Wednesday, August 25, 2021

பாலியல் வறட்சியில் ? தமிழ் சமூகம் !!

 பாலியல் வறட்சியில்.. தமிழ்ச்சமூகம் !!

எல்லோரும் 'சுள்ளிக்காடு" ஆக முடியுமா என்ன?
கேரளாவில் புகழ்பெற்ற கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.,
தன் சுயசரிதை ‘சிதம்பர நினைவுகள் ‘ பக்கத்தில் தன்
சபலம் குறித்து எழுதி இருப்பது நினைவுக்கு வருகிறது.

அவர் வீட்டில் இருக்கும் போது ஊறுகாய் விற்கும்
ஒரு இளம்பெண் வருகிறாள். அவளிடம் சபலப்படும்
சுள்ளிக்காடு தவறாக நடக்க முயற்சிக்கிறார்.
அந்தப் பெண்ணோ அவரை அடித்து விட்டு திட்டுகிறாள்.
“தான் உடலை விற்றுத்தான் வாழ வேண்டுமென்றால்
ஊறுகாய் விற்க வந்திருக்க வேண்டியதில்லை”
என்று சீறுகிறாள்.
பிறகு அவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுள்ளிக்காடு
என்று அடையாளம் காண்கிறாள்.
தவறு செய்த சுள்ளிக்காடு பின்னர் கூனிக்குறுகி
இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறுகிறார்.
அந்தப் பெண்ணும் ஆத்திரத்தில் அடித்து விட்டேன்
என்று மன்னிப்பு கேட்கிறாள். யாரிடமும் இதைச்
சொல்ல மாட்டேன் என்றும் கூறுகிறாள்.
பின்னர் அந்தப் பெண்ணின் திருமணத்திற்கு கூட
சுள்ளிக்காடு செல்கிறார். ஓர் ஆணாக தன் சபலத்தை
வெளிப்படுத்தியதற்கு அவர் வெட்கப்படவில்லை. .
இத்தகைய தைரியம் எத்தனை பேருக்கு வரும்?
சபலப்படுபவர் அடையும் குற்ற உணர்வும்,
அதை எப்படித் தீர்ப்பது என்ற வழிமுறையும்
சுள்ளிக்காடு விசயத்தில் காண்கிறோம்.
மேலும் பொதுவெளியில் அனைவர் முன்னும்
அதை உரக்கச் சொல்லும்போது அதுவே அவருடைய
நேர்மையின் வெளிப்படாகி கொண்டாடப்படுகிறது.

No means NO.
வேண்டாம், விருப்பமில்லை, முடியாது என்று ஒரு பெண்
சொன்னால் ஆண் பெண் உறவில்
அதிகாரமிக்க ஆணுலகம் அதைக் கேட்டாக வேண்டும்.
தவறினால் தலைகுனிவுகள் ஏற்படும்.
பாலியல் சுரண்டலை பெண் எதிர்க்கும் வல்லமை
இதுவரை ஆண் சந்திக்காத பெண்ணுலகம்,
பெண்ணின் பேராற்றல் போற்றுதலுக்குரியது.
ஆண் , பெண்ணின் எதிரி அல்ல.
ஆணும் அவன் நட்பும் காதலும் இல்லாத உலகில்
வாழ எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை.
அவள் உடல் மீதான அதிகாரம் அவளுக்கானது.
அதை எந்த அதிகாரமையமும் தனக்கானதாக
ஆக்கிக்கொள்ள முடியாது.
நம் சட்டங்களும் நீதிமன்றங்களும்
சாட்சிக்கூண்டுகளில் சிறைப்பட்டிருக்கின்றன. .
எல்லாவற்றையும் சட்டத்தின் முன்னால்
நிறுத்தி நீதிப் பெற முடியாது. அதனால்தான்
எழுதப்பட்ட சட்டம் செய்யாததை மனித இனத்துக்கு
மட்டுமே இருக்கும் மனசாட்சி செய்துவிட முடியும்
என்று நம்புகிறோம்.
நடந்தது என்ன?
சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவரின் மனசாட்சி
மட்டுமே அறியும். வாழ்வில் ஒவ்வொருவரும் தங்கள்
செயல்களுக்கான தண்டனைகளையும் நியாயங்களையும்
மனசாட்சியின் முன்னால் வைக்கட்டும்..
நாமும் தான்.
ஆணுலக அதிகாரமையத்தின் பாலியல் சுரண்டல்களை
வன்மையாக எதிர்க்கிறோம்.
பாலியல் அத்துமீறல்கள் ..????
இது தனிமனிதர் விருப்பம் சார்ந்த து.
மனித சமூகத்தில் உறவுகள் நிறுவனமயமான
காலத்திலிருந்தே விதிக்கப்பட்டிருக்கும்
பாலியல் விதிகளை மீறுகின்ற செயல்பாடுகள்
தொடர்ந்து இருக்கத்தான் செய்கின்றன.
இங்கே எந்த ஒரு தலைமைப்பீடமும்
இதில் தலை நிமிர்ந்து நிற்கும் என்றெல்லாம்
யாரும் கனவு காண வேண்டாம்.
எந்த ஒரு கட்சி அரசியலும் இதை எல்லாம்
பேசு பொருளாக , விவாதமாக மாற்றியதில்லை
என்பதில் இருக்கிறது எல்லோரின் யோக்கியதையும்!
இங்கே உள்பெட்டிகள் வெளிச்சமானால்
அவ்வளவுதான்! !!!!
ஆண் பெண் பாலியல் உறவில்
சபலங்கள், பாலியல் அத்துமீறல்கள், பாலியல் சுரண்டல்கள் ...
மூன்றும் ஒன்றல்ல.
இதில் பாலியல் சுரண்டல்களை
காதல் என்ற பெயராலும்
அதிகாரம் கொண்ட ஆண்மைய சமூகம்
காதலித்தப்பெண்ணை மனப்பிறழ்வுக்குள்ளாக்கி
மீண்டும் இன்னொரு பெண்ணிடம் சென்றுவிடுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள்
வெளியில் சொல்ல முடியாமல் அனுபவிக்கும்
மன அவஸ்தைகள் .. இன்று அதிகமாகி இருக்கின்றன.
ஆள்பலம் பணபலம் அதிகாரபலமிக்க ஆண்களின்
பாலியல் சுரண்டல்கள் இன்று அதிகரித்திருக்கின்றன.!
இவை பிரேக் நியுஸ் அல்லது யுடூயுப் வைரலாகி
அதன் பின் அதுபோல இன்னொரு வைரலுக்கு
சமூகம் தயாராகிவிடுகிறது.

ஆண் பெண் உறவில் சமூகம்
இன்னொரு தளத்திற்குப் பயணித்துக்கொண்டிருக்கிறது.
ஆண் அச்சத்துடனும்
பெண் அடங்காத ஆவேசத்துடனும்
இருக்கிறார்கள்.
மொத்தத்தில் நம் சமூகம் பாலியல் வறட்சியில்
சிக்கித்தவிக்கிறதோ..??!!

No comments:

Post a Comment