Wednesday, November 10, 2021

மன்னாதி மன்னனும் சங்க இலக்கியமும்

 


மன்னாதி மன்னனும் சங்க இலக்கியமும்.


எம் ஜி ஆர் நடித்த புகழ்பெற்ற திரைப்படம் மன்னாதிமன்னன்.
பத்மினியும் அஞ்சலிதேவியும் அவருடன்.
ஒரு முக்கோணக்காதல் கதை.
இப்படம் கண்ணதாசனின் ஆட்டனத்தி- ஆதிமந்தி காவியத்தின்
இன்னொரு பதிப்பு. இதையே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
“சேரதாண்டவம்”
என்ற பெயரில் நாடகமாக எழுதி இருக்கிறார்.



தானுமொரு ஆடுகளமகளே என்று ஆதிமந்தி தோழியிடம்
சொல்லும் சங்கப்பாடல் வரிகள்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே
இதையும் தாண்டி ஆதிமந்தி போல நானும்
அலைவேனோ என்று வெள்ளிவீதியார்
பாடலில் பெண்ணொருத்தி தன் துயர் உரைக்கிறாள்.
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
ஆதிமந்தி போல, பேதுற்று
அலந்தனென் உழல்வென்கொல்லோபொலந்தார்
ஆனால் மன்னர் ஆட்சி தமிழகத்தில் ஆட்டனத்தி
சேர இளவரசனாகவும் ஆதிமந்தி சோழ இளவரசியாகவும்
அரண்மணை காதலாகிறது.
அதையே சிலப்பதிகாரம் வஞ்சிகாண்டமும்
"மன்னன் கரிகாலன் வளவன்மகள் வஞ்சிக்கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று
கன்னவில் தோளாயோ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇ..
எப்போதுமே நம் தமிழ்ச்சமூகத்திற்கு குடிசைகளின்
காதல்கதைகளை விட அரண்மனை காதல் கதைகள் காவிய ரசனைக்குரியதாகின்றன.
அதிலொரு மயக்கம்..
அந்த மயக்கத்தை எம் ஜி ஆர் தன் காதல் காட்சி
பாடல்களில் எப்போதும் பயன்படுத்திக் கொள்வார்,
பெரும்பாலும் அவர் ஒரு காட்சியாலாவது
அரச உடையில் வந்து காதலிப்பார்.
ரிக்சாகாரன் படத்தில் வாத்தியார் ஏன்
அரசகோலத்தில் வந்து காதல் செய்கிறார்
அவருக்கு தேவதைகள் பூச்சொரிகிறார்கள்
என்றெல்லாம் நமக்கு கவலை இல்லை!
அவர் கதைகளை விரும்பி பார்த்த அன்றைய
உழைக்கும் மக்களுக்கு அதுவும் ஒரு போதையாக இருந்தது.
எம் ஜி ஆர் எப்போதுமே அதிகமாக
குடிசையில் காதல் செய்யமாட்டார்!
அரச உடையலங்காரம் அவருக்கு கச்சிதமாகப்
பொருந்தி இருக்கும். நம் பாடலாசிரியர்கள்
அரண்மனை காதலை மெருகூட்டி
பார்வையாளருக்கு போதையூட்டுவதில்
பெரும் தமிழ்த்தொண்டாற்றி இருப்பார்கள்.
இப்படியாக ஆட்டனத்தி ஆதிமந்தி மருதி காதல்கதை..
ஆட்டனத்தியாக எம் ஜி ஆர்,
ஆதிமந்தியாக அஞ்சலிதேவி,
மருதியாக பத்மினி..
என்று மன்னாதி மன்னனாகி
தமிழ்ச்சமூகத்தில் எம் ஜி ஆர் மன்னாதி மன்னன் ஆனார்.
தாயே .. காவிரித் தாயே ..
பொன்னிப் பெருந்தாயே
புகழ் வளர்த்த காவிரியே
தென்னவனைக் கொண்டு சேர்த்த இடம் கூறாயோ
தாயே ..... காவிரித் தாயே காவிரித் தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
காதலர் விளையாடப் பூ விரித்தாயே
என்று அஞ்சலிதேவி அதாவது ஆதிமந்தி காவிரிக்கரையோரமாக
தலைவிரிக்கோலத்தில் பாடல் காட்சி..
அப்போது பட்டிமன்றங்கள் வளரவில்லை என்பதால்
காதலில் சிறந்தவள் ஆதிமந்தியா மருதியா?
என்று யாரும் ஆரம்பிக்கவில்லை!
ஆடிப்பெருக்கு மருதியின் நினைவாக என்று சொல்லும்
இன்னொரு கிளைக்கதை எல்லாம் உண்டு.
எது எப்படியோ..
இந்த சங்க இலக்கிய காதல் கதை, கண்ணதாசன் பாரதிதாசன்
என்று கவியுலகம் மட்டும் கொண்டாடவில்லை.
எம் ஜி ஆருக்கும் ரொம்பவும் நெருக்கமான
காதல்கதையாகி அவர் தன்னையே ஆட்டனத்தியாக
பொருத்திக்கொண்டு வலம் வந்தார்., பெரும்பாலும்
எல்லா படங்களிலும்!
எம் ஜி ஆர் ஆட்டனத்தி என்றால்
யார் ஆதிமந்தி ?
யார் மருதி?
இப்படியான கேள்விகள் எனக்கும் வந்தது உண்டு.
அட போங்கய்யா.. எப்படிப் பார்த்தாலும்
எம் ஜி ஆர் தான் ஆட்டனத்தி.
எம் ஜி ஆர் தான் மன்னாதி மன்னன்.

No comments:

Post a Comment