Wednesday, August 11, 2021

பாரதி மஹாகவியா..??

 


பாரதி மஹாகவியா இல்லையா

என்று ஒரு சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது.


இதற்கு நடுவில் பாரதி ஏன்
செங்கோட்டை ஆவுடையக்காவைப் பற்றி
எங்கும் குறிப்பிடவில்லை
என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

பாரதியை மஹாகவி இல்லை என்று சொல்பவர்கள்
யாரை மஹாகவியாக கொண்டாடுகிறார்கள் என்பதையும்
அதற்கான அளவுகோலாக எதை வைத்திருக்கிறார்கள்
என்பதையும் தெளிவுப்படுத்திவிட்டால்
அவர்கள் ஏன் பாரதியை மஹாகவியாக
ஏற்கத் தயங்குகிறார்கள் என்பது
தெள்ளத்தெளிவாகிவிடும்.
பாரதியை மஹாகவி இல்லை என்று சொல்லும்
அவர்களின் விமர்சனம் மகாபாதகமல்ல.
அது அவர்களின் உரிமை.
இதற்கு மேல் இதில் சொல்ல எதுவுமில்லை.
எனக்கு பாரதி மஹாகவியா இல்லையா என்ற
கேள்வி இல்லை. விமர்சனமும் இல்லை.
காரணம் பாரதியை “மக்கள் கவி” என்று சொல்வதில்
பெருமைஅடைகிறேன்.
என்னளவில் அதுவே மஹாகவிக்கான
முக்கியமான அடையாளமாகவும் இருக்கிறது.
பாரதிதான் தமிழ்க்கவிதையை பொதுஜன வெளிக்கு
எடுத்துவந்தவன். அவன் எழுதியப்பிறகுதான்
கவிதை உலகம் இருட்டறையிலிருந்து விடுதலை பெறுகிறது.
அதற்காக அவன் கவிதையின்
தரம் ஈரம் ஜீவன் எதுவும் குறைந்துவிடவில்லை.
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி !~ எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
எல்லோருக்கும் புரிகின்ற வரிகள்..
நிராகரிப்பு, ஒதுக்கிவைத்தல், தீண்டாமையை
அனுபவிக்கும் மனித உள்ளம்
இன்றும் முணுமுணுக்கும் கவிதைவரிகள்.
“பாடிக்கலந்திடவே தவம் பண்ணியதில்லையடி..’
என்று அவன் சொல்லும் போது
அது பாட்டை ரசிப்பதும் பாடிக்கலப்பதும்
அதுவே தவமாக மாறும் மன நிலையும்....
காதலுக்கும் நட்புக்கும் அன்புக்கும் ஏங்கும்
அனைத்து ஜீவராசிகளுக்குமான வரிகளாக மாறிவிடுகிறது.
&&
பாரதிக்கு ஒரு குழப்பம் இருந்த து.
அந்தக் குழப்பமான மன நிலையில் அவனுக்குள்
இருந்த இன்னொரு மனமும் அவ்வப்போது
அவன் எழுத்துகளில் விழித்துக்கொண்ட து.
அறிவுப்பூர்வமாக அவன் அதிலிருந்து விடுபட
போராடி இருக்கிறான். அந்தப் போராட்டம்
அவனளவில் அவ்வளவு எளிதானதல்ல.
சாதிப்படி நிலையில் உச்சத்தில் இருந்தவன்.
அது அவன் குற்றமல்ல.
அவன் வாழ்ந்த காலத்தில் அச்சூழலில்
இந்திய விடுதலைப் போராட்ட களம்
மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராக
இந்தியச் சமூகத்தின் வேதக்கலாச்சாரத்தை
முன்னிறுத்துகிறது.
அதில் முதன்மையானவர் திலகர்.
விடுதலைப் போராட்டத்தில் திலகர் போன்றவர்களின்
எழுத்துகளின் தாக்கம் பாரதியின்
எண்ணங்களிலும் பிரதிபலிக்கிறது.
வேத இந்தியா, ஆர்ய தேசம், ஆர்ய ராணியின் வில்,
என்ற பிம்பங்கள் அவனுக்குள் இருக்கும்
இன்னொரு பாரதியை எழுப்பித்தான் விடுகின்றன.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து பாயுது
என்று சொன்னவனும் அவன் தான்.
காக்கை குருவி எங்கள் சாதி என்றவனும் அவன் தான்.
அவனைப் புரிந்து கொள்ளவும்
அவனுக்குள் வாழ்ந்த இன்னொரு பாரதியுடன்
அவன் போராடிக்கொண்டே இருந்தான்
என்பதைப் புரிந்து கொள்ளவும்
தமிழ்ச்சமூகம் மறுக்கிறது.
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இன்றும்
ஒரு சாதித்தமிழன் முழுமையாக
செத்துவிடாமல் இருக்கத்தான் செய்கிறான்.
இதில் பாரதி மட்டும் என்ன விதிவிலக்கா?!!

&&&
ஆவுடையக்கா விவகாரம்..
நீண்ட புகழ் வாணாள் கேட்டவன் பாரதி. ஆனால்
அது எதுவும் அவனுக்கு வாய்க்கவில்லை.
தலைவலி காய்ச்சலையும் எழுதிவிடும்
சமூக வலைத்தள வசதிகள் அவனுக்கில்லை.
அவன் ஆவுடையக்காவின்
வாழ்க்கையை பாடல்களை வாய்மொழிக்கதைகளைத்
தேடிக்கொண்டுதான் இருந்தான் என்பதை
ஆவுடையக்காவின் பாடல்கள் தொகுப்பில்
செல்லம்மா பாரதியின் சகோதரி மகள்
கோமதியம்மாள் குறிப்பிடுகிறார்.
பாரதியும் அவன் கவிதைகளும்
வாழ்க்கையின் ஓரு பகுதியாக நம்மோடு பயணிக்கின்றன
. நாம் அழும்போதும் சிரிக்கும் போதும்
காதல் வசப்படும் போதும் ரெளத்திரம் கொண்டு
சீறி எழுந்து நிற்கும்போது
நமக்குள் அவன் உயிர்ப்புடன் வாழ்கிறான்.
ஒரு கவிஞனுக்கு இதைவிட என்ன வேண்டும்?!!

வாழ்க எம்மான்!



19 comments


No comments:

Post a Comment