்லை என்பதும்
எத்தனை பேர் என்பதும் உணவு வகை சைவமா அசைவமா என்பதையும்
குறித்து கேட்கப்பட்டிருக்கும். அதைப் பூர்த்தி செய்து அவர்களிடம்
கொடுத்துவிட வேண்டும். இவ்வளவு திட்டமிடலுடன் அவர்களின்
நிகழ்வுகள் நடக்கும். நான் இரண்டு நவ்ஜோட் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.
கொஞ்சமாக விஸ்கி பிராண்டி வொய்ன் அருத்துவார்கள். எவ்வளவு குடித்தாலும் குடித்துவிட்டு உளறுவது
சண்டைப்போடுவதெல்லாம் நான் கேள்விப்பட்டதில்லை.
இச்சடங்கில் பிரத்தியோகமான ஒரு மேல்சட்டையும் இடுப்பில் அணியும் ஒரு நூலும் இடம் பெறும். இதற்குமேல் எனக்கு எதுவும் தெரியாது. பொதுவாக அவர்கள் எவ்வளவுதான் நெருங்கிப்பழகினாலும் அவர்களின் சில சடங்குகளை அயலாரிடம் முழுமையாக சொல்லுவதில்லை என்பதுதான் என் அனுபவம்.
வாரிசுகள் இன்றி இறந்துப்போகிறவர்களின் சொத்துகள் “பார்சி அறக்கட்டளை”க்கு போய்விடும். அவர்களின் குடி இருப்புகள் குறிப்பாக பார்சி குடியிருப்புகளை பிறருக்கு வாடகைக்கு விடவோ விற்கவோ அனுமதி கிடையாது. பார்சிகளின் அறக்கட்டளை பார்சி இனக்குழுவின் கட்டுக்கோப்பான இறுக்கமான விதிகளைப் பின்பற்றுகிறது என்றாலும் அவர்களின் பாதுகாப்பு முதல் ஆதரவற்ற பார்சிகளுக்கு உதவுவது வரை , இந்த அறக்கட்டளையின் பங்களிப்பு உண்டு. அகமண முறையை மிகத்தீவிரமாக கடைப்பிடிக்கும் பார்சி இனம் ஆண் இன்னொரு சமூகத்தைச் சார்ந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதைக் கூட மன்னித்து
ஏற்றுக்கொள்ளும் .. ஆனால் பார்சி பெண் பார்சி அல்லாத ஆணைத் திருமணம் செய்து கொண்டால் தங்கள் இனத்திலிருந்து விலக்கிவிடுவதில்
தீவிரம் காட்டுகிறார்கள். ! யூத மதச்சடங்குகளுக்கும் பார்சி மதச் சடங்குகளுக்கும் தொடர்புகள் அதிகமிருப்பதாக அறிகிறேன். . . பூ, தேங்காய், சந்தனக்கட்டை, அவர்கள் சடங்குகளில் இடம் பெறுகிறது. புனித நீராடல் உண்டு.
.........2004ல் விருப்ப ஓய்வு. அதன் பிறகு மெல்ல மெல்ல தொடர்புகள் விட்டுப் போய்விட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ருக்சானா வீட்டுக்கு அவளைப் பார்க்க போயிருந்தேன். பார்சி குடியிருப்பு.. அவளும் அவள் தங்கையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. வயதான அப்பா ஓர் அறையில் அரை நிர்வாணத்துடன். வீட்டில் மவுனம் கவிந்திருந்த சூழலில்.. எனக்கு அழுகை வந்துவிட்டது. இப்போதும் அப்பெண்கள் இருவருக்கும் சமையல் தெரியாது.
பார்சி சமையலில் இருந்து டப்பா – சமைத்த உணவு வருகிறது . மற்றபடி பிரட், பட்டர், பாவ், பால், பழங்கள்..
அதன் பின் அவளை நான் சந்திக்கவில்லை. நீங்கள் அனைவரும் நலமாக
இருக்க விரும்புகிறேன்.. என்றும் உங்கள் மல்ல்லுவின் மனசில் உங்கள்
நினைவுகள் ஈரமாக இருக்கும். கடைசிவரை..
Wednesday, June 15, 2022
பூம்பூம் மாடுகள்
பூம்பூம் மாடுகள் குறி சொல்லுகின்றன.
தலையாட்டுகின்றன.
வளர்ப்பவனுக்கு வஞ்சகம் செய்யாமல்
பிச்சை எடுக்கின்றன.
இல்லாதக் கொம்பை இருப்பதாக நினைத்து
ஆட்டி ஆட்டி ..
எதையாவது உளறிக்கொட்டுகின்றன.
அதோடு நிறுத்திவிட்டால் நல்லது.
இப்போதெல்லாம்
பூம்பூம் மாடுகள்..
இவர்கள்தான் சிறந்தக் கவிஞர்கள்,
இவர்கள்தான் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள்
இதெல்லாம்தான் சிறந்த புத்தகங்கள்
என்று பட்டியல் போடுகின்றன.
இந்தப் பட்டியல் எங்கிருந்து தயாரிக்கப்படுகிறது?
பூம்பூம் மாடுகளுக்கும் இந்தப் பட்டியல்
வரிசைக்கும் என்ன தொடர்பு?
