Sunday, October 27, 2019

நீர் இன்றி அமையாது ..

Image result for pigeon sitting in window paintingsஎனக்கும் அவர்களுக்குமான உறவு 
எதோ ஒரு கோடை வெயிலில் தண்ணீருக்காக நான் தவித்த தருணத்தில் உருவானது. சன்னல் கம்பிகளுக்கு நடுவில் சின்னதாக வாயகன்ற டப்பாவில் தண்ணீரை
நிரப்பினேன்.. நாளடைவில் அது ஓர் அனிச்சை செயல் போல ஆகிப்போனது.
கொட்டும் மழையிலும் அவர்கள் 
என் சன்னல் கம்பிகளுக்கு நடுவில் உட்கார்ந்து
 தண்ணீர் பருகுவதையே தெரிவு செய்ததை
நானும் கவனிக்க வில்லை. வழக்கம் போல 
அவர்களும் அதைப் பிரகடப்படுத்தவில்லை.
அவர்களாகவே தங்கள் எல்லைகளை வரைந்து கொண்டார்கள். 
அடுக்களை சன்னலில் காகங்களும் சிட்டுக்குருவிகளும். 
ஹால் சன்னலில் புறாக்களும் சிட்டுக்குருவிகளும். சிட்டுக்குருவிகளுக்கு
மட்டும் எல்லா இட த்திலும் போய்வர உரிம ம் யார் கொடுத் தார்களோ 
அதுவே எடுத்துக் கொண்ட தோ..

எப்போதாவது வெளியூர் போய்விட்டால்
 இப்போதெல்லாம் இவர்கள் நினைப்பு தான் வந்துவிடுகிறது. 
என் மொழியை அவர்களும்
அவர்கள் மொழியை நானும் 
ஒலிகளின் சப்தங்களின்றி 
எப்போது உரையாட ஆரம்பித்தோமோ நினைவில்லை.
மதுரை சென்று திரும்பிவந்து எதொ நினைவுகளில்
 சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். 
வினோதமான ஒலி எழுப்பி என்னை அழைத்த து அந்தப் புறா. 
என் நினைவுகளை புத்தக அடுக்குகளில் புதைத்துவிட்டு
திரும்பிப்பார்த்தேன்.
அப்படி ஒரு கோபம் அதன் கண்களில்.
சிறகுகள் படபட த்தன.
இரும்புக் கம்பிகளை உடைத்துவிட முடியாமல்
அது தவிக்கும் தவிப்பும் ஆத்திரமும்..
மெல்ல மெல்ல அருகில் வந்தேன்.
தண்ணீர் டப்பாவில் தண்ணீரே இல்லை.
சன்னலைத் திறக்க வேண்டும்.
“சாரிடா.. பார்க்கலை.. “ என்று நான்..
மீண்டும் அதே கோபம்.
இப்போது அந்த மொழியில் இன்னொரு ரகசியமும்.
வைகைக் கரையில் சொல்லாத ரகசியமோ..
ப்ளீஸ் டா.. கொஞ்சம் பொறுத்துக் கொள்..
கெஞ்சினேன்.
ம்கூம் கோபம் தணியவில்லை.
கண்ணீர் நிரம்பி வழியும் விழிகளை
உயர்த்தியது என் மொழி.
எங்கள் இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று
சந்தித்துக் கொண்டன.
அவன் பார்வையை நானோ
என் பார்வையோ அவனோ
எதிர்கொள்ள முடியாமல்
திரும்பிக்கொண்டோம்.
தண்ணீரை நிரப்பும் வரை
என் சன்னலைவிட்டு சற்று தள்ளி
உட்கார்ந்து கொண்டு தன் முகத்தை
வேறு பக்கமாக திருப்பிக் கொண்டு..
தண்ணீர் நிரம்பி நிரம்பி
எங்களுக்கிடையில் கொஞ்சம் கொஞ்சமாக
ஈரம்..
கோபமாம்.. திரும்பமாட்டானாம்.
சரி..
நீரின்றி அமையாது உலகு!
நீ யின்றி அமையுமோ உலகு?

புத்தகம் தன் பக்கங்களைப் புரட்டி
வாசிக்கும் போது
சிறகுகளின் படபடப்பு.
நான் திரும்பவில்லை.
தாகம் தீர்க்கட்டும்.
இது யுகம் யுகமாக தீராத தாகம்.
ஒற்றைத்துளியில் தீருமொ தாகம்.
தாகம் தீர்க்கட்டும்.
நான் திரும்பிப்பார்க்க வேண்டும்
என்று காத்திருக்கிறது இப்போதும்.
திரும்பவா..
பார்க்கவா..
வைகையில் மீண்டும் வெள்ளம் வருமோ
நதிகளற்ற கொடுமணலில்
தாகம் தீர்க்கும் தண்ணீரை
ஆவியாக்காமல் விட்டுவைக்குமா
சூரிய பந்தம்.

நீரின்றி அமையாது உலகு..
நீ இன்றி அமையுமோ உலகு

1 comment: