Sunday, November 7, 2021

ஜெய்பீம் அட்டைக்கத்தி அல்ல.


 நம் எல்லோருக்கும் ஏன்

ஜெய்பீம் திரைப்படம் பிடித்திருக்கிறது?
எல்லோரும் ஏன் கொண்டாடுகிறோம்?
தமிழ்ச்சமூகத்தின் அகம் எப்போது
இவ்வளவு ஈரமுடையதாக மாறியது!
காரணம்.. இந்த திரைப்படம் நம் யாருடைய
அடிவயிற்றிலும் கைவைக்கவில்லை.
சமூகத்தின் மையத்தைவிட்டு விலகிய
பிரச்சனைகளைப் பேசுவது நமக்கு
எப்போதும் எளிதாகவே இருக்கிறது.

ஆம்.
இருளர் சமூகம் நம் சமூகத்தின் ஒரு பகுதி தான்
என்றாலும் நம்மோடு கலந்திருக்கவில்லை.
காக்கி உடை அணிந்த காவல்துறையின்
அட்டூழியங்களை வெளிப்படையாக காட்டுவதும்
நம் யாருக்கும் எவ்விதமான உறுத்தலையும்
தரப்போவதில்லை!
காவல்துறையின் வெறித்தனமான செயல்களுக்கு
யார் காரணம்? ஜெய்பீம் படத்தில் குற்றம் சுமத்தப்
பட்டிருக்கும் போலீஸ்கார்ர்கள் தங்களுக்கு
“மேலிடத்து பிரஷ்சர் இருந்ததால் இப்படி நடந்து
கொண்டதாக சொல்வது புனைவு அல்ல. அதுதான்
காவல்துறையின் அகம். அதை இயக்கும் அதிகார
வர்க்கம் யார்? இருளர்களுக்காக போராடிய போது
ஆட்சியில் இருந்தவர்கள் யார்? அவர்களைக் காட்டினால்
அது அடிவயிற்றில் தீ வைத்த மாதிரி இருக்கும். அதை
தவிர்ப்பதுதான் சினிமாவை தயாரித்தவர்களின்
புத்திசாலித்தனம்!
அடுத்து நாம் மிகவும் கொண்டாடிய திரைப்படம்
சர்தார் உத்தம்.
வரலாற்றில் இரத்தக்கறை படிந்த காட்சிகள்..
இங்கே குற்றவாளிகள் அன்றைக்கு இந்தியாவை
ஆட்சி செய்த வெள்ளையர்கள். எனவே நமக்கு
எந்தவித உறுத்தலும் இல்லாமல் “அச்சச்சோ..”
என்று உச்சுக்கொட்டி, பொலபொலனு கண்ணீர்
விட்டு படம் பார்த்துவிட்டு கனத்த மனசுடன்
வெளிவந்துவிட முடிகிறது. சம்பவம் உண்மைதான்
என்றாலும் இதுவும் நம் மனசாட்சியைத் தொடாமல்
சமகாலத்தை மறக்கடிக்க செய்கிறது.
காதல், முக்கோணக் காதல், ஒருதலைக்காதல் என்று
காதல் படங்கள் காலம் மாறி ஷங்கர் காலத்தில் ஊழல்
கறுப்புபணம் திரைப்படமாகியது. அதுவும் மாறி
விவசாயம், போதைப்பொருள், பெண்களுக்கு நிகழும்
பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள் என்று நம்
திரைக்கதைகள் திரும்பியது.
இன்று இந்த மாற்றங்களின் இன்னொரு முகமாக..
ஜெய்பீம் ..
ஜெய்பீம் என்றால் புதுப்புது விளக்கங்கள்
இப்போது வருகின்றன. அசலின் உருவத்தையும்
உள்ளடக்கத்தையும் இவர்கள் மாற்றிவிடுவார்களோ
என்று அச்சமாக இருக்கிறது!
இதே ஜெய்பீம்..
சாதிய சுடுகாடு பற்றி பேசிவிடமுடியாது.
சாதியப் படிநிலைகளைப் பற்றி பேசிவிடமுடியாது.
ஜெய்பீம்.. சமகாலத்தில் நடந்த சாதி ஆணவக்கொலைகள்
பற்றி பேசிவிட முடியாது!
ஜெய்பீம்.. சமூகம் குடியிருக்கும் ஊரும் சேரியும்
இன்னும் ஒன்றாகவில்லை என்பதை பேசிவிட
முடியாது.
தலித்துகளின் குடிசைகள் எரிந்ததை ஜெய்பீம்
காட்சியாக்கிவிட முடியாது!
2002ல் குஜராத்தில் முதல்வராக இருந்த மோதிஜியிடம்
“நீங்கள் இசுலாமியர்கள் தாக்கப்பட்டது குறித்து
வருத்தப்படுகின்றீர்களா ? “
(ராய்ட்டர் செய்தி நிறுவனம் ஜூலை 2013)
என்று கேட்டபோது அவர் சொன்னார்
“ நம் வாகனம் சாலையில் வேகமாகப் போகும்போது
குறுக்கே நாயோ எலியோ ஏதேனும் வந்து விழுந்து
செத்தால் அதற்கு நாம் என்ன செய்யமுடியும்? “
என்று திருவாய் மலர்ந்தார். இந்த அதிகாரத்தின் ஒரு
துளியைக் கூட ஜெய்பீம் காட்சிப்படுத்திவிட முடியாது.
மையத்தை விட்டு விலகி நிற்பதும்
எல்லா வன்முறைகளுக்கு காரணம் போலீஸ்தான்
என்று கையை நீட்டுவதும் நமக்கு எளிது.
ஜெய்பீம் திரைப்படமும் சர்தார் உத்தம் திரைப்படமும்
அதனால் தான் நம் அனைவருக்கும் மிகவும்
பிடித்திருக்கிறது. நாம் கொண்டாடுகிறோம்.
இப்போதைக்கு இதாவது சாத்தியப்பட்டிருக்கிறதே
மெல்ல மெல்ல தான் கொண்டுவரமுடியும்
என்று நினைப்பீர்கள்.
நானும் இப்போதைக்கு அப்படி நினைத்து கொள்வது
எனக்கும் தற்காலிக மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆனால் இதுவல்ல.. ஜெய்பீம்.
இதுவும் தான் ஜெய்பீம்.
ஆனால் ஜெய்பீம் என்பதை
மையத்திலிருந்து விலக்கி விடாதீர்கள்..
அது சாதிப்படி நிலையில் இறுகிப்போயிருக்கும்
நம் சமூகத்தை உடைக்கும் பேராயுதம். போராயுதம்.
அதை உங்களுக்கு வசதியாக
அட்டைக்கத்தி ஆக்கிவிடாதீர்கள்.
ஜெய்பீம் அட்டைக்கத்தி அல்ல,
ஜெய்பீம்.
ஜெய்பீம்
ஜெய்பீம்.

#ஜெய்பீம்

#jaiBhim

No comments:

Post a Comment