பூம்பூம் மாடுகள்
இந்தப் பட்டியலில் எந்த எழுத்தையும் தின்று
சாணிப்போட்டதாகக் கூட தெரியவில்லை..
இருந்தாலும்..
பூம் பூம் மாடுகள்
குறி சொல்லுகின்றன.
பிழைப்புவாதம்..
விருதுவாதம்
அடையாளச்சிக்கல்..
இப்படியாக எதாவது ஒன்றில் அடைபட்டு
இருக்கலாம்ம்ம்ம்ம்..
ஆனாலும்
பூம்பூம் மாடுகளின் தொல்லை
தாங்க முடியவில்லை.
பூம்பூம் மாடுகள் முட்டுவதில்லை.
அதனால் ஆபத்தும் இல்லை
என்று விட்டுவிடாதீர்கள்.!!!
முட்டுகின்ற மாடுகளைவிட
பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும்
மாடுகள் …
கால்நடைகளின் அவமானம்.
ச்சே..
Tuesday, May 10, 2022
யாரும் ஆணியைப் பிடுங்க முடியாது.
Sunday, May 8, 2022
ஒரே செய்தி.. இரண்டு முகம்
சரவணா..இதெல்லாம் செய்தியாவதே பெரிய்ய புரட்சி தான்!
ஒரே செய்தி.. அதில் ஒவ்வொருவரும் சொல்லியிருப்பதும் உண்மைதான். கற்பனை அல்ல.ஆனால் ஒரே செய்தியை அவரவர் எப்படி பார்க்கிறார்கள்? எவ்வாறு அணுகி இருக்கிறார்கள்?
அந்த நிகழ்வை சமூகத்திற்கு எந்த வகையில் பதிவு செய்ய விரும்புகிறார்கள்? இதெல்லாம் வெவ்வேறு வகையான உண்மைகளை செய்திகளுக்கு நடுவில் புதைத்திருக்கிறது. தினமும் இம்மாதிரி பல செய்திகளை நம் ஊடகங்கள் பரப்பிக்கொண்டிருக்கின்றன. நாமும் அதை எல்லாம் வாசித்துவிட்டு பொங்கி அல்லது பொங்காமல் உண்டு உறங்கி முக நூலில் வழிந்தோடிக்கொண்டிருக்கிறோம்.
இன்றைய 09/5/2022 டைம்ஸ் ஆஃப் இந்தியா (மும்பை பதிப்பு) பக் 8 செய்தி :
UP : Dalit woman dies after being 'assulted ' by cops.
அதே குழுமத்திலிருந்து வெளிவரும் எகானிமிக்ஸ் டைம்ஸ் பக் 3 செய்தி:
Old woman in UP Dies After Alleged Assault by Police.
அதாவது டைம்ஸ் 'தலித் பெண் போலீஸ் அராஜகத்தால் இறந்துவிட்டாள் 'என்று சொன்ன அதே செய்தியை
அதே நாளில் வெளிவரும் எகனாமிக்ஸ் டைம்ஸ்
'வயதான பெண்மணி போலீஸ் அராஜகத்தால் இறந்துவிட்டாள்' என்று எழுதுகிறது.
.( பெயரில் சராதாதேவி , ராதாதேவி ஆகிறாள். கணவர் பெயர் மாறவில்லை. போலீஸ் பெயர் மாறவில்லை!)
ஒரே செய்திதான்.. இருவரும் முன்வைக்கும் பார்வையும் கடத்தும் உண்மையும் அதற்குள் புதைந்திருக்கும் செய்தியும் வேறுவேறு.
அதன் பின் எகனாமிக்ஸ் சொல்வதையே பிற பத்திரிகைகளும் வழிமொழிகின்றன.
தெலுங்கானா டைம்ஸ், வொயர்ஸ், அவுட்லுக், டெக்கான், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ்.. இப்படியாக. .. செய்திகளில் அவள் வயதான 60 வயதுப்பெண் என்பதுடன் மட்டும் முடிந்துவிடுகிறது.
இது பாதுகாப்பான செய்தியாகவும் இருப்பது இன்னொரு காரணம்!
சரவணா..
இரண்டு செய்தியிலும் செத்துப்போனவள்
வயதானப் பெண் ( 60 வயசெல்லாம் முதுமைன்னா அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது!)
இரண்டாவது அவள் அன்றாடங்காய்ச்சி. ஏழைப்பெண்.
மூன்றாவது அவள் இருந்தாலென்ன, செத்து தொலைத்தால்தான் என்ன? என்ன குடிமுழுகிப்போய்விடப்போகிறது!
அவள் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து தொலைத்தவள்.
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு
வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
இந்த நாட்டில் வாழ்ந்தாலென்ன!
செத்துப்போனால் தான் என்ன?
அவை செய்தியாவதே பெரிய விஷயமல்லவா!
இதை நீ புரட்சி என்று சொன்னால் ஒத்துக்கொள்கிறேன். வேற என்ன பெரிசா கிழிச்சிட முடியும்??? என்ற ஓர்மையுடன். 🙏🙏
Thursday, May 5, 2022
காமத்துப்பாலின் உச்சம்
Wednesday, May 4, 2022
மாதவி SPA












