பூம்பூம் மாடுகள் குறி சொல்லுகின்றன.
தலையாட்டுகின்றன.
வளர்ப்பவனுக்கு வஞ்சகம் செய்யாமல்
பிச்சை எடுக்கின்றன.
இல்லாதக் கொம்பை இருப்பதாக நினைத்து
ஆட்டி ஆட்டி ..
எதையாவது உளறிக்கொட்டுகின்றன.
அதோடு நிறுத்திவிட்டால் நல்லது.
இப்போதெல்லாம்
பூம்பூம் மாடுகள்..
இவர்கள்தான் சிறந்தக் கவிஞர்கள்,
இவர்கள்தான் ஆகச்சிறந்த எழுத்தாளர்கள்
இதெல்லாம்தான் சிறந்த புத்தகங்கள்
என்று பட்டியல் போடுகின்றன.
இந்தப் பட்டியல் எங்கிருந்து தயாரிக்கப்படுகிறது?
பூம்பூம் மாடுகளுக்கும் இந்தப் பட்டியல்
வரிசைக்கும் என்ன தொடர்பு?
பூம்பூம் மாடுகள்
இந்தப் பட்டியலில் எந்த எழுத்தையும் தின்று
சாணிப்போட்டதாகக் கூட தெரியவில்லை..
இருந்தாலும்..
பூம் பூம் மாடுகள்
குறி சொல்லுகின்றன.
பிழைப்புவாதம்..
விருதுவாதம்
அடையாளச்சிக்கல்..
இப்படியாக எதாவது ஒன்றில் அடைபட்டு
இருக்கலாம்ம்ம்ம்ம்..
ஆனாலும்
பூம்பூம் மாடுகளின் தொல்லை
தாங்க முடியவில்லை.
பூம்பூம் மாடுகள் முட்டுவதில்லை.
அதனால் ஆபத்தும் இல்லை
என்று விட்டுவிடாதீர்கள்.!!!
முட்டுகின்ற மாடுகளைவிட
பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தும்
மாடுகள் …
கால்நடைகளின் அவமானம்.
ச்சே..
No comments:
Post a Comment