சில விசித்திரங்கள் , வேதனைகள்..
ஜெயமோகன் எதிர்ப்பு என்ற அலை இந்த அளவுக்கு
இல்லை என்றால் என் மாதிரி தனித்து வாழும்
தீவுமனிதர்கள் ஜெயமோகனைத் தேடி
வாசித்திருக்க மாட்டோம்.
ஜெயமோகனின் அபுனைவுகள் பக்கம்
போயிருக்கவும் மாட்டோம். இதை இப்போது
சொல்லியாக வேண்டி இருக்கிறது.
தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத
ஆளுமையாக ஜெயமோகனை மாற்றியதில் அவர்
புனைவுகளுக்கு இருக்கும் அதே அளவு முக்கியம்
அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் இருக்கிறது.
இதை ஜெயமோகன் திட்டமிட்டு கட்டமைக்கிறார்
என்று வைத்துக்கொண்டாலும் கூட
அந்த திட்டமிடலில் மிகச்சரியாக விழுந்திருக்கிறது
எம் சமகால இலக்கிய அரசியல் உலகம்.
ஜெயமோகனையும் அவர் முன்வைக்கும் வலதுசாரி
கருத்தியலையும் எதிர்ப்பது என்று ஆரம்பித்த புள்ளி
ஒரு பெரிய வட்டமாகி இன்று ஜெயமோகன் தான்
சகலமும் என்றாகிவிட்டதாக உணர்கிறேன்.
என் நண்பர்கள் பலருக்கு இந்த வரிகள் எரிச்சலூட்டும்.
இப்போது இந்த எதிரலையில் பயணித்த எழுத்துகள்
மாற்றுக்கருத்து என்ற ஒன்றை முன்வைக்கும்
எவரையும் சகித்து கொள்ள முடியாத ஒரு நிலைக்கு
தள்ளப்பட்டிருப்பதும் நம் பார்வையில் சரியோ தவறொ
மூன்றாவது நபருக்கு அவருடைய கருத்துகளை
சொல்லும் உரிமையை மதிக்க வேண்டும் என்பதையும்
அதை கருத்தியல் ரீதியாக மட்டும் எதிர்கொள்ள
வேண்டும் என்பதையும் விட்டு விலகி விட்டதாக
உணர்கிறேன்.
இன்னொரு மிக முக்கியமான அம்சம்..
வலதுசாரி, இந்துத்துவா, கலையின் அழகியல்,
அழகியல் தான் இலக்கியம், கலையில் அரசியல்
என்னவாக இருக்க வேண்டும் என்ற சர்ச்சைகள்
தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் இன்று தமிழ் இலக்கிய உலகம்
இதே வலதுசாரி பிம்பங்களைத் தான் "எது இலக்கியம்?
யார் இலக்கியவாதி " என்பதை தீர்மானிக்கும்
இடத்தில் வைத்திருக்கிறது.
ஒரு காலத்தில் இரு பக்கமும் அசைந்து கொண்டிருந்த
தராசு .. இப்போது ஒரு பக்கமாக மட்டுமே
சரிந்திருக்கிறது.
#ஜெயமோகன்_இலக்கியஅரசியல்
No comments:
Post a Comment